09 அக்டோபர் 2015

அருள் ஆறுமுகம்

கவிஞர் அருள் ஆறுமுகம். அவரை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



பல்லாண்டுகளாக எழுத்துலகில் பவனி வருகிறார். நாடறிந்த கவிஞர், எழுத்தாளர், பன்முகக் கலைஞர். மரபுக் கவிதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு. சிலாங்கூர், கோலகுபு பாரு நகரில் பிறந்தவர். ஆனால்,

இப்போது அசல் ஈப்போ மண்ணின் மைந்தராகி விட்டார். சமூகப் பணிகளில் ஆர்வம். அதையும் தாண்டிய நிலையில் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்றுதல்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரைகள் வழங்குவதில் அதீத நாட்டம். ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத் தலைவர். பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். 


2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக் குழுவின் தலைவராகச் செயல் ஆற்றியவர். 2014 ஆம் ஆண்டு அனைத்துலக கவிதைப் பெருவிழாவை ஈப்போவில் நடத்தி சாதனை செய்தவர்.

அண்மையில் ‘மணக்கும் சேவையும் மனித நேயமும்’ எனும் ஓர் அருமையான் தகவல் புதினத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, சில கவிதை தொகுப்புகளையும் வெளியீடு செய்து இருக்கிறார்.

இவர் அரச மலேசியக் காவல் உளவுத் துறையில் ஓர் அதிகாரி (Criminal Investigation).  மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவர். காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் பெற்றவர்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர். கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரனார். 


இவரின் சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் சிறப்பு வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு தமிழ் முத்துகள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

(தனிப்பதிவு: அவருடைய உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் பணம் கொடுத்தால் வாங்க மறுக்கிறார். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் மட்டும் தான்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக