09 மே 2016

பரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா

தெமாசிக் (Temasek) என்பது சிங்கப்பூரின் பழைய பெயர். காலப்போக்கில் துமாசிக் என்று பெயர் மாற்றம் கண்டது. 1280-ஆம் ஆண்டுகளில் தெமாகி என்பவர் துமாசிக்கை ஆட்சி செய்து வந்தார். அந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் பலேம்பாங் எனும் ஒரு சிற்றரசு இருந்தது. இந்தச் சிற்றரசு ஸ்ரீ விஜய பேரரசின் வழித்தோன்றல் ஆகும்.


அந்தச் சிற்றரசில் அரசர் பதவிக்குப் போட்டிகள் ஏற்பட்டன. தவிர புதிதாக உருவான மஜாபாகிட் பேரரசின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத ஓர் இளவரசர் இருந்தார். அவருடைய பெயர்  நீல உத்தமன். அதனால் அவர் பலேம்பாங்கில் இருந்து வெளியேறினார்.

சுமத்திராவிற்கு வடக்கே இருந்த பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சி உருவாக்கப் பட்டது. அதற்கு நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். அந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார்.

சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன்

பிந்தாங் தீவிற்கு வந்த நீல உத்தமன் காலப் போக்கில் துமாசிக்கைக் கைப்பற்றினார். இது 1299-ஆம் ஆண்டு நடந்தது.

நீல உத்தமன், சிங்கப்பூரை 1347 ஆம் ஆண்டு வரை 48 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார். சீனாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார். அதை மறந்துவிட வேண்டாம். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான்.


சிங்கப்பூர் எனும் பெயர் சிங்கப்பூரா எனும் மலாய் சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப் படுகிறது.

மலாய் வரலாற்றின் படி ஒரு கடும் புயலின் போது நீல உத்தமன் இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு விலங்கைப் பார்த்தார். அந்த விலங்கைச் சிங்கம் என்று நினைத்துக் கொண்டு சிங்கத்தின் ஊர் என்று அழைத்ததாக வரலாறு. அதுவே சிங்கப்பூர் என்று மருவியது. இவருக்கு முன்பு துமாசிக்கை ஆட்சி செய்த தெமாகியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சி நடந்து இருக்கலாம்.




நீல உத்தமன் பார்த்தது சிங்கமாக இருக்க முடியாது. ஏன் என்றால் உலகின் இரண்டே இரண்டு இடங்களில் தான் சிங்கம் இருக்கிறது. ஒன்று ஆப்பிரிக்க நாடுகள். மற்றொன்று இந்தியா. ஆக சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

நீல உத்தமனின் உடல் சிங்கப்பூரின் புக்கிட் லாராங் (Fort Canning Hill) எனும் குன்றின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டது. அவருடைய மனைவியும் அங்கே தான் புதைக்கப் பட்டார். வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய சமாதிகளை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேதனையான செய்தி.

ஸ்ரீ விக்ரம வீராவின் மனைவி நீலா பாஞ்சாலை

அதன் பின்னர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பு அவருடைய மகன் ஸ்ரீ விக்ரம வீரா (Seri Wikrama Wira) என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. இவர் 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவருடைய மனைவியின் பெயர் நீலா பாஞ்சாலை. இவருடைய காலத்தில் தான் ஒரு பெரிய சயாமியத் தாக்குதல் நடந்தது.


சயாமியர்கள் 70 கப்பல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இருந்தாலும் சிங்கப்பூரை அசைக்க முடியவில்லை. மூன்று மாதம் வரை தாக்குப் பிடித்தது. அதற்குள் சீனாவில் இருந்து ஒரு கடற்படையே களம் இறங்கி விட்டது. சயாமியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்தது. ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ரானா விக்கிரமா என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.


இவருக்குப் பின்னர் வந்தவர் தான் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. அதாவது மலாக்காவின் கதாநாயகன் பரமேஸ்வரா. இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன். 1389 ஆண்டில் இருந்து 1398 வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார். 1375ஆம் ஆண்டில் இருந்து 1389 வரை என்ன நடந்தது எனும் விவரங்கள் நமக்கு சரியாகக் கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. மறுபடியும் சொல்கிறேன். இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன்.


ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார்.


நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போகும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.


அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் பரமேஸ்வரா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மலாக்கா வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகுமான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.

மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு

சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா அதிசயித்துப் போனார். அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதன்படி மலாக்கா எனும் பேரரசு அதே இடத்தில் உருவானது. இப்படித் தான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயரும் வந்தது.


இந்தக் காலக் கட்டத்தில் நிறைய சீன வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் அதிகரித்தன. பெருமிதம் அடைந்த பரமேஸ்வரா, மலாக்காவில் புக்கிட் சீனா எனும் ஒரு குன்றுப் பகுதியைச் சீனர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

குறுகிய காலத்தில் மலாக்கா வளர்ச்சி

கடல் கடந்து வணிகர்கள் மலாக்காவில் வியாபாரம் செய்ய வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சயாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தச் சமயத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஒரு சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு.

சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசியைத் தான் பரமேஸ்வரா 1409-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்ததாகச் சொல்லப் படுகிறது. தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல். சரி. இந்தக் கட்டத்தில் மலாக்கா சுல்தான்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலங்களையும் தெரிந்து கொள்வோமே.

மலாக்கா சுல்தான்களின் ஆட்சி காலம்
  • பரமேஸ்வரா  1400–1414
  • ஸ்ரீ ராம விக்ரமா இஸ்கந்தார் ஷா 1414–1424
  • சுல்தான் முகமது ஷா 1424–1444
  • சுல்தான் அபு ஷாகித் 1444–1446
  • சுல்தான் முஷபர் ஷா 1446–1459
  • சுல்தான் மன்சூர் ஷா 1459–1477
  • சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
  • சுல்தான் முகமது ஷா 1488–1528

பரமேஸ்வராவின் சமய மாற்றம் இந்த நாள் வரையில் ஒரு தெளிவற்ற நிலையில் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரை பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார். (சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781, accessed December 06, 2015.) பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில், அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா, சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன்.

பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா

சீனாவின் அப்போதைய மிங் பேரரசரராக இருந்தவர் யோங்லே (Yongle). 1402ஆம் ஆண்டில் இருந்து 1424 வரை பேரரசரராக இருந்தார்.

இவர் தான் பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமாவை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். ஸ்ரீ ராம விக்ரமாவை அரசராக ஏற்றுக் கொண்டும் உள்ளார். (Imperially commanded that Mu-gan Sa-yugan-di er Sha (மேகாட் இஸ்கந்தார் ஷா) should inherit his father's title as king).

மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா. இவர் பரமேஸ்வர ராஜா என்றும் மலாக்காவில் அழைக்கப் பட்டு இருக்கிறார். அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமாவை சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து இருக்கிறார்கள். பரமேஸ்வராவின் மகன் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்தவர்.

பரமேஸ்வராவைப் பற்றிய அரிய தகவல்கள்

சீன வரலாற்றில் மிங் வம்சாவளியைப் பற்றி (1368 லிருந்து 1644 வரை) மிங் சிலூ (Ming Shilu) எனும் நூல் எழுதப்பட்டு உள்ளது. (Veritable Records of the Ming dynasty) அதில் 325-ஆம் அத்தியாயத்தில் சில வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவை சீனாவின் யோங்லே பேரரசரைப் பரமேஸ்வரா சந்தித்தார் எனும் காலக் குறிப்புகள் ஆகும்.

பரமேஸ்வராவை ’பலேமிசுலா’ (Bai-li-mi-su-la) என்றும் அழைத்து இருக்கிறார்கள். பொதுவாக சீனர்களுக்கு ‘ர’ கர எழுத்தில் பிறழ்வு ஏற்படும். அதனால் பரமேஸ்வரா என்பதைப் பலேமிசுலா என்று அழைத்து இருக்கிறார்கள்.

பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றது 3-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1405. இரண்டாவது முறையாக 1411 ஆகஸ்டு 4-ஆம் தேதி மறுபடியும் போய் இருக்கிறார். (சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1490/91)
ஆக, பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப் பட்டு இருக்கிறார். (சான்று: http://www.epress.nus.edu.sg/msl/entry/1781?hl=Malacca) பரமேஸ்வராவை ’பலேமிசுலா’ என்று அழைத்து இருக்கிறார்கள்.

மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இருந்து மீட்கப்பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். 

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தின் சான்றுகளுடன் இந்தக் கட்டுரையைத் தயாரித்தேன். ஏன் என்றால் உள்நாட்டு வரலாற்றுப் பாடநூல் ஆசிரியர்கள் கட்டுரையாளரின் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதனால் ரொம்பவும் கவனமாக பத்திரமாகக் கையாள வேண்டி வந்தது. சரி.

பரமேஸ்வராவைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. ஏன் அழைக்கவில்லை. அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

5 கருத்துகள்:

  1. ஐயா, இங்குள்ள வரலாற்று ஆய்வறிஞர்கள் நீங்கள் மேற்சொன்ன தகவல்களை அறியாமலா இருப்பார்கள்? தூங்குவது போல் பாசாங்கு செய்கிறார்கள். அவ்வளவே!ஆய்வாளர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆய்வினை் மேற்கொள்ள வேண்டும் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே.உங்கள் ஆய்வுகள் இவர்களின் முகத்திரையைக் கிழித்தெரியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, இங்குள்ள வரலாற்று ஆய்வறிஞர்கள் நீங்கள் மேற்சொன்ன தகவல்களை அறியாமலா இருப்பார்கள்? தூங்குவது போல் பாசாங்கு செய்கிறார்கள். அவ்வளவே!ஆய்வாளர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆய்வினை் மேற்கொள்ள வேண்டும் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே.உங்கள் ஆய்வுகள் இவர்களின் முகத்திரையைக் கிழித்தெரியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த உண்மை அறிந்தே சில உள்நோக்கத்துடன் மறைக்கப்படுகிறது என்பதே தெளிவான உண்மை...தூங்குவோரை எழுப்பிவிடலாம்...ஆனால் தூங்குவதுபோல் பாசாங்கு செய்வொரை எழுப்புவது எப்படியோ??

    பதிலளிநீக்கு
  4. இந்த உண்மை அறிந்தே சில உள்நோக்கத்துடன் மறைக்கப்படுகிறது என்பதே தெளிவான உண்மை...தூங்குவோரை எழுப்பிவிடலாம்...ஆனால் தூங்குவதுபோல் பாசாங்கு செய்வொரை எழுப்புவது எப்படியோ??

    பதிலளிநீக்கு
  5. அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு