07 ஜூன் 2016

மலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள்

மலாயாவிலும் சரி இலங்கையிலும் சரி… ஆங்கிலேயர்களின் ராஜபோக வாழ்க்கைக்குக் கங்காணி முறை தான் தூபம் ஏற்றி வைத்தது. மலாயாவில் கங்காணி முறை என்று அழைத்தார்கள். அங்கே இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று அழைத்தார்கள். 
 

இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இரண்டுமே ஆள்கடத்தும் ஜீபூம்பா சதிராட்டங்கள் தான். எருமை மாட்டின் மீது கொக்கு உட்கார்ந்தால் எருமைக்கு லாபம். அதையே மாற்றிப் போட்டுப் பாருங்கள். கொக்கின் மீது எருமை மாடு உட்கார்ந்தாலும் எருமைக்குத் தானே லாபம். பாவம் கொக்கு!

ஒரு கட்டத்தில் ஒப்பந்தக் கூலி முறையால் இலங்கைக்குத் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலை. அதனால் மலாயாவில் பயன்படுத்தப்பட்ட கங்காணி முறையை இலங்கையிலும் கொண்டு வந்தார்கள்.

அலிபாபா குகைகளின் விசித்திரங்கள்

ஒன்று மட்டும் உண்மை. மலாயாவில் கங்காணி முறையை முதலில்  சோதித்துப் பார்த்தார்கள். பக்குவமாக இருக்கிறது என்று டிக்கெட் கொடுத்தார்கள். அதன் பின்னர்தான் இலங்கையிலும் அந்த முறையை அமலுக்கு கொண்டு வந்தார்கள். 


இலங்கையில் அந்தக் கங்காணி முறை அமல்படுத்தப் பட்டாலும் அதனை ஒப்பந்தக் கூலி முறை என்றே தொடர்ந்து அழைத்தார்கள். பின்னர் காலத்தில் அது ஒரு வழக்குச் சொல்லாகவும் மாறிப் போனது. ஆனால் உண்மையாகப் பார்த்தால் அது மலாயாவின் கங்காணி முறை தான்.

ஒரு முக்கியச் செய்தி. மறுபடியும் வாசிப்பது சஞ்சிக்கூலிகள். ஒப்பந்தக் கூலி முறை என்பது வேறு. கங்காணி முறை என்பது வேறு. இதைப் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டு உள்ளது.

ஒப்பந்தக் கூலி முறை என்றால் ஒரு தொழிலாளியும் ஒரு முதலாளியும் நேரடியாகச் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தம். கங்காணி முறை அப்படி இல்லை. கங்காணி முறையில் கங்காணியே நேரடியாகக் களம் இறங்கிப் போவார். அப்படியே ஆசை ஆசையாய் ஆயிரம் வார்த்தைகள். அப்படியே ஆட்களை அள்ளிக் கொண்டு வருவார். அது ஒரு வழக்கம்.


இருப்பினும் சஞ்சிக்கூலிகள் விசயத்தில் மூலகர்த்தாவாக இருந்தவர்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள்தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழர்களை முதன்முதலாக இலங்கைக்குத் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். அதனால் அலிபாபா குகைகளில் இருந்து தங்கப் பேழைகள் கிடைக்கும் என்று ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை. 100 விழுக்காட்டுப் புளங்காகிதங்கள்.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா. சுரண்டும் கலைக்கு ஒரு பெரிய கலைகளஞ்சியத்தையே எழுதியவர்கள் சும்மா இருப்பார்களா. ஆக, சஞ்சிக்கூலிகளின் முன்னோடிகள் யார் என்றால் அவர்கள் தான் இலங்கையின் மலையகத் தமிழர்கள். மலாயாத் தமிழர்கள் அல்ல.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழ்ந்த ஏழைக் குடியானவர்கள், இலங்கைக்குப் போய் வேலை செய்ய விரும்பினால் ஓர் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால் போதும். அதாவது ஒரே ஒரு கைநாட்டு. 


ஒப்பந்தக் காலம் முடியும் வரையில் அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தோட்டங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். மீறினால் முதலாளி விதிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். அதற்கும் சரி என்று தலையை ஆட்ட வேண்டும்.

நிஜப் புலிகள் எல்லாம் பூனை மாதிரி

இருந்தாலும் பாருங்கள். வேலைக்குப் போன இடத்தில் நடந்த அநியாயம் அக்கிரமங்களைப் பார்த்துச் சகிக்க முடியாமல் சிலர் திருட்டுத் தனமாகத் தாயகத்திற்குத் திரும்பி ஓடி வந்ததும் உண்டு. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களிடம் அது ஒரு வழக்கமாகியும் போனது.

இரவோடு இரவாகத் தப்பித்துக் காட்டுப் பாதைகளில் நடந்தே போய் இருக்கிறார்கள். போகும் வழியில் யானைகளைப் பார்த்து இருப்பார்கள். புலிகளையும் பார்த்து இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக பயந்து இருக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா. 


இவற்றைவிட பெரிய பெரிய கொடிய மிருகங்களை எல்லாம் பார்த்தவர்கள் தானே. பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன அவர்களுக்கு நிஜப் புலிகள் எல்லாம் என்ன… பூனை மாதிரி தெரிந்து இருக்கும். 

காட்டு மிருகங்களைப் பொருத்த வரையில் அவை எல்லாம் அவர்களுக்கு திருநெல்வேலியின் இருட்டைக் கடை அல்வாக்கள்! புலியும் அடித்து இருக்காது. கிலியும் அடித்து இருக்காது. அனுபவம் பேசி இருக்கும்.

ஆனால் மலாயாத் தமிழர்களால் அப்படி எல்லாம் ஒன்றும் தப்பித்து ஓட முடியவில்லை. மீண்டும் கப்பலேறி ஊருக்குத் திரும்பிப் போவது என்பது எல்லாம் என்ன லேசுபட்ட காரியமா. நடக்கிற காரியமா. 


அதனால், கஷ்டமோ நஷ்டமோ… வாங்கி வந்த வரம் என்று எஞ்சிய நாட்களை எண்ணிப் பொருமி இருக்க வேண்டும். 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வயற்காட்டு மண்ணையும் மணல்வீட்டுத் திண்ணை மேட்டையும் நினைத்து நினைத்துப் புலம்பி இருக்க வேண்டும். ஆக வேதனைப்பட்டது தான் மிச்சம்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடி வந்த மலையகத் தொழிலாளர்களின் கதை வேறு. தோட்ட முதலாளி போலீஸில் புகார் செய்வார். கிராமத்தில் இருக்கும் காவல் துறையினர், தப்பி வந்த தொழிலாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்வார்கள். மீண்டும் அதே அந்தப் பழைய ராகம். பழைய பாசறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவார்கள்.

எள் என்றதும் எண்ணெயாய் வடிந்த கங்காணிகள்

தப்பித்து வந்தாலும் வெள்ளைக்காரர்களின் குரங்குப் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த மாதிரி தப்பிப் போய் பிடிபட்டவர்களுக்கு கசையடிகள் காத்து நிற்கும். காட்டு மரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குக் கட்டிப் போட்டு எறும்புகளைப் பிடித்து வந்து கடிக்க வைப்பார்கள். சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். கால்களில் சூடு போடுவதும் நடக்கும். 


அதுதான் ஏற்கனவே கையொப்பம் போட்டுக் கொடுத்து விட்டார்களே. அப்புறம் எப்படி முதலாளிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும். சொல்லுங்கள். தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கைநாட்டு போட்டுக் கொடுத்தாகி விட்டதே. வெள்ளைக்காரன் சும்மா இருப்பானா.

ரொட்டியில் பட்டர் தடவ கத்தியைத் தேடுகிறவன் பிடிபட்டவர்களை வறுத்து எடுக்காமல் சும்மா விடுவானா. அந்த வேலைகளை வெள்ளைக்காரர்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

செய்து கொடுக்கத் தான் கறுப்புக் கங்காணிகள் தயாராக இருந்தார்களே. அது பற்றாதா? எள் என்றதும் எண்ணெயாய் வடிய ஆள் இருந்த வரையில் வெள்ளைக்காரர்களின் வேலைகள் நன்றாகவே நடந்து முடிந்தன.


ஆங்கிலேய ராஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று வீரவசனம் பேசியவர்கள் ஆயிற்றே. நாயைச் சுடுவது என்றாலும் நக்கி விட்டுத் தான் சுடுவோம் என்று பாளையங் கோட்டையில் மேஜர் பேனர்மேன் சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.

பரங்கியர் இழைத்தக் கொடுமைகள்

தமிழ்ப் பாட்டாளிகளுக்கு பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணீர் விட்டு அழுத பாரதியார் தன்னுடைய பாடல்களில் இப்படி எழுதி இருக்கிறார்.

"கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!"

"நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!"


சரி. இங்கே மலாயா நாட்டில் நம் தமிழர்களின் கண்ணீர்க் கதை ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு ஒரு தொடர்கதையாய் நீண்டு போகின்றது. அந்த நீண்ட அத்தியாயத்தில் நம் இனத்தவர் சிந்திய இரத்தம், துடைத்த வியர்வை, இரைத்த தியாகம், தூவிய அர்ப்பணிப்புகள் சொல்லில் மாளா. 


இன்றைய இந்த மலேசியா என்கிற நவீன தேசம் கம்பீரமாய் எழுந்து நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் பிடித்து அழகு பார்க்கின்றது. இவை வரலாறு சொல்லும் உண்மைகள். ஆக அந்த உண்மைகளும் உரிமைகளும் என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு விஷயம். நாம் என்ன எழுதினாலும் அவற்றின் படிவங்கள் தேசிய பழஞ்சுவடிக் காப்பகத்தில் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப் படுகின்றன. தவிர இணையத்திலும் உடனுக்குடன் பதிந்து விடுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் சில பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய வாரிசுகள் அந்தப் படிவங்களை நிச்சயம் படிப்பார்கள்.

மலாயா மண்ணைச் செம்மைப்படுத்திய தமிழினம்

மலேசியாவில் சிலபல தமிழ் நாளிதழ்கள் இருந்தன. அவற்றில் நம் இனம் அனுபவித்த வேதனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. மலையும் மடுவும் பாறைகளும் நிறைந்த மலாயா மண்ணைத் தமிழினம் செம்மைப் படுத்தியது. சாலைகளை அமைத்துக் கொடுத்தது. கம்பிச் சடக்குகளில் ரயில் வண்டிகளை ஓட வைத்தது என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள்.

இந்த மாதிரியான படிவங்கள் தான் எதிர்காலத்தில் சான்றுகளாக மாறும். ஆகவே, நம் மூதாதையர்களைப் பற்றி இப்போதே நாம் எழுதி வைக்க வேண்டும். எழுதியவற்றை ஆவணப் படுத்த வேண்டும்.

3 கருத்துகள்: