12 டிசம்பர் 2011

கணினியும் நீங்களும் – 123


[உலக இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா, தனது முதல்பக்கத்தில் நம்முடைய மலாக்கா முத்துக்கிருஷ்ணனைப் பற்றி காட்சி படுத்தியுள்ளது. http://ta.wikipedia.org]


செந்தில்குமார்
senthilkumar@gmail.com
கே: வணக்கம் ஐயா. என்னுடைய பக்கத்துக்கு வீட்டுலே wifi இருக்கிறது அதற்கு கடவு சொல் போட்டு  உள்ளார். அதை எப்படி உடைப்பது. தயவு செய்து உதவி செயுங்கள்.
ப: அதாவது நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கதவை  உடைக்கச் சொல்கிறீர்கள். அப்படித் தானே.  கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஆம்பர், ஒரு ஸ்குரு டிரைவர் இருந்தால் போதுமே. அப்புரம் ஏன் என் உதவி. பாவம் அந்த மனுஷன்.

அவர் மாதாமாதம் காசைக் கட்டி நேர்மையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதைப் போய் நீங்கள் இலவசமாக... அதுவும் கதவை உடைத்துக் கொண்டு போய் பார்க்க விரும்புகிறீர்கள்.  உங்களுக்கே அது நியாயமாகப் படுகிறதா.

அவர் உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர் ஐயா. அவருக்குப் போய் துரோகம் செய்ய நினைப்பது பாவம் இல்லையா. அவருடைய அனுமதியைப் பெற்று இணையத்தின் கடவுச் சொல்லைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஒரு இருபது முப்பது வெள்ளியில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது. இது உலகம் அறிந்த உண்மை. அதனால், உடைக்கிறது கிடைக்கிறது எல்லாம் வேண்டாம். அப்புறம் பக்கத்து வீட்டுக்காரருக்கு விஷயம் தெரிந்து உங்கள் கழுத்தைப் பிடித்தால் என்னைக் காட்டிக் கொடுக்க ரொம்ப நேரம் பிடிக்காது.

பத்திரிகையிலே கதை கட்டுரை எழுதுவானே அவன் தான் சொல்லிக் கொடுத்தான் என்று என்னை மாட்டி விடுவீர்கள். அப்புறம் அந்த ஆள் கத்தி கப்பாடா சகிதம் வந்து நிற்பார். என் உடம்பு தாங்காது. வேண்டாம் சாமி. ஆளை விடுங்கள்.


ரோபி மகமது robimahmatu@gmail.com
கே: அன்புள்ள சார், தாங்கள் pc சம்பந்தமான கேள்விகளுக்கு தான் எனது இ-மைல்க்கு பதில் தருவீர்களா. அல்லது நான் சண்டே பேப்பரில்தான் சும்மா பார்க்கணுமா?

ப: இ-மைல்க்கு  பதில் தர முடியாது. அது எல்லாம் சும்மா பேச்சு. மைல் கணக்கில் என்னால் நடக்க முடியாது.  இ-மெயிலுக்குத் தான் பதில் தர முடியும். அதை அப்படியே சண்டே பேப்பரில் பார்க்கலாம். படிக்கலாம். ஆனால், காசு கொடுத்து வாங்கிப் படித்தால் நல்லது.


கலைப்பித்தன், குவாந்தான், பகாங் (குறும் செய்தி)
கே: சார், உங்களிடம் கேட்கலாம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். கேட்டு விடுகிறேன். உங்களைப் போல ஒருத்தர். அசல் உங்கள் மாதிரி. இங்கே கடை கடையாய்ப் போய் யாசகம் கேட்கிறார். மனசிற்கு கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்குப் யாசகம் எடுக்கும் பழக்கம் இருக்கிறதா? நீங்கள் இல்லை என்றால் அப்புறம் அந்த ஆள் யார் சார்?

ப: ஏன்யா எத்தனை பேருயா இந்த மாதிரி வந்து இருக்கீங்க. முதலில் ஒருவர் கதவை உடைக்கச் சொன்னார். அப்புரம் ஒருவர் சும்மா பார்க்கணும் என்கிறார். இப்போது நீங்கள் என்னடா என்றால் என்னைப் பிச்சைக்காரனாக ஆக்கிப் பார்க்கிறீர்கள்.

அது எல்லாம் சரி. ஏன்யா... என்னைப் பார்த்தால் என்ன அப்படி பிச்சை எடுத்துப் பிழைக்கிறவன் மாதிரியா தெரியுது. நீங்கள் பார்த்த அந்த ஆள்... நான் அவன் இல்லை. நான் அவன் இல்லை. சரியா.   எனக்கு பிச்சை எடுக்கிற நிலைமை வராது. அப்படியே  வந்தால், பத்து காசு, இருபது காசு எல்லாம் இல்லை. ‘மினிமம்
அஞ்சு வெள்ளி, பத்து வெள்ளி தான். கொடுத்தால் கொடு கொடுக்காட்டி போ... என்று போய்க் கொண்டே இருப்பேன்.

கத்தரிக்காய் தேங்காய் விலைக்கு விற்கிற காலத்தில் அஞ்சு காசு பத்து எல்லாம் கட்டுப்படி ஆகாது சாமி. எதற்கும் காசை
ரெடி பண்ணி வையுங்கள். வந்தாலும் வருவேன்.

தமிழ்மகன் பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்
கே: Enakku bussines seiya vendum. Vetri pera vendum. Niraya sambatika vendum endru pala aasaigal. Aanal enakku indru varai 1 valiyum teriya villai. Blog muulam panam sambatipathu epadi sir?

ப:  Unggalukku nalla aasaigal. Blog muulama bathil solkiren. Ippa enakku 1 valiyum teriya villai. Mannikkavum.

சுகுமாறன் குப்பு <sukumaran_52@hotmail.com>
கே: ‘ஏழாம் அறிவுதிரைப்படம் ஒரு சீனப் படத்தின் தழுவல் என்று நீங்கள் உங்களுடைய வலைப்பூவில் பதிவு செய்து இருக்கிறீர்கள். ஒரு தமிழ்ப்படம் வெற்றி பெற்றால் அது ஒரு தழுவல், வழுவல் என்று சொல்ல சிலர் வந்துவிடுகிறார்கள். அதில் நீங்களும் ஒருவர். ஒரு தமிழர் இப்படி ஒரு பிரமாதமான படம் எடுத்து இருக்கிறாரே என்று பெருமை படுங்கள். வேதனைப் பட வேண்டாம். தமிழனே தமிழனை இழிவு படுத்தக் கூடாது.
ப: இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. நல்லதைப் பாருங்கள். கெட்டதை விடுங்கள். அதற்காக நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்று சொல்ல வரவில்லை. இணையத்தில் தடுமாறிக் காலில் விழுவதைப் பார்க்காமல் தட்டிக் கழிக்க முடியுமா சொல்லுங்கள். இணையத்தில் சுத்த சைவம் என்று சொல்லி உத்தம வேஷம் போட முடியாது. அந்த மாதிரியான இடம் அது.  

‘ஏழாம் அறிவுதிரைப்படம் ஒரு சீனப் படத்தின் தழுவல் என்பது உண்மை. அந்தப் படத்தின் பெயர்  Da Mo Zu Shi அல்லது Master of Zen. 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தப் படத்தை யூ டியூப்பில் பார்க்கலாம். அதன் முகவரி: http://www.youtube.com/watch?v=xEu84QbN-b4

போதி தர்மர் பிறந்த ஊர் தென் இந்தியா என்று மட்டுமே படத்தில் சொல்லப் படுகிறது. ஆனால், அவர் உண்மையில் பிறந்த இடம் காஞ்சிபுரம். அவர் ஒரு பல்லவ இளவரசர்.

போதி தருமரை சீனர்கள் விஷம் வைத்து கொன்றாக படத்தில் வருகிறது. ஆனால், போதி தர்மர் இயற்கையாக மரணம் அடைந்தார். அவரைச் சீனர்கள் தெய்வமாக நினைக்கின்றனர். அவருக்காக ஷாலின் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

வரலாற்றைக் கையாளும் போது வரம்பு மீறிய பொய்மையைத் திணிக்கக் கூடாது என்பதே என்னுடைய கருத்து. இந்த விஷயம் ஷாலின் தற்காப்புக் கலைஞர்களுக்குத் தெரிந்தால்
ஏழாம் அறிவு தயாரிப்பாளர்களுக்கு (போதி) தர்மஅடி கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

நுனிப்புல்லை மேய்ந்து விட்டு ஆணிவேரைப் பிடுங்கி விட்டதாக நினைப்பது ரொம்பவும் தப்பு.

2 கருத்துகள்: