[08.06.2013 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது]
ஆதிகால மனிதன் சக்கி முக்கி கற்களைக் கண்டுபிடித்தான். ஆசை ஆசையாய்ச்
சீண்டிப் பார்த்தான். அப்படி இப்படி என்று ஆராய்ச்சி செய்து பார்த்தான். ஆற்றில் நீந்தியதை,
காற்றில் பறந்ததைப் பிடித்துச் சுட்டுச் சாப்பிட்டான். ஆனந்தமாய் ஆடிப் பாடினான். கிடைத்ததை
மற்றவருக்கும் கொடுத்துச் சந்தோஷப்பட்டான். சுத்தமாய்ச் சுகமாய் வாழ்ந்தும் காட்டினான்.
அது அப்போதைய வரலாறு.
இப்போது என்ன நடக்கிறது தெரியுமா? ஏழை எளிய சாமான்ய மனிதனையே
தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு பலிக்கடாவாக மாற்றி வருகிறான். மருந்து ஆராய்ச்சிகளுக்காகச்
சின்னச் சின்ன உயிரினங்களைப் பயன்படுத்திய காலம் எல்லாம் மலை ஏறி விட்டது.
இது காலம் செய்கின்ற கோலம். அப்படி சொன்னால் தப்பு. மனிதம் செய்கின்ற கேவலம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
மனித இனத்தை மனித இனமே அழித்துக் கொண்டு வருகிறது. வேறு எப்படி சொல்லச் சொல்கிறீர்கள்.
இது இப்போதைய வரலாறு.
விசயத்திற்கு வருகிறேன். எலிகள் போய்விட்டன. முயல்கள் போய்விட்டன.
அதையும் தாண்டி, பறவைகளும் காட்டுக்குள் பறந்துவிட்டன. பறப்பன நடப்பன இருந்த இடத்தில்
இப்போது மனிதன் வந்து மாட்டிக் கொண்டு தடுமாறுகிறான்.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஏழைச் சாமான்யர்களை மனிதப் பிண்டங்களாய்
மாற்றுவது என்பது ஒரு கலையாக மாறி வருகிறது. அந்தக் கலையில் கைதேர்ந்த கலைஞர்களாக மேல்நாட்டு
நிறுவனங்கள் பேரம் பேசி வருகின்றன.
அண்மைய காலங்களில் நடந்து வருகின்ற ஓர் உண்மை. அந்நிய நாட்டு
மருத்துவ ஆய்வுக் கூடங்கள் ஆராய்ச்சி எனும் பாவனையில் இந்திய ஆப்ரிக்க நாட்டுக் கல்லூரிகளில்
நுழைகின்றன. அங்கு படிக்கும் மாணவர்களிடம் ஆயிரம், பத்தாயிரம் என்று சொல்லி ஆசை வார்த்தைகளை
அள்ளித் தெளிக்கின்றன. [சான்று:http://indiatoday.intoday.in/story/india-an-easy-target-for-cheap-drug-trials/1/141921.html]
அவர்களை ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லப் படுகின்றனர். அப்புறம் சுண்டெலிகளுக்குப் பதிலாக புதுப் புது மருந்துகள் அவர்களின்
உடல்களில் பாய்ச்சப் படுகின்றன. அந்த மருந்துகள் என்னென்ன பக்கவாதங்களை விளைவிக்கின்றன
என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதாவது அவர்கள் மனிதச் சுண்டெலிகளாக மாற்றப்
படுகிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். இவை அனைத்தும் மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செய்து வரும் நவீன
வியாபாரத் தப்புத் தாளங்கள்.
சரி. உங்களுக்கு ஆப்பச் சட்டியில் ஆட்டா உருண்டை சுடத் தெரியுமா. தெரியாவிட்டால் பரவாயில்லை. அங்கே ஆராய்ச்சிக் கூடங்களில் கணக்கு வழக்கு இல்லாமல் பணப் பெருச்சாளிகள் நெட்டி உடைக்கின்றன. ஜால்ரா போடும் அவர்களிடம் நிறைய ஜிங்கு சிக்கான்கள் இருக்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.
மனதைக் கொஞ்சம் இறுக்கிக் கொள்ளுங்கள். எந்த ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்தாலும் முதலில்
அந்த மருந்தைச் சுண்டெலிகளுக்கு அல்லது கினியா வகை முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை
செய்து பார்ப்பார்கள். அதுதான் காலம் காலமாக மருத்துவ உலகில் நடந்து வரும் ஒரு பாரம்பரிய
வழக்கம் ஆகும்.
அப்படி பரிசோதிக்கும் போது ஆயிரக் கணக்கான சுண்டெலிகள் பலியாவது
வழக்கம். ஊசி மூலம் செலுத்தப் படும் மருந்துகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் செத்துப்
போகும் எலிகள் உண்டு. மருந்தின் வேகத்தினால் வலிப்பு வந்து மரித்துப் போகும் எலிகள்
உண்டு. மருந்தின் அதீத வக்கிரமத்தினால் உள் உறுப்புகள் சிதைந்து போய் சின்னா பின்னாமாகிப்
போன எலிகள் உண்டு. மருந்தின் ஒவ்வாமையால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் ரணமாகிக் கொடூரமானச்
சாவுகளை அனுபவித்த எலிகளும் உண்டு. [சான்று:
http://www.nature.com/news/2011/110622/full/474427a.html]
அதன் பின்னர் தான், அந்த மருந்து மனிதர்களுக்கு ஒத்து வருமா இல்லையா என்று முடிவு செய்வார்கள். எந்த வகையில் எந்த மருந்துகள்
ஒத்துப் போகும் என்பதையும் முடிவு செய்வார்கள். அது வரை அந்த மருந்தை விற்பனைக்கு அனுப்ப
மாட்டார்கள். மனிதர்கள் பயன்படுத்த அனுமதிக்கவும் மாட்டார்கள்.
ஆனால், நிலைமை இன்று அப்படி இல்லை. மேலை நாட்டு மருந்து உற்பத்தி
நிறுவனங்கள் என்ன செய்கின்றன தெரியுமா. ஏழைகள் அதிகமாக உள்ள இந்திய ஆப்ரிக்க நாடுகளுக்குப்
படை எடுக்கின்றன. தங்களது மருத்துவ ஆய்வுகளைப் பற்றி அங்குள்ள ஏழை மக்களிடம் இனிமையான
பேசுகின்றன. அவர்களை எலிகளாய் முயல்களாய்ப் பயன்படுத்தி வருகின்றன.
‘உலக மக்களின் நன்மைக்காக நாங்கள் இந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறோம்.
இதனால், உலகத்தில் எத்தனையோ கோடி பேர் நன்மை அடையப் போகிறார்கள். ஏற்கனவே, அமெரிக்காவில், அங்கோலாவில், ஆஸ்திரேலியாவில் செய்து பார்த்தாகி விட்டது. அங்கே யாருக்கும்
எந்தப் பிரச்னையும் இல்லை. இங்கே இந்தியாவிலும்
ஆப்ரிக்காவிலும் இந்த மருந்து நல்லபடியாக வேலை செய்கிறது. இளைஞர்களிடம் எப்படி வேலை
செய்கிறது என்று பார்க்க வேண்டும்’ என்று சத்தியத்தில் சத்தியம் செய்வார்கள்.
அந்த இளைஞர், இளைஞிகளுக்கு
ஐயாயிரம், பத்தாயிரம் என்று கொடுப்பார்கள். அவர்களும் காசை வாங்கிக் கொண்டு தங்களுடைய
உடலைப் பரிசோதனைக்கு தாரை வார்த்துக் கொடுப்பார்கள். அப்புறம் அந்த
உடல்கள் பந்து விளையாட்டுத் திடல்களாக மாறும். அடுக்கு அடுக்கான ஆராய்ச்சிகள் நடக்கும். எல்லாம் கருணை பகவான்
சித்தம். ஒரு சில நாட்களில் மருந்து அதன் வேகத்தைக் காட்டும். நேரம் சரி இல்லை என்றால்,
சனி பகவான் சங்கு ஊதிச் சகுனம் பார்க்கும். [சான்று: http://www.naturalnews.com/029924_medical_experiments_Guatemala.html#ixzz1Zy2LDYm9]
உயிருக்கு ஆபத்து என்றால் ஒரு கோடி வெள்ளி குடும்பத்திற்கு கொடுக்கப்
படும் என்று ஏற்கனவே சொல்லி இருப்பார்கள். ஆனால், உண்மையிலேயே, உயிருக்கு ஆபத்து வந்தால் அவ்வளவுதான். ஒன்றும் தெரியாதது மாதிரி அப்படியே காலையையும்
கையையும் கழுவிக் கம்பி நீட்டி விடுவார்கள். பெற்றோர் அல்லது உறவினர் போய் மேலிடத்தில்
புகார் செய்யலாம். அந்த மேலிடத்திலேயே இவர்கள் போய் காசு மேல் காசை வைத்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துக்
கொள்வார்கள். அவ்வளவு தான். பாதிக்கப் பட்டவர்கள் ஒன்றும் வாசிக்க முடியாது.
இந்தியாவிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் மேல்நாட்டு நிறுவனங்கள் மனிதர்களை வைத்து பரிசோதனைகள்
செய்வது பரவலாகிப் பிரபலமாகியும் வருகின்றது. அந்த மாதிரியான பரிசோதனைகளில்
2008 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் மட்டும் 1,593 பேர் உயிர்
இழந்து உள்ளனர். இது அதிர்ச்சி தரும் தகவல் மட்டும் அல்ல. வேதனையிலும் வேதனையான செய்தி. [சான்று: http://ekawaaz.org/2010/08/20/india-a-nation-of-human-guinea-pig/]
இதில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளியவர்கள்.
நகர்ப்புறச் சேரிப் பகுதிகளில் வாழும் அன்றாடம் காய்ச்சிகள். அற்றைக் கூலிக்காக அவதிப்
படும் சாமான்ய மனிதர்கள். தனிமைக் கடலில் தவித்து வாடும் தனித்து வாழும் தாய்மார்கள்.
பணப்
பற்றாக்குறையினால் படிக்க சிரமப் படும் மாணவர்கள். என்ன செய்வது. இவர்கள்
வெள்ளைச் சட்டை போட்டவர்களிடம் வெள்ளந்தியாக ஏமாந்து போகிறார்கள்.
ரொம்ப வேண்டாம். இந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன்
மாதம் வரை மட்டும் 618 பேர் உயிர் இழந்துள்ளனர் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள். இது உலகச் சுகாதாரச் சேவைகள் இயக்கம் தரும் புள்ளி விவரங்கள் ஆகும்.
எப்படி உயிர் இழப்பு ஏற்படுகின்றது? எடுத்துக் காட்டாக, இப்படிச்
சொல்லலாம். ஒரு நிறுவனம் ஒரு புதிய மருந்தைப்
புற்று நோய்க்காக ஆய்வு செய்து கண்டுபிடித்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அந்த மருந்து மனித உடலில் எவ்வாறு பலன் அளிக்கிறது என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் இருக்கலாம். [சான்று: http://www.fromdusktildawn.org.uk/news.html]
ஆக, சுண்டெலிகள் அல்லது முயல்களை வைத்து சோதனை செய்தால் அவற்றுக்குப்
பேசத் தெரியாது. எங்கே வலிக்கிறது எப்படி வலிக்கிறது என்று சொல்லவும்
தெரியாது. மனிதர்களை வைத்தே சோதனை நடத்தி விட்டால்… பிரச்னையே இல்லை.
உடலில் எந்த எந்த இடத்தில் எப்படி எப்படி
எல்லாம் வலிக்கிறது. எந்த இடத்தில் எந்த எலும்பு வலிக்கிறது. எந்த இடத்தில்
எந்தத் தசை வலிக்கிறது. எந்த முட்டி வலிக்கிறது என்று அவர்களே வாய்விட்டுச் சொல்வார்கள்.
கண்ணீர் விட்டுக் கதறுவார்கள். வலியைப் போக்க மாற்று மருந்து கொடுப்பார்கள். அந்த மாற்று
மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும் கவனிப்பார்கள். ஆக, இப்படியே ஆராய்ச்சிகள்
தொடரும். கடைசியாக, ஒரு சில நாட்களில் ஒரு
சிலர் செத்தும் போவார்கள். [சான்று: http://indiatoday.intoday.in/story/hyderabad-illegal-human-trial-of-anti-cancer-drug-suspended/1/142692.html]
இந்தியா, விசாகப்பட்டணத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு மருந்து
நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சில கல்லூரி மாணவர்களை மருந்து சோதனைகளுக்காக அவர்களுடைய
ஆய்வு கூடத்திற்கு அழைத்து வந்தனர். அந்த மாணவர்களில் ஒருவர் விஜயக்குமார். வயது
19. சங்கீத வித்யா பரிஷாத் தொழியியல் கல்லூரியில் மாணவர். ஆய்வுக் கூடத்திற்கு வந்து
பரிசோதனை செய்து கொண்டால் 6000 ரூபாய் தரப்படும் என்று அவருக்குச் சொல்லப் பட்டது.
ஆய்வுக் கூடத்தின் உள்ளே நுழைந்ததும் அவருடைய தோள் பை பிடுங்கப்
பட்டது. கைப்பேசி அடைக்கப் பட்டது. சில ஒப்பந்தப் பாரங்களில் கையொப்பம் வாங்கப் பட்டது.
சில மாத்திரைகளை விழுங்கச் சொன்னார்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இரத்தம் சின்னச் சோதனைக் குழாய்களில் பரிசோதனைக்காக எடுக்கப் பட்டது.
மொத்தம் 20 முறைகள் இரத்தம் எடுக்கப் பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் வீட்டிற்கு அனுப்பி
வைக்கப் பட்டார். விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது. புகார் செய்தனர். இந்திய
மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் கீழ் பரிசோதனைகள் செய்யப் பட்டதாக அந்த நிறுவனம்
தற்காத்துப் பேசியது. வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
[சான்று: http://indiatoday.intoday.in/story/andhra-engineering-students-lured-into-drug-testing/1/145529.html]
இதே போல ஹைதராபாத்தில் ஒரு மருந்து நிறுவனம் இருக்கிறது. இந்த
நிறுவனம் குந்தூர் மாவட்டத்தில் பிதுகுர்லா பகுதியில் உள்ள 35 ஏழைப் பெண்களுக்கு மார்பகப்
புற்று நோய்க்கான மருந்துகளைக் கொடுத்து ஆய்வு செய்தது. அந்தப்
பெண்கள் அனைவரும் சுண்ணாம்புத் தொழில்சாலையில் வேலை செய்பவர்கள். அவர்களில் சிலர் விதவைகள்,
சிலர் தனித்து வாழும் தாய்மார்கள். அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப் பட்டன. சிறுநீர்,
இரத்தம் போன்றவை தொடர்ந்தாற் போல நான்கு நாட்களுக்குப் பரிசோதிக்கப் பட்டன. பின்னர், ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் அன்பளிப்பாகக்
கொடுக்கப் பட்டது. நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். ‘அன்பளிப்பு’!
வீட்டுக்கு வந்ததும் பலருக்கு வாந்தி, மயக்கம், உடல் வலி, முட்டி
வலி, நெஞ்சு வலி, அளவுக்கு மீறிய உடல் பலகீனம் போன்ற உபாதைகள். புகார் செய்யப் பட்டு
நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அவர்களில் கருணம்மா என்பவர் இப்போது இடுப்புக்கு
கீழ் உணர்வு இல்லாமல் படுத்த படுக்கையாய் கிடக்கிறார்.
[சான்று: http://unitedblackuntouchablesworldwide.blogspot.com/2011/06/karunamma-victim-and-also-former-drugs.html]
இந்த மாதிரி பரிசோதனைகளைச் செய்யும் வெளி நாட்டு நிறுவனங்களினால்
2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 1,500 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்தத் தொகை
2012இல் 2,760 கோடியாக உயர்ந்தது.
”நாலா புறமும் பகைவர் கூட்டம்
நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய் மக்கள்”
என்கிற பாவேந்தரின் சொற்கள் இப்போது
என் நினைவிற்கு வருகின்றன.
ஆக, மேல்நாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளுக்காக ஏழை
எளியவர்களை மனிதப் பிண்டங்களாய் மாற்றி வருகின்றன. எலிகள் போய்விட்டன. முயல்களும் போய்விட்டன.
ஆனால், அந்த இடத்தில் இப்போது மனிதன் வந்து மாட்டிக் கொண்டு நிற்கிறான்.
மனிதனின் ஆராய்ச்சிக்கு சின்னச் சின்ன உயிரினங்களைப் பயன்படுத்திய
காலம் மலையேறி விட்டது. இப்போது ஏழை எளிய மனிதனே பலிக்கடாவாக மாறி வருகிறான். இது காலம்
செய்கின்ற கோலம். தப்பு… மனிதம் செய்கின்ற கேவலம். மனித இனத்தை மனித இனமே அழித்துக்
கொண்டு போகிறது.
மனித நேயங்களை மாசு படுத்தும் மிக மோசமான அவலட்சணங்கள் தானே!
ஒன்றை மட்டும் இப்படிச் சொல்வேன். துலாபாரத் தூண்கள் தூசுகளாகித் தூர்ந்து
போய் விட்டன. உலகின் பல இடங்களில், இது இப்போதைய வரலாறு.
ஒரு கட்டத்தில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று
சொல்லி மனிதன், ஆயிரம் ஆயிரம் எலிகளை அடித்துப் பிடித்து வெட்டிப் பார்த்தான். ஆயிரம்
கோடி சுண்டெலிகளை நசுக்கிப் பொசுக்கி அசிங்கப் படுத்தினான். அவனுடைய ஆராய்ச்சிகளுக்கு
அளவே இல்லாமல் போனது.
அந்த ஆராய்ச்சிகள் அதோடு நின்றால் பரவாயில்லை. அதையும் தாண்டிப்
போய் இப்போது மனித உணர்வுகளை வதக்கி எடுத்து வேடிக்கை பார்க்கின்றான். ஏழை
மக்களின் உயிர்களைக் கோமாளிப் பகடைக் காய்களாக மாற்றிப் பார்க்கின்றான்.
இப்படி எழுதுவதற்காக மன்னிக்கவும். பணத்திற்காக தன் இனத்தையே
இப்படி அழிக்கலாமா. கொஞ்சம் கூட மனிதம் இல்லாத அந்த ஜால்ரா பிண்டங்களை என்னவென்று சொல்வது?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
முன்பு, மனிதச் சுகத்திற்காகக் கோடிக் கோடியான வாயில்லா ஜீவன்களின்
உயிர்கள் வேரோடு அறுக்கப் பட்டன. பொறுத்துப் போனது பூமி. ஆனால், இப்போது பேசத் தெரிந்த
ஜீவன்களையே பேசாமடந்தைகளாக மாற்றிப் போட்டு, அந்த உயிர்களுக்கு அலங்கோல மாலைகளைப் போடுவது
என்பது பாவத்திலும் பெரிய பாவம். ஏழேழு ஜென்மங்களுக்கும் சொந்த பந்தங்களைச் சுற்றி
சுற்றி வரும் பொல்லாத பாவம்! பூமாதேவிக்கு இது ஓர் இரங்கல் செய்தி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக