[இன்று 23.09.2012 மலேசியா தினக்குரல் ஞாயிறு மலரில் வெளியான கேள்விகள்.]
ஆர். நல்லைச்செல்வன்,
பத்துகேவ்ஸ், கோலாலம்பூர்
கே: Orkut என்றால்
என்ன? அதில் சினிமா நடிகை திரிஷாவின் அம்மாவுக்கு பலர் தொல்லை கொடுத்து
வருகிறார்களாம். அதைப்பற்றி இணையத்தில் இருப்பதாக என் கல்லூரியில் நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன சார் அது. ஒன்றும் புரிய வில்லை.
புரியும்படி சொல்லுங்கள்.
ப: Orkut என்பது
ஒரு சமூகச் சேவைத் தளம். பேஸ்புக் இருக்கிறதே, அதைப் போல ‘ஆர்க்குட்’ தளமும் ஒன்று. ‘ஆர்க்குட்’ இந்தியாவில் மிகவும் பிரபலம். மலேசியாவில் ஆர்க்குட் பயன்படுத்துபவர்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். சரி. நடிகை திரிஷாவின் அம்மா விசயத்திற்கு வருகிறேன். இந்தக் கேள்விக்கு ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்னால் பதில் கொடுத்து இருப்பதாக நினைவு.
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை விமர்சனம்
செய்வது என்பது ஓர் ஆரோக்கியமான செயல் அல்ல. இருந்தாலும் இந்தக் கேள்வியைப் பிரசுரிப்பதற்கு இரண்டு
காரணங்கள் உள்ளன. ஒன்று இணைய அரட்டையால் ஏற்படும் நன்மைகள். அடுத்து அதனால் ஏற்படக்கூடிய
தீமைகள்.
Chatting என்பதைத் தமிழில் இணைய அரட்டை
அல்லது அரட்டையாடல் என்கிறோம். ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் உறவுப் பாலமாக
’சாட்டிங்’ மாறி விட்டது.
Facebook,
Twitter, Orkut, Blogspot, Friendster, My Space, Bebo, Hi5, Xing போன்றவை மிகப் பிரபலமான சமூகச் சேவைத் தளங்கள். கோடிக் கணக்கான பேர் கணக்குகளைத் திறந்து உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
திரிஷாவின் அம்மாவின் பெயர் உமா. இவருக்கு Facebook ல் மூன்று கணக்குகள் இருந்தன. ஓய்வு நேரங்களில் அரட்டையாடல் செய்வது அவருடைய பொழுது
போக்கு. அம்மாவைப் போல திரிஷாவுக்கும் பேஸ்புக்கில் நான்கு கணக்குகள்
இருந்தன. இருவரும் தாங்கள் யார் என்பதை மறைத்து வைத்து இருந்தார்கள். அரட்டையாடல்
நடக்கும் போது புனைப்பெயரில் அரட்டையாடுவார்கள்.
சினிமா உலகில் தன் மகளுக்கு நடிக்கக் கூடுதலான் வாய்ப்புகள் கிடைக்க
வேண்டும் என்பதால், அதற்கான அடையாளங்களைத் தேடுவதில் உமா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிரபலமான இயக்குநர்கள்,
பிரபலமான தயாரிப்பாளர்களிடம்
உரையாடல் மூலம் பேச்சு வார்த்தை நடந்து இருக்கிறது. அதை ஒரு தாயாரின் நல்ல நியாயமான ஈடுபாடு என்று
சொல்லலாம். மகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எந்தத் தாயார்தான்
விரும்பமாட்டார். அது ஒரு சராசரித் தாயாரின் நேர்மையான அணுகுமுறை.
இருந்தாலும் இந்த விசயம் எப்படியோ வெளி உலகத்தில் கசிந்து
விட்டது. ரசிகர்கள் அவர்களின் தனிப்பட்ட நடைமுறைகளில் நுழைந்து, தேவையற்றதைப் பேசி, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், தாய்க்கும் மகளுக்கும் மனக் கஷ்டம்.
பேஸ்புக்கில்தானே தொல்லை கொடுத்து வேதனைப் படுத்துகிறார்கள். பரவாயில்லை. ஆர்க்குட்டில் போய்
உரையாடுவோம் என்று அங்கே போய் இருக்கிறார்கள்.
ஆர்குட்டில் பிரபலமானவர்கள் இருக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில்
'நான் உமா. நடிகை திரிஷாவின்
அம்மா' என்று தன்னை அறிமுகம்
செய்து இருக்கிறார். இது கொஞ்சம் ‘ஓவர்’தான். அதில் ஒருவன், தான் மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய ஒளிப்பதிவாளன் என்று அள்ளி விட்டு இருக்கிறான்.
அதை நம்பிய திரிஷாவின் தாயார்,
அரட்டை அடித்து கடைசியில் ஏமாந்து போனதுதான் மிச்சம். தன் குடும்ப உண்மைகளை வேறு கொஞ்சம் சொல்லி இருக்கிறார்.
அது அம்பலத்திற்கு வந்து விட்டது. தலை போகிற விஷயம் எதுவும் இல்லை. இருந்தாலும் திரிஷாவின்
அம்மாவை ஏமாற்றிவிட்டேன் என்று அந்தச் சின்ன புத்தி, உலகம் பூராவும் சொல்லி பெருமைப்
படுகிறதே!
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. Chatting எனும் அரட்டையாடல் செய்யும் போது
ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குடும்ப ரகசியங்களைச் சொல்லவே கூடாது.
சிரிக்கச் சிரிக்க உரையாடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், சந்தி சிரிக்கிற மாதிரி நிலைமை போய் விட வேண்டாம். உமாவை ஒரு நடிகையின் தாயாராகப்
பார்க்காமல் உங்களுடைய தாயாராகப் பாருங்கள். அது போதும். தாய்மை எப்போதும் ஜெயிக்க
வேண்டும்.
அது எல்லாம் சரி. உங்கள் கல்லூரியில்
இணையக் கிசுகிசுகளைப் பற்றி ரொம்பவே பேசுவார்கள் போல இருக்கிறது. தப்பாக நினைக்க
வேண்டாம். படிப்பை முதலில் பாருங்கள். அப்புறம் வேண்டும் என்றால் திரிஷாவைப் பெண்
கேட்பது பற்றி, திரிஷாவின் அம்மாவிடமே கேட்டுப் பார்க்கிறேன்.
தேவா ஆனந்தன்,
அம்பாங் பெச்சா, உலு சிலாங்கூர்
கே: சார், என்னுடைய G-Mail
மின்னஞ்சல் மெதுவாக வேலை
செய்கிறது? எப்படி பிரச்னையைத் தீர்ப்பது? மின்னஞ்சல்
திறந்து படிப்பதற்குள், பாதி உயிர் போகிறது.
ப: இணையமும் சரி, அதில் இருக்கிற மின்னஞ்சலும் சரி. மெதுவாக
திறக்கிறது என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கணினியில் பிரச்னை இருக்கலாம். அல்லது நமக்கு இணையச் சேவையை வழங்கும்
நிறுவனங்களிடமும் இருக்கலாம். இருந்தாலும், முக்கியமான சில காரணங்களைச் சொல்கிறேன்.
ஒரு தடவை எத்தனை மின்னஞ்சல்களைப் படிக்கப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். மின்னஞ்சல் பட்டியலை 50 லிருந்து 25 ஆகக் குறையுங்கள். அதற்கு
இப்படி செய்ய வேண்டும். ஜிமெயில் மின்னஞ்சலின் உள்ளே போய் Settings
>> General >> Maximum Page Size >> Show Conversations
>> 25 என்று மாற்றம் செய்யுங்கள். அதன் பிறகு Settings
>> Web Clips என்பதைச் சொடுக்குங்கள். அதில் Show
my Web Clips above the Inbox என்று இருக்கும். அந்த இடத்தில் உள்ள பெட்டியில் இருக்கும் 'டிக்' அடையாளத்தை எடுத்து விடுங்கள்.
இன்னும் ஒன்று இருக்கிறது. Control
Panel >> Internet Options >> Delete Cookies என்பதையும் Delete Files என்பதையும் சொடுக்கி விடுங்கள். கணினியை அடைத்து விட்டு மறுபடித் தொடங்கிப் பாருங்கள்.
கண்டிப்பாக மின்னஞ்சல் வேகமாக வேலை செய்யும். இது மின்னஞ்சல்
வேகமாக வேலை செய்வதற்கான வழிமுறை.
