கணினியும் நீங்களும் 12.01.2014
அய்யாவு காசிப்பிள்ளை, ayyavoo_kasi@yahoo.com
கே: கணினி தொடங்கும் போது முதலில் கறுப்பு வெள்ளை எழுத்துகள் வேகமாக வருகின்றன. அதை ‘பூட்டிங்’ (Booting) என்று அழைக்கிறார்கள். அப்போது எந்த எந்தக் கோப்புகள் அல்லது எந்த எந்த நிரலிகள் இயக்கப் படுகின்றன?
ப: முதன் முதலாகக் கணினியைத் திறந்ததும், அதாவது On செய்ததும் BIOS தன் வேலையைத் தொடங்கும். BIOS என்றால் Basic Input Output System. தமிழில் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று சொல்லலாம்.
கணினியின் உள்ளே தாய்ப்பலகை எனும் Mother Board இருக்கிறது. அதில் பலவித துணைக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அந்தச் சாதனங்கள் அனைத்தையும் ஓர் இயக்க நிலைக்கு கொண்டு வரும் முறைக்குத் தான் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று பெயர்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். கணினி இன்னும் அதன் விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே நுழையவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். விண்டோஸ் சின்னம் வருவதற்கு முன்னால், கறுப்புத் திரையில் வெள்ளை எழுத்துகள் வேகம் வேகமாக வந்து மறையும். பார்த்து இருப்பீர்கள். அவை தான் (பையோஸ்) BIOS அறிவிப்புகள். இந்த ’பையோஸ்’ முதலில் தாய்ப் பலகையைச் சோதனை செய்யும்.
தாய்ப்பலகையில் பிரச்சினை இல்லை என்றால், அடுத்து RAM எனும் தற்காலிக நினைவகத்தைப் பரிசோதிக்கும். அடுத்து Hard Disk எனும் வன் தட்டைச் சோதிக்கும். அடுத்து Graphic Card எனும் வரைகலை அட்டையைச் சோதிக்கும். ஒரு கணினி இயங்குவதற்கு இந்த மூன்று சாதனங்கள்தான் மிக மிக முக்கியமானவை.
இவற்றில் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றால் Error Messege என்று ஓர் எச்சரிக்கை அறிவிப்பு திரையில் தெரியும். அப்புறம் அதோடு ’பையோஸ்’ அதன் வேலைகளை நிறுத்திக் கொள்ளும். ஓர் அடி மேலே போகாது. வெள்ளை எழுத்துகளைக் காட்டிக் கொண்டு அப்படியே நின்றுவிடும்.
இந்த மாதிரி அனைத்துச் சாதனங்களும், சோதனை செய்யப் படுவதை Power On Self Test என்று சொல்வார்கள். சுருக்கமாக POST என்று அழைப்பார்கள். அடுத்து, எல்லாம் சரி என்றால், ’பையோஸ்’ நெகிழ்தட்டின் (Floppy Disk) பக்கம் தன் பார்வையைத் திருப்பும்.
இப்போது வரும் கணினிகளில் இந்தத் நெகிழ்தட்டகம் இருக்காது. அதனால், பையோஸ் நெகிழ்தட்டிச் சோதனையைச் செய்யாது. நேராக Hard Disk எனும் வன்தட்டிற்குப் போய் MBR எனும் Master Boot Record இருக்கிறதா என்று பார்க்கும்.
Master Boot Record என்றால் தலைமை இயக்கப் பதிவு. அதாவது ஒரு கணினியை இப்படித் தான் இயக்க வேண்டும் என்கிற பதிவு. அடுத்து இந்த MBR உடனே DBR ஐத் தேடும். DBR என்றால் Dos Boot Record. டி.பி.ஆர். இல்லை என்றால் எல்லா வேலைகளும் அப்படியே நின்று போகும். கணினியின் இயக்கமும் நின்றுவிடும். DBR இருந்தால் அடுத்த வேலை ஆரம்பமாகும். IO.SYS எனும் தகவல் கோப்பு தற்காலிக நினைவகத்தில் ஏற்றம் செய்யப் படும்.
அடுத்ததாக இந்த IO.SYS கோப்பு, CONFIG .SYS எனும் மற்றொரு கோப்பைப் பரிசீலிக்கும். எல்லாம் சரி என்றால், அடுத்து MSDOS.SYS எனும் இன்னொரு கோப்பு ஏற்றம் செய்யப்படும். கடைசியாக மிக மிக முக்கியமான COMMAND. COM எனும் கோப்பு ஏற்றம் காண்கிறது.
அதைத் தொடர்ந்து இறுதியாக AUTOEXEC.BAT எனும் கோப்பு. இந்தக் கோப்பு கணினிக்குத் தேவையான இயக்கிகளை எல்லாம் பதிவு செய்து, விண்டோஸ் இயங்குதளத்திற்குள் ஏற்றம் செய்கிறது. இயக்கி என்றால் Driver. அப்புறம் தான் விண்டோஸ் இயங்குதளம் தன் வேலையை ஆரம்பிக்கும். விண்டோஸ் சின்னம் கணினித் திரையில் தெரியும்.
இத்தனை ‘பையோஸ்’ வேலைகளும் பத்தே பத்து விநாடிகளுக்குள் செய்து முடிக்கப் படுகின்றன. என்ன அதிசயம் பாருங்கள். கணினியைத் தட்டிவிட்டு ‘ஏன் இவ்வளவு ‘லேட்’ பண்ணுது’ என்று சிலர் கரித்துக் கொட்டுவார்கள். பாவம் கணினி. கொஞ்ச நேரத்தில் என்ன என்ன வேலைகளைச் செய்கிறது பார்த்தீர்களா.
இனிமேல் கணினியைத் தட்டி விட்டதும், உள்ளே ‘பையோஸ்’ என்ன என்ன வேலைகளைச் செய்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். சபிக்க வேண்டாம். அதிசயப் படுங்கள். அதன் மகிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
கணினி நம்முடைய தெய்வத்திற்குச் சமமானது. ஆண்டவன் நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார். அதை நாம் போற்ற வேண்டும். கையெடுத்துக் கும்பிட வேண்டும். இனிமேல் கணினியைத் தொடுவதற்கு முன்னால், அதை ஒரு முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு மற்ற வேலைகளைப் பாருங்கள். அதை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடமும் சொல்லிக் கொடுங்கள்.
பூர்ணம் விஸ்வநாதன், செபாராங் பெராய், பினாங்கு
கே: LAN என்றால் என்ன?
ப: Local Area Network என்பதே அதன் சுருக்கம். பல கணினிகளை ஒரே ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கும் முறையை, ‘லான்’ என்று அழைக்கிறார்கள். தமிழில் ‘உள்ளக வலைப் பின்னல்’ என்று அழைக்கலாம். விக்கிப்பீடியாவிற்கு உருவாக்கிக் கொடுத்தச் சொல் தொடர். உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள். பெருமையாக இருக்கிறது.
ஓர் அலுவலகத்தில் நூற்றுக் கணக்கான கணினிகள் இருக்கும். அந்தக் கணினிகளை ஒன்றுக்குள் ஒன்றாய் இணைத்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதையே ‘லான்’ என்று சொல்கிறோம். ஒரு கணினி பத்தாவது மாடியில் இருக்கும். இன்னொரு கணினி முப்பதாவது மாடியில் இருக்கும். இன்னும் ஒன்று இருபதாவது மாடியில் இருக்கும். இவற்றின் தொடர்புகளை ஒன்றாக இணைக்கும் முறைதான் ‘லான்’. புரியுதுங்களா.
@(வாசகர்களின் வேண்டுகோள். இந்தக் கேள்வி பதில் மறுபடியும் பிரசுரிக்கப் படுகிறது)
கே: உளவு பார்க்கும் Spy Camera மூலம் பெண்களைப் படம் பிடித்து இணையத்தில் வர வைக்கிறார்களே. எப்படி தவிர்க்கலாம். அப்படி செய்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: பெரிசா நினைக்க என்ன இருக்கிறது. அஞ்சு வயசு பிஞ்சுகள் எல்லாம் ஆள் ஆளுக்கு காமரா கைப்பேசிகளோடு அலைகிற காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதனால் நாம்தான் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஆக, அந்த மாதிரியான அவல நிலைமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் என்ன செய்ய வேண்டும். சில பாதுகாப்பு முறைகளைச் சொல்கிறேன்.
1. ’சைபர் கபே’ (Cyber Cafe) எனும் இணைய மையங்களுக்குப் போகும் பெண்கள் கவனிக்க வேண்டியது. ஒவ்வொரு கணினித் திரைக்கும் மேலே ஒரு புகைப்படக் கருவி பொருத்தப்பட்டு இருக்கும். அதை இணையக் காமிரா அல்லது ’வெப் காமிரா’ என்று அழைப்பார்கள்.
உங்களுக்குத் தெரியாமல் அந்தக் காமிரா உங்களைப் படம் பிடித்துக் கொண்டு இருக்கலாம். சொல்ல முடியாது. அது உங்களுக்கே தெரியாது. அதனால் போய் உட்கார்ந்ததும், அந்தக் காமிராவை வேறு பக்கமாகத் திருப்பி விடுங்கள். சந்தேகமாக இருந்தால் அந்த மாதிரியான இடங்களுக்குப் போவதைத் தவிர்த்து விடுங்கள்.
இன்னும் ஒரு விஷயம். காமிராவைத் திருப்பச் சொன்னேன் என்பதற்காக பக்கத்து மேசையில் இருப்பவரை படம் பிடிக்கிற மாதிரி திருப்பி வைக்க வேண்டாம். அப்புறம் அந்த ஆள் சண்டைக்கு வர, நீங்கள் முறைத்துப் பார்க்க, மூன்றாவது உலகப் போர் வந்தாலும் வரலாம். என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம். கவனம்.
2. வெளியூர்களுக்குப் போய் ஓட்டல்களில் தங்க வேண்டி வரலாம். அந்த மாதிரியான நேரங்களில் படுக்கைக்கு அருகில் சந்தேகம் வருகிற மாதிரி பொருட்கள் இருக்கின்றவா என்பதை நன்றாக உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இது முக்கியம். குளியல் அறைகள், துணி மாற்றும் அறைகளில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும்.
3. மிக நெருக்கமாக இருக்கும் போது, உங்கள் கணவரே விளையாட்டுத் தனமாய் உங்களைப் படம் பிடிப்பதாய்ச் சொன்னால் கூட அனுமதிக்க வேண்டாம். கைப்பேசியில் இருக்கும் காமிராவில் படம் பிடித்துப் பார்த்து விட்டு, பிறகு அழித்து விடலாம் என்பார்.
கணவருக்கு இல்லாத ஒன்றா என்று நீங்களும் பேசாமல் இருந்து விடுவீர்கள். என்னையும் பார் என் அழகையும் பார் என்று தாலி கட்டிய புருஷனுக்குப் ‘போஸ்’ கொடுத்து இருப்பீர்கள். சொன்ன மாதிரி அதை உங்கள் கணவர் முற்றாக அழித்தும் இருப்பார்.
ஆனால், ஒன்று தெரியுமா. கைப்பேசியில் இருந்து அழித்தப் படங்களை மறுபடியும் மீட்டு எடுக்க மென்பொருள்கள் உள்ளன. அதாவது கைப்பேசியின் ’மெமரி கார்ட்’டில் இருந்த படங்களைச் சுத்தமாக அழித்து இருக்கலாம். அங்கே ஒன்றுமே இருக்காது.
இருந்தாலும் எப்போதோ அழித்துவிட்ட அந்தப் படங்களை மீட்டு எடுக்க முடியும். ஒரு வருட படமாக இருந்தாலும் சரி. அடுத்து, அந்தக் கைப்பேசியில் ஏதோ கோளாறு. ஏதோ ஒரு கைப்பேசி கடைக்கு எடுத்துக் கொண்டு போய் பழுது பார்க்கக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
மேற்சொன்ன மென்பொருளைப் பயன் படுத்தி கைப்பேசியில் இருந்து அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை மீட்டு எடுக்க முடியும். அதை அப்படியே இணையத்திலும் பரப்பிவிட முடியும். அந்த மாதிரியான கில்லாடித் தனமான மென்பொருள்கள் என்னிடமும் உள்ளன.
என்ன மென்பொருள் என்று பெயரைக் கேட்க வேண்டாம். இதுவரை பயன் படுத்தியது இல்லை. அவசியமும் ஏற்படவில்லை. அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுப்பது பெரிய பாவம். அந்தப் பாவங்கள் நம்மைச் சும்மா விடாது. கடைசி காலத்தில் வட்டியும் முதலுமாய் வந்து சேரும்.
4. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் இனிக்கும் போது இமய மலையைக் கட்டி இழுத்து வந்து, உங்கள் காலடியில் போடுவார்கள். அதே காதல் கசக்கும் போது உலகத்திலேயே மகா மோசக்கார வில்லனாவும் மாறிப் போவார்கள். அதனால் காதலனிடம் கவனமாய் இருங்கள்.
படம் பிடிக்க அனுமதிக்கவே வேண்டாம். புருசனுக்கே வேண்டாம் என்று சொல்லும் போது, காதலனுக்கு என்ன கொம்பா சீவி விட்டு இருக்கிறது. இந்தக் காலத்து காதலர்களில் சிலர் பணத்துக்காக எதையும் செய்யும் பஞ்சமா பாதகர்களும் இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் ஆண் பெண் சளைத்தவர்கள் இல்லை. இரண்டு பேரும் சமம். எல்லோரையும் சொல்லவில்லை. இன்னும் ஒரு விஷயம். சேலை கட்டிப் பிடித்த படத்தை, நிர்வாணப் படமாக மாற்றிக் கொடுக்கும் வரைகலை நிரலிகளும் வந்துவிட்டன. அதை வைத்து அவர்கள் என்ன என்னவோ செய்ய முடியும்.
5. படிக்கிற பிள்ளைகள் அதிக நேரம் அரட்டையாடல் எனும் Chatting செய்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் அறிவுரை சொல்ல வேண்டும். தயவு செய்து அதிகாரத்தைப் பயன் படுத்த வேண்டாம். கைப்பேசியில் தொங்கிக் கொண்டு கம்ப ராமாயணம் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் நாசுக்காகச் சொல்லி திசையைத் திருப்ப வேண்டும். இறுக்கிப் பிடித்தால் வேறு வினையே வேண்டாம். பட்டம் அறுந்து தொலைந்து போய்விடும்.
6. கடைசியாக ஒன்று. இளம் பெண்களே! பொது இடங்களுக்கு போகும் போது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிந்து கொண்டு போங்கள். முதலில் சொன்ன மாதிரி ‘என்னையும் பார் என் அழகையும் பார், கிழிஞ்சு போன என் சிலுவாரையும் பார்’ என்று பாடிக் கொண்டு போக வேண்டாம். சும்மா இருக்கிற காமிரா கைப்பேசிகளுக்கு திண்டுக்கல் அல்வா கொடுக்கிற மாதிரி ஆகிவிடும்.
[உங்கள் கேள்விகளை அனுப்ப சுலபமான வழி. Google தேடல் இயந்திரத்தில் ksmuthukrishnan என்று தட்டச்சு செய்யுங்கள். அவ்வளவுதான். என்னுடைய வலைப்பதிவுகள் இருக்கும். அதில் ஒரு பதிவைச் சொடுக்கு செய்தால் போதும். அங்கே என் மின்னஞ்சல் இருக்கும். அதைச் சொடுக்கி உங்கள் பிரச்சினையை எழுதி அனுப்புங்கள். பதில் ஒரே வாரத்தில் கிடைக்கும்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக