உலகத் திரை வரலாறு எத்தனையோ சாதனைப் பெண்களைப் பார்த்து விட்டது. பார்த்துப் பெருமை பேசி இருக்கிறது. பேசியும் வருகிறது. ஆனால், அதே அந்தச் சினிமா வரலாறு, ஜில் ஜில் மனோரமாவை போல ஓர் அற்புதமான குணச்சித்திர திலகத்தை இதுநாள் வரை பார்த்து இருக்க முடியாது. இனியும் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. அதைப் பற்றி அந்த வரலாற்றிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழ்ச் சினிமாவில் முன்னோடிகள் பலர். அந்த முன்னோடி ஜாம்பவான்களில் யாரை எல்லாம் உச்சி முகர்ந்து பார்த்தோமோ அவர்களில் பலர், இப்போது தங்களின் இறுதிக் காலங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், புரட்சித் திலகம் என்ற தமிழ்த் திரையின் மூன்று திலகங்களும் மறைந்து விட்டன.
காலத்தை மறந்து வாழ்ந்த ஆச்சி
அந்த மூன்று திலகங்களுக்கும் துணையாக நின்று சண்டை போட்ட வில்லன்களும் மறைந்து போய் விட்டார்கள். இடையே இடையே ஓடித் திரிந்த நகைச்சுவை நடிகர்களில் பலரும் கரைந்து விட்டார்கள். தற்போது தன்னுடைய காலத்தையும் நினைவையும் மறந்து வாழ்ந்து கொண்டு இருந்த ஆச்சி மனோரமாவும் மறைந்து விட்டார்.
தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப் பட்டவர்.
தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் ஆச்சி நடித்து இருக்கிறார்.
டூரிங் தியேட்டர் காலத்தில் இருந்து டிஜிட்டல் புரஜெக்டர் காலம் வரை வலம் வந்தவர். கடைசியாக சிங்கம் 2 படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்தார் மனோராமா. ஆக, நடிப்புலக வாழ்க்கையில் கொடிகட்டிப் பறந்தவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் சுந்தரியை மறந்து விடமுடியுமா.
நான் இப்போது இங்கேயே செத்துப் போனால்...
ஆச்சி மனோரமாவின் மரணம், திரைத் துறையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய இறப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், தன்னுடைய மரணம் குறித்து பேசி இருப்பது நம்மை எல்லாம் ரொம்பவும் நெகிழ வைக்கிறது.
வயோதிகம் காரணமாக விழாக்களை மனோரமா தவிர்த்து வந்தார். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்து முடிந்த திரைத்துறை ஊடகவியலாளர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி தான்.
அதில் கமல், சிவக்குமார் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் மனோரமா பேசினார். சென்னைத் தமிழில் குட்டிக் கதைகளைக் கூறினார். பார்வையாளர்களைப் பரவசப் படுத்தினார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பலமுறை சொல்லிச் சொல்லி வந்தார். அப்போது அவர் பேசிய பேச்சு அங்கு வந்து இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
அப்படி அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது, ஒரு கட்டத்தில் திடீரென்று, “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இப்போது இங்கேயே செத்துப் போனால் கூட ரொம்ப சந்தோசப் படுவேன்” என்று கூறினார். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒருவார காலம் ஆகி இருக்கும். இதோ இப்போது சொன்ன மாதிரியே அவரும் போய்ச் சேர்ந்து விட்டார்.
தமிழ்ச் சினிமாவில் ஆச்சி என்று அழைக்கப்ட்ட மனோரமா, தன் கடைசிக் காலத்தில் அதிகமான குணச்சித்திர வேடத்தில் நடித்தப் பகழ் பெற்றார். சிறந்த நடிகையாக மட்டும் அல்லாது சிறந்த பாடகியாகவும் மனோரமா வலம் வந்தவர். 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியும் புகழ் பெற்றார்.
கலைத் துறையில் அன்னாரின் ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப் பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’; ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’; மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’; கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’; ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’; சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’; ‘என்.எஸ்.கே விருது’; ‘எம்.ஜி.ஆர். விருது’; ‘ஜெயலலிதா விருது’. தவிர பல முறை ‘பிலிம் பேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்தவர் ஆச்சி மனோரமா.
உண்மையான கலைஞர்களுக்கு இப்போது வேலை இல்லை
கமலஹாசன்களும் ரஜனிகாந்துகளும் நிறைந்து வழியும் தமிழ் நாட்டுச் சினிமாவிற்குள், உண்மையான கலைஞர்களுக்கு இப்போது வேலை இல்லை என்றே சொல்ல வேண்டும். உண்மையில் நிலை கொள்ளத் தக்க, பெயர் பதித்து இருக்கக் கூடிய ஒரு தமிழ்ச் சினிமாவில் மனோரமா நடித்து இருக்க வேண்டும்.
தமிழ்ச் சினிமா அவரை முழுமையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் வெறுமனே பொய்யும் புரளும் சினிமாவிற்குள் அது சாத்தியம் இல்லாமல் போய் விட்டது. வேதனையான விஷயம்.
நாடகத்துறை தந்த பல சினிமாக் கலைஞர்களின் காலம் முடிந்து கொண்டு இருக்கிறது. சினிமாவிற்காகவே வாழ்ந்த பெரும் கலைஞர்களும்... அந்தச் சினிமா வாழ்விற்கும் அப்பால் சினிமாவை நேசித்த கலைஞர்களும்... மறைந்து கொண்டு இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சினிமா வெறும் வியாபாரத் தளமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
சினிமா எனும் மிகப் பெரிய ஊடகம், தமிழ்ச் சமூகத்தில் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. அதுகூட தெரியாமல், நம்முடைய அடுத்த தலைமுறையும் கெட்டுச் சுவாரகிக் கொண்டு வருகிறது. என் செய்வது.
பெண்கள் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது என்று ஆங்கிலேய எழுத்தாளர் மில்டன் கூறி இருக்கிறார். அந்த வகையில் அந்த மாபெரும் சகாப்தத்தின் அழகிய சின்ன வயது அனுபவங்களைத் தெரிந்து கொள்வோம்.
மனோரமா கதை சொல்கிறார்...
அவரே சொல்கிறார் கேளுங்கள். அவருடைய சுயசரிதை ஓர் ஒலிப் பேழையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் இருந்து சில பகுதிகளை மீட்டு எடுத்து இருக்கிறேன். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நீங்களும் கேளுங்கள்.
நான் மனோரமா... பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடி. பெற்றவர்கள் எனக்கு வைத்த பெயர் கோபிசாந்தா.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், என் தந்தை வசதி மிகுந்த ரோடு காண்ட்ராக்டர். வசதியும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில்தான் பிறந்தேன். இந்த நேரத்தில்தான் என் தாயார் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டார். என் அப்பாவுக்கு தன் கூடப் பிறந்த தங்கையையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு!
அதன் விளைவு... என் அம்மாவின் வீட்டு நிர்வாகம் கைமாறியது. எனது சின்னம்மாவின் ஆதிக்கம் வலுத்தது. பல வழிகளிலும் என் அப்பா என் அம்மாவை அவமானப் படுத்தினார். கொடுமைப் படுத்தவும் தொடங்கி விட்டார்.
எந்தத் தங்கையின் வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைய வேண்டும் என்று தனது வாழ்க்கையைப் பங்கு போட்டுக் கொடுத்தாரோ... அந்தத் தங்கையே எங்கள் வாழ்க்கையில் எல்லா அவலங்களுக்கும் பாதை போட்டுக் கொடுத்து விட்டார்.
நாளுக்கு நாள் துன்பமும் கொடுமைகளும் அதிகரித்தன. பொறுக்கமுடியாத அளவிற்கு அவற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தன. எதற்கும் ஒரு உச்ச வரம்பு உண்டல்லவா? ஒருநாள் என் தாயார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டிக் கொண்டு விட்டார். பிறந்து ஒரு வருடம்கூட நிறைவு பெறாத நான் அருகில் நின்று கதறிக் கொண்டு இருந்தேன்.
தற்செயலாக எனது அழுகைக்குரல் கேட்டு வந்து பார்த்தவர்கள், எனது அம்மா தூக்கு மாட்டிக் கொண்டு சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்துப் பதறி, கயிற்றை அறுத்து காப்பாற்றினார்கள்.
அப்படிக் காப்பாற்றப்பட்ட அவருக்கு சரியாக பன்னிரெண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் உயிர் வந்தது.
இந்தத் துன்பச் சூழ்நிலையில் மன வெதும்பல்கள் அதிகரித்தனவே தவிர குறையவில்லை. அத்துடன் என் அப்பா கூட என் அம்மாவால் தொடர்ந்து குடும்பம் நடித்த முடியாத நிலை. இனி என்ன செய்வது? வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை!
அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது
அதனால், ஒரு நாள் என் தாயார் கைக் குழந்தையான என்னைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார். அப்படி அவர் வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டு புறப்பட்டு வந்து நின்ற ஊர்தான் இராமநாதபுரம் மாவட்டம். காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்தூர்.
முன்பின் தெரியாத ஊர். பார்த்து பழகியிராத மக்கள். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை. பசித்து அழுத எனக்கு பால் வாங்கக் கூட கையில் காலணா இல்லாத வறுமை. இப்படி பாவப்பட்ட சூழ்நிலையில் தான், என் அம்மா பள்ளத்தூரில் தனது வாழ்க்கையைத் தொடக்கினார்.
பலகாரம் சுட்டு விற்பது என் அம்மா எடுத்துக் கொண்ட தொழில். வியாபாரத் தன்மை பெருக்கம் இல்லாத சிறிய ஊர். அதிக முதலீடோ லாபமோ இல்லாத தொழில். அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது. ஆனால் மானத்தோடு வாழ வழி காட்டியது.
இந்தப் பள்ளத்தூர்தான் என்னை வளர்த்த ஊர். எனது இன்றைய வாழ்க்கைக்கே வழிகாட்டிய ஊர். அனாதையாக வந்த எங்களை ஆதரித்த ஊர். அப்போது எனக்கு இரண்டு வயது. திருநீலகண்டர் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய "உன்னழகை காண இரு கண்கள் போதாதே" என்ற பாட்டை நான் ஒரு பொம்மையை வைத்து பாடிக் கொண்டிருந்தேனாம். அதைக் கேட்ட என் அம்மாவுக்கு எல்லை இல்லாத ஆனந்தம்... பூரிப்பு... இருக்காதா பின்னே!
வயதோ இரண்டு. மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை ஓரளவு நயத்தோடு பாடினால்... எந்தத் தாய்க்குத் தான் மகிழ்ச்சி பொங்காது. சொல்லுங்கள்.
தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன்முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றால் இதைப் பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லிச் சொல்லி பூரித்துப் போவாராம்.
ஒரு சின்னஞ்சிறிய ஊரில்... எந்த வித ஒரு வசதியும் இல்லாத ஓர் ஏழையின் இரண்டு வயதுக் குழந்தை... ஓரளவு இனிமை சேர்த்துப் பாடுவது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும் போலும்!
யார் வீட்டில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும்
அதற்குப் பின்னர் என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம், தங்கள் அருகே கூட்டி வைத்துக் கொண்டு "பாப்பா பாடு" என்று சொல்லிக் கேட்பார்கள். நானும் பாடுவேன்.
படிப்படியாக இந்தப் பாடும் வித்தை, எப்படியோ என்னைப் பலமாக ஒட்டிக் கொண்டது. மற்றவர்களுக்குப் பாடிக் காட்டி... பாடிக் காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து போனது!
பிறகு எங்கள் ஊரில் யார் வீட்டில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும், அங்கே என்னைத் தவறாமல் கூட்டிச் சென்று பாட வைப்பார்கள்.
இதே நேரத்தில் ரொம்பவும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்தேன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்ற பாராட்டையும் பெற்று வந்தேன்.
என்னுடைய பெயர் கோபிசாந்தாவாக இருந்தாலும் எல்லோரும் என்னை பாப்பா என்று தான் கூப்பிடுவார்கள். ஒருமுறை எங்கள் பள்ளிக்கூட விழா ஒன்றில் எங்கள் வாத்தியார் என்னை அழைத்து "பாப்பா ஒரு பாட்டுப் பாடும்மா" என்று கேட்டுக் கொண்டார்.
பாருக்குள்ளே நல்ல நாடு... என்ற பாட்டை, மீரா படத்தில் வரும் "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டின் டியூனில் பாடினேன். பள்ளிக்கூட ஆசிரியர்களும், மற்றவர்களும் மகிழ்ந்து போனார்கள்.
அதுமுதல் நான் பாடாத பள்ளிக் கூட விழாக்களே இல்லை என்றாகிப் போனது. அத்துடன் சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பாட வைத்தார்கள்.
'பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்'
நான் பாடத் தெரிந்தவள். அதனால், எனக்கு ஒரு சலுகையும் கிடைத்தது. பள்ளிக்கூடம் போய் வந்த பிறகு, பலகாரம் விற்க எங்கள் ஊர் சினிமா கொட்டகைக்குப் போவேன். எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்க எனக்கு இலவச அனுமதியும் உண்டு. 'பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள்.
நானும் அவ்வப்போது உள்ளே போய் சிறிது நேரம் பாட்டுகள் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வருவேன். இப்படியே படம் பார்த்தும், கிராமபோன் ரிக்கார்டுகளைக் கேட்டுமே எனது இசைஞானம் வளர்ந்தது. இந்த நிலையில்தான் என் அம்மாவுக்கு பயங்கரமான ரத்தப் போக்கு நோய் வந்தது.
மனக்கவலை... வறுமை... தினந்தோறும் நெருப்புடன் நடத்தும் கடுமையான போராட்டம்... இவை எல்லாமாகச் சேர்ந்து அந்த நோயைக் கொடுத்து விட்டன. என்ன செய்வது? ஆச்சி மனோரமாவின் சோகக் கதை நாளை தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக