15 ஜூலை 2017

கர்மவீரர் காமராஜர்

காலங்கள் மறக்காத ஒரு கருப்புத் தங்கம்
ஞாலங்கள் மறக்காத ஒரு சத்தியச் சிங்கம்

 

கர்ம வீரர் காமராஜர் இந்தியாவிற்கு இரு பிரதமர்களை உருவாக்கித் தந்த ஓர் இந்தியச் சிங்கம். படிக்காத மேதையாய் வாழ்ந்து மறைந்த ஒரு காந்தியச் சங்கம்.

ஆறாம் வகுப்பு வரை படித்தவர். ஆங்கிலம் அறவே தெரியாது. ஆனாலும் அவரிடம் பார் புகழும் பவித்திரமான மனிதநேயம் மட்டும் மறையாமல் வாழ்ந்து வந்தது.

அப்போது தமிழகத்தின் முதல்வராகக் கோலோச்சிய சாமானிய மனிதர். இப்போது பட்டி தொட்டிகள் எல்லாம் புகழப்படும் ஓர் ஏழைப் பங்காளர்.

இறக்கும் போது இரு கதர் வேட்டிகள். இரு பருத்திச் சட்டைகள். வெறும் 83 ரூபாய் ரொக்கம். சுத்தத்திலும் சுத்தமான கரங்கள். கர்மவீரர் காமராஜர் என்பவர் பொன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகன். கைகூப்புகிறோம் காமராஜரே!



மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் தங்களின் பிறப்பிற்கான அடையாளத்தைப் பதித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் தன்னுடைய பிறப்பையும் தன்னுடைய செயலையும் அர்த்தம் உள்ளதாக மாற்றி அமைத்துக் காட்டியவர் தான் பெருந்தலைவர் காமராஜர்.

இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்பதை நம்பாத ஒரு தலைமுறையும் வந்து விட்டது. அந்த நிலையில் ஓர் அரசியல்வாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து வாழ்ந்தவர் இந்த அருந் தலைவர் காமராஜர்.

உலக அரசியலைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். நாட்டைப் பார்த்துக் கொள்வதற்குப் பதிலாகத் தங்கள் சொந்தங்களை மட்டுமே பார்த்துக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் தான் நிறையவே தெரிய வருவார்கள்.

பதவி புகழ் சுயநலம் இந்த மூன்றுமே ஒரே குட்டையில் ஊறிய தொற்று நோய்கள். நல்ல அரசியலைச் சேதப் படுத்தும் நோய்க் கிருகிகள் என்றும் சொல்லலாம். 



அந்த மாதிரியான கிருமிகளுடன் அன்றாட வாழ்க்கை நடத்தும் தலைவர்கள் வாழும் காலத்தில் அத்திப் பூத்தால் போல ஒரு சில கோகினூர் வைரங்களும் தோன்றி மறைவது உண்டு. பொதுநலத்தை மட்டுமே உயிராகப் போற்றி உச்சி முகர்ந்து பார்ப்பதும் உண்டு.

அரசியலில் லஞ்சம், அதிகாரத்தில் ஊழல், சுயநலத்தில் பொதுநலப் போர்வைகள். அப்படிப்பட்ட வக்கிரமான இடத்தில் காமராஜரைப் போல ஒரு சுத்தமான மாமனிதர் வாழ்ந்து இருக்கிறார் என்பது அதிசயத்திலும் அதிசயம்.

ஆறாம் வகுப்பு வரை படித்த ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டு இருக்கிறீர்களா. உண்மையிலேயே அதிசயம். அந்தக் கதையை இப்போது கேளுங்கள்.

காமராஜர் இருக்கிறாரே இவர் ஆங்கில மொழியே தெரியாமல் அரசியல் நடத்தியவர். 



மூத்தத் தலைவர்கள் அரசியலில் நீண்ட நாட்களுக்குப் பதவிகள் வகிக்கக் கூடாது என்று சொல்லி ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தவர். அதற்கு ஓர் உதாரணமாக தன் முதலமைச்சர் பதவியையே விட்டுச் சென்றவர். நம்ப முடிகிறதா.

கல்வியே ஒரு தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர். எல்லா ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்குப் போக வேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.

முதலமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்குச் சிறப்புச் சலுகைகள் தராதவர். சினிமாவில் தான் இது போன்ற கதாபாத்திரங்களைப் பார்க்க முடியும். ஆனால் தமிழகத்திலும் நடந்து இருக்கிறது.

நம்ப முடியாத நேர்மை நிலைப்பாட்டில் வாழ்ந்து இருக்கிறார். அதனால் இறவாப் புகழும் பெற்றார். அந்த உன்னத மனிதர் தான் கர்மவீரர் காமராஜர்.



காமராசரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து இருந்தால் தரணிப் போற்றும் அளவுக்கு மனிதநேயம் உயர்ந்து போய் இருக்கலாம். சிகரம் பார்த்து இருக்கலாம் என்பது என் கருத்து.

கர்ம வீரர் காமராஜர் என்கிற அந்த மனிதர் சாமான்ய ஆசாபாசங்களைக் கடந்து போனவர். கடைசி காலத்தில் இரண்டே இரண்டு வேட்டிகள் மட்டும் அவரிடம் இருந்தனவாம். அவற்றை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். என்னே மனிதம். என்னே இலட்சியம்.

ஒரு செருகல். 1990களில் சிங்கை வானொலியில் நண்பர் அழகிய பாண்டியன் பணியாற்றிய காலத்தில் வானம் வசப்படும் எனும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் இருந்து காமராஜரைப் பற்றிய சில அரிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்றும்கூட கிங் மேக்கர் என்று உன்னதமாய் அழைக்கப் படுகிறார் காமராஜர். 1903-ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 



ஐந்து வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார். ஏனாதி நாயனார் வித்யாலாயா தொடக்கப் பள்ளியில் பயின்றார். இளம் வயதில் கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

இளம் வயதிலேயே அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டார். தலைவர்களின் உரைகளைக் கேட்பதில் அதிக ஆர்வம். 1909 ஆம் ஆண்டு காமராஜருக்கு ஆறு வயது. 

அப்போது காமராஜரின் தந்தையார் காலமானார். தந்தையை இழந்த காமராஜர் தன் 12-வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை. அதன் பின்னர், ஒரு ஜவுளிக் கடையில் காமராஜர் வேலை பார்த்தார்.

இளம் வயதிலேயே தீவிரமான நாட்டுப்பற்று. நாட்டின் விடுதலைக்காக இந்திய மக்கள் போராடி வந்தார்கள். அவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப் படுத்தினார்கள்.

இந்த நிலையில்தான் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம்; சட்ட மறுப்பு இயக்கங்களில் தீவிரம் காட்டினார்.



திருமணம் செய்து வைத்தால் காமராஜர் குடும்பத்தைக் கவனிப்பார். காமராஜருக்குப் பொறுப்பு வரும் என அவருடைய தாயார் சிவகாமி அம்மாள் நினைத்தார். காமராஜரின் தாய்வழி மாமனாருடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

இதனை அறிந்த காமராஜர் தனக்குத் திருமணமே வேண்டாம் என மறுத்து விட்டார். திருமண விசயத்தில் அவர் மிகவும் உறுதியாக இருந்ததால் அவருடைய வாழ்க்கையில் திருமணம் எனும் சொல்லே அடிபட்டுப் போனது.

1930-ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகம். அதில் கலந்து கொண்டார். சத்தியம் சிணுங்கியதால் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். அதன் பிறகு மேலும் ஐந்து முறை சிறைவாசங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எட்டு ஆண்டுகள் சிறைவாசம்.

1940-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார். அந்தப் பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். 



அடுத்த வந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதல் முறை.

இருந்தாலும் தலை சிறந்த தலைமைத்துவத்தைத் தமிழகத்திற்கு வழங்கினார். அவருடைய காலக் கட்டத்தில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப் பட்டது. பெருமையாக இருக்கிறது. இப்போது பாருங்கள். எல்லாமே தலைகீழாக மாறிப் போய் விட்டது

முதலமைச்சர் ஆனதும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக் கொண்டார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்போது அவர் தன் அமைச்சர்களுக்குச் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா.

“பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை. அதனைத் தீர்ப்பதற்கான வழி முறைகளைத் தேடுங்கள். மக்கள் நிச்சயமாக மனநிறைவு அடைவார்கள்”




அவருடைய ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையிலும் சரி; தொழில் துறையிலும் சரி; தமிழ்நாடு துரிதமான வளர்ச்சிகளைக் கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய புதிய பள்ளிகளைக் கட்டுவதற்குத் திட்டங்களை வகுத்தார். நிறைவேற்றியும் காட்டினார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப் பட்டன. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தொடக்கப் பள்ளி. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளி. 11-ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி. ஏழைச் சிறுவர்கள் பசியால் வாடக் கூடாது. அதனால் மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

சாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த வகையில் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதனா மொழியாக்கினார். அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார்.

அரசாங்க அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களில் வழக்குகளைத் தமிழில் நடத்த ஊக்குவிப்பு செய்தார்.

அவரின் ஆட்சியின் போது விவசாயம் அபிரிதமான வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ் பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டுத் திட்டங்கள் உருவாகின.



தொழில் துறையிலும் முத்திரை பதித்தார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை, சென்னை இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என சில பல தொழில்கள் தமிழகத்தில் உருவாக்கம் கண்டன. சிறந்த ஆட்சி.

அதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். அடுத்து அவர் செய்தது அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணம். புதிய பரிமாணம்.

மூத்தத் தலைவர்கள் அனைவரும் தங்களின் அரசியல் பதவிகளைச் துறப்பு செய்ய வேண்டும். கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அப்படி ஒரு திட்டத்தைக் காமராஜர் கொண்டு வந்தார். பிரதமர் நேருவிடம் சிபாரிசு செய்தார்.

அதைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன்ராம், மொரார்ஜி தேசாய், எஸ்.கே. பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்கள் பதவி விலகினார்கள்.

அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு காமராஜருக்கு வழங்கப் பட்டது.



அதற்கு அடுத்த ஆண்டு நேரு மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

சாஸ்திரியும் இரண்டே ஆண்டுகளில் மரணத்தைத் தழுவினார். நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அப்போது இந்திரா காந்திக்கு 48 வயது.

அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிகச் சரியாக மிக நேர்த்தியாக செய்து முடித்ததால் காமராஜரை “கிங்மேக்கர்” என்று பத்திரிக்கையாளர்களும் அரசியல்வாதிகளும் புகழாரம் செய்தனர். 

இப்படி தமிழ்நாட்டில் மெச்சத் தக்க ஆட்சியைத் தந்த காமராஜர் தன்னுடைய கடைசி மூச்சு வரை சமூகத் தொண்டிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். வாழ்ந்தார்.



1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தம் 72-ஆம் வயதில் காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அதற்கும் அடுத்த ஆண்டு இந்திய அரசு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை வழங்கிச் சிறப்பு செய்தது.

மக்கள் தொண்டையே மகேசன் தொண்டாக நினைத்து வாழ்ந்தவர் காமராஜர். அதனால் தனக்கென ஒரு குடும்பத்தை அவர் அமைத்துக் கொள்ளவே இல்லை. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

தவிர சிறு வயதிலேயே கல்வியைத் தொடர முடியாததை நினைத்துப் பல முறை வருந்தி இருக்கிறார். அவர் சிறைக்குச் சென்ற போன சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக் கொண்டு இருக்கிறார்.

காமராஜர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். இருந்தாலும் அவருடைய தாயார் விருதுநகரில் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்தார் என்றால் பெரும் வியப்பு இல்லீங்களா.

தன் குடும்பம் என்றாலும் தன் தாயாருக்குக் கூட எந்தச் சலுகையும் அவர் வழங்கவில்லை. கடைசி காலத்தில் அவர் தனக்கென வைத்து இருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா...



இரு கதர் வேட்டிகள் இரு சட்டைகள். சில புத்தககங்கள். அவ்வளவுதான். இதை எழுதும் என் மனம் கலங்குகிறது. இப்படியும் ஒரு மனிதரா. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்து இருக்கிறாரா.

முதலமைச்சர் எனும் பதவிக்கு உரிய பந்தா அவரிடம் கொஞ்சமும் இருந்தது இல்லை. எந்த நேரத்திலும் எவரும் அவரைச் சந்தித்துப் பேச முடியும். அதனால்தான் அவரைக் கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி அன்றும் இன்றும் தமிழக வரலாறு போற்றுகிறது. இனியும் போற்றும்.

அந்த மாதிரியான ஒரு கண்ணியமான ஒரு நேர்மையான ஒரு சுத்தமான இன்னொரு தலைவரைத் தமிழக வரலாறு மட்டும் அல்ல இந்த உலக வரலாறும் இனி சந்திக்குமா. தெரியவில்லை.

காமராஜர் எனும் கர்மவீரர் மறக்க முடியாத ஒரு தமிழர். தமிழர்களின் வரலாற்றில் அவர் ஒரு சகாப்தம்.

1 கருத்து:

  1. இப்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் இவர் கடைபிடித்த விடயங்களில் பத்து சதவிகிதம் கடைபிடித்திருந்தாலே தமிழ்நாடு முன்னேறி இருக்கும்? தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் நமது சாபக்கேடு. இனியாவது மக்கள் சரியான ஆட்சியை தேர்ந்தெடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்...

    பதிலளிநீக்கு