10 மே 2017

தற்புனைவு ஆழ்வு

ஆட்டிசம்

மதியிறுக்கம் (Autism) அல்லது தற்புனைவு ஆழ்வு அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்பது இயல்பிற்கு மாறான மூளை வளர்ச்சியின் வேறுபாடு.


தற்புனைவு ஆழ்வு எனும் சொல் ஓர் உலகச் சொல் ஆகிவிட்டது. இது நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடாகும். இந்தக் குறைபாடு சிறுவயது பிள்ளைகளிடம் காணப் படுகின்றது. இந்தக் குறைபாடு உள்ளவர்களை அதாவது ஆட்டிசம் உள்ளவர்களை தமிழில் தற்சிந்தனையாளர்கள் என்றும் அழைக்கிறார்கள்.


இந்தப் பிள்ளைகள் தோற்றத்தில் சாதாரணப் பிள்ளைகள் போல் இருப்பார்கள். ஆனால் இவர்களின் செயல்பாடு அல்லது பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும்.

இது ஒரு நோய் அல்ல. மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. ஆங்கிலத்தில் Development disability. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு.



மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றி உள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு.

பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் காணப்படும் 'ஆட்டிசம்' என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது. 



பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். 



மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப் படுகிறது. தூயத் தமிழில் *தற்புனைவு ஆழ்வு*

 தற்புனைவு ஆழ்வு உள்ள பிள்ளைகளின் சில குணாதிசயங்கள்

கண்ணோடு கண்பார்த்துப் பேச மாட்டார்கள்.

பெயர் சொல்லி அழைக்கும் போது அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

மற்ற பிள்ளைகளுடக் சேர்ந்து விளையாடும் தன்மை குறைவாகக் காணப்படும்.

சிலர் அர்த்தம் இல்லாமல் ஏதேதோ பேசுவார்கள்.

சிலர் பேசவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஊமை அல்ல.

சில வேளைகளில் தேவயற்று அழுவார்கள் சிரிப்பார்கள்.

கூடுதலாகத் தனிமையையே விரும்புவார்கள்

அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை மட்டும் திரும்பத் திரும்ப விளையாடுவார்கள்.

உதாரணமாக கைகளை அசைத்தல், உடலை முன்னும் பின்னுமாக அசைத்தல், துள்ளுதல், மேலும் பல அசைவுகள் காணப்படும். ஆனால் ஏதாவது ஓர் உடல் அசைவை எந்த நேரமும் மேற்கொள்வார்கள்.

ஆரம்பத்தில் பேசத் தொடங்கி திடீரென இரண்டு வயதை அடையும் போது பேச்சு இல்லாமல் போய் விடும்.

முக்கியமாக இந்தப் பிள்ளைகள் நேரம் இடம் யார் எவர் என்ற வித்தியாசம் உணர மாட்டார்கள்.


நன்றி: OSILMO Special Education & Research Center for Autistic Children


1 கருத்து: