31 மே 2016

சஞ்சிக்கூலிகள்

19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய ஆயிரக்கணக்கான தென்னிந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அந்தத் தென்னியந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் தான் சஞ்சிக்கூலி. சஞ்சிக்கூலி எனும் சொல் சஞ்சி (Janji) எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று சொல்லலாம். அதற்கு முன்…
 

மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 95 விழுக்காட்டினரின் மூதாதையர்கள் சஞ்சிக் கூலிகளாய் கப்பல் ஏறி வந்தவர்கள். பினாங்கு புறமலையில் அப்போது இருந்த தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள். அப்புறம் காட்டுப் பாதை கம்பிச் சடக்குகளில் அடிமைகளைப் போல நடக்க வைக்கப்பட்டு கொண்டு வரப் பட்டவர்கள். 

லாரிகளில் ஆடு மாடுகளைப் போல சிலர் ஏற்றி வரப் பட்டனர். சிலர் எருமை மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு அடுக்கி நசுக்கிக் கொண்டு வரப் பட்டனர். ரப்பர் தோட்டங்களில் தகரக் கொட்டகைகளை லயங்கள் என்று சொல்லி அங்கே தங்க வைக்கப் பட்டனர். அப்புறம் சாகும் வரையில் மிருகங்களை விட மோசமாக வேலை வாங்கப் பட்டனர். 
 

கேவலம்! மலாயாவில் நடந்த கொடுமை அப்போதைக்கு ஒரு கதையாக இருந்தது. அதுவே இப்போதைக்கு ஒரு வரலாறாகவும் மாறிப் போகின்றது.
ஆங்கிலேயர்களின் ரப்பர் தோட்டங்களில் இரவு பகலாய் ஓய்வு ஒழிச்சலின்றி ஆடு மாடுகளைப் போல வேலைகள் செய்தனர். பொதுவாக அவர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப் பட்டனர் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன.

சஞ்சிக்கூலிகளின் வாரிசுகள்

அந்தச் சஞ்சிக்கூலிகளின் வாரிசுகள் இன்னமும் உரிமைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினர் மற்ற மற்ற இனங்களுக்குச் சவால்விடும் அளவிற்கு கல்வித் துறைகளில் வளர்ச்சி அடைந்து அரிய பெரிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி எனும் நிலைமை பரவலாகி வருகிறது.
 

அது எல்லாம் இல்லை. எங்க தாத்தா இத்தாலியில் பிறந்தவர். அங்கே இட்லி சுட்டு விற்றவர். எங்க பாட்டி இங்கிலாந்தில் பிறந்தவர். அங்கே இஞ்சி சூஸ் குடித்தவர். என் மாமா சுவிட்சர்லாந்தில் பிறந்தவர். சுவீட்டா நாசி கோரேங் செஞ்சவர் என்று யாராவது சொல்லலாம். சொல்லிவிட்டுப் போகட்டுங்க. தவறாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கு ரொம்பவே வெள்ளைக்காரன் நினைப்பு. அவ்வளவுதான். 

அந்த மாதிரியான ’கிளேமர்’ கிளியோபாட்ராக்களையும் மார்டன் மன்மதக் குஞ்சுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைவோம். பெருமை படுவோம். என்ன இருந்தாலும் அவர்களின் உடல்களிலும் நம்ப இரத்தம் ஓடுகிறது இல்லையா. பாராட்டுவோம். அப்படியாவது பேசி பிழைத்துப் போகட்டும். விடுங்கள்.
 

சரி. முதலில் என் சஞ்சிக்கூலிக் கதையைச் சொல்லி விடுகிறேன். அதுதான் நியாயமும்கூட. ஏன் என்றால் நானும் ஒரு சஞ்சிக்கூலியின் மகன் தானே. அதனால், என்னைப் பற்றி கொஞ்சம் சொன்னால் தான் இந்தக் கட்டுரையை எழுதிய எனக்கும் இரண்டு மூன்று சொட்டு மரியாதை கிடைக்கும். இல்லீங்களா...

மூன்று வாரக் கப்பல் பயணம்

தகப்பனாரின் பெயர் சுப்புராயன். பாண்டிச்சேரி பூர்வீகம். தாயாரின் பெயர் வள்ளியம்மாள். ஆந்திரப் பிரதேசப் பூர்வீகம் என்று சொல்கிறார்கள். ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில் அவருடைய சொந்த பந்தங்கள் தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியில் இருப்பதாகத் தெரிய வந்தது. அந்தச் சொந்த பந்தங்களைத் தேடி அடுத்த மாதம் 15 ஆம் தேதி பாண்டிச்சேரி போகிறேன். அதையும் முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். சரி.

எப்படியோ தமிழ்நாடும் ஆந்திராவும் அப்போதே கைகுலுக்கி இருக்கலாம். போனால் தான் உண்மை விவரங்கள் தெரியும். இப்போதைக்கு எப்படி ஏது என்று கேட்க வேண்டாம். அது எனக்கே தெரியாத ஒரு தங்கமலை ரகசியம். 
 

ஆக அவர்கள் நாகப்பட்டினத்தில் தஞ்சம் அடைந்தனர். வேலை இல்லாமல் தட்டுத் தடுமாறிய போது மலாயா நாடு வா வா என்று அழைத்து இருக்கிறது

எஸ்.எஸ். ரஜுலா கப்பலில் ஏறி மலாயாவுக்கு வந்தார்கள். அதுவும் இலவச டிக்கெட். மூன்று வாரக் கப்பல் பயணம். பினாங்கு புறமலையில் ஒரு வாரம். அப்புறம் மாட்டு வண்டிப் பயணம். மலாக்கா, டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தில் அடைக்கலம். தகர டப்பாவில் செய்த ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு. 

பெரிய ஆபிஸ் வேலை எதுவும் இல்லை. சாட்சாத்மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து கித்தா மரத்தின் பாலை உறிஞ்சி எடுக்கிற வேலை. பின்ன என்ன... இலவச டிக்கெட்டில் வந்த சஞ்சிக்கூலிகளுக்கு ஆபீசர் வேலையா கொடுக்கப் போகிறார்கள். அங்கே அந்தக் காடிங் தோட்டத்தில் தான் அடியேன் பிறந்தேன்.
 

நாடு விட்டு நாடு கடந்து வந்ததால் பிள்ளைப்பூச்சிகளாகிப் போனார்கள். இதில் ஆண்டவன் போட்ட கட்டளையை மீற முடியாமல் வரிசையாக அரை டஜன் பிள்ளைகள். உண்மையிலேயே அவர்கள் அடிப்படை மனித உரிமைகள் என்றால் என்ன என்று தெரியாத வெள்ளந்திகள். போகப் போக அவர்களின் அடிப்படையானத் தேவைகள் அன்றாடம் மறுக்கப் பட்டன. 

சஞ்சிக்கூலிகளுக்கு அப்போதைக்கு கோயில், பள்ளிக்கூடம், கல்லுக்கடை என்கிற இந்த மூன்றும் சொற்கள்தான் நல்ல பரிச்சயம். ஆக, இவர்களும் அதில் ஐக்கியம். தோட்டத்தைவிட்டு வெளியே போகாதபடி உழைப்புச் சுரண்டலுக்கு முதல் மரியாதை. நூறு வெள்ளிக்கு மாதம் பத்து வெள்ளி என்று வட்டி கட்டி எங்களைப் படிக்க வைத்தார்கள். ஏதோ நாங்களும் கொஞ்சம் படித்து மலாயா வரலாற்றில் பேர் போட்டு விட்டோம்.

மூதாதையர்கள் அனுபவித்த வேதனைகள்

அவர்களின் பேரப் பிள்ளைகள் அதாவது என்னுடைய பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்குப் போய் ஆளாளுக்குப் பட்டங்களை வாங்கி வந்து விட்டார்கள். அதைப் பார்த்து சந்தோஷப்படுவதற்குப் பாவம் அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அந்தச் சஞ்சிக்கூலிகளுக்காக வேதனைப் படுகிறேன். அதில் உங்களின் வேதனைகளையும் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். 
 

சரி. சஞ்சிக்கூலிகள் என்றால் யார்? அவர்களின் பின்னணிதான் என்ன? வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். இது ஒரு வரலாற்று ஆவணம். படித்துவிட்டு பத்திரப் படுத்தி வையுங்கள். நம்முடைய எதிர்கால வாரிசுகளுக்கு, நம் மூதாதையர்கள் அனுபவித்த வேதனைகள் என்னவென்று தெரிய வேண்டும்.

சஞ்சிக்கூலிகளைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இப்போது நாம் சொகுசான வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் நம்முடைய மூதாதையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்… 

தண்ணீர்க் கப்பல்களில் வந்து… இங்கே மழையில் நனைந்து… வெயிலில் காய்ந்து… காடு மேடு எல்லாம் அலைந்து… தடி எடுத்த தண்டல்களிடம் ஏச்சு பேச்சு வாங்கி… இடுப்பெலும்பு எல்லாம் உடைந்து…  அரைவயிறும் கால்வயிறுமாய்க் கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். 

மலாயாவில் இருந்த ஆங்கிலேயத் துரைமார்கள் நூற்றுக்கணக்கான கங்காணிகளைத் தென் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கங்காணிகள் வேறு யாரும் இல்லை. அவர்களும் அங்கே தமிழ்நாட்டில் இருந்து கப்பலேறி இங்கே வந்தவர்கள் தான். 

என்ன கொஞ்சம் முன்னாடி வந்து விட்டார்கள். கொஞ்சம் கோல்மால் பண்ணிக் கங்காணிப் பட்டத்தை வாங்கி விட்டார்கள். அவ்வளவுதான். மற்றபடி பெரிசாகச் சொல்ல ஒன்றும் இல்லை. அதே கறுப்புத் தோல் தான். அதே சிவப்பு இரத்தம் தான். அதற்கும் மேலே உடலை மறைக்க வெள்ளை ஜிப்பா வெள்ளை வேட்டி. நெற்றி நிறைஞ்சு பெரிசா ஒரு திருநீறு. ஐம்பது காசுக்கு குங்குமம். கொஞ்சம் பன்னீர் அபிசேகம். சந்தனக் கலரில் ஓர் இடுப்புத் துண்டு. அம்புட்டுத்தான்!

’இந்தியாவிற்குப் போங்க... மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில காச்சுத் தொங்குதுனு சொல்லுங்க… காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் அம்பது வெள்ளியா கொட்டும்... ஆசை ஆசையா அவுத்து விடுங்க… பாசம் நேசமா மண்டையை கழுவுங்க…

முடிஞ்சா லைப் பாய் சவுக்காரத்தை போட்டு நல்லா குளிப்பாட்டி விடுங்க… அந்த மண்டைங்கள துவச்சி காயப் போட்டு அப்படியே அதுங்கள இங்கே இழுத்துக்கிட்டு வந்திடுங்க…’ இந்த மாதிரி தான் மூளைச் சலவை செய்யப்பட்டு கங்காணிகள் அங்கே அனுப்பப் பட்டனர். நாகப்பட்டணத்தில் கப்பலை விட்டு இறங்கியதும் அந்தக் கங்காணிகள் தான் அப்போதைக்கு மலாயாவின் மன்மத ராசா. 

ஆக அந்த வகையில் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பிய தமிழ்நாட்டு மக்கள் மலாயாவுக்குள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப் பட்டனர். மன்னிக்கவும். இழுத்து வரப்பட்டனர்.

இப்படி அழைத்து வரப் படுவற்கு கங்காணி முறை என்று பெயர். இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று பெயர். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று பேதம் இல்லை. சகட்டுமேனிக்குச் சஞ்சிக்கூலிகளாய்த் தான் மலாயாவுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். 

எல்லாம் ஒரே குட்டையில் ஊறி வந்த மட்டைகள் தான். எல்லாருக்குமே சஞ்சிக்கூலிகள் எனும் பட்டயத்தைக் கட்டித் தான் மலாயாவுக்குள் கொண்டு வந்தார்கள். சொல்லப் போனால் மலேசிய வரலாற்றில் சஞ்சிக்கூலிகள் என்பவர்கள் ஒரு துயர அத்தியாயத்தின் முதல்பக்கம்.

இதில் கொஞ்சம் படித்த மலையாளச் சொந்தங்கள் பேனா பிடிக்கும் வேலைக்குப் போனார்கள். அவர்களில் பெரும்பாலோர் கிராணிகளாகவும் டிரசர்களாகவும் சேவை செய்தனர்.

இந்தக் கங்காணிகள் ஏற்கனவே ஆங்கிலேயர்களுக்கு உரிமையான தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள்தான். சொல்லிவிட்டேன். அவர்கள் ஒன்றும் சீமைச் சக்கரவர்த்திகளாக வரவில்லை. கொஞ்சம் வாக்குச் சாதுரியம். கொஞ்சம் முரட்டுத்தனம். அப்புறம் ரொம்பவுமே ஆசைகள். பற்பல சாணக்கியங்களில் பற்பல சாதுர்யங்கள். வெள்ளைக்கார ஆங்கிலேயர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். அப்படிப் பட்டவர்கள் தான் கங்காணிகளாகத் தேர்வு செய்யப் பட்டனர்.

அந்தக் கங்காணிகள் தோட்டத் தொழிலாளர்களை அடிமைகளாகவே நினைத்தனர். அடிமைகளாகவே வேலையும் வாங்கினர். அதே சமயத்தில் முதலாளிமார்களின் கைப்பிள்ளைகளாகவும் எடுபிடி சேவகங்கள் செய்தனர். 

தன் இன மக்களையே காசுக்காக அடித்துத் துவைத்துக் காயப் படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் கைப்பாவைகளாகப் பிழைத்து வந்த இவர்களைக் கறுப்புக் கங்காணிகள் என்று அழைப்பதும் உண்டு. சரி. இந்தச் சஞ்சிக்கூலிகளின் உலகளாவிய பின்னணியைப் பார்ப்போம்.

மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்று சொல்லுவோமே. அவைதான். அந்த ஆசைகளின் ஒரு கலவைதான் ஒரு கங்காணி. வெள்ளைக்கார ஆங்கிலேயர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனவர்களே கங்காணிகளாகத் தேர்ந்து எடுக்கப் பட்டனர்.

இவர்கள் இந்தியாவுக்குப் போய் ஆட்களைப் பிடித்து வருவதை கங்காணி முறை என்றும் அழைத்தார்கள். அதை இப்படியும் சொல்லலாம். ஆசை வார்த்தைகளை மூலதனமாகப் போட்டு அப்பாவித் தனமான வெள்ளந்திகளைக் கவர்ந்து இழுத்து வரும் இடி அமீன் கொடும் முறைதான்  கங்காணி முறை. இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும். படிக்க மறக்க வேண்டாம். இது ஒரு வரலாற்று ஆவணம். பத்திரப்படுத்தி வையுங்கள்.

1 கருத்து: