15 ஏப்ரல் 2012

கணினியும் நீங்களும் – 136


ராமசாமி கருப்பையா  ramasamy_karuppiah@yahoo.com
கே: Google  மூலமாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்று கேள்விப்பட்டேன். அதற்கு தனியான நிரலி தேவையா?


ப: Google  தேடல் இயந்திரம் 22 மொழிகளில் இலவசமாக தட்டச்சு நிரலியை வழங்கி வருகிறது. கூகிள் தேர்வு செய்த மொழிகளில் நம்முடைய தமிழ்மொழியும் ஒன்று. கூகிள் நிரலியைக் கொண்டு எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம். கூகிள் நிறுவனத்தின் தமிழ் தட்டச்சு நிரலியை எப்படி கணினியில் பதிப்பது (Install) என்பதை விளக்கமாகச் சொல்கிறேன். அந்த நிரலியின் பெயர் Google IME.

கூகிள் நிறுவனத்தின் தமிழ் தட்டச்சு நிரலியில் தட்டச்சு செய்வது என்பது மிகவும் எளிது. இந்த நிரலியை Windows XP, Windows Vista, Windows 7 என எல்லா இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். 

தவிர, லினாக்ஸ் இயங்குதளம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். லினாக்ஸ் என்பது ஒரு திறந்த வெளிமூல நிரலி. கணித விற்பனர் Linus Torvalds என்பவர் 1991ஆம் ஆண்டு உருவாக்கித் தந்த  இலவசமான இயங்குதளம். அந்த இயங்குதளத்திலும் கூகிள் ஐ.எம்.ஐ.நிரலியைப் பயன்படுத்த முடியும்.

http://www.google.com/ime/transliteration/ எனும் இணையத்தளத்தில் இருந்து அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் அளவு 723 KB. இது ஒரு துணை நிரலி ஆகும். அதை உங்கள் கணினியில் இயக்கிவிடுங்கள். இந்தக் கட்டத்தில் உங்கள் கணினி இணையத்தில் இருக்க வேண்டும். மறந்துவிட வேண்டாம். 

இந்தத் துணை நிரலி, முதன்மை நிரலியை இணையம் மூலமாக கணினிக்குள் கொண்டு வந்து பதிப்புச் செய்யும். நீங்கள் எந்தக் கவலையும்பட வேண்டாம். எல்லா வேலைகளையும் அதுவே செய்துவிடும். பின்னர், நீங்கள் Control Panel பகுதிக்குச் சென்று Regional and Language Options எனும் சின்னத்தைச் சொடுக்குங்கள். 

அதில் Languages எனும் தத்தல் இருக்கும். Tab என்பதைத் தமிழில் தத்தல் என்று அழைக்கலாம். அதைச் சொடுக்கினால் Details எனும் பகுதி இருக்கும். அதைச் சொடுக்கிவிடுங்கள். அங்கே Tamil என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதற்கு பக்கத்தில் ADD எனும் ஒரு பொத்தான் இருக்கும். அதைச் சொடுக்கி OK என்று அழுத்திவிட்டு வெளியேறி விடவும்.

இப்போது உங்களுடைய கணினியின் முகப்புத் திரைக்கு வாருங்கள். அங்கே ஆகக் கீழே TASK BAR எனும் பணிப்பட்டை இருக்கும். அதைப் பாருங்கள்.  இப்போது அதில் TA என தமிழ் மொழிக்கான சுட்டி இணைந்து இருக்கும்.

அடுத்து நீங்கள் Microsoft Word ஐ திறக்க வேண்டும். ஏற்கனவே, பணிப்பட்டையில் உள்ள TA ஐ சொடுக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இனிமேல் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதுதான் கூகிளின் தமிழ் தட்டச்சு செயல்பாட்டுமுறை. ஏதாவது சிக்கல் என்றால் எனக்கு அழையுங்கள்.

ஜாகிர் உசேன், தாமான் துங்கு ஜாபார், செனாவாங், சிரம்பான்
கே: தமிழில் தட்டச்சு செய்யும் போது ‘லதாஎனும் யுனிகோட் எழுத்துருவைத் தவிர வேறு தமிழ் எழுத்துகள் இல்லையா. தயவு செய்து வேறு தமிழ் யுனிகோட் எழுத்துகளை வாசகர்களுக்கு தெரியப்படுத்துங்கள். எல்லாருக்கும் பயனாக இருக்கும். உங்களின் கணினி சேவைக்கு எங்களின் வாழ்த்துகள்.

ப: நன்றி. இதைப்பற்றி பல நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன் நீங்களும் சொல்லி வைத்த மாதிரி தொலைப்பேசியில் அழைக்கிறீர்கள். ’லதா’ யுனிகோட் எழுத்துருவைப் போல வேறு எழுத்துகளும் இருக்கின்றன. இடத்தைச் சொல்கிறேன். போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

’லதா’ யுனிகோட் எழுத்துரு என்பது மைக்ராசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே பதிக்கப்பட்டிருக்கிறது.  2000ஆம் ஆண்டில் Windows XP இயங்குதளத்தை உருவாக்கும் போதே அதில் லதா சேர்க்கப்பட்டுவிட்ட்து. அந்த எழுத்தை இயக்குவதுதான் நம்முடைய பொறுப்பு.

சரி. இந்த ’லதா’ எழுத்தைத் தவிர வேறு தமிழ் எழுத்துகளை நம் கணினியில் பதிக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். முடியும் என்பதுதான் என் பதில். http://www.azhagi.com/freefonts.html#unicode  எனும் இணையத்தளத்திற்குச் செல்லவும். அங்கே unicode 150, unicode 195, unicode 021, unicode 042, unicode 032 எனும் அழகு அழகான யுனிகோட் எழுத்துருகள் உள்ளன. 
அவற்றைப் பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் பின்னர் Control Panel க்குச் சென்று Fonts எனும் கோப்பைச் சொடுக்கவும். அதில் File எனும் இடத்தில் Install New Font என்பதைச் சொடுக்கி விடவும். எந்த இடத்தில் அந்தப் புதிய எழுத்துருகள் இருக்கின்றன எனும் இடத்தைக் காட்டவும். பின்னர் அந்த எழுத்துகள் உங்கள் கணினியில் பதிக்கப் படும். 
அடுத்து நீங்கள் Microsoft Word இல் தட்டச்சு செய்யும் போது, புதிதாகத் பதிக்கப்பட்ட தமிழ் யுனிகோட் எழுத்துகளைத் தேர்வு செய்து தட்டச்சு செய்யுங்கள். அந்த எழுத்துகளைப் பார்த்து நீங்களே அதிசயப்படுவீர்கள். 
எனக்கு அழைத்து உங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள். அப்போதுதான் அடுத்த என்ன என்ன புதிய பதிப்புகளை உங்களிடம் சேர்ப்பிக்கலாம் எனபதைப் பற்றி என்னால் முடிவு செய்ய முடியும். சரியா.

கலைப்பித்தன், குவாந்தான், பகாங்
கே: இப்பொழுது எல்லாம் உங்களுடைய கேள்வி பதிலில் அதிகமான வடச் சொற்களைக் கலக்கிறீர்கள். பாலில் தண்ணீரைக் கலக்கலாம். ஆனால், தண்ணீரில் பாலைக் கலக்கக் கூடாது. அது உங்களுக்கு தெரியும் தானே?

ப: தெரியும் சாமி தெரியும். என்ன செய்வது... கணினிக்கு மாங்கல்ய தோஷம். எனக்கு அதைத் தொட்டாலே கன்னிகா தோஷம்.  பூர்வஜென்ம தோஷம் என்றால் சும்மாவா. அதனால், வடச் சொற்கள் விருந்தாளியாக வந்து போகின்றன. அதைப் போய் பெரிசா எடுத்துக்க வேண்டாம் சாமி. இனிமேல் பரிகார பிரதோஷம் நடக்கும்!

மனைவிக்கு ஆசையாய் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். அதில் கொஞ்சம் கனகாம்பரமும் சேர்ந்து போகிறது. அதை என்ன வேண்டாம் என்றா மனைவி சொல்லப் போகிறாள். வேண்டாம் என்று சொன்னால் அவளுக்கு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டு போங்கள்.


குமாரி.ஜெயதிலகா சுரேந்திரன், மெந்தகாப், பகாங்
கே: நான் என் கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்துகிறேன். காலையிலிருந்து மாலை வரை கணினியை அடைப்பதில்லை. அதனால் கணினிக்கு பிரச்னை வருமா?
ப: அருமையான கேள்வி. வெகு நாட்களுக்குப் பின்னர் எனக்கு கணினி மயக்கத்தை ஏற்படுத்திய கேள்விகளில் இதுவும் ஒன்று.  அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் கணினி கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம். 
 கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  கணினிக்குள் ஏற்படும். ஒவ்வொரு முறையும் இந்த மின் அதிர்ச்சி உண்டாகிக் கொண்டே இருக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள், அப்புறம் அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அந்த அதிர்ச்சியைக் கணினிக்குள் இருக்கும் சின்னச் சின்ன சாதனங்கள் தாங்கிக் கொண்டே இருக்கின்றன. 
இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்துவிட வேண்டும்.
பின்னர் அதற்கு ஒரு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

திருமதி.தட்சாயிணி அழகன், தாமான் மேவா, பெர்ச்சாம், ஈப்போ
கே: நான் அண்மையில் ஒரு தமிழ் தட்டச்சு நிரலியை வாங்கினேன். அதன் விலை 200 ரிங்கிட். வாங்கிய ஒரு சில நாட்களில் என் கணினி கெட்டுப் போனது. அதனால், வேறு ஒரு கணினியில் அந்தத் தமிழ் நிரலியை இன்ஸ்டால் செய்தேன்.  

சிடி சாவியைக் கேட்கிறது. நிரலியை விற்ற கடைக்காரரிடம் புகார் செய்தேன். அவர் விரலியை எங்கிருந்து வாங்கினாரோ அந்த நிறுவனத்திற்கு போன் செய்தார். அந்த கம்பெனி கோலாலம்பூரில் இருக்கிறது. அதற்கு அவர்கள் சிடியை விற்றவர் வெளியூருக்குப் போய்விட்டார். புதுசாக ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். 

வாங்கி ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் இன்னும் ஒரு 200 ரிங்கிட்டா என்று கோட்டோம். அதற்கு அவர்கள் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கணினிக்கு ஒரு நிரலிதான். அதை வேறு கணினிக்கு மாற்ற முடியாது என்று போனை வைத்துவிட்டார்கள். 

மறுபடியும் போன் அடித்தால் எடுக்க மறுக்கிறார்கள். எடுத்தாலும் கீழே வைத்து விடுகிறார்கள். இது நியாயமா? இதை உங்கள் பத்திரிகையில் போடுங்கள்.

ப: என்ன நடந்தது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒரு தரப்பு வாதத்தை வைத்துக் கொண்டு முடிவு சொல்ல முடியாது. அந்த நிறுவனத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள். நான் கேட்டுப் பார்க்கிறேன். 

இன்னும் ஒரு செய்தியை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். சில நிறுவனங்கள் தமிழ் தட்டச்சு நிரலியை நூறு, இருநூறு ரிங்கிட் என்று விற்கின்றன. நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அவர்களுடைய நிரலியை வாங்கிப் பயன்படுத்தும் போது ஏதாவது பிரச்னை என்று அழைத்தால் அவர்கள் வாடிக்கையாளர்களைக் கண்டு கொள்வதே இல்லை. 

நண்பன் வாசகர்கள் பலர் என்னிடம் இதை ஒரு பெரிய குறையாகச் சொல்லி வருகின்றார்கள். ”பணம் வாங்கும்போது மட்டும் கண்டிசனாக வாங்கிக் கொள்கிறார்கள். பிரச்னை என்று வந்து உதவி கேட்டால்... அவரைக் கேளு இவரைக் கேளு... என்று சால்சாப்பு சொல்கிறார்கள்” என்று வேதனைப்படுகிறார்கள்.   

இன்னும் ஒரு விஷயம். தமிழில் உள்ள நிரலிகளில் மாற்றங்கள் செய்து, ‘மலேசியா தமிழ் தட்டச்சு’ என்று இலவசமாக மலேசியத் தமிழர்களுக்கு வழங்க நான் முடிவு செய்து இருக்கிறேன். முதலில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோம். காசு சம்பாதிப்பது அடுத்த பட்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக