17 மே 2016

இசைப்பிரியா - 1


[பாகம்: 1]


சத்தியம் செத்துச் செதுக்கிய சமாதியில், ஒரு பெண்மை மௌனராகம் பாடுகின்றது. அங்கே அழகின் ஆராதனைகள் சமைந்து போய் சிலிர்க்கின்றன. அந்தச் சிலிர்ப்புகளில், கிழிந்து போன மனித உணர்வுகளின் முகாரி ராகங்களும் சன்னமாய்க் கேட்கின்றன.

அதையும் தாண்டிய நிலையில், அங்கே ஆழ்கடலைக் கடந்து போகும் மரண ஓலங்கள். எண்திசைகளைத் தாண்டிச் சிதறும் கண்ணீர்க் கதறல்கள். யாழிய காடுகளை நடுங்க வைக்கும் வன்முறை ஓலங்கள்.


ராகம் தாளம் சுருதி சந்தம் எதுவுமே தேவை இல்லாமல், நச்சென்று பதிந்து போகும் அவலங்களின் ஆர்ப்பரிப்புகள். அதைப் பார்த்து நெஞ்சம் வலிக்கின்றது. உடலும் கொதிக்கின்றது.

அந்த அலங்கோலத்தில், இசைப்பிரியா என்கிற ஒரு ஜீவனை நினைத்துப் பார்க்கின்றேன். அந்த நினைப்பில், மனதில் தேங்கி நிற்பதை எல்லாம் கொட்டித் தீர்க்கின்றேன். சிங்களச் சகடைகளால் நாசம் செய்யப் பட்ட ஒரு பெண்மையின் சரிதை வருகிறது. படியுங்கள்.

அவளுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவளுடன் பயணித்த ஆயிரம் ஆயிரம் ஆன்மாக்களும் ஒன்று சேரட்டும். வேண்டிக் கொள்வோம்.

எதிர்காலச் சொப்பனங்களைச் சுமந்து கடையினமாகிப் போனவள்

உலகத் தமிழர்கள் பறிகொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் இசைப்பிரியா. அழுது புரண்டாலும் இனி அவள் திரும்பி வர மாட்டாள். சொர்க்கத்தின் வரப்பு வாசல்களைத் தாண்டி மீளவும் மாட்டாள். அவளைப் பற்றிய சின்னச் சுருக்கம்.


இசைப்பிரியா என்கிற அந்தப் பெண்ண், விடுதலைப் புலிகளின் வியூகங்களை, தொலைக்காட்சியில் செய்திகளாய் வாசித்துக் காட்டியவர். ஈழத் தமிழர்களின் உரிமைகளை, கவிதைகளாய் வார்த்துக் காட்டியவர். புலம்பெயர் மக்களின் போர்க் கொடுமைகளை வரைந்து காட்டியவர்.

தமிழர்களின் துயரங்களைத் துகில் உரித்துக் காட்டிய அந்தச் சின்னப் பெண்ணை, ஒரு காவடிச் சிந்து என்றுகூட சொல்லலாம். என்ன செய்வது. எதிர்காலச் சொப்பனங்களைச் சுமந்து கொண்டே கடையினமாகிப் போனது அந்த ஊடகச் சிந்து.

நிர்வாணமாய் நிற்க நேர்ந்த அவமானம்

தமிழீழ இனவழிப்புக்கு ஓர் ஆதாரமாக இசைப்பிரியாவின் காணொளி இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை ஒளிபரப்பு செய்து உள்ளது. மனதைக் கனக்கச் செய்யும் காட்சிகள். அந்தக் காணொளியை யூடியூப்பில் உள்ளது.
https://www.youtube.com/watch?v=kjgX9FxR20g எனும் இணைய முகவரியில் போய்ப் பார்க்கலாம்.


சேறு நிரம்பிய ஒரு வயல் வெளி. அதில் வீழ்ந்து கிடக்கிறார் இசைப்பிரியா. அவரைப் பத்துப் பன்னிரண்டு சிங்கள இராணுவத்தினர் வளைத்துப் பிடிக்கின்றனர். அவரைப் பிரபாகரனின் மகள் என்றுதான் முதலில் அந்த வெறியர்கள் நினைத்தார்கள்.

போர்த்திக் கொள்ள ஒரு வெள்ளைத் துண்டைக் கொடுக்கிறார்கள். குடிக்கக் கொஞ்சம் தண்ணீரையும் கொடுக்கிறார்கள். மனித நேயத்துடன் ஆசுவாசப் படுத்துகிறார்கள். இசைப்பிரியா தப்பிக்க முயற்சி செய்யவில்லை. செய்தாலும் நடக்காது.

இசைப்பிரியாவின் குரலில் சொல்ல முடியாத சோகம்

''பிரபாகரனின் மகள்'' என்று ஓர் இராணுவ வீரன் சொல்கிறான். ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா. வெறும் மூன்றே மூன்று வார்த்தைகள்தான். அதைச் சொல்லும் போது இசைப்பிரியாவின் குரலில் சொல்ல முடியாத சோகம். பார்ப்பவரின் மனதை கவ்விக் கொள்கின்றன.


ஒரு மாபெரும் வீரப் போராட்டம் சரிந்து போவதையும்... எதிரிகளின் முன்னே நிர்வாணமாய் நிற்க வேண்டிய அவமானத்தையும்... கூட்டு வன்முறைக் குழுவிடம் சிக்கிக் கொண்ட ஓர் அச்சத்தையும்... துடிக்கும் உயிரின் கடைசி நேர பரிதவிப்பையும்... அந்தக் குரலில் உணர முடிகின்றது. அங்கே இசைப்பிரியாவின் குரல் மட்டும் கேட்கவில்லை. பின்னணியில் குண்டுச் சத்தங்களும் இடைவிடாமல் கேட்கின்றன.

அசிங்கமான ஈரத்தில் நனைந்து மறைந்த அழகு ஜீவன்

கால்களை மடக்கிச் சகதிக்குள் அவள் உட்கார்ந்து இருக்கும் அந்த அனாதையக் கோலம்; மேலாடை இல்லாத அவளைத் தொட்டு, சிங்களச் சாக்கடைகள் தூக்கும் அந்த அதீதக் கோலம்; அச்சத்தாலும் வெட்கத்தாலும் அவள் துவண்டு துடிக்கும் அந்தப் பாவமான கோலம்; அவளை இழுத்துச் செல்லும் போது, அவளுடைய கால்கள் பின்னிப் பின்னித் தடுமாறும் கோலம்; அதையும் தாண்டி, ”ஐயோ..அது நானில்லை..!” எனும் உயிரைப் பிழியும் அந்த அவல ஓலம்… வேண்டாங்க. மனசு ரொம்பவும் வலிக்கிறது.


தான் ஓர் ஊடகவியலாளர் என்று இசைப்பிரியா சொல்லிப் பார்த்தார். எடுபடவில்லை. அப்புறம் நடந்தது வேறு கதை. முதலை வாயில் தப்பித்து சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்ட கதையாகிப் போனது. கடைசியில் காமக் கிறுக்கன்களின் அசிங்கமான ஈரத்தில் நனைந்து மறைந்தும் போனார்.

அவர் பிரபாகரனின் மகள் அல்ல என்று தெரிந்த பின்னர், சிதைத்துச் சீரழிக்கப் பட்டார். யாழ் மண்ணில் ஒரு வரலாற்றுக் கொடுமை அங்கே அரங்கேற்றம் கண்டது. மண்ணுடன் மண்ணாகிப் போன ஓர் அழகு ஜீவனின் கதையும் தொடர்கிறது. மனித நேயம் வற்றிப் போன ஒரு கதை. படியுங்கள்.

 இசைப்பிரியாவின் மரணத்தில் வலியின் உக்கிரம்

தமிழீழ விடுதலையில், ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் குழந்தைகளும் ஆயிரக் கணக்கில் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்கள். அந்த இழப்புகளினால் இதயம் வலிக்கிறது. துடிக்கிறது. ஆனால், இந்த இசைப்பிரியாவின் மரணத்தில், வலியின் உக்கிரம் தாங்க முடியவில்லை. இதயம் வெடித்தே போய் விடும் போல இருக்கிறது.


அவளின் இறப்பு ஒன்றும் புதிதாக நடந்த நிகழ்ச்சி அல்ல. ஆண்டுகள் பல கழிந்து விட்டன. இருந்தாலும், அரைகுறையாகப் போர்த்தப்பட்ட வெள்ளைத் துணியுடன், அரை நிர்வாண கோலத்தில் அவளைப் பார்க்கும் போது மனம் நொறுங்கிப் போகிறது. ஒரு மகளாகத் தான் அவளைப் பார்க்கிறேன்.

அவளுடைய இறப்பை அன்று பார்த்த போது, கண்களில் இருந்த எல்லாக் கண்ணீரும் வற்றிப் போனது. ஆனால், இப்போது மறுபடியும் பார்க்கையில் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் அருவியாய் வழிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

 இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா

புலிகளின் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ஒளிபரப்பு, மாலை ஏழு முதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே நீடிக்கும். இதில் இசைப்பிரியா ஒவ்வொரு நாளும்  செய்திகளை வாசித்தார். நல்ல கணீர் குரல். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு. தெளிவான வழங்குமுறை.


இசைப்பிரியாவின் (Isai Priya) இயற்பெயர் சோபனா. 1981 மே மாதம் 2-ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவு மானிப்பாயில் பிறந்தவர். தகப்பனாரின் பெயர் தர்மராஜா. தாயாரின் பெயர் வேதரஞ்சினி.

குடும்பத்தில் நான்காவது மகளாகப் பிறந்தவர். சிறு வயதில் இவரது இதயத்தில் ஒரு துளை உண்டு என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. இருந்தாலும் இவருக்கு உடனடியாக எந்தச் சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். ஐந்தாம் வகுப்பு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றார்.

சோபனாவின் குடும்பத்தினர் வன்னியில் தஞ்சம்

சிறுவயதில் இருந்தே அமைதியான குணம். ஆனால் பயந்த சுபாவம். ஆடல் பாடல்களில் அதிக ஆர்வம். வயதுக்கும் மீறிய இரக்க குணம். யாராவது துன்பப் படுவதைப் பார்த்தால் ஓடோடிப் போய், உதவிகளைச் செய்து விட்டு வருவார்.

1995-ஆம் ஆண்டு. மூன்றாம் கட்டப் போர். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காலக் கட்டம். உயிரைக் காக்க ஊர்களையும் உடைமைகளையும் அப்படியே போட்டுவிட்டு, கையில் கிடைத்ததோடு விழுந்து எழுந்து வன்னியை நோக்கி மக்கள் ஓடினார்கள்.

அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. ஒருவழியாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னியில் தஞ்சம் அடைந்தனர். வன்னிய மண்ணும் இவர்களை அழகாய் ஏற்றுக் கொண்டது.

இசைப்பிரியாவின் தோழி கீதைப்பிரியா

வேம்படி மகளிர் கல்லூரியில் மேல்படிப்புக்குச் சென்றார். 1996-இல் இடம் மாறி மல்லாவி மத்தியக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டி வந்தது. அப்படியே ஈழப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். ஈழத்து அழகி என்று சொல்கிற வகையில் ஈழத்துப் பெண்களின் அழகும் நன்றாகவே ஒட்டிக் கொண்டது.

மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியமும் கொண்டவர். இந்தக் கட்டத்தில் ஈழத்து மக்களுக்கு நடந்து வரும் அநீதிகளைக் கண்டு, போராட வேண்டும் என்கிற ஓர் உந்துதலும் இவருக்கு ஏற்பட்டது.

புலிகளின் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், தொலைக் காட்சியிலும் செய்திகளைத் தொகுத்து வாசித்தார். இவருக்கு கீதைப்பிரியா என்று ஒரு தோழி இருந்தார். செய்திகளைத் தொகுப்பதற்கு இவரும் உதவிகள் செய்து இருக்கிறார்.

கீதைப்பிரியா என்பவர் ஒரு அகதியின் டைரி எனும் புதினத்தை எழுதியவர். இன மொழி பற்றாளர். தெளிவான மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டவர். அமைதியாகப் பயணிக்கின்றார். வெளிச்சத்தை விரும்பாத பெண்ணியவாதி.

இசைப்பிரியாவிற்கு பயந்த சுபாவம்

இசைப்பிரியாவைப் பற்றி அவர் சொல்கிறார். ’இசைப்பிரியா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர். அவருக்கு மென்மையான இதயம். லேசான நெஞ்சுவலியும் இருந்தது. அதனால் அவரைப் போர்ப் படையில் சேர்க்கவில்லை. ஊடகத் துறையில் சேர்த்துக் கொண்டனர்.

ஊடகவியலாளர்கள் என்கிற முறையில் இருவருக்கும் இசைப்பிரியாவிற்கும் 2006-ஆம் ஆண்டில் முதல் சந்திப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அந்தத் தோழமை நீடித்து இருக்கிறது.

ஈழப் போரின் கடைசி வாரத்தில் தான் இசைப்பிரியாவைச் சந்தித்து இருக்கிறார். அதன் பிறகு அவர்கள் சந்திக்கவில்லை. அவருடைய இறப்புச் செய்திதான் கடைசியாகக் காற்றோடு கலந்து வந்தது.

இசைப்பிரியாவிற்காக ஒவ்வொரு நாளும் அழுகிறேன். நினைத்தாலே ஆழ்மனத்தில் அதீத வேதனைகள் ஆர்ப்பரிக்கின்றன. அப்படிச் சொல்லும் கீதைப்பிரியாவின் குரலும் தழுதழுக்கிறது.

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா

எல்லாச் சாமான்யப் பெண்களுக்கும் வருகின்ற ஆதங்கம் தான். அதிலும் சில காலம் ஒன்றாய்ப் பழகிவிட்ட நெஞ்சத்தின் நெருடல்கள் அவரிடம் உரசிச் செல்கின்றன. இசைப்பிரியா ஓர் ஊடகவியலாளர் என்பதை மட்டும் நாம் இங்கே மறுபடியும் நினைவு படுத்திக் கொள்வோம்.

நான்காம் கட்ட ஈழப் போரின் முடிவில், இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரிடம் சரண் அடைய வேண்டிய நிலை. பின்னர் 2010-ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின. தமிழகத்தின் தொலைக்காட்சி நிறுவனங்களைச் சும்மா சொல்லக் கூடாது.

 போர்க் களத்தில் ஒரு பூ

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா என்கிற பழமொழி தெரியும் தானே. தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்படியே திருப்பித் திருப்பி போட்டு ஒளிபரப்பு செய்தன. ஒரு தமிழ்ப் பெண்ணை ரொம்பவுமே அசிங்கப் படுத்தி விட்டன. அப்படித் தான் எனக்குப் படுகிறது.

இசைப்பிரியாவின் வாழ்க்கை என்பது நெஞ்சை உருக்கும் கதை. ‘போர்க் களத்தில் ஒரு பூ’ எனும் பெயரில் ஒரு தமிழ்த் திரைப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது..  ‘யுத்த பூமியல்லி ஒந்து ஹுவு’ என்று தெலுங்கு மொழியிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது.  தவிர கன்னட மொழியிலும் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

அவருடைய ஊடகச் சேவைக்கு மறுபடியும் வருவோம். 1998-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா ஊடகத் துறையான நிதர்சனப் பிரிவில் சேர்ந்தார். காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு நிகழ்ச்சியை இசைப்பிரியாவே அறிமுகம் செய்து வந்தார்.

அவர் ஓர் இளம் அறிவிப்பாளர். வீடியோ சித்திரங்கள், போர்க்களச் செய்திகள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் போன்றவை அவருக்கு அன்றைய காலத்து ஒளிவீச்சுகளாக அமைந்தன. இசைப்பிரியாவின் பணி அதோடு மட்டும் நின்று விடவில்லை. அவர் ஊர் ஊராகச் சென்றார். அந்த ஊர்களில் போடப்படும் தெருக் கூத்துகளிலும் மேடை நாடகங்களிலும் அவருடைய பதிவுகளைத் தடம் பதித்தார்.

விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்றது. பின்னர் அது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணமித்தது. அந்தக் கட்டத்தில் தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இசைப்பிரியா பணியாற்றினார். ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர், தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார். ஆனால், ஆயுதங்களை மட்டும் பிடிக்கவில்லை.

இசைப்பிரியா ஒலியாகி ஒளியாகி இசையாகி காற்றாகிப் போனாய்
கனலும் நெருப்பைக் கட்டிக் கொண்ட அழகுச் சீதனமாய்
பறந்தும் போனாய்

இசைப்பிரியா என்கிற ஓர் அழகான வீணை நொறுங்கி விட்டது. இனிமேல் உலகமே ஒன்று சேர்ந்தாலும், அதன் தாளச் சுருதித் தந்திகளை ஒட்டிப் பார்க்க முடியாது. ஆறாத காயங்களின் அழியாத வடுக்களாக அவர் சிணுங்குகிறார். தமிழர்களின் நெஞ்சங்கள் அழுகின்றன. அவரைப் பற்றிய மேல் விவரங்களை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். (தொடரும்)


இக்கட்டுரையின் இதர பகுதிகள்

இசைப்பிரியா- 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக