13 ஆகஸ்ட் 2014

பாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு - பாகம் 2

 [இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 04.08.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]

இரண்டாம் உலகப் போரில், பிரிட்டன் ரொம்பவுமே பாதிக்கப்பட்டுப் போனது. அந்தச் சமயத்தில் பிரிட்டனிடம், ஐம்பது அறுபது காலனிகள் (Colony) இருந்தன. அதாவது இந்தியா, மலாயா, பர்மா, கானா, கென்யா, மலாவி, உகாண்டா, பிஜி என்று பலப் பல  காலனி நாடுகள். 

எண்ணிப் பார்த்தால் 53 வருகிறது. போருக்குப் பிறகு, பிரிட்டனைப் பார்த்தால் மனசிற்கு கஷ்டமாக இருக்கும். வெளியே பார்த்த மாதிரி வீட்டையும் பார்த்து இருக்க வேண்டுமே என்று கதை கதையாய்ச் சொல்லிக் கண்ணீர் விட்டது.


எல்லாக் காலனி நாடுகளையும், சரியாகக் கவனிக்க முடியாத நிலைமை. உண்மைதானே. ஒரு மனைவியாக இருந்தால், உருப்படியாகச் சோறு போட்டு அழகு பார்த்து இருக்கலாம். 

கணக்குத் தெரியாமல் மன்மத ராகம் பாடினால் எப்படிங்க. சொல்லாமல் கொள்ளாமல் காசி இராமேஸ்வரத்திற்கு டிக்கெட் எடுப்பது தான் உத்தமம். என்னைக் கேட்டால் அதுதான் சுத்தமான புருஷ இலட்சணம். 


ஆக, எப்படியாவது இந்தக் காலணிகளை, மன்னிக்கவும் காலனிகளைக் கழற்றிப் போட்டால் நிம்மதி என்று பிரிட்டன் பெருமூச்சு விட்டது. ஒரு காலத்தில் அதன் காலனிகளை எல்லாம் அதன் காலணிகளாகத் தானே அந்த நாடு நினைத்தது. நடத்தியும் வந்தது. 

ஒரு நாட்டின் இயற்கை வளங்களை நன்றாகச் சுரண்டி எடுப்பது. எல்லாவற்றையும் உறிஞ்சி முடித்த பிறகு, சாவதானமாகச் சுதந்திரம் கொடுத்து சமாதானம் செய்வது. இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா. 


இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்திற்கே சோறு போடும் அளவிற்கு இயற்கை வளங்கள் நிறைந்த புனித பூமி. பரங்கித் தலையர்கள் வந்தார்கள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைகளில் கட்டி எடுத்துக் கொண்டு போனார்கள். வெறும் சக்கையைக் காட்டி இதுதான் சுதந்திரம் எடுத்துக்கோ என்று பை பை காட்டினார்கள். 

இப்போது பாருங்கள். கடலில் கலக்கும் மழை நீரைத் கொடுப்பதற்கே, கஞ்சத் தனம் பண்ணுகின்ற அரசியல் அழுக்குகள் மலிந்து விட்டன. ஒரு புண்ணிய பூமி வாய்விட்டு அழுகிறது.

கலகம் இல்லாமல் உலகம் இல்லை. 
சிந்தனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை

தன்னுடைய குட்டி நாடுகளைக் கழற்றி விட்டால், அப்புறம் லண்டன் கஜானா காலியாகி விடுமே. இந்தக் காலனிகளில் இருந்துதானே கப்பல் கப்பலாய் வருமானம் வந்தது. ஆக, அப்படியும் ஒரு பயம் இருந்தது. 


அடுத்து, ஆசை யாரை விட்டது. இந்தச் சமயத்தில், மத்தியக் கிழக்கு நாடுகளில், பிரிட்டனின் கை கொஞ்சம் லேசாக ஓங்கியது. அங்கே இருந்து டீசல், பெட்ரோல் என்கிற கறுப்புத் தங்கம் வற்றாமல் கிடைத்தது. 

அதை வைத்துக் கொண்டு, பல நாடுகளுக்கு நாட்டாமையும் பார்த்தது. கலகம் இல்லாமல் உலகம் இல்லை. சிந்தனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதே வெள்ளைக்காரர்களின் வேதாந்தம்.


உலக வல்லரசாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் ஆசை, கனவு, இலட்சியம், இலக்கு, எதிர்பார்ப்பு எல்லாமே. உலகப் போலீஸ்காரர் பட்டத்தைத் தற்காக்க வேண்டும் என்பதுதான் தலையாய ஆசை. அந்த ஆசை 1900-களிலேயே வந்து விட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஹிட்லர் செய்த யூதப் படுகொலைகளினால், உலகம் முழுவதும் யூதர்களுக்கு அனுதாப அலைகள் வீசத் தொடங்கிய நேரம். ஆரம்பத்தில் சில ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குச் சென்று குடியேறினார்கள். 

இவர்கள் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சோசலிச யூதர்கள். அவர்கள் சோசலிச யூதர்களாக இருந்ததால், சோவியத் ரஷ்யாவின் ஆதரவை எளிதாகப் பெற முடிந்தது. ஒன்றை மறந்துவிட வேண்டாம்.


அந்தக் காலக் கட்டத்தில் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனாக இருந்தது சோவியத் ரஷ்யா. அதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான தகவல். அப்போதும் சரி இப்போதும் சரி. பலருக்கு வியப்பை அளிக்கும் செய்தியும்கூட. இப்போது பாருங்கள். இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் ஏழாம் பொருத்தம்.

மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள்

இரண்டாவது உலகப் போரின் போது, ரஷ்யாவை ஸ்டாலின் ஆட்சி செய்தார். ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, மூன்றாம் உலக நாடுகள் விடுதலைப் போராட்டங்கள் செய்த காலக் கட்டம். அந்த நாடுகளை ரஷ்யா ஆதரித்தது. அதை அப்போதைக்கு ஸ்டாலின் கொள்கை என்றும் சொல்வார்கள்.


மத்திய கிழக்கில் பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் அதிகாரம் செய்து வந்தது ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. அவற்றுக்கு எதிராக வேறு ஒரு நாடு உருவாக வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது. 

அந்த நாட்டிற்கு ஆதரவு தர ரஷ்யா தயாராகவும் இருந்தது. அது இஸ்ரேல் நாடாக இருந்தால் நல்லது என்பது ஸ்டாலின் அண்டக் காகசக் கணிப்பு.

ஆக, யூதர்களைத் தனியாகக் குடியேற்றுவதற்கு ஓர் இடம் தேவைப் பட்டது. அந்த வகையில் இஸ்ரேலியர்கள் சம்பந்தப்பட்ட ஓர் இடம் இருக்கிறது என்றால் அது பாலஸ்தீனம்தான். 

ஆக, யூதர்கள் அங்கே போய் குடியேறலாம் என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் திட்டம் போட்டன. ஐ.நா. என்கிற தலையாட்டி பொம்மையும் சரி என்று சொல்லி, தலையைத் தடவிக் கொண்டது. 

கானான் ஒரு பெரிய சாம்ராஜ்யம்

அதற்கு முன்னர், பாலஸ்தீனத்தின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும். 8000 ஆண்டுகளுக்கு முன்னர், யூத மதம் தோன்றியதாக யூதர்கள் சொல்கின்றனர்.


ஆனால், 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பாலஸ்தீனத்தில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அகழாய்வுச் சான்றுகள் உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சிரியா போன்ற நாடுகளின் பழைய பழைய நாகரீகங்கள் அங்கேதான் தோன்றின.

அந்தச் சமயத்தில் கானான் எனும் ஒரு பெரிய சாம்ராஜ்யம், பாலஸ்தீனப் பகுதியில் இருந்து இருக்கிறது. அந்தச் சாம்ராஜ்யம் இப்போது இல்லை. அழிந்து விட்டது. 

அந்தக் கானான் சாம்ராஜ்யத்தின் வழித் தோன்றல்கள் தான், இப்போது இருக்கின்ற இந்த யூதர்கள். ராக்கெட் மேல் ராக்கெட்டைப் பாய்ச்சி லெபனான் நாட்டை அலங்கோலப் படுத்திக் கொண்டு இருக்கும் யூத வாரிசுகள்.


இங்கே ஓர் இடைச் செருகல். சொந்தக் கதை. சொல்லலாம் தானே. இப்ப சொல்லாமல் வேறு எப்ப சொல்வதாம். 1972-ஆம் ஆண்டு. தமிழ் மலர் நாளிதழில் நிருபராக வேலை செய்த சமயம். 

அப்போது, இஸ்ரேல் ஓர் அனைத்துலகக் கட்டுரைப் போட்டியை நடத்தியது. ஆங்கில மொழியில் தான். கானான் சாம்ராஜ்யத்தைப் பற்றி ஒரு வரலாற்றுக் கட்டுரையை எழுதி, அமெரிக்கத் தூதரகத்தின் மூலமாக அனுப்பி வைத்தேன். 

இரண்டாவது பரிசு கிடைத்தது. விருந்தினராக வரச் சொல்லி இஸ்ரேலிய அரசாங்கம் அழைப்பு அனுப்பியது. போக முடியவில்லை. இந்தப் பக்கம் அனுமதி கிடைக்கவில்லை. புரிந்து கொள்ளுங்கள். நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை.

காலப் போக்கில் கானானிய நாகரீகம் அழிந்தது

அப்படியே போய் இருந்தால் என்ன. பக்கத்தில் இருக்கிற எகிப்து நாட்டிற்குப் போய் இருக்கலாம். பாலைவனத்தில் ஒட்டகங்களை மேய்க்கிற வேலை கிடைத்து இருக்கும். கிளியோபாட்ரா மாதிரி, கழுதைப் பாலில் குளிக்கிற ஒரு பெண்ணைப் பார்த்து இருக்கலாம்.


அவளுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்து இருக்கலாம். அவளும் எனக்கு உதவியாக இருந்து இருப்பாள். என்ன செய்வது. கழுதைப் பாலிலும் குளிக்க முடியவில்லை. ஒட்டகப் பாலையும் குடிக்க முடியவில்லை. கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று சொல்ல மாட்டேன். 

ஏன் தெரியுமா. அதே கிளியோபாட்ரா மாதிரி நல்ல ஓர் அழகிய கிளி, இப்போது வீட்டில் இருக்கிறது. அந்தக் கிளியின் பெயர் மனைவி.

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். எனக்கும் உதவியாக இருக்கும்.  நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக