08 ஜூன் 2014

டிவிட்டர் என்றால் என்ன?



மலேசியா ‘புதிய பார்வை’ நாளிதழில் இன்று 08.06.2014 பிரசுரிக்கப்பட்டது.


சேகர், (பேருந்து ஓட்டுநர்) ரிங்லெட், கேமரன் மலை, பகாங்
கே: டிவிட்டர் என்றால் என்ன? உங்களிடம் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா?


ப: டிவிட்டர் என்பது எஸ்.எம்.எஸ் போன்ற ஒரு குறும் செய்திச் சேவை. அதிக பட்சம் 140 எழுத்துக்களை மட்டும் தட்டச்சு செய்யலாம். நீங்கள் நினைக்கும் எதையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். இணையத் தொடர்புகளையும் இணைத்துக் கொள்ளலாம். எல்லாமே எழுத்துகளாக மட்டுமே இருக்க வேண்டும்.


டிவிட்டரில் பதிவு செய்யாதவர்கள், டிவிட்டரில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கலாம். ஆனால், பதிலுக்குச் செய்திகளை அனுப்ப முடியாது. டிவிட்டர் இணையத் தளத்திற்குச் சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பிறகு, ’டிவிட்’ செய்யலாம். டிவிட்டர் கணக்கைத் தொடக்குவது சுலபம். பயன்படுத்துவதும் சுலபம். வெரி வெரி ஈசி. ஒரு பத்து நிமிடத்து வேலைதான். முற்றிலும் இலவசமான சேவை.


இந்த டிவிட்டர் 2006 ஜூலை 15-ஆம் தேதி உலகளாவிய நிலையில் அறிமுகம் செய்யப் பட்டது. ஜேக் டோர்சி, இவான் வில்லியம்ஸ், பிஸ் ஸ்டோன், நோவா கிளாஸ் என்கிற நான்கு நண்பர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கியதுதான் இந்த டிவிட்டர். மிக விரைவாக உலகம் முழுமையும் படர்ந்தது. 2012-ஆம் ஆண்டு கணக்குப்படி 500 மில்லியன் பேர் பதிவு செய்யப்பட்ட பயனர்களாக இருக்கின்றனர். ஒரு நாளைக்கு 340 மில்லியன் செய்திகள் அனுப்பப் படுகின்றன.

தவிர, டிவிட்டரின் வழி, ஒரு நாளைக்கு 16 கோடி கேள்விகளும் கேட்கப் படுகின்றன. உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்குத் தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கு 42,700,710 ரசிகர்கள். இது 2014 ஏப்ரல் 27-ஆம் தேதி புள்ளி விவரம். 

மற்றபடி இந்தியப் பிரதமர் மோடி வெற்றி பெறுவதற்கு, இந்த டிவிட்டர் ஊடகம் மிகவும் உதவி செய்து இருக்கிறது. மோடியின் உதவியளார்கள் மில்லியன் கணக்கில் டிவிட்டர் செய்திகளை அனுப்பி இருக்கிறார்கள். இருந்தாலும், ஒரு கட்டத்தில் மோடியின் டிவிட்டர் கணக்கைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. இத்தாலியர்களைக் கேட்டால் தெரியும் என்று நினைக்கிறேன். எத்தனையோ தடைகளைப் போட்டும், மோடி ஜெயித்துக் காட்டி விட்டார்.


எனக்கு டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்கள். இருக்கிறது. பயன்படுத்துவது ரொம்பவும் குறைவு. அதற்கும் காரணம் இருக்கிறது. எங்கேயும் எந்த நேரத்திலும் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று ஒரு சிலர் இருக்கவே செய்வார்கள். தெரியும் தானே. அந்த மாதிரி டிவிட்டரிலும் எதையாவது அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். நாமும் மரியாதைக்கு எதையாவது கிறுக்கி அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் கோபித்துக் கொள்வார்கள்.


முக்கியமான விஷயமாக இருந்தால் பரவாயில்லைங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால், ராஜாவைக் காணோம் என்று ஒரு ‘டிவிட்’ செய்தி வந்தது. எந்த ராஜா என்று விசாரித்துப் பார்த்தால், ராஜா என்பது அவர்கள் வீட்டுச் செல்லப் பூனையாம். என்னங்க அநியாயம். இதுகூட ஒரு ’டிவிட்’ செய்தியா. அவர்களுக்கு அது பெரிசாக இருக்கலாம். அவர்கள் வீட்டுப் பூனை, பக்கத்து வீட்டில் இருக்கும் தன் காதலி பார்வதியைப் பார்க்கப் போய் இருக்கலாம் இல்லையா. அதற்கு ஒரு டிவிட்டர் செய்தியா.


படுக்கையை விட்டு எழுந்து விட்டேன். பல் விளக்கப் போகிறேன். டீ சாப்பிட போகிறேன். காதலில் சொதப்புவது எப்படி. நீ ரொம்ப மோசம்டா. அடுத்த வாட்டி பார்த்தேன் செருப்படி. இப்படி அழகு அழகான தமிழ்ச் சொற்களை டிவிட்டரில் பார்த்து இருக்கிறேன். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தோற்றது போங்கள்.


கணினித் தொழில்நுட்பம் என்பது, இறைவன் நமக்கு கொடுத்த ஓர் அரிய வரப் பிரசாதம். அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அசிங்கப் படுத்தினால் அப்புறம் ஏழேழு ஜென்மத்திற்கும் சரஸ்வதி எட்டிப் பார்க்க மாட்டார்.

https://twitter.com/login எனும் முகவரிக்குச் சென்று இலவசமாகப் பதிந்து கொளுங்கள். அப்புறம் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு செய்தி அனுப்பலாம். நைஜீரியாவின் போக்கோ ஹாராமிற்கும் அனுப்பி வைக்கலாம். ஆனால், பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. அது எல்லாம் சரி. டிவிட்டரில் சேர்ந்துவிட்ட சந்தோஷத்தில் என்னை மறந்துவிட வேண்டாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக