மலேசிய இந்திய இனம் மலேசிய மண்ணில்
சிந்தியது வியர்வை அல்ல. அது அந்த இனத்தின் இரத்தம்.
கித்தா தோப்புகளில் வடிந்தது பால் அல்ல.
அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.
தார் சடக்கில் வடிந்தது மழைநீர் அல்ல.
அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.
கம்பிச் சடக்கில் வடிந்தது கண்ணீர்
அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.
சயாம் பாதையில் வடிந்தது அழுகை அல்ல.
அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.
வன்மங்களின் தாக்குதலில் ஆற்றாமையின்
காயங்கள் நனைந்து போகின்றன. நினைத்துப் பார்க்கின்றேன். வெம்புகின்றேன்.
மலேசிய இந்தியர்கள் ஒரு சொர்க்க
பூமியில் நரகச் சுமையைச் சுமந்து கொண்டு வாழ்ந்தார்கள். கடந்த அறுபது ஆண்டுகளில்
மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த சன்மானங்களின் பட்டியல்;
நம்பிக்கைத் துரோகங்கள்;
ஏமாற்றங்கள்;
நயவஞ்சகங்கள்;
பசப்பு வார்த்தைகள்;
பச்சோந்தித் தனங்கள்;
சதித் திட்டங்கள்;
மோசடிகள்:
அநியாயங்கள்;
அக்கிரமங்கள்:
அந்த அவலங்களின் தலைவாசலாகக் கழுத்தை
அறுக்கும் பொருளாதாரச் சுமைகள். ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கழுத்தை நெறிக்கும்
வரிச் சுமைகள்.
இந்தியர்களின் நிலையோ அதையும் தாண்டிப்
போனது. நிரந்தப் போராட்டக் களமாய்த் தொடர்ந்தது. தெருச் சண்டைகளில் போய்
முடிந்தது. அத்தனையும் நெஞ்சைக் கீறிக் செந்நீர் கொட்டும் கொடூரமான அவலங்கள்.
கள்ளக் குடியேறிகளுக்கும் பஞ்சம்
பிழைக்க வந்த பரதேசிகளுக்கும் நீலநிற அடையாள அட்டைகள். கைநாட்டுப் போடத் தெரியாத
கழிசடைகளுக்கு எல்லாம் நாட்டுரிமைப் பத்திரங்கள்.
காட்டை வெட்டி மேட்டை வெட்டி; கல்லை
உடைத்து கற்பாறைகளைக் கரைத்து; மலையைப் பிளந்து குகைகளைக் குடைந்து; இந்த நாட்டை
பசும்பொன் பூமியாக மாற்றியது என் இந்திய இனம்.
அந்த இனத்திற்கு கிடைத்த வாழ்நாள்ச்
சாதனை என்ன தெரியுங்களா. ஒரு சிவப்பு அட்டை. என்னே சதிராட்டங்கள். என்னே அறிவிலிச்
சூத்திரங்கள்.
செந்நீரையும் வியர்வை முத்துகளையும்
இந்த மலேசிய மண்ணுக்கு அப்படியே உரமாக்கிச் சென்றவர்கள் என் இந்திய இனத்தவர்கள்.
இன்னும் எத்தனையோ தியாகங்களை என் இனத்தவர்
வடித்துக் கொட்டிச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அப்போதைய அரசு அவர்களை நோக்கிக் கக்கியது
எல்லாம் நஞ்சு கலந்த பசப்பு மொழிகள். அதிலே கிண்டல், நக்கல், நையாண்டி, இனத்
துவேசம், மதத் துவேசம். அடிவருடி அரசியல்வாதிகள் சிலரும் பலரும் கண்டு கொள்ளவே
இல்லை.
சுத்தமான விசுவாசத்தை தவிர வேறு எதுவுமே
தெரியாத என் இனப் பாமர மக்களின் இதயங்களைக் கூறு போட்டது அந்தக் கடந்த கால அரசு
தானே.
இன மதப் பாகுபாட்டின் சர்வாதிகாரத்தில்
அதிநவீனமாக என் இனத்தை ஒதுக்கி வைத்தது அந்தக் கடந்த கால அரசு தானே.
புதிய ஆட்சி வந்தால் இந்த நாடு
மோசமாகிப் போகும் என்று சொன்னது அந்தக் கடந்த கால அரசு தானே. அந்த அம்புலிமாமா கதை
எல்லாம் இனி வேண்டாங்க.
இனி நாம் தரப் போகின்ற மாற்றம் தான் நம்
எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் அழியாச் சீதனம். அதுவே மலேசிய
இந்தியர்களின் வரலாற்றுப் பொக்கிஷம்.
தெளிந்த நீரோடை போல ஓட்டுச் சாவடிக்குச்
சென்றோம். நம் எதிர்கால நல்வாழ்விற்கு வேண்டினோம். நாளை நமதே என்று வாக்களித்தோம்.
நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக்
கொட்டிக் கொண்ட அவலத்தை அன்றோடு அப்படியே தலைமுழுகி விட்டு வீட்டிற்கு வந்து
சேர்ந்தோம்.
வசதிகள் மாறுகிறது
வாய்ப்புகள் மாறுகிறது
பதவிகள் மாறுகிறது
ஆட்சிகள் மாறுகிறது
மாற்றம் ஒன்றே மாறாதது
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை;
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை; சிலருக்குப் புரிவதும் இல்லை; சொன்னாலும்
உரைப்பதும் இல்லை. பலருக்குப் புரிவதும் இல்லை;
மலேசிய இந்தியர்களின் உடனடித் தேவை பணம்
காசு இல்லைங்க. பட்டம் பதவி இல்லைங்க. மாட மாளிகை இல்லைங்க. ஆடம்பர அலங்காரங்களும்
இல்லைங்க. சமுதாயத்தின் ஒற்றுமை தாங்க இப்போதைய அவசியத் தேவை.
மலேசிய இந்தியச் சமுதாயத்தின்
தலைவர்களே, வேற்றுமைகளை மறந்து ஒன்று படுங்கள். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு
நேர்மையாகச் சேவை செய்யுங்கள். புண்ணியத்தைச் சேருங்கள். இதுவே ஒரு சமுதாயத்தின் பொதுநல
அறிவிப்பு.
மலேசிய இந்தியர்களே, மாலை மரியாதைப்
போட்டு ஆயிரம் டத்தோ ஆயிரம் டான்ஸ்ரீ போட்டு அப்படியே கூழைப் கும்பிடு போட்டு
எவரையும் ரொம்பவும் தூக்கி வைத்து ஆட வேண்டாமே. அரசியல்வாதிகள் பொதுமக்களின்
சேவகர்கள். அதை நினவில் கொள்வோம். போதும்.
ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் ஓர்
அரசியல்வாதியிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பாருங்கள். கவனியுங்கள்.
அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக அரசியல்வாதியைக் கன்னத்தில் அறைகின்ற
கலாசாரம் வேண்டாமே. ஏற்கனவே ஒரு கன்னம் வீங்கி விட்டது. அதைத் தடவித் தடவி ஒத்தடம்
கொடுத்து மண்ணையும் கவ்வியாச்சு.
62 ஆண்டுகள் அடிமைப்பட்டு வாழ்ந்து
நொந்து போனது போதுங்க. இனி வரும் காலங்களில் இந்த பக்காத்தான் ஆட்சிக்காக மலேசியத்
தமிழர்கள் ஒன்றுப்பட வேண்டும். நம் இந்தியச் சமுதாய எதிர்கால நலனுக்காக நம்
வேற்றுமைகளை மறக்க வேண்டும்.
நமக்கு என ஒரு பிரதிநிதித்தை உருவாக்க
வேண்டும். போட்டியும் பொறாமையும் இல்லாமல் நம் உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.
நல்ல அரசியல் சேவர்களை உருவாக்க வேண்டும்.
ஒவ்வோர் ஆட்சிக் காலத்திலும் நாம்
எத்தனை எத்தனையோ இழந்தது விட்டோம். கணக்கில் அடங்கா. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய்
மீட்டு எடுப்போம். நம் பிள்ளைகளுக்கு வயிறார சோறு போடுவோம். மடி நிறைய கல்வியைக்
கொடுப்போம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பட்டதாரியை உருவாக்குவோம். அவர்கள்
நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைப்போம். இதை ஒரு சத்திய வாக்காக ஏற்றுக் கொள்வோம்.
இன்னும் ஒரு விசயம். இது யாரையும்
எவரையும் பழி வாங்கும் நோக்கத்தில் நடந்த தேர்தல் அல்ல. சட்டமும், நீதியும், ஒழுங்கும்,
மரியாதையும் தவறிப் போய் சாக்காட்டில் தத்தளித்து மூழ்கிக் கொண்டு இருந்த போது, அவற்றைக்
காப்பாற்றவே வந்த தேர்தல். அப்படிச் சொல்கிறார் துன் மகாதீர்.
இன்று தோல்வி கண்ட அதே அந்தப் பாரிசான்
கட்சித் தலைமையில் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சி செய்த அதே பிரதமர் சொல்கிறார்
என்றால் அதில் நிச்சயம் ஓர் உண்மைச் சத்தியம் தொக்கி நிற்கிறது.
அண்மைய காலங்களில் அவருக்கு காலம்
தாழ்ந்த சில கனவுகள். எதிர்காலத்தில் மலேசியா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்க
வேண்டும் எனும் கனவுகள். அந்தக் கனவுகள் தன் வாழ்நாளிலேயே நனவுகளாக மாற வேண்டும்
என நினைத்தார். கங்கணம் கட்டினார். அந்தக் கனவுகளின் நனவுகள் தான் இன்றைய மாபெரும்
வெற்றி.
இந்த முறை மற்றும் ஒரு மிக முக்கியமான
திருப்பம். இளம் சமூகத்தினர் 11% ஓட்டுப் போட வந்ததைத் தான் சொல்கிறேன். மொத்த
வாக்குப் பதிவுகளில் பதினொரு விழுக்காடு 26 வயதிற்கும் குறைந்தவர்களின் வாக்கு.
ஒட்டு மொத்தமாக மலேசியர் எவருக்கும் பட்டவர்த்தனமான
ஊழல் அரசை பிடிக்கவில்லை. அது தான் உண்மை. நாட்டிலே தலை விரித்தாடும் ஆயிரம் ஆயிரம்
பிரச்சினைகள். அப்படி இருக்கும் போது மக்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த பணத்தை நாடோடிக்
கொள்ளையர்கள் சூதாடுவதை இளைஞர்கள் விரும்பவில்லை. எதிர்த்தார்கள்.
அவர்களின் எதிர்காலம் சூன்யமாகிக்
கொண்டு போவதை நன்றாகவே உணர்ந்து விட்டார்கள். அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். மாற்றியும் காட்டினார்கள்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது. தெரியும்
தானே. இங்கே சாது என்றால் பொதுமக்கள். காடு என்றால் ஊழல் பெருச்சாளிகள். ஒரு
செருகல்.
இந்த உலகில் எந்த ஓர் அரசியல்வாதியும்
ஒரு காமராசராக ஆக முடியாது. ஒரு கக்கனாகவும் ஆக முடியாது. கருவாட்டிற்கும்
பூனைக்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்தாலும் அரசியல்வாதிக்கும் அகிம்சைக்கும்
திருட்டுத் திருமணம் கூட செய்து வைக்க முடியாது. நோ சான்ஸ்.
அப்பேர்ப்பட்ட ஆபிரகாம் லிங்கனே தன்
கடைசி நாட்களில் லஞ்சம் கொடுத்ததாக அரசல் புரசல். விடுங்கள். நம்ப கதைக்கு
வருவோம்.
இந்த முறை மக்கள் விழித்துக்
கொண்டார்கள். வெகுண்டு எழுந்தார்கள். மாற்றம் செய்தார்கள். ஆக அந்த வகையில் இந்தத்
தேர்தல் வெற்றி என்பது மலேசிய மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு. அப்படித்தான்
சொல்லத் தோன்றுகிறது.
மலேசியத் தமிழர்கள் தங்கள் எதிர்ப்புகளை
ஏற்கனவே பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூசகமாகக் காட்டி வந்தார்கள்.
அசைக்க முடியாத தலைமைத்துவம் கண்டுகொள்ளவில்லை. அதனால் என்ன ஆனது.
தங்களின் இந்தியத் தலைவரையே தோல்வி
அடையச் செய்தார்கள். இது உண்மை அல்ல என்று சொல்ல முடியாது. நான் சொல்லவில்லை. அது
மக்களின் வெளிப்பாடு. தப்பு என்றால் மாண்புமிகு குலசேகரனைப் போய்க் கேளுங்கள்.
நன்றாகவே பதில் கிடைக்கும்.
மலேசியத் தமிழர்களுக்கு அவர்களின் உரிமை
அவர்களுக்கு வேண்டும் என்று சொல்லி இண்ட்ராப் இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். அப்படியே
இந்த நாட்டையும் ஒரு கலக்கு கலக்கினார்கள். இத்தனை நடந்தும் மலேசிய இந்தியர்களின்
தாய்க்கட்சி தன் சுயநலப் போக்கைக் கொஞ்சம்கூட மாற்றி அமைக்கவில்லை. 2013-தேர்தலில்
சற்றே ஒரு லேசான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்திக் காட்டினார்கள். அதில் சீனர்களின்
பங்கு பெரும் பங்கு.
இருந்தாலும் 2013 தேர்தலில் பற்பல
தில்லுமுல்லுகள். இந்தத் தேர்தலில் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் படையாகத்
திரண்டனர். சத்தியமாகச் சொல்கிறேன். மலேசிய இந்திய இளைஞர்களைக் குண்டல்
கும்பல்களின் வாரிசுகள் என்று அரசியல்வாதிகள் சிலர் புகழாரம் செய்தது உண்டு.
ஆனால் என்ன நடந்தது என்ன தெரியுமா.
குண்டர்கள் கும்பல்கள் தாத்தாக்கள் அடியாட்கள் என்று எதுவுமே இல்லாமல் போனது தான்
பெரிய விசயம். எல்லா இளைஞர்களும் ஒரே அணியில் ஒரே எண்ணத்தில் ஒரே நோக்கத்தில் ஒரே
கொள்கையில் ஐக்கியமாகிப் போனார்கள். பக்காத்தான் வேட்பாளர்களைக்
காப்பாற்றினார்கள்.
நாளைப் பொழுது உன்தன் நல்ல
பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்.
கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம்.
இமய மலை ஆகாமல் எனது உயிர் போகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக