23 ஜூன் 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 1

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் கூறி இருக்கிறார்.

அவரின் பெயர் சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். 22.06.2019-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் அவ்வாறு பேசினார்.

இந்த நாட்டின் இரண்டாவது மொழியாக மாண்டரின் மொழி உருவாகி வருவதைக் காண பிடித்தம் இல்லை. மலேசியக் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மலர் 01.07.2019

இப்போதைய தாய்மொழிக் கல்வி முறை பலருக்கும் பிடிக்கவில்லை. அந்தக் கல்வி முறைக்கு கல்வியமைச்சர் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சலாமியா கூறி இருக்கிறார்.

மலேசியாவில் தேசிய மாதிரிப் பள்ளிகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் தொடக்க நிலைப் பயிற்று மொழியாக உள்ளன, 



சலாமியாவின் பேச்சு தேச நிந்தனைக்கு உரிய பேச்சு. தன்மூப்பான பேச்சு. அடாவடித் தனமான பேச்சு. இனங்களுக்கு இடையே கசப்பு உணர்வுகளைத் தூண்டிவிடும் பேச்சு. இதனால் அவர் மீது பரவலான ஊடகத் தாக்குதல்கள் நடை பெற்று வருகின்றன.

அப்படி பேசியதற்காக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப் படலாம். ஆனாலும் வழக்குத் தொடரப் படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. 




மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பதிவில் (Article 152 Federal Constitution) சீனத் தமிழ் மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அது சட்டப் படியான அங்கீகாரம்.

ஆகவே சீனத் தமிழ் மொழிகளைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. சட்டப்படி உரிமை இல்லை.

 
மாண்புமிகு மார்க் கோடிங்
அப்படிச் சொன்னால் அது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தை அவமதிப்பது போலாகும். அது ஓர் அரச நிந்தனையாகும்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தமிழ் மொழியின் உரிமையில் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சாசனத்தில் தமிழ் மொழிக்கு என்று தனி உரிமை உண்டு. மறுபடியும் சொல்கிறேன்.

சீனத் தமிழ் மொழிகளின் உரிமையைப் பற்றிப் பேசுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமை பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது. 



பத்திரிகை ஆசிரியர் மெலான் அப்துல்லா
மலாயாவில் தமிழர்கள் குடியேறிய காலத்தில் இருந்தே தமிழ் மொழியும் அவர்களுடன் இணைந்து வந்து இங்கே குடியேறியது. மெல்ல மெல்ல வேர்விட்டுப் பரவத் தொடங்கியது. ஆல விருச்சகமாய் விழுதுகள் படர்ந்து வீர வசனங்கள் பேசியது.

கால வெள்ளத்தில் பற்பல ஒதுக்கல்கள்; பற்பல பதுக்கல்கள்; பற்பல புறம்போக்குச் செயல்பாடுகள். அவற்றில் எல்லாம் இருந்து தப்பித்துக் கரையேறி மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறது.

அதற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக அனுதினமும் போராட்டங்களைச் செய்தும் வருகிறது. அந்த மொழியைச் சார்ந்த இனத்தவரும் அதன் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இன்றுவரை போராடியும் வருகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். அந்த வகையில் அவர்களுக்கு நாட்டின் வரலாறு நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னாலே அது ஓர் அரச நிந்தனையாகும்.




சீனத் தமிழ்ப் பள்ளிகளை அழிக்க வேண்டும் என்று சொன்ன உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா மீது 1971-ஆம் ஆண்டு வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப் பட்டது. இது பலருக்கும் தெரியாத செய்தி.

(In the case *Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)*, Utusan Malaysia was found guilty of sedition for an editorial titled *Hapuskan Sekolah Beraliran Tamil atau China di-Negeri ini* (Abolish Tamil and Chinese medium schools in the country.)




1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னதற்காக மாட்டிக் கொண்டார். (11 October 1978). அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார்.

(On October 11, 1978, the MP urged the government to close down Chinese and Tamil primary schools in the Parliament.)


நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) உள்ளது. இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்திற்கு இழுக்கப் பட்டார். (Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948); கீழ் குற்றம் சாட்டப் பட்டார்.

(Under Article 63 (4), the immunity of parliamentarians are not applicable to matters related to the status and special privileges of Bahasa Malaysia and bumiputra as well as challenging the constitutional position of the Yang di-Pertuan Agong.)

1982-இல் மார்க் கோடிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. மார்க் கோடிங் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.




(Malaysian education system is based on the Razak Report which was incorporated into Section 3 of the Education Ordinance of 1957, allows the retention of Chinese and Tamil medium schools)

*Act 550, Education Act 1996* allows the existence of 'national-type' schools. The Chinese and Tamil medium schools are allowed to use their respective mother tongues as a mode of communication, provided that English and Bahasa Malaysia are compulsory subjects.

*The Sedition Act (1971)* does not allow anyone to propose the closure of Chinese or Tamil primary schools, just as one cannot question the special provision for Malays and natives in Sabah and Sarawak in Article 153.




ஆக இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன.

பாஸ் கட்சி பிரமுகர் சொன்னது போல இது ஒன்றும் டோடோல் கிண்டும் சமாசாரம் இல்லை. மலேசிய அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மலேசிய அரசியலமைப்பை அவமதிப்பது தேச நிந்தனையாகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

22 ஜூன் 2019

போர்னியோ காடுகளில் டயாக் இந்துக்கள்

Dayak Hindus in Borneo

அழகிய பச்சைப் பசுமைகளின் மறுபிறவிகள் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக் காடுகள். அழகிய பச்சைப் புல்வெளிகளின் அரும்பிறவிகள் ஆசியாவின் களிமந்தான் காடுகள். இரண்டுமே பழமை வாய்ந்த பச்சை மழைக் காடுகள். இரண்டுமே ஈரம் பாய்ந்த இயற்கைச் செல்வங்கள். 


கோடிக் கோடியான உயிரினங்கள் கோடிக் கோடியான ஆண்டுகளாய் கூடிக் குலவி வாழ்ந்த பச்சைக் காடுகளின் பசுங்காட்டு வெளிகள். பரிசுத்தமான இயற்கையின் எழில்மிகு ஜாலங்கள் பச்சையில் சங்கமிக்கும் பாரிஜாத உச்சங்கள். அனைத்துமே சொற்களில் வடிக்க முடியாத கானகத்துச் கவிக் கோலங்கள்.

களிமந்தான் காடுகள் போர்னியோ தீவில் உள்ளன. இந்தோனேசியாவிற்குச் சொந்தமான நீர்நிலைக் காடுகள். இங்கேதான் ஓர் அதிசயம் நடந்து வருகிறது. உலக இந்துக்கள் பலருக்கும் தெரியாத ஓர் அதிசயம். என்ன தெரியுங்களா? 

இந்தக் காடுகளில் வாழும் டயாக் பூர்வீகக் குடிமக்கள் ஒரு வகையான இந்து மதத்தைப் பின்பற்றிப் போற்றி வருகின்றார்கள். அவர்கள் பின்பற்றும் அந்த இந்து மதத்தின் பெயர் காரிங்கான் இந்து மதம். உலகளாவிய இந்து மதத்தின் பின்னணியில் உருவான ஓர் இயற்கை மதம் தான் காரிங்கான் இந்து மதம். 


பாலித் தீவில் பல இலட்சம் இந்தோனேசிய இந்துக்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட இந்து சமயத்தை உருவாக்கிக் கொண்டு பின்பற்றி வருகின்றார்கள். இன்று வரையிலும் அவர்களின் இந்து மதத்தைப் போற்றியும் புகழ்ந்தும் வருகின்றார்கள்.

அதைப் போலவே களிமந்தான் காடுகளில் வாழும் காஜு எனும் டயாக்

(Dayak Ngaju)

பிரிவினரும் ஒரு தனித்துவமான இந்து சமயத்தை உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். இந்த விசயம் பலருக்கும் தெரியாது.

இறைவனே உச்சத்தில் உயர்வானவர்; ஒப்புயர்வானவர் எனும் கொள்கையில் காரிங்கான் இந்து மதம் செயல்பட்டு வருகிறது.


