19 ஜூன் 2014

திருச்சி கணினிக் கதை

(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்


கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. இருந்தாலும் நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?


ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்கள் எல்லாம் எப்படி ஐயா நண்பர்களாக முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம். என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.


நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள் ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போனாலும் கவலைப் படாதீர்கள். தன்னம்பிக்கை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். ஏன் என்றால் தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக