சுவிட்சர்லாந்து!
ஐரோப்பாவின் ஆல்ப்ஸ்
மலையின் சரிவில் இருக்கும் ஒரு
சின்னக் குட்டி நாடு. அங்கே அழகு அழகான ஏரிகள்.
சாக்லெட்டுகள், கடிகாரங்கள்,
வாசனைத் திரவியங்கள், பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்றவை அங்கே மிக மிகப் பிரபலம். அதை எல்லாம் தாண்டி நிற்பவை சுவிஸ்
வங்கிகள்.
உலகிலேயே
நம்பர் ஓன் ரகசிய வங்கிகளின்
தாயகம் என்று சொல்லலாம். தப்பே இல்லை. நேர்மையான காரணங்களில் தொடங்கி, அடாவடித்தனமாகச் சேர்த்த பணம் வரை அங்கே கொட்டிக் குவிந்து கிடக்கின்றன. கழுத்தை வெட்டினாலும் காட்டிக்
கொடுக்காத நேர்மை சுவிஸ் வங்கிகளிடம்
இருக்கிறது. அங்கு மட்டும்தான் இது நடக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை.
உலகில்
பல்வேறு குட்டித் தீவுகள், பிரிட்டிஷ் காலனிகள், அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற
பசிபிக் பவளத் தீவுகள் போன்ற பல
இடங்களில் இந்த மாதிரியான தொலைகடல் வங்கித் தொழில்கள்
(Offshore Banking) பிரசித்தி
பெற்றவை. இருந்தாலும், ரகசிய வங்கிப் பரிவர்த்தனைகளில்
சுவிட்சர்லாந்து நாடுதான் நம்பர் ஓன்.
எப்படி
இந்த ரகசிய வங்கிகள்
உருவாகின என்பது ஒரு பெரிய
கதை. சுருக்கமாகச் சொல்கிறேன்.
சுவிட்சர்லாந்து, 300 ஆண்டுகளாய்
யாரோடும் சண்டைக்குப் போகாத நாடு. தான்
உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிற நாடு.
இரண்டாம் உலகப் போரின்போது, மொத்த
ஐரோப்பாவும் திசைக்கு ஒரு நாடாய்த் தோள் தட்டி போர்க் கொடி தூக்கிய போது,
வெளியே நின்று வேடிக்கை பார்த்த
ஒரே நாடு இந்த சுவிட்சர்லாந்து.
1505-ஆம் ஆண்டில்
இருந்து சுவிட்சர்லாந்து
எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபடவில்லை. ஆக, அந்த நாட்டில் ஓர் உறுதியான அரசியல்
நிலைப்பாடு இன்னமும் இருக்கிறது. அத்துடன் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தைப்
பின்னணியாகக் கொண்டு இயங்குகிறது. அதனால், உலக அளவில்
மிகவும் நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக
சுவிஸ் பணம் கருதப்படுகிறது.
இணைய
வங்கி முறை, சுலபமான
முதலீட்டு முறை போன்றவை சிறப்பாக
உள்ளன. நீங்கள் ஒரு கிரிமினலாக இல்லாத வரை சரி. பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்களைப்
பற்றிய ரகசியங்கள் வெளியே
கசியக் கூடிய வாய்ப்பே இல்லை. இந்தக் காரணங்களினால் உலகின் பல ஆயிரம் மோடி மஸ்தான்களுக்கு
சுவிஸ் வங்கிகள் சொர்க்க பூமியாக விளங்குகிறது.
கருப்புப்
பணத்தின் அடிப்படை என்னவென்று தெரியும்தானே. ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு,
அடித்துப் பிடுங்குதல், ஏமாற்றுதல், சூழ்ச்சியால் திசை திருப்புதல் போன்றவை. இருந்தாலும் ஊழலும், வரி
ஏய்ப்பும்தான் கறுப்புப்
பணத்தின் சிவப்பு விதைகள் ஆகும்.
ஏமாற்றி
சம்பாதித்த ஊழல் பணத்தை
சொந்த நாட்டில் வைத்திருப்பது மிகவும் ஆபத்து. அதனால் அதனை ஒரு பாதுகாப்பான
இடத்தில் பதுக்கி வைக்க நினைப்பார்கள். உள்நாட்டில் பதுக்கி வைக்கலாம். ஏதாவது பிரச்னை என்றால் அப்புறம் ஒரு காசு கைக்கு
வராது.
ஆக, இருக்கிற பணம் பத்திரமாய் இருக்க
வேண்டும். பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் இருக்க வேண்டும். பணம்
இருப்பது எதிரிகளுக்குத் தெரிந்தால்
பணத்திற்கும் ஆபத்து. உயிருக்கும் ஆபத்து.
1713-இல் தொடங்குகிறது
ரகசிய வங்கிகளின் கதை. அந்த வருடத்தில்,
Great Council of Genevaவில், ரகசிய வங்கி
பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விவரங்கள்
மீதான உச்சக் கட்டப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினார்கள். அன்றைக்கு ஆரம்பித்ததுதான் சுவிஸ் வங்கிகளின் ராஜபோக
வாழ்க்கை.
சுவிஸ்
வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரபலம்
அடைந்தன. பிரபுக்கள்,
தனவந்தர்கள், அரச குடும்பத்தினர் என 18ஆம் நூற்றாண்டில் அந்தப்
புகழ் பரவத் தொடங்கியது. 21ஆம்
நூற்றாண்டில் நல்லவர்கள், கெட்டவர்கள், நாணயமான சர்வாதிகாரிகள்,
முக்காடு போடும் முதலாளிகள்,
மாபியாக்கள், போதை மருந்து கடத்துபவர்கள்,
ஊழல் அரசியல்வாதிகள், புரோக்கர்கள் என மாபெரும் மனித
கூட்டமே சுவிஸ் வங்கிகளில் அடைக்கலம்
ஆயின.
இரண்டாம்
உலகப் போர் உச்சத்தில் இருந்த
கட்டம். இட்லர் ஒவ்வொரு
நாடாக சுவாகா பண்ணிக் கொண்டிருந்த
நேரம். ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை எல்லாம்
சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்தார்கள். பார்த்தார் இட்லர். உடனடியாக ஜெர்மனியில் அதிரடியான ஒரு சட்டத்தை இயற்றினார்.
யார்
யார் அந்நிய நாட்டில் பணத்தைச் சேர்த்து வைத்து
இருக்கிறார்களோ அவர்களுக்கு
எல்லாம் கட்டாயமாக மரண தண்டனை என்று அறிவித்தார். அப்போது போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். இந்தச் சட்டம்
இயற்றப்பட்டதும் சுவிட்சர்லாந்து
தங்களின் வங்கி ரகசியத்தைப் மேலும்
இறுக்கிப் பிடித்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்புகளை வழங்கியது.
இந்த
நேரத்தில்தான் சுவிஸ் வங்கிகள் யாருமே
எதிர்பார்க்காத காரியத்தைச்
செய்தன. ஜெர்மனியில் இருந்த நாஜிக்கள், அங்கே வாழ்ந்த யூதர்களின் ஆவணங்களை அழிக்கத் தொடங்கினார்கள். போரால் உலகமே சின்னா
பின்னாமாகிக் கொண்டிருந்த காலக்கட்டம்.
அதனால், இரண்டாம்
உலகப் போரில் கலந்து கொள்ளாத சுவிஸ்
நாட்டில் பணமும், தங்கமும் கொட்டோ
கொட்டென்று கொட்டியது. அந்த நேரம் பார்த்து யூதப் படுகொலையில்
சாகடிக்கப்பட்ட யூதர்களின் பணத்தை எல்லாம் சுவிஸ் வங்கிகள் கபளீகரம்
செய்தன. பட்டவர்த்தனமான மோசடி. இந்தக் குற்றச்சாட்டு இன்று வரை ஓடிக்
கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும்
காரணம் என்ன தெரியுமா? சுவிஸ் நாட்டின் பிராங்க் நாணயம். அந்நாட்டு நாணயம் நிலையான
தன்மை கொண்டது. உலகில் நிலையாய் இருக்கும்
ஒரே கரன்சி – சுவிஸ் பிராங்க்தான். எல்லாரும்
நினைக்கிற மாதிரி அமெரிக்காவின் டாலரும் இல்லை. ஜப்பானின் யென் நாணயமும் இல்லை.
அதுவும்
இல்லாமல், வங்கியில்
இருக்கும் பணத்திற்கு ஈடாக 40 விழுக்காடு தங்கமாய் வைத்திருக்கும்
நாடும் சுவிஸ்தான். ஆக, பணத்துக்குப் பணம் இருக்கிறது. அது இல்லை என்றால் பாதுகாப்புக்கு
தங்கம் இருக்கிறது. அப்புறம் என்ன. அதனால்தான் எல்லாரும் அங்கே ஆலாய்ப் பறக்கிறார்கள்.
சுவிஸ்
வங்கிகளின் உலகப் பெருமை என்ன
தெரியுமா. அவர்கள் பயன்படுத்தும்
எண்களைக் கொண்ட கணக்குக்கள். இதை Numbered
Accounts என்று சொல்வார்கள்.
பிலிப்பைன்ஸின்
முன்னால் அதிபரின் மனைவி இமால்டா மார்கோஸ்.
இவர் வருமானத்திற்கு மீறிப் பணம் சேர்த்ததாகக்
குற்றச்சாட்டு. ஏறக்குறைய 430 மில்லியன் டாலர்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பதாக வதந்தி.
இந்தோனேசியாவின்
முன்னால் அதிபர் சுகார்தோ. அவரைப் பற்றி தெரியும் தானே. சுவிஸ் வங்கியில் போட்டு
வைக்க அவர் கொடுத்த
பணம் சுவிஸ் நாட்டிற்குப் போகவில்லை.
பாதை மாறி, பட்டி தொட்டி எல்லாம்
சுற்றி வந்தது. கடைசியில் தமிழ்நாடு,
கோயம்புத்தூரில் உள்ள ஒரு
தொழில்சாலையில் வந்து தஞ்சம் அடைந்தது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது.
சில
மாதங்களுக்கு முன் எகிப்தில் கரைந்து போன ஹோஸ்னி முபாரக்; என்னையும்
பாருங்கள் என் அழகையும் பாருங்கள் என்று சொன்ன லிபியாவின் கடாபி போன்றவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு
இருந்தது. உலகம் அறிந்த விஷயம். ஆனால்,
அந்தப் பணம் என்ன ஆனது என்பது பரம ரகசியம்.
சுவிஸ்
வங்கிகளில் எண்களைக் கொண்ட கணக்கு திறந்தால் அதில் உங்கள் பெயரோ, முகவரியோ இருக்காது.
உங்களுடைய கணக்கு என்பது 34 இலக்க
எண்களைக் கொண்டது. உங்களைப் பற்றிய தகவல்கள் படு
ரகசியமாய் இருக்கும். உங்கள் கணக்கைத் தொடங்கும்
அதிகாரி மற்றும் வங்கியின் உயர்நிலை
அதிகாரிகளுக்கு மட்டுமே கணக்கு விவரங்கள் தெரியும். வங்கியில் வேறு
யாருக்குமே தெரியாது.
எந்த
நாட்டைச் சேர்ந்தவரும், சுவிஸ் வங்கியில் கணக்கு
தொடங்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து
இருக்க வேண்டும். தற்போது 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தைப்
பதுக்கி வைத்து இருக்கிறார்கள். இந்தியாவைப் பற்றி சொல்ல வேண்டாம். கறுப்பு பணம்
230,373 கோடியாக
இருந்தது.
சுவிஸ்
வங்கியில் கணக்கு தொடங்க உங்களுக்கு
ஆசையா. கவலைப்பட வேண்டாம். உங்களுடைய
பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும். தபால்
மூலம் கணக்கு தொடங்கலாம். அப்படியும் முடியும். வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும்
நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும்.
காதும் காதும் வைத்த மாதிரி கணக்கைத்
திறந்து கொடுத்து விடுவார்கள்.
அதைத்
தவிர உங்கள் பொருளாதாரப்
பின்னணி மற்றும் பணம் வரும்
பின்னணி பற்றிய ஆவணங்களையும் அளிக்க வேண்டும். நீங்கள்
அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்.
நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக
இருந்தால், ஒரு மணி நேரத்தில்
முடித்து விடலாம்.
வங்கிக்
கணக்கு தொடங்கக் குறைந்தபட்ச வைப்புத் தொகை இவ்வளவு இருக்க வேண்டும்
என்று எதுவும் இல்லை. 500 சுவிஸ்
பிராங்க் இருந்தாலே வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடலாம்.
ஆனால், சில குறிப்பிட்ட வங்கிகள் மட்டும் தொகையைக்
கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கின்றன.
குறைந்தபட்சம் 10 லட்சம் சுவிஸ் பிராங்க்.
அதாவது
நம்ப மலேசிய பணத்துக்கு ஏறக்குறைய 35 இலட்சம் வரலாம்!
தபால்
மூலம் கணக்கு தொடங்குவதாக இருந்தால்,
குறைந்தது 10 நாட்கள் பிடிக்கும். முதலில்
வங்கிக் கணக்கு தொடங்க உதவும்
நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்புறம் அவர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். பின்னர்,
அவர்கள் விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பிவைப்பார்கள். அதில்
நீங்கள் கையெழுத்திட வேண்டும். சரியான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதன்
பிறகு, வங்கி உங்களுடைய கணக்கை
ஆரம்பிக்கும்.
கடன்
அட்டையைப் பயன்படுத்தி
பணத்தை வைப்புத் தொகை செய்யலாம். இதன் வழி பணத்தை யார் முதலீடு
செய்து இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. தவிர,
பண அஞ்சல், சொந்தக் காசோலை முறைகளையும் பயன்படுத்தலாம்.
சுவிஸ்
வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள்
இல்லை! வாடிக்கையாளர்
இறந்துவிட்டால், அவருடைய வாரிசுதாரருக்குப் பணம்
கிடைக்கும். ஆனால், அவர்தான் வாரிசுதாரர்
என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுதாரர்
10 ஆண்டுகளுக்குள் வந்து, தான் ஒரு சட்டபூர்வமான வாரிசு என்பதை
நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், பத்தாவது
ஆண்டின் முடிவில் அந்தக் கணக்கு செயலற்றுப்
போகும்! பணமும் அபேஸ்!
ஆனால்,
இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க,
வாரிசுகளிடம் கணக்கு பற்றிய விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்கும்படி
சுவிஸ் வங்கிகள் சொல்கின்றன. அல்லது ஒட்டப்பட்ட ஓர் உறையில் எல்லா விவரங்களையும் எழுதி
வைக்கும்படியும் அறிவுறுத்துகின்றன.
சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க உங்களுக்கும்
ஆசை வந்திருக்க வேண்டுமே! உதவி தேவைப்பட்டால் என்னிடம் ஆலோசனை கேளுங்கள். ஆனால், என்ன
கொஞ்சம் பணத்தை எனக்கு எழுதி வைத்தால் நன்றாக இருக்கும் என்று… நான் சொல்லவில்லை. உள்ளே
இருக்கும் பாழாய்ப் போன மனித ஆசை சொல்கிறது.
நல்ல பகிர்வு .
பதிலளிநீக்குNice Post THANKS
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி
பதிலளிநீக்கு