போர்னியோவில் பலவகை டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஏறக்குறைய 200 வகையான டயாக் மக்கள். மத்திய களிமந்தான் காடுகளில் காஜு எனும் டயாக் பிரிவினர் உள்ளனர். இவர்கள் பின்பற்றும் இந்து மதமே காரிங்கான் இந்து மதம் ஆகும்.

டயாக் என்பவர்கள் போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். தெரிந்த விசயம். இந்தப் பழங்குடி மக்களில் 250 துணை இனக் குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றார்கள்.

இவர்கள் ஆஸ்திரோனேசிய மொழியைப் பேசுகின்றார்கள். பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். ஏறக்குறைய 40 இலட்சம் டயாக்குகள், களிமந்தான் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றார்கள்.

(Belford, Audrey (September 25, 2011). "Borneo Tribe Practices Its Own Kind of Hinduism". New York TImes.)

காஜு டயாக் மக்கள் பின்பற்றும் மதம் இந்து மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் அதனை இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.


இஸ்லாம்; புரொடெஸ்டனிசம்; கத்தோலிக்கம்; இந்து; புத்தம்; கான்பூசியசம் ஆகிய ஆறு மதங்களை மட்டுமே அதிகாரத்துவ மதங்களாக இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. காரிங்கான் மதம் இன்று வரையில் அங்கீகரிக்கப் படாமல் உள்ளது. இந்தக் காரிங்கான் மதத்தில் இந்து - ஜாவானிய தாக்கங்கள் உள்ளன.

தீவா பண்டிகை என்பது காஜு டயாக் மக்களின் திருவிழாவாகக் கருதப் படுகிறது. இந்த விழா முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்தக் கட்டத்தில் எருமைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவை உயிர்ப்பலி கொடுக்கப் படுகின்றன. இந்த உயிர்ப்பலிக்கு யாட்னா என்று பெயர்.


(Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.)

காரிங்கான் மதத்த்தின் தலையாய குலதெய்வமாக ரான்யிங் தெய்வம் கருதப் படுகிறது. இவர்களின் வழிபாட்டுப் புனித நூலுக்கு பனாத்தூரான் என்று பெயர். வழிபாட்டுத் தளத்தின் பெயர் பாலாய் பசாரா அல்லது பாலாய் காரிங்கான்.

Balai Basarah - Balai Kaharingan

காரிங்கான் என்பது பழைய டயாக் சொல் ஆகும். காரிங் எனும் சொல்லில் இருந்து உருவானது. காரிங் என்றால் டயாக் மொழியில் உயிர் அல்லது வாழ்வதாரம் என்று பொருள்.

களிமந்தான் டயாக் மக்களிடம் தனிப்பட்ட ஒரு சிறப்பு இயல்பு உள்ளது. மழைக்காட்டு விசுவாசம் என்று சொல்வார்கள். அது அவர்களின் உயிர்த் தன்மை. அதாவது காட்டின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் சிறப்புத் தனமை. மழைக் காடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்குள் கண்டிப்பான வரைமுறைகள் உள்ளன. 


காட்டில் இருந்து எதை எடுத்து வரலாம்; எதை எடுத்து வரக்கூடாது எனும் எழுதப் படாத சாசனங்கள். அந்த வரைமுறைகளை அவர்கள் தாண்டிச் செல்வது இல்லை. டயாக் சமூகங்கள் காட்டை நம்பியே வாழ்கின்றன. அதனால் அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்து இருக்கிறார்கள்.

காஜு டயாக் மக்கள் பெரும்பாலோர் விவசாய வணிகம்; நெல் பயிரிடுதல்; கிராம்பு பயிர் செய்தல்; மிளகு, காபிச் செடி வளர்த்தல்; கொக்கோ பயிர் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய களிமந்தான் பகுதியில் வாழும் பெரும்பாலான டயாக்குகள் இந்து காரிங்கான் மதத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

இருப்பினும் அண்மைய காலங்களில் இந்தக் களிமந்தான் டயாக் மக்கள் இஸ்லாம், கிறிஸ்த்துவ மதங்களுக்கும் மாறி வருகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னரே டயாக் மக்கள் தேசிய அளவில் அரசியல் கட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் இந்தோனேசியாவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். இந்தோனேசிய மக்கள் டச்சுக்காரர்களின் ஆட்சியை எதிர்த்தாலும் இந்தோனேசிய மக்களுக்கு முன்பாகவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் டயாக் மக்களாகும்.


ஆக 1950-ஆம் ஆண்டுகளில் சுதந்திரம் பெறுவதற்காக டயாக் மக்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் காஜு டயாக் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு மேஜர் ஜிலிக் ரீவுட் என்பவர் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார். அவரின் தலைமைத்துவத் தாக்கம்; சுதந்திரப் போராட்டத்  தாக்கத்தினால் காஜு மக்களும் காரிங்கான் மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர்கள்.

தலைவர் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே என்று சொல்வார்கள். அந்த மாதிரி தலைவரின் போராட்ட உணர்வுகளினால் கவரப்பட்ட டயாக் மக்கள் தலைவர் பின்பற்றிய காரிங்கான் மதத்தையே தங்களின் வழிபாட்டு மதமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1945-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. பஞ்சார்மைசின் மாநிலம் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக காஜு டயாக் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காரிங்கான் இந்துக்கள் வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள். 


மேஜர் ஜிலிக் ரீவுட்டின் தலைமையில் ஒரு கொரில்லா படை உருவானது. ஆங்காங்கே எதிர்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆக வேறு வழி இல்லாமல் காஜு டயாக் மக்களுக்காக மத்திய களிமந்தான் எனும் தனி மாநிலம் உருவாக்கப் பட்டது. போராட்டத் தலைவராக மேஜர் ஜிலிக் ரீவுட் விளங்கினார்.

அதனால் டயாக் மக்கள் பலரும் மேஜர் ஜிலிக் ரீவுட்டினால் ஈர்க்கப் பட்டார்கள். மேஜர் ஜிலிக் ஓர் இந்து. அதனால் தங்களின் தலைவர் சார்ந்த காரிங்கான் இந்து மதத்தையும் டயாக் மக்களும் பின்பற்றத் தொடங்கினார்கள். இப்படித்தான் இந்த மதம் டயாக் மக்களிடம் பரவலாகிப் போனது.

காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தது. ஆனாலும் நெருக்குதல் காரணமாக 1980-ஆம் ஆண்டு காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அந்த மதம் இந்து மதத்திற்கு கீழ் இயங்கும் மதமாகவே இயங்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது. அந்த வகையில் காரிங்கான் மதம் இன்று அளவிலும் களிமந்தானில் உயிர் பெற்று வருகிறது.


களிமந்தான் காடுகளில் தற்சமயம் 223,349 காரிங்கான் இந்து சமயத்தவர் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 300 இந்துமதப் பூசாரிகள் உள்ளனர். காரிங்கான் இந்து சமயத்தவர்களுக்கு என்று ஓர் இந்து மாமன்றம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மன்றத்தின் கீழ் டயாக் இந்துக்கள் செயல்பட்டு வருகின்றனர். டயாக் இந்து மாமன்றம் என்ன என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை மத்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்து வருகின்றனர்.

வாரத்திற்கு ஒரு முறை கிராமப்புறக் கோயில்களில் இந்துக்களின் ஒன்று கூடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.




இவர்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. ஒருவர் இறந்து விட்டால் அவரை இரு முறை புதைக்கும் பழக்கம். சற்று வித்தியாசமான பழக்கம்.

முதலாவதாக இறந்த ஒருவரின் உடலை முறைப்படி புதைத்து விடுவார்கள். உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது சகல மரியாதைகளுடன் ஊர்வலம் நடைபெறும். இந்து சாமியார்கள் முன் செல்ல உடன்பிறப்புகள் பின் தொடர்வார்கள். மஞ்சள் அரிசி மஞ்சள் பூக்கள் இடுகாட்டிற்குச் செல்லும் வழி நெடுகிலும் தூவப்படும்.

இரண்டாவதாகக் கொஞ்ச காலம் கழித்து புதைக்கப்பட்ட அதே உடல் தோண்டி எடுக்கப்படும். இங்கே கொஞ்ச காலம் என்பது சில மாதங்களாக இருக்கலாம். சில வருடங்களாகவும் இருக்கலாம்.

மீட்டு எடுக்கப்பட்ட அந்த உடலைச் சுத்தம் செய்து தங்களின் இந்து முறைப்படி மறுபடியும் புதைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் இறந்தவரின் ஆத்மா அமைதி பெறும் என்பது காஜு டயாக் மக்களின் இந்து மத நம்பிக்கை.




தவிர சபா, சரவாக் மாநிலங்களிலும் காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றும் 8,000 டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களின் மதத்தை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. காரிங்கான் இந்து மதம் என்பது ஒரு முழுமையான மதம் அல்ல என்று மலேசிய அரசாங்கம் சொல்லி வருகிறது.

காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம்
Great Council of Hindu Religion Kaharingan

மத்திய களிமந்தானில் இருக்கும் பாலங்கராயா எனும் இடத்தில் உள்ளது. இங்கே தான் அவர்களின் மதத் தொடர்பான விவகாரங்கள் பரிசீலிக்கப் படுகின்றன.

வரலாற்றின் மூன்று காலக் கட்டங்களில் களிமந்தான் காடுகளில் குடியேற்றம் நடந்து உள்ளது. முதலாவது குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தைய புரோட்டோ மலாய் காலத்தில் நடந்தது. ஜாவா, களிமந்தான் கரையோரப் பகுதிகளில் இருந்து மக்களின் குடியேற்றம் இடம்பெற்றது.

பின்னர் இந்துக்களின் ஆட்சிக் காலத்தில் ஜாவாவில் இருந்து பலர் களிமந்தான் வந்து குடியேறினார்கள். அவர்கள் மூலமாக டயாக் மக்களிடம் இந்து மதம் பரவி இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.




கி.பி.350-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.400-ஆம் ஆண்டு வரையில் கூத்தாய் மார்த்தாடி பூரா எனும் ஓர் இந்திய அரசு போர்னியோ களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இது ஓர் இந்து சிற்றரசு ஆகும்.

அதைப் போல கி.பி.1300-ஆம் ஆண்டுகளில் கூத்தாய் கார்த்தா நகரா எனும் ஓர் இந்திய அரசு களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இந்த இரு அரசுகளின் இந்து மதத் தாக்கம் களிமந்தானில் தேங்கி நின்று இருக்கலாம்.

அந்த வகையில் இந்து மதம் டயாக் மக்களிடையே பரவியும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் களிமந்தான் மழைக் காடுகளில் இந்து மதம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இது பலருக்கும் தெரியாத செய்தி. அந்தச் செய்தியைத் தெரியப் படுத்திய வகையில் எனக்கும் மகிழ்ச்சி. மீண்டும் ஒரு புதிய வரலாற்றுச் செய்தியுடன் சந்திக்கிறேன்.

சான்றுகள்:

1. Vogel, J.Ph. 1918 The yupa inscriptions of King Mulavarman from Koetei (East Borneo). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 74:216–218.

2. Iban Cultural Heritage — The Early Iban Way of Life — by Gregory Nyanggau 26th descendant of Sengalang Burong, the Iban God of War

3. Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.

4. https://web.archive.org/web/20130730184401/ 

21 ஜூன் 2019

சுழியம் நாள்

குடிக்கத் தண்ணீர் இல்லை. தொண்டை காய்ந்து போகிறது. இரத்தம் சுண்டி போகிறது. உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் போகிறது. தண்ணீர்ப் பஞ்சத்தில் உச்சம் பார்க்கும் உயிர் போகும் நிலைமை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதுதான் சுழியம் நாள். 


வரட்சிக் கோலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தாண்டவம் ஆடும் நாள். ஜீரோ டே (Day Zero) என்பது ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நாள்.
அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப் போய் மனுக்குலத்தின் வாழ்வாதாரம் சுருங்கிச் சுருட்டிக் கொள்வதைத் தான் சுழியம் நாள் என்கிறார்கள். அதுவே தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சக்கட்ட நாள்.

தொண்டையை நனைத்துக் கொள்ள ஒரு சொட்டு நீர் கிடைக்காத அவலத்தை அசை போட்டுப் பாருங்கள். எல்லாம் தெளிவாகத் தெரியும்.

இவற்றை எல்லாம் முன்கூட்டியே கோடி காட்டுவதைத் தான் ஜீரோ டே என்கிறார்கள். அதாவது தண்ணீர் அறவே இல்லாத நாள். தண்ணீர் இல்லை என்றால் அதற்கு அப்புறம் எதுவுமே இல்லை என்பதை உணர்த்திக் காட்டத் தான் சுழியம் நாள் என்கிற நாளை உருவாக்கினார்கள்.



குடிக்கவும் தண்ணீர் இல்லை. குளிக்கவும் தண்ணீர் இல்லை. அப்போது நாம் படும் அவஸ்தை இருக்கிறதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா. சொல்லுங்கள். ரொம்பவும் கஷ்டம்.

ஒரு நாள்... ஒரே ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் இருந்து பாருங்கள். அப்போது தெரியும் நீரின் அருமை, பெருமை, மகிமை, மாண்பு, மரியாதை எல்லாம். பலருக்குச் சொன்னால் புரியாது. பட்டால் தான் தெரியும்.

நீரும் நதியும் நாடுகள் அமைக்கும்

நின்று நடந்தே காடுகள் சமைக்கும்

குன்றில் இருந்தே குதித்து விழும்

குருமண் பூமியில் மிதித்து வாழும்


எனும் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன.



இந்த உலகத்தில் நீர்நிலைகள் இல்லை என்றால் எந்த ஓர் உயிரும் இல்லை. அப்போதைய வள்ளுவர் அப்போதே கூறி விட்டார். அதுவே இப்போதைக்கும் பொருந்தும். இனி எக்காலத்திற்கும் பொருந்தும். நீர் இல்லை என்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது.

இதே மாதிரி ஒரு நீர்ப் பஞ்சம் 2016-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைநகர் கேப் டவுனில் ஏற்பட்டது. தண்ணீர்ப் பற்றாக் குறையினால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் செத்தும் சாகாமல் அலைமோதி உயிருக்குப் போராடிய ஒரு காலக் கட்டம். இது காங்கோ நாட்டுக் கட்டுக் கதை அல்ல. உண்மையாக நடந்த கேப் டவுன் கதை.

காந்தியை இரயிலில் இருந்து உதைத்துத் தள்ளினார்களே அதே அந்த நகரத்தில் நடந்த கதை தான். சரி.



இருபது முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே அந்த நகரில் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று கணித்துச் சொல்லி விட்டார்கள். ஏன் என்றால் அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலை அப்படி. தென் ஆப்பிரிக்காவிற்கு கீழே ஒரு பெரிய பனிப் பாலைவனமே இருக்கிறது. அதாவது அண்டார்டிக் துருவம். ஆனாலும் பாருங்கள் இந்த நாட்டில் இங்கே தண்ணீர்ப் பஞ்சம்.

இருந்தும் இல்லாத நிலையைச் சந்தித்தது அந்த நகரம். ஒரு நாட்டின் கட்டமைப்பு எவ்வளவு தான் பெரிதாக இருந்தாலும்; எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும்; குடிக்கத் தண்ணீர் இல்லை என்றால் அப்புறம் என்னங்க. அந்த நாடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.

எப்படி பார்த்தாலும் அந்த நாடு ஒரு மோசமான நிலையைச் சந்திக்க வேண்டி வரும். அதற்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டு இந்தக் கேப்டவுன் நகரம்.



இன்றும் அந்த நகரில் தண்ணீர்ப் பஞ்சம். அதனால் தண்ணீர்ப் பங்கீடு. கடல் நீரைக் குடிநீராக மாற்றி இப்போது விநியோகம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது அந்த நாட்டின் விதிமுறைகளில் ஒன்று. சட்டமாகவும் இருக்கிறது.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இங்கே நம்மில் பலர் தாயையும் பழிக்கிறார்கள். தண்ணீரையும் பழிக்கிறார்கள். பெற்ற தாயை அனாதை இல்லத்தில் கொண்டு போய் விடுவதும் ஒன்று தான். அந்தத் தாய்க்குச் சமமான தண்ணீரைச் சாக்கடையில் கொட்டுவதும் ஒன்று தான். 

சமயங்களில் இங்கேயும் எங்கேயும் சகட்டு மேனிக்கு தண்ணீர் விரயம் செய்யப் படுகிறது. ஒரு தடவை குளிக்கும் தண்ணீரின் அளவு 50 லிட்டருக்கும் அதிகம். சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கு 2 லிட்டர் தண்ணீர் வரை வீண் விரயம். சரி. கேப் டவுன் கதைக்கு வருவோம்.



கேப் டவுன் நிலப் பகுதியில் மத்தியத் தரைக்கடல் பருவநிலை. கோடைக் காலத்தில் வெப்பம். குளிர்காலத்தில் மழை பெய்யும். பெரும்பாலும் மழையை நம்பியே வாழ்கிறார்கள். மலைப் பிரதேசங்களில் அணைகளைக் கட்டி மழை நீரைத் தேக்கி நீர்ப் பயனீடு செய்து வருகிறார்கள்.

கோடைக் காலத்தில் நீர்த் தேக்கங்கள் வற்றிப் போகின்றன. அதே சமயத்தில் விவசாயத்திற்கு அதிகமாக நீர்ப் பயன்பாடு. அதனால் நீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல. பல பத்தாண்டுகளாக அதே பல்லவிகள் தான்.

2018-ஆம் ஆண்டு கேப் டவுன் நகரம் சுழியம் நாளை அறிவித்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மக்கள் தேவைக்கான தண்ணீர் தீர்ந்துவிட்டது. அதனால் ஒவ்வொருவரும் ஒரு நாள் பயன்பாட்டிற்கு 87 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 



அதற்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கேப் டவுன் நகர நிர்வாகம் தடாலடியாக அறிவித்தது. சுழியம் நாள் என்றும் அறிவித்தது. உலகமே அதிர்ந்து போனது.

அப்போது அங்கே உலகக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மலேசியக் கிரிக்கெட் வீரர்கள் இரண்டு நிமிடங்களுக்கு மேல் குளிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தார்கள். அப்போதுதான் உலகமே நீர்ப் பஞ்சத்தின் ஆபத்தை உணர்ந்தது. மலேசிய மக்களும் திகைத்துப் போனார்கள்.

அதன் பின்னர் பொது மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப் பட்டது. 45 லிட்டருக்குக் குறைக்கப் பட்டது. குளிக்க, குடிக்க, பாத்திரம் கழுவ என்று ஒவ்வொரு தேவைக்கும் இத்தனை லிட்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பட்டியலை அரசாங்கம் தயாரித்து வெளியிட்டது.



தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் தண்ணீர் திருட்டுகள். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்கிற மாதிரி பொது மக்களுக்கு வரும் நீரைச் சிலர் திருடி விற்க ஆரம்பித்தார்கள்.

பணம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கினார்கள். இல்லாதவர்கள் சட்டிப் பானையைத் தூக்கிக் கொண்டு ஆற்றுப் பக்கமாய் ஐலசா பாடிக் கொண்டு போனார்கள்.

சிரிக்க வேண்டாம். உண்மையாக நடந்த நிகழ்ச்சிங்க. நமக்கு அந்த மாதிரி ஏற்படவில்லையே என்று சந்தோசப் படுங்கள். உண்மையிலேயே மலேசியர்கள் புண்ணியம் செய்தவர்கள். படுத்துக் கொண்டே படம் பார்ப்பது புண்ணியம் இல்லையா. சீரியல் விசயத்தைத்தான் சொல்கிறேன். மற்றபடி கக்கல் கழிசல் ஆபாச வீடியோ விவகாரத்தைச் சொல்லவில்லை. பெரிய இடத்து வம்பு தும்பு எல்லாம் நமக்கு வேண்டாங்கோ!



ஆக தண்ணீர் திருடர்கள் கிரிமினல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டார்கள். அவர்களைப் பிடிக்க அரசாங்கம் ஆங்காங்கே சிறப்புப் படைகளை அமைத்தது. நல்ல வேளை மாறு கை மாறு கை வாங்கவில்லை.

ஒரு கட்டத்தில் கார் கழுவ முடியாது; தோட்டத்துக்குத் தண்ணீர் விட முடியாது என தடாலடித் தடைகள். அத்தியாவசியத் தேவைகளுக்கே தண்ணீர் இல்லாத போது கார் கழுவுவது ரொம்ப முக்கியமா? மனுசனே தண்ணீருக்கு சிங்கி அடிக்கிறான் இதில் காரைக் கழுவது தான் குறைச்சல், நாயைக் குளிப்பாட்டித் தான் ஆகணுமா என்கிற கேள்வி வேறு. இதனால் தண்ணீர்க் கலவரம் வரலாம் என்றுகூட எதிர்பார்க்கப் பட்டது.

இன்னும் ஒரு விசயம். எங்கோ ஒரு நாட்டில் நடந்ததை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என்று கேட்கலாம். இருக்கும் போது ஒரு பொருளின் அருமை தெரியாதுங்க. இல்லாத போது தான் அதன் பெருமையே தெரியும். அங்கே நடந்தது மாதிரி இங்கே நடக்கக் கூடாது. தண்ணீர் சுலபமாகக் கிடைக்கிறது; மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக மானவாரியாக வீணாக்கலாமா. 



நீரின் மீது நமக்கு ஒரு மதிப்பு மரியாதை வர வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது என்கிற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அவைதான் நம் எதிர்பார்ப்பு.

இந்த மாதிரி நீர்ப் பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் ஓர் ஆறுதலான செய்தி. அங்கே அருகாமையில் இருந்த நீர்பாசன விவசாயிகள் ஒரு நல்ல காரியம் செய்தார்கள். 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரைத் தர முன்வந்தார்கள். இதனால் சுழியம் நாள் தள்ளிப் போனது.

இது உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் நீர்ப் பஞ்சம் ஏற்படலாம். சில ஆண்டுகளுக்கு முன்னால் கோலாலம்பூரிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதை நினைவில் கொள்வோம். பிலாஸ்டிக் வாளிகளைத் தூக்கிக் கொண்டு அலைந்ததை நினைத்துப் பார்ப்போம்.



மலாக்கா ஜாசினில் அடியேன் ஆசிரியராக இருந்த போது அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. வீட்டில் இருந்த அண்டா குண்டாக்களைத் தூக்கிக் கொண்டு நடுரோட்டில் நின்ற கதையை மறக்க முடியாதுங்க. எப்படிங்க மறக்க முடியும்.

அதே போல 2016-இல் தமிழகத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை மறந்துவிட முடியுமா? பரும மழை பொய்த்தது. அணைகள் வறண்டு போயின. 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னை, கோவை, மதுரை, திருச்சி நகரங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டது. தமிழக வரலாற்றில் அது ஒரு நவீனக் காலச் சுவடு.

வசதி படைத்தோர் காசு கொடுத்து லாரி தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தினார்கள். பணம் இல்லாத ஏழை மக்கள் குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீர் வரும் தெருக் குழாயைத் தேடி வீதி வீதியாக அலைந்தார்கள். அந்த அவலக் காட்சிகள் சில மாதங்கள் தொடர்ந்தன. பின்னர் பருவ மழை பெய்து அணைகள் நிரம்பின. நிலைமை சீரானது.

இன்னும் ஒரு விசயம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது தண்ணீர் பிரச்னை தீராதா என்று ஏங்கித் தவிக்கிறோம். தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் போது அதை நல்லபடியாக பயன்படுத்துகிறோமா? உங்களையே கேட்டுப் பாருங்கள்.



என்னைக் கேட்டால் நீர்ப் பஞ்சம் வருகிறதோ இல்லையோ; நீரைத் தெய்வமாக நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இருக்கும் போதே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்முடைய குழந்தைகளுக்குத் தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தைக் கூற வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அவர்களைத் தயார் படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இப்போதே சரிவர பாடம் எடுத்தால் தான் எதிர்காலத்தில் அவர்கள் பொறுப்பு உள்ளவர்களாக வளர்வார்கள். வாழ்வார்கள்.

கேப் டவுன் நகரத்தின் சுழியம் நாள் பிரச்னையில் இருந்து உலகமே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் நிறையவே உள்ளன. கற்றுக் கொள்ளப் போகிறோமா இல்லை கதறி அழப் போகிறோமா? முடிவு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

நீரினால் ஆகாதது எதுவும் இல்லை. அதே போல நீர் இல்லாமல் எதுவும் ஆகப் போவது இல்லை. தேவைக்கு அதிகமாக நீரைச் செல்வழிப்பதில் நாம் தயக்கம் காட்டுவது இல்லை. தண்ணீர் தானே என்கிற ஓர் அலட்சியம்.

அண்மையில் இணையத்தில் ஒரு செய்தி. தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் வந்தாலும் வரலாம். படித்தேன். ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

மூன்றாம் உலகப் போர் வருகிறதோ இல்லையோ; எதிர்காலத்தில் ஒரு சொட்டு நீரைக்கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப் படலாம். அதற்கு காரணம் நம் அலட்சியமே. 



மழை பொய்த்து விட்டால் அல்லது குழாய் நீர் குறைந்து விட்டால் குய்யோ.. முறையோ என்று சத்தம் போடுவார்கள். ஆனால் இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க மட்டும் பலர் தயாராக இல்லை. அதுதான் பைப்பில் தண்ணீர் வருகிறதே என்கிற அலட்சியம்.

நம் வீடுகளுக்குத் தண்ணீர் குடிநீர் குழாய்கள் மூலம் வருகிறது. ஆனால் அது என்னவோ இலவசமாக கிடைக்கிறது என்கிற மாயையில் பலரும் தண்ணீரை அலட்சியப் படுத்துகிறார்கள். தப்பு.

இன்றைய இந்த அலட்சியம் நாளைய ஆபத்து. தாயைப் பழிக்காதே. தண்ணீரையும் பழிக்காதே என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். சுழியம் நாள் வராமல் பார்த்துக் கொள்வோம்.

20 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 14

பெண் போராளி ஊர்மிளாவிற்கும் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமா மகேஸ்வரனுக்கும் காதல் பிரச்சினை என்கிற செய்தி இலண்டனில் இருக்கும் அண்டன் பாலசிங்கத்திற்குப் போய்ச் சேர்கிறது.


அண்டன் பாலசிங்கம் புலிகளின் அறிவுத் தந்தை. அதாவது காட் பாதர். இன்னும் ஒரு விசயம். விடுதலைப் புலிகளுக்குத் தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரன். தளபதியாக இருந்தவர் பிரபாகரன்.

ஆக இருவருமே தலையாய பதவிகளை வகித்து வந்தனர். இவர்கள் இருவரும் சென்னை; யாழ்ப்பாணம் என இரு இடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் அறிவுத் தந்தையாக இருந்தவர் அண்டன் பாலசிங்கம். இவர் இலண்டனில் இருந்து அறிவுரை கூறி வந்தார். 



பாலசிங்கத்திற்குச் செய்தி போனதும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி ரொம்ப நாட்கள் ஆகவில்லை.

பாலசிங்கத்திடம் தீர்வு காணச் சொல்லி கொடுக்கப்பட்ட முதல் பிரச்சினை ஒரு காதல் பிரச்சினை. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் விசித்திரம்; முதல் வியப்பு. எனக்குக்கூட அப்படித்தான் தோன்றியது.

ஏற்கனவே போன கட்டுரையில் சொல்லி இருக்கிறேன். காதல் பிரச்சினை என்பது விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் ஒரு கொசுக்கடி பிரச்சினை. இதற்கு போய் இப்படி அலட்டிக் கொள்கிறார்களே என்றும் எனக்கும் லேசான வருத்தம். ஆனால் அதற்குள் ஒரு பெரிய வில்லங்கம் இருப்பது போகப் போகத் தான் தெரிய வந்தது. தொடர்ந்து படியுங்கள்.



பாலசிங்கம் தன் மனைவி அடேலுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஊர்மிளா உமா மகேஸ்வரன் காதல் பிரச்னையின் முழு விவரங்கள் அவருக்குச் சொல்லப் பட்டன. உமா மகேஸ்வரனை அழைத்து விசாரிக்கிறார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது.

இதற்கு இடையில் பிரபாகரன் பொறுமை இழக்கிறார். இயக்கத்தை விட்டு வெளியேறுமாறு உமா மகேஸ்வரனிடம் சொல்கிறார்.

அற்பமான காதல் விசயம் தானே. ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினையாகப் பிரபாகரன் பெரிது படுத்துகிறார் என இயக்கத்தில் இருந்த சிலரும் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளின் இலண்டன் பிரதிநிதிகள் இந்த மோதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சார்பாக கிருஷ்ணன் என்பவரும் ராமச்சந்திரன் என்பவரும் சென்னைக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்தனர்.

“உமா மகேஸ்வரன் பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. காதல் தானே... விட்டு விடுங்கள்” என்று பிரபாகரனிடம் பரிந்துரை செய்தனர்.



விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர் ஊர்மிளா. அவரோடு புலிகளின் இயக்கத் தலைவர் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்பது தெரிய வந்தால்... யாரும் இனிமேல் இயக்கத்துக்கு தங்களுடைய சகோதரியையும் அனுப்ப மாட்டார்கள்; மகளையும் அனுப்ப மாட்டார்கள் என்று பிரபாகரன் கூறிய போது இலண்டன் பிரதிநிதிகளால் பதில் சொல்ல முடியவில்லை.

மோதல் முற்றியது. 1980-ஆம் ஆண்டு உமா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப் பட்டார்.

அப்புறம் என்ன. பிரபாகரன் வசமாக மாட்டிக் கொண்டார். அவர் மீது உமா மகேஸ்வரன் சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஜனநாயகச் சுதந்திரமே இல்லை. எல்லா முடிவுகளையும் பிரபாகரன் ஒருவரே எடுக்கிறார். அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் ஒரு இட்லர் என்று விலாசித் தள்ளினார்.

பிரபாகரன் மறுக்கவில்லை. ஆமாம். நான் சர்வாதிகாரி தான். இல்லை என்று சொல்லவில்லை. முடிவுகளை நான் தான் எடுப்பேன். விருப்பம் உள்ளவர்கள் இயக்கத்தில் இருந்தால் போதும். அவர்களை வைத்து தமிழர்களின் இலட்சியத்தை நிறைவேற்றிக் காட்டுவேன் என்று பிரபாகரனின் பதில் வருகிறது.



இந்தக் காலக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரிவினை. “பிரபாகரன் குழு” என்றும் “உமா மகேஸ்வரன் குழு” என்றும் இரண்டு பிரிவுகளாக விடுதலைப் புலிகள் இயக்கம் பிரிந்து குழப்பத்தில் மூழ்குகின்றது.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலக் கட்டங்களில் பல இயக்கங்கள் செயல்பட்டு வந்து உள்ளன.

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

3. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்

4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி

5. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

6. தமிழீழ விடுதலை இயக்கம் 

7. தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)

8. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்


இந்த இயக்கங்கள் அனைத்துமே தனித் தமிழீழம் தோன்ற வேண்டும் என்று போராடிய குழுக்கள் ஆகும். சரி. உமா மகேஸ்வரன் பிரச்சினைக்கு வருவோம்.



உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் பிரச்சனை பெரிதாக வெடித்தது. உமா மேஸ்வரன் சில இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு புலிகளுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்யத் தொடங்கினார்.

இது யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடையே பெரிய கவலையை உண்டாக்கியது. புலிகளுக்குள் சண்டையாம் என்று பேசும் அளவிற்கு விவகாரம் பெரிதாகிப் போனது.

இதற்கு இடையில் விடுதலைப் புலிகளின் மத்தியச் செயற்குழு இரு முறை கூடி விவாதித்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

பிரபாகரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளின் இயக்கம் ஓர் இராணுவ இயக்கமாக இருக்க வேண்டும்; இயங்க வேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு.




இருந்தாலும் மத்திய குழு விட்டுக் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் எனும் கருத்தையே தொடர்ந்து முன் வைத்தது.

பிரபாகரனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரி. பிரச்சினை இல்லை. உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள். என் பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்தில் எனக்கும் வேலை இல்லை என்று சொல்லி இயக்கத்தை விட்டு வெளியேறினார். பலரும் தடுத்தார்கள். பிரபாகரன் கேட்கவில்லை.

இயக்கத்தை விட்டு வெளியேறியதும் வீட்டிற்குச் செல்லவில்லை. போலீஸ் தேடி வரும் என்று தெரியும். அதனால் வல்வெட்டித் துறையில் இருந்த மாமா வீட்டிற்குச் சென்றார். கொஞ்ச காலம் அங்கு தங்கி இருந்தார். ஆனாலும் அவருக்கு மன அமைதி இல்லை. இயக்கம் அழிந்து விடலாம் என்கிற பயம் இருந்தது.

அதனை உணர்ந்த பிரபாகரனின் மாமா (அக்காள் கணவர்) தக்க தருணத்தில் ஒரு முடிவு எடுத்தார். அப்போது டெலோ அமைப்பின் தலைவராகத் தங்கதுரை குட்டிமணி என்பவர் இருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தார்.

தங்கதுரையும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் தமிழகம் திருச்சியில் இருந்த டெலோ அமைப்பின் பயிற்சிப் பொறுப்பாளராகப் பிரபாகரன் நியமிக்கப் பட்டார்.



தமிழகம் வந்த பிரபாகரன் டெலோ அமைப்பின் உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார், ஆனாலும் பிரபாகரனுக்கு அதில் முழுமையான விருப்பம் இல்லை. ஒரு கட்டுக் கோப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே பிரபாகரனின் கனவு.

இறுதியில் யாழ்ப்பாணத்துப்  போராளிகளின் கட்டாயத்தின் பேரில் 1980-ஆம் ஆண்டில் புலிகள் அமைப்பில் பிரபாகரன் மீண்டும் சேர்ந்தார். அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அப்படி இப்படி கோபதாபங்கள் இருக்கவே செய்தன. அதாவது சின்னச் சின்ன சண்டைகள் போட்டு பிரபாகரன் விலகிக் கொண்டதைத் தான் சொல்ல வருகிறேன்.

1981-ஆம் ஆண்டில் பிரபாகரன் தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் தங்கினார், புலிகள் இயக்கத்தை பலப் படுத்துவதிலும் பயிற்சிகளை வழங்குவதிலும் தீவிரமாக இருந்தார்.

இதற்கு இடையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்ட உமா மகேஸ்வரன் புலிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார். 



புளொட் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அது மட்டும் இல்லை. தென் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுடன் உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டார். யாரை எதிரிகள் என்று நினைத்தார்களோ அவர்களிடமே கொஞ்சிக் குலவ ஆரம்பித்தார்.

அத்துடன் பிராகரனின் பெயரைக் களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகப் புதியபாதை எனும் ஒரு பத்திரிக்கையையும் உமா மகேஸ்வரன் தொடங்கினார். புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் அவதூறுகளை எழுதி வந்தார்.

புலிகள் ஆத்திரம் அடைந்தார்கள். அனைத்துலக ரீதியில் தமிழர்ப் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படும் என்பதைப் புலிகள் உணர்ந்தார்கள். ஊடகத்தின் மூலம் தமிழர்களின் போராட்டம் கொச்சைப் படுத்தப் படுவதைப் புலிகள் விரும்பவில்லை.

புதிய பாதை பத்திரிகையின் பொறுப்பாளரும் உமா மகேஸ்கரனின் வலது கரமான சுந்தரம் என்பவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள். புலிகளின் குழு தான் அந்த முடிவை எடுத்தது. அந்த வகையில் சுந்தரத்தை சார்ல்ஸ் அந்தோனி என்கிற சீலன் சுட்டுக் கொன்றார்.

இது உமா மகேஸ்வரனுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. பிரபாகரனைப் பழிவாங்க வேண்டும் என உமா மகேஸ்வரன் வெறி கொண்டு அலைந்தார்.

அந்த நேரத்தில் பிரபாகரன் தமிழகத்தில் இருந்தார். பகை உச்சக் கட்டமாக முற்றியது.

இதற்கிடையில் உமா மகேஸ்வரனும் 1982 பெப்ரவரி 25-ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தார். தமிழகம் வந்த உமா மகேஸ்வரன் கவிஞர் பெரும்சித்தனார் வீட்டில் தங்கி இருந்தார்.



பிரபாகரன் தமிழகத்தில் இருப்பது உமா மகேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். பிரபாகரனைத் தீர்த்துக் கட்டத் தான் உமா மகேஸ்வரன் தமிழகத்திற்கே வந்தார்.

இன்னும் ஒரு விசயம். ஒரு காலக் கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழர்களின் விடுதலை இயக்கங்களின் உறைவிடமாகச் சென்னை மாநகரம் விளங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள்; தமிழீழ விடுதலை இயக்கம்; ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி; தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய நான்கு இயக்கங்களும் சென்னையின் நான்கு இடங்களில் உறைவிடங்கள் இருந்தன. அங்கு இருந்து வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று வந்தன.

ஒரு குழுவினர் இருக்கும் இடத்திற்கு இன்னொரு குழுவினர் போக மாட்டார்கள். அது அவர்களுக்குள் எழுதப் படாத ஒரு சாசனம். அந்த வகையில் பிரபாகரனுக்கு அடையாறு தான் அவரிருடைய பேட்டை. சரி.

இந்த இயக்கங்களின் தலைவர்களை இலங்கை அரசாங்கம் அங்கே யாழ்ப்பாணத்தில் வலை போட்டுத் தேடிக் கொண்டு இருந்தது. இருந்தாலும் இவர்கள் தேங்காய் எண்ணெய்யை நன்றாகக் கரைத்துக் கடைந்து ஊற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

நம்ப விவேக் இப்போது தான் திரையில் வசனங்கள் பேசி கலாய்க்கிறார். ஆனால் அதற்கு முன்னாடியே பிரபாகரன் போன்ற தலைவர்கள் பேர் போன கில்லாடிகள்.

ஆக அதில் இருந்து தப்பிக்கவே பிராபகரன் சென்னையில் தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்து இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த பதவி மோகக் கொலைகளுக்குத் தூபம் போட்டது தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான். சொல்லி இருக்கிறேன். அதை இங்கே விரிவாகவும் எழுத முடியாது. எழுதவும் விரும்பவில்லை.

இருந்தாலும் கட்டுரையைத் தொடர்ந்து படித்தால் அந்தத் தலைவர்கள் யார் யார் என்பது உங்களுக்கும் தெரிய வரும். அந்தத் தலைவர்களுக்கு எல்லாம் அப்பால் பட்டவர் எம்.ஜி.ஆர்.

செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். இறந்து கொண்டு இருக்கும் போதும் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் மட்டும் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்து இருந்தால் தமிழீழ வரலாறே வேறு மாதிரியாய் எழுதப்பட்டு இருக்கும்.

(தொடரும்)

19 ஜூன் 2019

அகிலன் தணி

தற்காப்புக் கலை ஆதித் தமிழர்களின் அற்புதமான கலை. தனித்து நிற்கும் தனிப் பெரும் தத்துவக் கலை. சிலம்பத்தில் சீர் செய்து வீறு வரிசை பார்த்த வீரக் கலை. வர்மத்தில் வேதங்களைக் கரைத்து அகத்தியம் வளர்த்த கலை. குத்து வரிசையில் குச்சி இல்லாமல் கரத்தாண்டவம் வார்த்த கலை. 



தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகள் நயன் மிகுந்தவை. தமிழர்களின் அனைத்துக் கலைகளுமே தனித்துவம் வாய்ந்தவை. அதே அந்தத் தமிழர்களின் தலை வாசலில் தமிழர் ஒருவர் சாதனை படைத்து இருக்கிறார். அழகிய தமிழ் மைந்தன். அகிலன் தணி எனும் அகிலன் தணிகாசலம்.

கலப்புத் தற்காப்புக் கலையில் ஒரு கலக்கு கலக்கி, ஒட்டு மொத்த மலேசியர்களையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர். சரித்திரம் படைத்து சாதனை செய்து இருக்கிறார். தன் அபாரமான போட்டித் திறமையால் ஒட்டு மொத்த மலேசியர்களுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.




சில தினங்களுக்கு முன்னர் வரையில் “அகிலன் தணி” என்கிற ஒரு தனி மனிதர் யார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று அவர் புகழ்பெற்றவர். மலேசியாவில் மட்டும் அல்ல; உலக அளவில் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகப் புகழ் பெற்று விளங்குகின்றார்.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் ஒருவரின் உடல் வாகு; உடல் அமைப்பு; அல்லது உடல் பருமன்; அது ஒரு தடை அல்ல என்பதற்கு அகிலன் தணிகாசலம் என்பவர் தனித்து நிற்கும் ஒரு முன்னோடிச் சான்று.



மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) என்பது கலப்புத் தற்காப்புக் கலை. தாய்லாந்துத் தற்காப்புக் கலையைப் பின்னணியாகக் கொண்டது. முவாய் தாய் (Muay Thai); உதைக் குத்துதல் (kickboxing); குத்துச் சண்டை (boxing); மல்லுக் கட்டுதல் (grappling); ஆகிய நான்கும் கலந்ததே கலப்புத் தற்காப்புக் கலை ஆகும்.

இந்தக் கலையில் உச்சம் பார்த்தவர் உலக ஜாம்பவான் அகியாமா. இவருக்கு செக்ஸியாமா எனும் புனைப்பெயரும் உண்டு. ஜப்பானில் புகழ்பெற்ற தற்காப்புக் கலை வீரர். அவரையே வீழ்த்திச் சாதனை படைத்து இருக்கிறார் நம் நாட்டு அகிலன் தணி.




கலப்பு தற்காப்புக் கலை வீரர்களுக்கான ‘ஒன் சாம்பியன்ஷிப்’ போட்டி நான்கு நாட்களுக்கு முன்னர் சீனா, ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்  அகிலன் தணியும் ஜப்பானின் அகியாமாவும் மோதினார்கள்.

அகியாமாவிற்கு வயது 43. அகிலன் தணிக்கு வயது 23. பொது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த போட்டி. ஏன் என்றால் தற்காப்பு கலையில் அகியாமா ஒரு ஜாம்பவான். அசைக்க முடியாத அசாத்திய மனிதர். நீண்ட காலமாக அனுபவம். தற்காப்புக் கலையின் நெழிவு சுழிவுகளை நெட்டிச் சொடுக்கு எடுத்தவர்.

அகியாமாவை அகிலனால் சமாளிக்க முடியுமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஏன் என்றால் அகியாமா பல ஆண்டுகளாக உலகச் சாம்பியன் விருதைத் தக்க வைத்தவர். அகியாமாவை வீழ்த்த முடியாது என்பதே பலரின் கருத்துக் கணிப்பு. 




முதல் சுற்றின் முப்பதாவது விநாடியில் அகியாமாவின் தாகுதலில் அகிலன் நிலைகுலைந்து போனார். மேடையில் சரிந்து விழுந்தார். தாக்குப் பிடிக்க முடியுமா என்று பலரும் யோசித்தார்கள்.

ஆனால் நடந்ததே வேறு. இரண்டாவது சுற்றில் அகிலன் தணி, தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினார். மூன்றாவது சுற்றில் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அகியாமாவை வீழ்த்தினார். அந்த மூன்றாவது சுற்றே அகிலன் தணியின்  விளையாட்டு வீரத்தில் அரும் பெரும் சாதனையாகக் கருதப் படுகின்றது. சரி.

அகிலன் கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பலருக்கும் அழுகை வரும். அவரின் பாதையில் வேதனை கலந்த சோதனைகள். பாசத்திற்காக ஏங்கிய தவிப்புகள். தனிமையில் தவித்து நின்ற இறுக்கங்கள். அம்மா இல்லையே என்கிற ஏக்கங்கள். தொடர்ந்து படியுங்கள்.

அகிலனுக்குப் பருமான உடல். அதைப் பார்த்து பலரும் கேலி செய்தார்கள். மனம் உடைந்து போய் பல நாட்கள் தனிமையில் உடகார்ந்து அழுது இருக்கிறார்.

அவருக்கு 15 - 16 வயதாகும் போது விரக்தியின் அடிமட்டத்திற்கே போய் விட்டார். அதில் இருந்து விடுபட முடியாது என்கிற ஒரு முடிவிற்கும் வந்து விட்டார். அப்போது அவருடைய உடல் எடை 139 கிலோ. மிகவும் பருத்த உடல். 




அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சரி; பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களும் சரி; அவருடைய உடல் பருமனைப் பார்த்து ஏளனம், பகடி செய்தார்கள். தடியன் என்றும் சமயங்களில் எருமை மாடு என்றும் கேலி செய்து இருக்கிறார்கள். அப்போது அவருக்கு பதின்ம வயது. தாயாரும் அவரை விட்டுப் போய் விட்டார்.

அந்தச் சமயத்தில் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக ஒரு திரைப்படம் வந்து படம் காட்டி விட்டுச் சென்றது. அந்தப் படத்தின் பெயர் எஸ்.பி.எல். ஷா போ லாங் (SPL: Sha Po Lang). உலகப் புகழ் சீன நடிகர் டோனி யென் நடித்த படம்.

அந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி. அகிலனின் கவனத்தை ஈர்த்தது. அந்தக் காட்சிதான் அவரைத் தற்காப்புக் கலையின் வலைக்குள் இழுத்துப் போட்டது.

நடிகர் டோனி யென் பயின்ற பயிற்சிகள்; அவரின் அந்தத் தற்காப்புக் கலையைப் பற்றிய செயல்பாடுகள்; அவற்றைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்தார். அப்படியே அதிலேயே மூழ்கியும் போனார். 




இப்போது அகிலனுக்கு வயது 22. பழைய வேதனைகளை எல்லாம் கடந்து வந்து விட்டார். ஒரே வார்த்தையில் சொன்னால் பழையதை நினைக்க நேரம் இல்லை. அதாவது நண்பர்களின் கேலிக் கிண்டல்களை அசை போட்டுப் பார்க்க நேரம் இல்லை. மறந்து விட்டார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஜியூ ஜிட்சு (jiu-jitsu) தற்காப்புக் கலை வகுப்பில் சேர்ந்தார். அது ஒரு பிரேசிலியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மையம். அப்போது அவருக்கு வயது 16.

வகுப்பில் சேர்ந்த மூன்றே மாதங்களில் அவருடைய உடல் எடை 10 கிலோ குறைந்தது. 139-லிருந்து 129-ஆகக் குறைந்தது. அந்த ஒரு திருப்பமே; அந்த ஒரு மாற்றமே அவரின் உடல் எடை மேலும் மேலும் குறைவதற்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது.

அவருக்கு 18 வயதாக இருக்கும் போது கோலாலம்பூர் ராஜா சூலானில் இருக்கும் மொனார்க்கி உடல் பயிற்சிக் கூடத்தில் (Monarchy MMA gym) துப்புரவு செய்யும் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 1000 ரிங்கிட். அதே சமயத்தில் பயிற்சிக் கூடத்தில் எந்த ஒரு பயிற்சியிலும் கலந்து கொண்டு பயிற்சி பெற அனுமதியும் கிடைத்தது.




கலப்பு தற்காப்புக் கலையில் தீவிரமான ஈடுபாடு கொண்டார். அதில் முழுமையாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மல்யுத்தப் பிடிகள்; தாக்குதல் கலை போன்றவற்றின் பயிற்சி முறைகளைத் தெரிந்து கொண்டார்.

பிரேசிலியத் தற்காப்புக் கலையில் தீவிரமான பயிற்சிகள். அதற்குப் பொருத்தமாக நல்ல ஆரோக்கியமான உணவு முறை. அப்புறம் என்ன. ஆறே மாதத்தில் அகிலம் தணிகாசலத்தின் உடல் எடை 129 கிலோவில் இருந்து 93-ஆகக் குறைந்தது.

இப்போது அவருடைய எடை 77 கிலோ. சமயங்களில் 85 வரை போகும்.

பதினெட்டு வயதில் தனிமையாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து பயிற்சிகளில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். வீட்டை விட்டு வெளியேறினார். பயிற்சி முகாமிலேயே தங்கினார்.

பயிற்சி முகாமைக் கவனித்துக் கொள்வது; சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்து கொண்டே பயிற்சிகளிலும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார். 




இரவு நேரத்தில் பயிற்சி முகாமின் தரையில் பிலாஸ்டிக் விரிப்பில் படுத்துத் தூங்கினார். ஒரு வருட காலம் அப்படி தூங்கி இருக்கிறார். அப்படிக் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்ததின் பிரதிபலன்களைத் தான் இப்போது வெற்றிக் கனிகளாகச் சுவைத்துப் பார்க்கிறார்.

இப்போது அகிலன் தணி எனும் அகிலன் தணிகாசலம் என்கிற ஒரு சின்னப் பையன் நாட்டின் தலை சிறந்த தற்காப்புக் கலை வீரராகவும் திகழ்கிறார். வாழ்த்துவோம்.

அகிலனுக்கு உற்றத் தோழனாகவும் உந்து சக்தியாகவும் இருந்தவர் அவருடைய தந்தையார் தணிகாசலம். ஆரம்பத்தில் மகனின் தற்காப்புக் கலை அவருக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் காலப் போக்கில் மனம் மாறி மகனுக்கு ஒத்துழைப்பை வழங்கினார். பயிற்சிகளுக்கான செலவுகளில் ஒரு பகுதியை வழங்கியும் வந்தார்.

அகிலனுக்கு அலிகேட்டர் எனும் ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. அலிகேட்டர் என்பது முதலை இனத்தைச் சேர்ந்த நீள்மூக்கு முதலை.

அகிலன் கைக்குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தாயார் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு அவருடைய தந்தையார் தான், தனி ஆளாக இருந்து அகிலனை வளர்த்து எடுத்தார்.




அகிலனின் பால்ய வயது. தொடக்கப் பள்ளியில் பயிலும் போது கோலாலம்பூரில் ஒரே ஓர் அறை கொண்ட வீடு. அதில் ஐந்து பேர் தங்கினார்கள். அவருடைய தந்தையார்; இரு சித்தப்பாக்கள்; சின்னம்மா ஒருவர். நெருக்கி அடித்துப் படுத்துத் தூங்க வேண்டிய நிலைமை. அகிலனே சொல்கிறார்.

தன்னுடைய அம்மாவைப் பற்றி அகிலனின் நண்பர்கள் கேட்பார்கள். அவர் குடும்பத்தை விட்டுச் சென்றதைச் சொல்ல மாட்டார். அதற்குப் பதிலாக என் அம்மா ஒலிம்பிக் போட்டிக்குப் போனார். திரும்பி வரவே இல்லை என்று சொல்வாராம்.

அகிலன் மேலும் சொல்கிறார். என் அம்மாவைப் பற்றி நான் கவலைப் படுவதே இல்லை. ஏன் என்றால் என் அம்மாவின் முகத்தை நான் பார்த்ததே இல்லை. அதனால் அம்மா - மகன் உறவு முறை எதுவுமே இல்லை. அம்மா பாசம் கொஞ்சமும் இல்லை. எல்லாமே என் அப்பா தான். அவர் தான் என் தெய்வம்.

அவருடைய தந்தையாருக்கு ஓர் உணவு விடுதியில் மேற்பார்வையாளர் வேலை. அந்த விடுதியின் மற்ற மற்ற துணை விடுதிகளுக்கும் சென்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு. அதனால் நள்ளிரவில் தான் வீட்டிற்கு வருவார். 




அகிலனுக்கு எட்டு வயதாக இருக்கும் போதே தன்னுடைய துணிமணிகளைச் சொந்தமாகத் துவைத்துக் கொள்ள கற்றுக் கொண்டார். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வார். அப்பா கொடுத்த காசைக் கொண்டு வீட்டிற்கு வேண்டிய மளிகைச் சாமான்களை வாங்கி வருவார். சொந்தமாகவே சமைத்தும் கொள்வார். குண்டர்கள் நிறைந்த செந்தூல் பகுதியில் வீடு. இருந்தாலும் தனி ஆளாக ஆறு கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்குப் போய் வருவார்.

நான் சுதந்திரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டேன். அதனால் அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் சின்ன வயதில் செய்த ஒரே தவறு. என்ன தெரியுங்களா. ரொம்ப சாப்பிட்டேன். அளவுக்கு மீறி சாப்பிட்டேன்.

அது தான் என் உடலை பெரிதாகப் பருக்க வைத்து விட்டது என்று சொல்லிவிட்டு சின்னதாகச் சிரிக்கிறார். அண்மையில் அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி நிறுவனம் அவரைப் பேட்டி கண்டது. மனம் விட்டுப் பேசினார்.

நாங்கள் இருந்த பகுதியில் நிறைய குண்டர்களின் நடமாட்டம். அதனால் தான் தற்காப்புக் கலையில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது. என்னைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தான் தற்காப்புக் கலையில் இறங்கினேன் என்று அகிலன் சொல்கிறார்.




ஆரம்பத்தில் என்னுடைய தற்காப்புக் கலைக்கு அப்பா முழுமையான ஆதரவு வழங்க மறுத்து விட்டார். நான் பிடிவாதமாக இருந்தேன். போகப் போக அவர் இறங்கி வந்தார். பயிற்சிகளுக்குக் காசு கொடுத்தார். பயிற்சிகள் செய்வதற்கு கையுறைகள் வேண்டும். அதிக விலை. வாங்குவதற்கு காசு கொடுத்தார். எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்தார். இப்போது நான் சுதந்திரமாக வாழ்கிறேன். எல்லாச் செல்வுகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன். அப்பாவுக்கும் உதவி செய்கிறேன்.

எனக்கு அம்மா எனும் நினைப்பே வராது. அவர் கறுப்பா சிவப்பா என்று தெரியாது. அவர் முகத்தை நான் பார்த்ததே இல்லை. அவருடைய படமும் வீட்டில் இல்லை. அவர் எப்படி இருப்பார் என்பதும் எனக்குத் தெரியாது. அப்பாவிடம் கேட்பதும் இல்லை என்று சொல்லும் போது அகிலனின் முகத்தில் சன்னமான இறுக்கம். சன்னமான வேதனைக் கீற்றுகள். ஆனால் சிரித்துக் கொள்கிறார்.

அகிலனின் எல்லா போட்டிகளுக்கும் அவருடைய தந்தையார் முதல் ஆளாகப் போய் ஆஜராகி விடுகிறார். அகிலனை உற்சாகப் படுத்துகிறார். புருஸ் லீ போல சண்டை போட வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

2017 மே 26-ஆம் தேதி கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் 15 முறை உலகச் சாம்பியன் விருதை வென்ற பென் அஸ்க்ரென் (வயது 32) என்பவருடன் மோதி வரலாற்றில் இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 21. பென் அஸ்க்ரென் அமெரிக்காவைச் சேர்ந்தவர். 


இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அகிலனை ஊக்குவிக்க ம.இ.கா. விரும்பியது. அகிலனுக்கு தங்கப் பதக்கமும் 10,000 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கிச் சிறப்பு செய்தது. 2017-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

ம.இ.கா. தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தலைமையில் அகிலனுக்கு அந்தப் பாராட்டு விழா நடந்தது.

அகிலன் தணி எனும் தமிழ் இளைஞர் மலேசிய வரலாற்றில் இடம் பிடித்தது ஒரு காலச் சுவடு. நம் இந்தியச் சமுதாயத்திற்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஒரு சாதனைச் சுவடு. வாழ்த்துகிறோம் மகனே.

சான்றுகள்:

1. https://www.onefc.com/articles/title-challenger-agilan-thani-is-inspired-every-day-by-the-single-father-who-raised-him/

2. https://www.columnlife.com/index.php/biographies/item/395-agilan-thani

3. https://sukan.my/agilan-thani-budak-dari-sentul/

4. https://www.mmafighting.com/2019/6/15/18680072/one-championship-results-yoshihiro-akiyama-suffers-debut-defeat-agilan-thani-after-four-year-layoff