16 அக்டோபர் 2011

கசிந்து போகும் கச்சத்தீவு

(இந்தக் கட்டுரை 25.09.2011 மலேசிய நண்பன் ஞாயிற்றுக் கிழமை பதிப்பில் பிரசுரம் ஆனது)

ஊழி ஊழி காலமாகக் கச்சத்தீவு தமிழர்களின் வாழ்வு ஆதாரமாக இருந்தது. இப்போது தமிழர்களைச் சுட்டுப் பொசுக்கும் ஒரு கொலைகளமாக மாறி வருகிறது.

கச்சத்தீவு யாருக்கு?
 இலங்கைக்கு இந்திரா காந்தியால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட ஒரு குட்டி நிலப்பகுதி.  உலகத்தையே இப்போது திரும்பிப் பார்க்க வைக்கிறது.

கச்சத்தீவு ஒரு முடிந்துபோன கதை. தாரை வார்த்துக் கொடுத்த மகள் மறுபடியும் புது மகள் ஆனதாகச் சரித்திரமே இல்லை. போனது போனது தான். கொடுத்தது கொடுத்ததுதான்.

கச்சத்தீவில் கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் கடல் படை 380 தமிழக மீனவர்களைச் சுட்டுப் போட்டு சூடு காட்டித்  தின்று  இருக்கிறது. 2800 க்கும் அதிகமான தமிழர்களைப் படுகாயப் படுத்தி இருக்கிறது.

பலகோடி ரிங்கிட் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள், வலைகளை நாசம் செய்துள்ளது. நூற்றுக்கணக்கான மீனவர்களைச் சிறை செய்துள்ளது. 

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌யில் ஈடுபட்ட 3500 ‌த‌‌மிழக‌ ‌மீனவ‌ர்கள் விரட்டியடிப்பு
காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  இது மட்டும் இல்லை. இலங்கை அரசு ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைக் கச்சத்தீவு கடல் நீரில் அள்ளித் தெளித்து, அபிஷேகம் செய்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகள் வெடித்துச் சிதறிப் போய்க் கிடக்கின்றன.

ராமேஸ்வரம், மன்னார்க்குடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் தாலி அறுக்கப் பட்டதற்கு இலங்கை தான் மூல காரணம். துணை போகிறது சீனா.

என் புருஷனைக் கொன்ற அந்த இனத்தையே அழிப்பேன் என்று கச்சைக் கட்டி நிற்கின்றது ஒரு பத்தினி விரதை.

கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இலங்கையில் இருந்து 20 கி.மீ. தொலைவு. பாக் நீரிணையில் இருக்கும் ஒரு சின்னக் குட்டித் தீவு. இங்கு ‘டார்குயின்எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை. பச்சைத் தீவு என்பது காலப் போக்கில் கச்சைத் தீவு ஆனது. (சான்று: http://ta.wikipedia.org/wiki/ கச்சதீவு)

1605 ஆம் ஆண்டில் மதுரையில் நாயக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் ராமேஸ்வரத்தில் சேதுபதி அரசை தோற்றுவித்தார்கள். சேதுபதி அரசுக்கு குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகள் வழங்கப் பட்டன.

அத்துடன் ராமேஸ்வரத்தில் இருந்த 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமை ஆக்கப்பட்டன. அன்றில் இருந்து 1947 ஆம் ஆண்டு வரை கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்து வந்தது.

இந்தியா விடுதலை அடைந்ததும் ஜமீன் முறை அகற்றப் பட்டது. அதன் பின்னர் கச்சத்தீவு இந்தியக் குடியரசிற்குச் சொந்தமானது. 

(சான்று: http://www.mahaveli.com/?p=8891)

கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு, கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்போதும் அப்படித் தான் நடந்து வருகிறது. அதில் மாற்றம் இல்லை.

சரி. இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை ‘இந்தா எடுத்துக்கோஎன்று இந்திரா காந்தி ஏன் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். அதில் ஒரு பெரிய ரகசியமே மறைந்து கிடக்கிறது. சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தது. அப்போது இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். கிழக்கு பாகிஸ்தானைத் தாக்கி மூன்றே நாட்களில் ஒரு புதிய நாட்டையே உருவாக்கிக் கொடுத்தார் அந்த இரும்புப் பெண்மணி. அந்தப் பழைய கிழக்கு பாகிஸ்தான் தான் இப்போதைய வங்காள தேசம். 
(சான்று: http://en.wikipedia.org/wiki/Indo-Pakistani_War_of_1971)

இது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. ஏன் என்றால், அமெரிக்காவும் பாகிஸ்தானும் கூட்டாளிகள். உடனே ‘எண்டர்பிரைஸ்எனும் அணு ஆயுதக் கப்பலை இந்தியாவைத் தாக்க அமெரிக்கா அனுப்பியது.

அப்போது அமெரிக்காவின் அதிபராக நிக்சன் இருந்தார். கல்கத்தாவின் மீது அணுகுண்டுகளைப் போடுவது தான் அமெரிக்காவின் திட்டம்.

தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடிப்
படகைக் கரைக்கு இழுத்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு உதவியாக இங்கிலாந்து எச்.எம்.எஸ். ஈகள் எனும் ஆணு ஆயுதக் கப்பலையும் அனுப்பியது. வங்காள விரிகுடாவில் அமெரிக்க, இங்கிலாந்து படைகள் குவிக்கப் பட்டன. எல்லாம் இந்தியாவைத் தாக்குவதற்குத் தான்.

இந்தக் கட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்கியது. இந்தியாவின் மீது கையை வைத்தால் ரஷ்யா சும்மா இருக்காது, பதிலடி கொடுக்கும் என்று உலகத்தையே எச்சரிக்கை செய்தது.

இந்தியாவிற்கு ஆதரவாக கியூபா, அங்கோலா, இஸ்ரேல், பிரான்சு போன்ற நாடுகள் படைகளை அனுப்பத் தயாராக இருந்தன.

90,000 பாகிஸ்தானிய போர் வீரர்களை இந்தியா தடுத்து வைத்தது.
ரஷ்யாவின் 12 அணு நாசகாரிக் கப்பல்கள், ஓர் அணு நீர்மூழ்கிக் கப்பல், மூன்று விமானந்தாங்கிக் கப்பல்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து சேர்ந்தன. அவற்றில்  18,000 ரஷ்யப் போர் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

இதைத் தவிர 2000 ரஷ்ய எம்.ஐ.ஜி ரகப் போர் விமானங்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டன. மூன்றாவது உலகப் போர் வரக் கூடிய கட்டம். ஆட்டம் கண்டு போனது அமெரிக்கா. அதன் வரலாற்றில் முதல் முறையாக பின வாங்கியது.

இந்தக் கட்டத்தில் இந்தியாவைக் குறி வைத்து ஐ.நா. சபையில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சும்மா இருக்குமா ரஷ்யா. தனது ரத்து அதிகாரத்தால் அந்தத் தீர்மானத்தைத் தடை செயதது.

இல்லை என்றால் இந்தியா மீது ஐ.நா. படைகள் போர் தொடுத்து இருக்கலாம். உலகச் சரித்திரம் வேறு மாதிரி எழுதப் பட்டிருக்கலாம். அதன் பின்னர் அமெரிக்கா பின் வாங்கியது.

இந்த நிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும் நாக்கைத் தொங்கப் போட்டு நிற்கின்றன. கிழக்கும், மேற்கும் கடல் பகுதிகள். பரவாயில்லை. ஆபத்து இல்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான்.


கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை தாக்கி சிங்கள கடற்படை அட்டகாசம்

வங்காள தேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானத் தளம் அமைக்க பாகிஸ்தான் இடம் கேட்டுக் கொண்டிருந்தது. அதைத் தடுக்க இந்திரா காந்தி திட்டம் போட்டார்.

இலங்கையில் பாகிஸ்தானுக்கு இடம் கிடைத்தால் இந்தியாவுக்கு ஆபத்து. அப்போது இலங்கையின் பிரதமராக ஸ்ரீ மாவோ பண்டாரநாயகா இருந்தார். அவரைச் சமாதானம் செய்ய முயன்றார். 
(சான்று: http://www.alaikal.com/news/?p=17814)

கச்சத் தீவை எங்களுக்குத் தந்து விடுங்கள். இலங்கையில் விமான தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு நாங்கள் இடம் தர மாட்டோம் என்று ஒரே அடியாக பண்டாரநாயகா கிடுக்குப் பிடி போட்டார்.

இந்திரா காந்தியால் மறுக்க முடியவில்லை. சரி என்று சொல்லிவிட்டார். அந்தச் சமயத்தில் அவருக்கு வேறு வழியும் இல்லை. மறுத்தால் ஆபத்து தலைக்கு மேல் வந்துவிடும்.

கச்சத்தீவு எங்கே இருக்கிறது
1974 இல் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப் பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 1976 இல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வு எடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம்.

ஆனால், யாரும் தங்கக் கூடாது. அவை அந்த ஒப்பந்தத்தின் அடிப்படைகள். ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு நடந்து கொள்கிறதா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்

இலங்கை ஒரு சிறிய நாடுதான். ஆனால் அதை இந்தியா பகைத்துக் கொண்டால் என்ன ஆகும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்து விடும்.

ஆக, ஒட்டு மொத்த   இந்தியாவின்  பாதுகப்புக்காகத் தமிழக மீனவர்களின் நலன்கள் புறக்கணிக்கப் படுகின்றன என்பது தான் உண்மையிலும் உண்மை.


கச்சத்தீவில் இலங்கை போர் கப்பல்
இலங்கையில் இருக்கும் தமிழ் இனம் அழிக்கப் படும் போது இந்தியா மௌனம் சாதித்து வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இப்போது புரிகிறதா!

கச்சத்தீவு மறுபடி இந்தியாவுக்கு கிடைக்கவே கிடைக்காது.  இப்படி நான் சொல்லவில்லை. உலகின் இரண்டாவது போலீஸ்காரர் சீனா சொல்கிறது. சொல்லியும் வருகிறது.

அமெரிக்காவை மிரட்டியும் வருகிறது. இப்போது ரஷ்யா அடங்கிப் போய் கிடக்கிறது. என்ன செய்வது. அங்கேயும் ஆயிரத்து எட்டு பிரச்னைகள்.

கச்சத்தீவில் சீனாவின் கப்பல்கள் வந்து போகின்றன. அவற்றுக்கு உதவியாக இலங்கையின் கப்பல்களும் வருகின்றன. ‘நாங்கள் இருக்கும் போது நீ ஏன் பயப்படுகிறாய்... புகுந்து விளையாடுஎன்று சீனா இலங்கைக்கு நெல்லிக்காய் லேகியம் கொடுத்து வருகிறது.


கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்
அந்த லேகியத்தைச் சாப்பிட்டுக் கொண்டு இலங்கை இப்போது அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது. என்ன செய்வது. காலம் செய்கிற கோலம்.

கச்சத்தீவின் அருகே, ஆழ்கடலில் எண்ணெய் வளங்கள் உள்ளன. அவை சீனாவின் கண்களை உறுத்துகின்றன. சின்னத் தம்பி இலங்கையைக் கைக்குள் போட்டுக் கொண்டால் சீக்கிரமாக பிரியாணி சாப்பிடலாமே என்று சீனா ஆசைப் படுகிறது. ‘வாங்க அண்ணே... வாங்கஎன்று இலங்கையும் சமையல் சாதம் செய்து போட தயாராக இருக்கிறது.

இப்படி எழுதுவதற்காக தயவு செய்து என்னை மன்னிக்கவும். இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்து ஆகிறது என்று கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.

உண்மையிலேயே தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்து இருந்தால்... உடனடியாக  தமிழகச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி இருக்கலாம். கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது.

ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். இப்போது கடிதம் மேல் கடிதம் எழுதி பயன் இல்லை. பாவம் அவர். அவரைக் குறை சொல்லக் கூடாது. பாசத்திற்கு பேரம் பேசவே அவருக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது.


கச்சத்தீவின் தோற்றம்
தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் அரசியல் கட்சிகள் வரலாம். போகலாம். கச்ச தீவை மீட்டுத் தருகிறோம் என்று காட்டுக் கத்தலாய்க் கத்தலாம்.

ஆனால், கச்சத்தீவு கிடைக்கும் என்பதை மறந்து விடுவது தான் நல்லது என்று எனக்குப் படுகின்றது. வெள்ளம் தலைக்கு மேல் போன பிறகு இனிமேல் கத்திப் பிரயோஜனமே இல்லை.

பழகிப் போன ஆடம்பரமான அரசியல் கவிதாஞ்சலிகள் அலை அலையாய் வரலாம். அவை கச்சத் தீவில் செத்துப் போன மீனவ ஜீவன்களுக்கு கேட்கவே கேட்காது. கேட்கவும் கூடாது! அதுவே அவர்களுக்கு பெரும் புண்ணியமாக இருக்கும்!

1 கருத்து:

  1. பெயரில்லா26/10/11, 10:29 AM

    அய்யா நான் Asus i5 மடிக் கணினி பயன்படுத்துகிற்றேன். என்னுடைய RAM 4gb ஆகும். நான் இப்பொழுது என்னுடைய மடிக் கணினியை update செய்ய மேலும் 4gb பொருத்தப் போகிறேன். ஆகவே 8gb ஆகி விடும். இதனால் என்னுடைய கணினியில் ஏற்படும் மாற்றங்களை கூற முடியுமா அய்யா..

    பதிலளிநீக்கு