11 செப்டம்பர் 2011

இந்தியா மீது சீனா போர் தொடுக்குமா


(இந்தக் கட்டுரை இன்று செப்டம்பர் 11 மலேசிய நண்பன் நாளிதழில் பிரசுரிக்கப் படுகிறது)


தயவு செய்து மூச்சைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் அருணாச்சலப் பகுதி எல்லையில் சீனா தனது படைகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே மூன்று டிவிஷன் படைகள் அங்கே இருந்தன. இப்போது 30 டிவிஷன்கள் குவிக்கப் பட்டு விட்டன. 30 டிவிஷன்கள்  என்றால்  3 லட்சம் இராணுவ வீரர்கள். ஏன்?

இன்னும்  இரண்டே இரண்டு ஆண்டுகளில் இந்தியா மீது சீனா போர் தொடுக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகி உள்ளன. இதை நான் சொல்லவில்லை. உலக அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இரண்டு இமயங்கள் மோதிக் கொள்ளும் அடிவானக் கீற்றுகள் அதிகமாகத் தெரிகின்றன. நெஞ்சம் கனக்கும் வேதனையான செய்தி. இருந்தாலும் அந்த மாதிரியான ஒரு போர் வரவே கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.

காஷ்மீரில் சீனா ஆக்கிரமித்து இருக்கும் இந்தியப் பகுதியின் பெயர் அக்சாய் சின்.  இது ஏறக்குறைய மலேசியாவில் கால் பகுதி இருக்கும். அதாவது 37,250 சதுர கிலோ மீட்டர்கள். அதுவும் பற்றாது என்று இன்னும் கொஞ்சம் நிலத்தை சீனா பாகிஸ்தானிடமிருந்து 1963ல் வாங்கிக் கொண்டது. சுதந்திரம் வாங்கிய கையோடு பாகிஸ்தான்  காஷ்மீரில் ஊடுருவியது என்பது பழைய செய்தி. அப்படி அத்துமீறி நுழைந்த ஒரு சில வாரங்களிலேயே காஷ்மீரின் பெரும் பகுதியைப் பாகிஸ்தான் தன் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வந்தது.
(சான்று: http://en.wikipedia.org/wiki/Kashmir_conflict)

இந்தக் காலக் கட்டத்தில் சீனாவின் பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு மிகவும் தேவைப் பட்டது. எந்த நேரத்திலும் தன் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனும் அச்சம் அதற்கு இருந்தது. அதனால், நிலைமையைச் சரி கட்ட அப்போது அதன் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த 5120 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியைப் பாகிஸ்தான் சீனாவுக்கு தானமாக வழங்கியது.

அதாவது நெகிரி செம்பிலான் மாநில அளவுக்கு உள்ள நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப் பட்டது என்று சொன்னால் தான் தெளிவாக இருக்கும்.  கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை உங்களுக்குத் தெரியும் தானே. அந்த மாதிரி தான் இங்கேயும் நடந்தது. அதன் மூலம் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவுப் பாலம் உருவாக்கப் பட்டது.

ஆனால், பறி போன அந்த நிலங்களில் ஒரு பிடி மண்ணைக் கூட இந்தியாவால் இதுவரை இன்னும் திரும்பிப் பெற முடியவில்லை என்பது தான் வேதனையான செய்தி. அதுவே ஓர் உண்மையான  நிதர்சனமும் கூட! (சான்று: http://en.wikipedia.org/wiki/Aksai_Chin)

சரி. இந்த அக்சாய் சின் நிலப்பகுதிக்கு வருவோம். இந்த நிலம் காஷ்மீருக்கு வட கிழக்கே லடாக் பகுதியில் இருக்கிறது. 1834ல் இருந்து இது இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. அப்பகுதி ஜம்மு காஷ்மீரின் ஒரு நிலப்பகுதி. 1963ல் சீனா திடீரென்று ஒரு தாக்குதலை நடத்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதற்கும் காரணம் இருக்கிறது.

திபெத் நாடு சீனாவுக்கு அருகாமையில் உள்ள நாடு. 1959ல் அந்த நாட்டின் மீது சீனா தாக்குதல் நடத்திக் கைப்பற்றியது. அங்கு வாழ்ந்த இலட்சக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். திபெத் தலைவர் டாலய் லாமாவுக்கும் இந்தியா அரசியல் அடைக்கலம் கொடுத்தது.

அதனல் அத்திரம் அடைந்த சீன, ஒரு சால்சாப்புக் காரணத்தைக் காட்டி லடாக் மீது படை எடுத்தது. அதனால், 1962ல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்தது. அதில் சீனா கைப்பற்றிய இந்திய நிலம் தான் லடாக். ஆக, இந்த லடாக் தன் இப்போது அக்சாய் சின் என்று சீனாவால் அழைக்கப் படுகிறது. இது தான் நடந்த உண்மை.

இந்த நிலம் தனக்குச் சொந்தம் என்று சீனா தன் தலைமுடியை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. வாழையடி வாழையாக அக்சாய் சின் எங்களுடைய பரம்பரைச் சொத்து என்று இந்தியா வரிந்து கட்டி மல்லுக்கு நிற்கிறது. உண்மையில் யாருக்குச் சொந்தம் என்பதில் ஒரு தீர்வு காண முடியாமல் ஐக்கிய நாட்டுச் சபையும் தவிக்கிறது.

ஓர் இடைச் செருகல். 1950களில் பிரதமர் நேரு சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றார். சௌ என் லாய் டில்லிக்கு வந்தார். இரு பிரதமர்களும் கை குலுக்கிக் கொண்டனர். குசலம் விசாரித்து பரஸ்பரம் பரிசுகளை மாற்றிக் கொண்டார்கள். அவ்வளவுதான். அவர்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால், அக்சாய் சின் பிரச்னை மட்டும் இன்னும் அப்படியே குத்துக் கல்லாக நிற்கிறது. (சான்று: http://www.isn.ethz.ch/isn/Current-Affairs/ISN-Insights/)

சரி. இந்தப் பனிப்போர் அணு ஆயுதப் போரில் முடிந்து விடுமோ என்று இப்போது உலகமே பயப்படுகிறது. ஏன் என்றால் இரு நாடுகளுமே அணுகுண்டுகளை வைத்திருக்கும் நாடுகள். இந்தியாவுக்கு பக்க பலமாக அமெரிக்கா, ரஷ்யா, இருக்கின்றன. பிரச்னை என்று வந்தால் சில ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வரலாம். பிரான்ஸ் இரண்டாம் படசம்.

சீனாவின் பக்கம் பாகிஸ்தான், வட கொரியா, ஆப்ரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா இப்போதைக்கு நல்ல ஒரு கூட்டாளி.

சீனா இப்போது வங்காள் தேசம், மியன்மார், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாட்டுத் துறைமுகங்களில் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்து இருக்கிறது. அதாவது இந்தியாவைச் சுற்றி நாலா பக்கமும் அதற்கு இலக்குகள் உள்ளன. அத்துடன், ஐக்கிய நாட்டு பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதையும் சீனா முடிந்த வரை தடுத்து வருகிறது.

இப்போது ஸ்ரீலங்கா கடல் பிரதேசத்தில் சீனக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி காணப் படுகின்றன. சீனக் கப்பல்களுக்காக ஸ்ரீலங்காவில் ஒரு நவீனத் துறைமுகமே கட்டப் பட்டு வருகிறது. (சான்று: http://www.defence.pk/forums/china-defence/26043-chinese-naval-base-sri-lanka.html)

இப்போது வெகு அண்மைய செய்தி என்னவென்றால் காஷ்மீர் பகுதிகளில் சீனாவும் பாகிஸ்தானும் சாலைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருவது தான். அதாவது அத்து மீறி நுழைந்த இந்திய மண்ணில் சீனா சாலைகளை அமைத்துக் கொண்டு வருகிறது என்று சொன்னால் தான் எல்லாருக்கும் சரியாகப்  புரியும்.

அந்தச் சாலைகளில் ஆயுதங்கள் அனுப்பப் படுகின்றன. அந்த வழியாகத் தீவிரவாதிகளுக்குப் போர் முறை சாணக்கியங்களும் சொல்லித் தரப் படுகின்றன. (சான்று: http://christwire.org/2011/05/china-gives-pakistan-50-fighters-jets-makes-blood-pact/)

2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பகுதியின் எல்லையில் சீனா தனது படைகளைக் குவிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே மூன்று டிவிஷன்கள் படை இருந்தன. இப்போது 30 டிவிஷன்கள் அங்கே குவிக்கப் பட்டு விட்டன. மொத்தம்  3 லட்சம் இராணுவ வீரர்கள். இது கசப்பு மருந்தில் கருப்புக் கசாயத்தைக் கரைப்பது போல இருக்கிறது.  

இந்த வீரர்கள் அடிக்கடி எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் வருகின்றனர். இந்தியக் காற்றைச் சுவாசித்து விட்டு இந்திய மண்ணுக்குச் சலாம் சொல்லிவிட்டு போகின்றனர்.
இந்திய சீன அருணாச்சல எல்லைகளின் நீளம் 4050 கிலோமீட்டர்கள். அதாவது கோலாலம்பூரில் இருந்து சென்னைக்குப் போய் திரும்பி வருகிற தூரம். (சான்று: http://en.wikipedia.org/wiki/1987_Sino-Indian_skirmish)

இந்த எல்லைகளில் இராணுவத்திற்குத் தேவையான கட்டிடங்கள், மின்சார இணைப்புகள், இராணுவத் தளவாடக் கூடாரங்கள், இராட்சசத் தொலை நோக்கிகள், பதுங்கு குழிகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதுவும் அவசர அவசரமாக வேலைகள் நடக்கின்றன. ஏன்? எதற்காக? என்று தயவு செய்து கேட்க வேண்டாம். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது அறுபது வருடங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை ஒரு பங்காளிச் சண்டையாகவே இருந்து வந்திருக்கிறது.  ஒருவரை ஒருவர் முழுசாக நம்பாத பனிப் போரில் ஈடுபட்டு வந்தனர்.
(சான்று: http://www.lib.berkeley.edu/SSEAL/SouthAsia/kashmir.html)

இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளன என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இதற்கு பல காரணங்களைப் பட்டியல் போட்டுக் காட்டலாம்.  அந்தக் கணிப்புகள் அத்தனையுமே மிகச் சரியாக இருப்பது தான் நம்முடைய வயிற்றில் இப்போதைக்கு புளியைக் கரைக்கின்றன.

1911ல் சீனாவில் விவசாயிகளின் ஆதரவில் மாபெரும் புரட்சி நடைபெற்றது. அதுதான் சீனப் புரட்சி. இதைக் கலாசார புரட்சி என்றும் சொல்லுவார்கள். அந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் மாவோ சி துங். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டுகள் வரை விவசாயத்திற்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வந்தது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கிராமப்புற வளர்ச்சியைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. நகர்ப்புறங்களை மட்டுமே தொழில்மயம் ஆக்குவதில் மும்முரம் காட்டியது.

அதனால் சீனாவில் தொழில் புரட்சி விஸ்வரூபம் எடுத்தது. உலக  நாடுகளின் வணிகத்தில் சீனப் பொருள்கள் மலை மலையாகக் குவிக்கப் பட்டன.   மலிவான விலையில் சீனப் பொருள்கள் கிடைக்காத நாடே உலகில் இல்லை என்று சொல்லலாம். அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்தார்கள்.  அந்த அளவிற்கு சீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக வளர்ந்து போனது.

இப்போது இந்த 2010 களில் உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. நாம் அறிந்த விஷயம். அதனால் உலகச் சந்தையில் சீனப் பொம்மைகளில் இருந்து மலிவான மின்சாரப் பொருட்கள் வரை தேங்கிக் கிடக்கின்றன. எந்தப் பொருளுமே விலை போகாத நிலைமை. சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதல பாதாளத்திற்குச் சரிந்து போய் கிடக்கிறது. சீன நிதிச் சந்தையிலிருந்து கோடிக் கோடியான அந்நிய முதலீடுகள் மீட்டுக் கொள்ளப் பட்டன அல்லது முடங்கிக்  கிடக்கின்றன.

அதனால் சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது தலை விரித்து ஆடுகிறது. அடுத்த பக்கம் பார்த்தால் கிராமப்புற விவசாயிகளின் கசப்புணர்வுகளின் கொந்தளிப்புகள் வஞ்சகம் இல்லாமல் கொப்பளிக்கின்றன. பல இடங்களில் போராட்டமாக வெடித்தும் வருகின்றன.

இனக் கலவரங்களும் புதிய புதிய முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றன.  மக்களின் மீது இருந்த அரசின் இரும்புப் பிடி சன்னம் சன்னமாகத் தேய்ந்து வருகிறது. கடந்த இரண்டு தலைமுறைகளில் அரசின் எந்த ஒரு முடிவையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு வந்த சீன மக்கள் இப்போது முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டனர். அரசு நிர்வாகத்தை எதிர்த்துப் பேசவும் துணிந்து விட்டனர்.
(சான்று:http://www.bloomberg.com/news/2011-01-26/china-will-face-crisis-within-5-years)

மக்களின் இந்த அதிருப்திகளைச் சமாளிக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். அதற்கு ஒரு பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆக, அந்தப் பிள்ளையார் சுழிதான் ஒரு புதிய போருக்கு மூல காரணம் ஆகும்.

சரி. அடுத்து இரண்டாவது காரணத்தில் பாகிஸ்தான் வந்து நிற்கிறது.  கடந்த காலங்களில் இந்தியாவின் உறுதிப் பாட்டைக் குலைக்க அதன் அண்டை நாடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும்  சீனா  மறைமுகமான  ஆதரவை வழங்கி வந்துள்ளது.
தீவிரவாத முகாம்களை அமைப்பது. தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பது. அவர்களைக் காஷ்மீர் வழியாக  இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைப்பது.  வங்காள தேசம், நேபாளம் வழியாக தீவிரவாத இயக்கங்களை இந்தியாவுக்குள் நுழைய வைப்பது. அத்தனையும் இந்தியாவுக்கு தலைவலி தரும் தாங்க முடியாத வேதனைகள். அவற்றுக்கு எல்லாம் அந்த அண்டை நாடு நேரடிக் காரணமாக இருக்கலாம். ஆனால் சீனா இருக்கிறதே அதுதான் ஒரு மறைமுகக் காரணம்! இது உலகமே அறிந்த உண்மை.(சான்று: http://en.wikipedia.org/wiki/Mukti_Bahini)

அடுத்து, தாலிபான் அமைப்பு பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் பாகிஸ்தானின் முழுக் கவனமும் தாலிபான் மீது குவிந்து இருக்கிறது. அமெரிக்காவும் தன் கழுகுப் பார்வையை அங்கே தான் வைத்து இருக்கிறது.  அதனால் இந்தியாவுக்கு எதிராக பெரிய அளவில் எதையும்  செய்ய முடியாத நிலையில் பாகிஸ்தான் இப்போது இருக்கிறது.

மூன்றாவது காரணமாக உலகப் போலீஸ்காரர்  அமெரிக்கா வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவும் இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்புறம் இராணுவக் கூட்டுப் பயிற்சிகளில் வேறு ஈடுபட்டு வருகின்றன.  இருவரும் நகையும் சதையுமாக நெருங்கி வந்து விட்டார்கள்.

இது சீனாவின் கண்களை உறுத்துகிறது. சீனாவால் பொறுக்க முடியவில்லை. ஆசியாவின் நம்பர் ஓன் வல்லரசாக விளங்க சீனா ரொம்ப நாட்களாக ஆசைப் பட்டு வருகிறது. ஆக, சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கலாம் என்ற ஒரு  சந்தேகம் சீனாவுக்கும் வந்துவிட்டது. அது பாகிஸ்தானுக்கும் பெரிய ஒரு குடைச்சலைக் கொடுத்து வருகிறது.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் சீன மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். சீனா மக்களிடம் தேச பக்தியைப் புதுப்பிக்க வேண்டும். சீனாதான் ஆசியாவின் சூப்பர் தாதாஎன்பதை நிரூபிக்க வேண்டும். ஆகவே, இந்தியாவின் மீது சீனா போர் தொடுக்க வேண்டும். அந்தப் போர் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று சொல்ல வருகிறேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா. வட கொரியாவிற்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதில் இருந்து அணு ஆயுத சோதனைகளுக்கு மறைமுக உதவிகளைச் செய்வது வரை சீனா தான் முதன்மை இடத்தை வகிக்கிறது.
(சான்று: http://www.cfr.org/china/china-north-korea-relationship/p11097)

சீனாவின் இந்த உதவிகளை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவை கண்டித்து வருகின்றன. அந்த நாடுகளில் ஏதோ ஒன்றின் மீது சீனா போர் தொடுக்கலாம். ஆனால்,  உலகப் பொருளாதார மந்தநிலை நிலவும் இந்த நேரத்தில் அந்த நாடுகளைச் சீனா பகைத்துக் கொள்ள முடியாது. அப்படி போர் தொடுத்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படலாம்.  அதனால் சீனாவின் நிலைமை மேலும் மோசமடையும். அதையும் சீனா பார்க்கிறது.

தன்னைவிட சற்று பலம் குறைந்த ஒரு நாட்டுடன் போர் தொடுக்கவே அதற்கு விருப்பம். அந்த வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அப்படி ஒரு போர் வந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும் பகுதியைச் சீனாவால் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

ஒருபுறம் சீனா தன்னுடைய இராணுவங்களைக் குவித்துக் கொண்டு இருக்கிறது. மூன்று இலட்சம் வீரர்களை இந்திய எல்லையில் சீனா நிறுத்தி வைத்து இருக்கிறது. அதை மறந்து விட வேண்டாம். இன்னொரு புறம் பாகிஸ்தானும் இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கிறது.

பாகிஸ்தான் தன் இந்திய எல்லைப் பகுதியில் பதுங்கு குழிகளையும் கண்காணிப்பு கோபுரங்களையும் அதிகம் அதிகமாக அமைத்து கொண்டு வருகிறது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுமானங்கள் மேலும் அதிகமாகி வருகின்றன. (சான்று: http://www.bharat-rakshak.com/SRR/Volume12/sahgal.html)

புதிதாக இன்னும் ஒரு பிரச்னை. அருணாச்சல மாநிலத்தில் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி  சீனாவின் நிலம் என்று சீனா இப்போது ஒரு புதிய கதையை உருவாக்கி இருக்கிறது. அதை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்றும் பிரசாரம் வேறு செய்து வருகிறது.

அந்த நிலப் பகுதியை தெற்கு திபெத்எனும் அடைமொழியுடன் சீனா அழைக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் அருணாச்சல மாநிலத்தில் சில நீர்மின் திட்டங்களைச் செயல் படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா நிதியுதவி கேட்டது.

அது சர்ச்சைக்குரிய பகுதி. அது சீனாவின் இடம். அதில் இந்தியா எப்படி அணைக் கட்டுகளையும் மின் நிலையங்களையும் கட்ட முடியும்?’ என்று சீனா எதிர்க் கேள்வி கேட்டது.  அதனால் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி கிடைக்காமலே போனது என்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்த அருணாச்சலப் பகுதியில் சீன இராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அடிக்கடி விளையாட்டுத் தனமாக ஊடுருவல் செய்கின்றனர். அப்புறம் கொஞ்ச நேரத்தில் திரும்பிப் போய்விடுகின்றனர். இந்த மாதிரி கண்ணாமூச்சி விளையாட்டுகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

வரவு செலவு திட்டத்தில் இராணுவத்துக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

கைகலப்பிற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.  அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாது என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.  எல்லாம எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள இந்தியா இப்போது இருந்தே தயாராக இருக்க வேண்டும். இப்போதே இருந்தே அது தற்காப்பு பாதுகாப்பு கவசத்தில் இறங்க வேண்டும்.

இந்த அரசியல் கணிப்புகள் கோடானு கோடி உலக மக்களின் துக்கத்தைக் கனக்கச் செய்கின்றன! தூக்கத்தை இழக்கச் செய்கின்றன!

1 கருத்து:

  1. தேசத்தின்மீது பற்றுகொண்ட தலைவர்கள் இந்ததேசத்தை ஆட்சிசெய்தால் நாம் பயப்பட தேவையில்லை.ஆனால் முட்டாள்களும் ஓட்டுக்காக எதையும் செய்பவர்களும்தான் நாட்டை அட்சி செய்கிறார்கள்.கடவுள்தான் இந்த நாட்டைக் காப்பாற்றவேண்டும்....

    பதிலளிநீக்கு