சில சமயங்களில் நீங்கள் எங்கே
வசிக்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் இணையச் சேவை அமைகிறது. நீங்கள் வசிக்கும்
இடத்தில் ஒரே சமயத்தில் பல நூறு பேர் இணையத்தைப் பயன்படுத்தினால், இணையத்தின்
வேகம் குறையும். இதற்கு வேறு வழி இல்லை. ஒருமுறை நள்ளிரவிற்கு மேல் இணையத்தைப்
பயன்படுத்திப் பாருங்கள்.
வேகம் கூடவில்லை என்றால், உங்கள் கணினியில் பிரச்னை
இருக்கிறது என்பதை உறுதிப் படுத்தலாம். http://www.nonags.com/freeware-wise-registry-cleaner_4132.html எனும் இணைய
முகவரியில் கணினியைச் சுத்தப் படுத்தும் நல்ல ஒரு நிரலி இருக்கிறது.
வதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள். பிரச்னை என்றால் 012- 4347462 அல்லது 010-3913225 எனும்
எண்களுக்கு அழைத்துப் பேசலாம்.
பாலாமணி சற்குணம், பூச்சோங்
பெர்டானா, கோலாலம்பூர்
கே: ஆங்கிலத்தில் Blog
என்பதைத் தமிழில் 'வலை மனை' என்று சொல்வது சரியா?
இல்லை 'வலைப் பூ' என்று சொல்வது சரியா?
இந்த வலை மனை அமைக்க
கட்டணம் கட்ட வேண்டுமா? நானும் ஒரு வலைமனை அமைக்க ஆசைப் படுகிறேன். எப்படி அமைப்பது? சொல்லிக் கொடுங்கள்.
ப: வலைமனை என்று சொல்வதே சரி. மனை என்றால் இல்லம் அல்லது வீடு.
ஒரு மனையில் பல அறைகள் இருக்கும். அதே போல ஒரு வலை மனையில் பல பகுதிகள் இருக்கும்.
பல பக்கங்கள் இருக்கும். இந்தப் பக்கங்களை எல்லாம் தனித் தனியாக வேண்டும் என்றால் வலைப் பூ என்று
சொல்லலாம். அதாவது ஒரு பக்கத்தை ஒரு பூ என்று அழைக்கலாம்.
வலை மனை நடத்துபவர்களை வலைப் பதிவர்கள் என்று சொல்கிறோம். Blog என்றால் என்ன. உங்கள் எண்ணங்களை
மற்றவர்களுக்குத் தெரிய படுத்துவதே வலைமனை அமைப்பதின் நோக்கம். Web Log எனும் சொற்களில் இருக்கும் b என்ற எழுத்தையும் Log என்ற சொல்லையும் சேர்த்து Blog என்று உருவாக்கினார்கள். சரியா.
வலை மனைகளை யார் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அது முற்றிலும் இலவசம். இந்த வலை மனைகளைப் பற்றிய விவரங்களைத் தேடும் தேடல்
இயந்திரம் இருக்கிறது. அதன் பெயர் Technorati.
உலக இணையத்தில் 50 மில்லியன் வலைமனைகள் உள்ளன.
ஒரு விநாடிக்கு இரண்டு வலைமனைகள் புதிதாக உருவாக்கப் படுகின்றன. ஒரு நாளைக்கு 16 இலட்சம் பக்கங்கள் எழுதப் படுகின்றன.
வலை மனை உருவாக்க ஆசைப் படுபவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அடுத்தவர் மனம் புண்படும்
படி தயவு செய்து எழுத வேண்டாம்.
அரச நிந்தனைச் சொற்களைப் பயன் படுத்த வேண்டாம். https://blogspot.com எனும் இணையத் தளத்திற்குப் போய்
பதிந்து கொள்ளுங்கள். தமிழிலும் எழுதலாம். அதற்கு unicode எழுத்துருகள் தேவைப் படும். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில்
தமிழில் எழுதப் பயன்படும் தமிழ் நிரலி இருக்கிறது. கட்டணம் இல்லை. இலவசமாகக் கொடுக்கிறார்கள்.
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எப்படி எழுதுவது என்பதற்கு ஒரு கையேட்டையும் இலவசமாக வழங்குகிறார்கள்.
சகோதரியே, முதலில் சில தளங்களைப் பாருங்கள். படியுங்கள். அப்புறம் எழுதுங்கள். அண்மையில் http://tansrisomas.blogspot.com/ எனும் ஒரு வலைமனையை உருவாக்கி
இருக்கிறேன். அந்தத் தளம், புதிதாக வலைமனை தொடங்க
இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக அமையும் என்று நினைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக