தமிழ் மலர் - 16.05.2018
மலேசியத் தமிழர்களின் வரலாற்றில்
அண்மையில் நடந்த ஆட்சி மாற்றமும் ஒரு காலச்சுவடு. அந்த ஆட்சி மாற்றத்தில் மலேசியத்
தமிழர்கள் மிக மிக முக்கியமான பங்கு வகித்தார்கள். ஆகவே அதுவும் மலேசியத்
தமிழர்களின் வரலாற்றில் ஒரு காலச்சுவடி. சரி. விசயத்திற்கு வருவோம்.
நடந்து முடிந்த தேர்தலில்
பக்காத்தானுக்கு கிடைத்த வெற்றி அல்லது ஆட்சி மாற்றம் என்பது மலேசிய மக்களினால்
ஏற்படுத்தப்பட்ட ஒரு புரட்சி. மலேசிய மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு. அதைக்
கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் மகாதீர் எனும் மகா சாணக்கியர்
இல்லாமல் அந்த ஆட்சி மாற்றம் நடந்து இருக்காது. நடந்து இருக்கவே முடியாது. வேறு
யாராலும் நடத்தி இருக்க முடியாது. இந்த ஒன்றை மட்டும் நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றாக உற்றுக் கவனியுங்கள். தேர்தல்
நடந்து முடிந்த இரவு 1.30 வரைக்கும் எந்த ஓர் அறிக்கையும் வெளியிடப் படவில்லை. வெளிவந்த
தேர்தல் முடிவுகள் எல்லாமே அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளாகவே (tidak resmi) வந்து
கொண்டு இருந்தன.
தேர்தல் காலத்தில் அரசாங்கத்தைப்
பராமரிப்பு செய்து வந்த குழுமம் (care takers) தேர்தல் முடிவுகளை அன்றிரவு 12
மணிக்குள் அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் பராமரிப்பு அரசாங்கம் அப்படிச்
செய்யவே இல்லை.
அன்றிரவு 1.30-க்கு துன் மகாதீர் ஒரு
பேட்டி கொடுக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் சொல்கிறார்: ஏன் இன்னும் பாரம் 14-ஐ
வெளியிடாமல் இருக்கிறீர்கள். அதுதான் எண்ணி முடிந்தாகி விட்டதே. அந்தப் பாரத்தை
வெளியாக்குங்கள். ஏன் நிறுத்தி வைக்கிறீர்கள். உடனடியாக முடிவைத் தெரியப்
படுத்துங்கள் என்று சொல்கிறார்.
ஒரு செருகல். தேர்தல் வாக்குகள் எண்ணும்
ஒவ்வோர் இடத்திலும் ஒரு தலைமை அதிகாரி இருப்பார். அவரைத் தேர்தல் நிலைய தலைமை
அதிகாரி (KPT) என்று அழைப்பார்கள்.
வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்ததும்
அந்தத் தலைமை அதிகாரி பாரம் 14-ஐ (Form 14) தயார் செய்ய வேண்டும். தேர்தலில்
போட்டியிடும் கட்சிகளின் ஏஜெண்டுகளிடம் கொடுத்து கையொப்பம் வாங்க வேண்டும்.
அந்தப் பாரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியாக்க
வேண்டும். அப்போதுதான் வெற்றி தோல்வி யாருக்கு என்று தெரிய வரும். அப்போது தான்
அந்த இடத்தின் தேர்தல் முறைப்படி செல்லுபடியாகும். பாரம் 14 வெளியாக வரையில் எந்த
முடிவையும் சொல்ல முடியாது.
அடுத்து என்ன நடந்தது தெரியுங்களா. துன்
மகாதீர் பேட்டி கொடுத்து ஐந்து நிமிடங்கள் ஆகி இருக்காது. டி.வி.3 டி.வி. 1,
டி.வி.1 என்று அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் கடகடவென்று தேர்தல்
முடிவுகள். சரம் சரமாய் வந்து கொட்டத் தொடங்கின. இங்கே ஒன்றை நீங்கள் கவனிக்க
வேண்டும்.
மறுநாள் காலையிலேயே 8.30க்குள் துன்
மகாதீர் அவர்கள் மாட்சிமை தங்கிய பேரரசரைப் போய் பார்த்து இருக்க வேண்டும். ஆனாலும்
பேரரசரைப் பார்க்க முடியவில்லை. பார்க்கவும் விடவில்லை. சூழ்நிலை சரியாக அமையவும்
இல்லை. இஸ்தானாவிற்குச் செல்லும் சாலை நெடுகிலும் போலீசாரின் தடுப்புகள்.
திடீரென்று ஓர் அறிவிப்பு வருகிறது.
பேரரசர் நம் நாட்டில் இல்லை எனும் அறிவிப்பு. சரி.
அன்று மாலை 2 மணிக்கு துன் மகாதீர் ஒரு
செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுகிறார். ஓர் அறிவிப்பு செய்கிறார். இன்று மாலை 5
மணிக்குள் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். இப்போது நம் நாட்டில் ஓர்
அரசாங்கம் என்பது இல்லவே இல்லை. இப்போது இந்த நாடு ஓர் அனாதையாகக் கிடக்கிறது.
உடனே ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். நான் பேரரசரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள்
செய்ய வேண்டும் எனும் அறிவிப்பு.
அதே சமயத்தில் நஜீப் அவர்களும் ஒரு
செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுகிறார். அந்தக் கூட்டத்தில் நஜீப் சொல்கிறார்.
நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் முடிவு எடுக்கும் அதிகாரம் பேரரசரிடம்
மட்டும் தான் உள்ளது. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவிற்கு அனைவரும் கட்டுப்பட
வேண்டும் என்று ஒரு ’செக்’ (சூசகமான அறிவிப்பு) வைக்கிறார்.
இவர் என்னங்க செக் வைப்பது. இவர் தான்
தோற்று விட்டாரே. முடிஞ்சு போச்சு. வீட்டிற்குக் கிளம்ப வேண்டியது தானே. பேரரசர்
என்ன சொல்கிறாரோ அதற்குக் கட்டுப்பட வேண்டுமாம். என்னங்க இது.
அதே சமயத்தில் பாருங்கள். நஜீப் இந்த
நாட்டின் பிரதமரும் அல்ல. தேர்தல் நேரத்தில் நாட்டைப் பாராமரித்த காபந்து
அரசாங்கத்தின் தலைவரும் அல்ல. ஆக பேரரசர் என்ன சொல்கிறாரோ அதற்கு கட்டுப்பட
வேண்டும் என்று சொல்வதற்கு நஜீப்பிற்கு அதிகாரமே கிடையாது.
ஏன் என்றால் அவரின் கட்சிதான் தேர்தலில்
தோல்வி அடைந்து விட்டதே. அவர் ஓர் எதிர்க் கட்சியின் தலைவரும் அல்ல. அப்புறம்
எப்படிங்க சொல்ல முடியும். சரிங்களா.
ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் திரை
மறைவில் இருந்து கொண்டு நஜீப் ஏதோ திட்டம் போட்டு காய்களை நகர்த்திக் கொண்டு
இருந்தார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. இந்த நேரத்தில் அட்டர்னி ஜெனரல்
குறுக்கிட்டுச் சொல்கிறார்;
இந்த இக்கட்டான நேரத்தில் நான்
அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கப் போகிறேன் என்றார். ஏங்க ஒன்று கேட்கிறேன். தப்பாக
நினைக்க வேண்டாம். அரசாங்கமே இல்லை. பழைய அரசாங்கமும் இல்லை. புதிய அரசாங்கமும்
உருவாக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது அட்டர்னி ஜெனரல் யாருக்குப் போய் எந்த
அரசாங்கத்திற்குப் போய் அட்வைஸ் பண்ணப் போகிறாராம்.
ஆக இந்தச் செயல்பாடுகள் ஒன்றுக்குப்
பின் முரணாக இருக்கின்றன. நாடே அப்போது ஒரு நிலையான திடமான நிலையில் இல்லை. இப்படிப்பட்ட
நிலையில் பொதுமக்களை மேலும் மேலும் குழப்பி இருக்கக் கூடாது.
மக்கள் குழம்பிப் போய் இருந்தார்கள்.
நாட்டில் அரசாங்கம் இருக்கிறதா இல்லையா. பேரரசர் வேறு இல்லை. எல்லாமே பதற்றத்தில்
சிதறிப் போய்க் கிடக்கின்றது. என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. அப்படி
இருக்கும் போது அட்டர்னி ஜெனரல் எந்த அரசாங்கத்திற்கு அட்வைஸ் பண்ணப் போகிறாராம்.
அந்தச் சமயத்தில் ஜொகூர் சுல்தான் ஒரு காணொளிச்
செய்தியை வெளியிடுகிறார். அவர் சொல்கிறார். இனிமேல் காலம் தாழ்த்தாமல் உடனடியாக
ஒரு முடிவு எடுங்கள் என்று சொல்கிறார். அந்தக் கட்டத்தில் பேரரசர் இன்னும்
நாட்டுக்குத் திரும்பி வரவில்லை. சரி. ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம்.
நம் நாட்டில் அவசரகாலம் என்பதைப்
பிரகடனம் செய்ய வேண்டும் என்றால் அந்த அதிகாரம் பேரரசருக்கு மட்டுமே உள்ளது. வேறு
யாரும் பிரகடனம் செய்ய முடியாது. பிரதமருக்கும் இல்லை. மற்ற எவருக்கும் இல்லை.
தேர்தல் நடந்த முடிந்த பிறகு ஒரு வதந்தி
வேறு. அதாவது நாட்டில் அவசரகாலம் வரப் போகிறது. தேவையற்ற உண்மை இல்லாத ஒரு வதந்தியை
ஒரு சிலர் பரப்பிக் கொண்டு இருந்தார்கள்.
நஜீப் தன் செய்தியாளர் கூட்டத்தில்
சொல்கிறார்: ‘இந்த நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகள் பொய்யான செய்திகளையும் பொய்யான
பரப்புரைகளையும் செய்து வருகின்றன.
அந்தக் காரணத்தினால் தான் நாங்கள்
தோற்றுப் போனோம். அது ஓர் அவதூறு (Fitnah). நேற்று ராத்திரிகூட ஒரு பொய்யான
செய்தியைப் பரப்பினார்கள். தேசியப் பாதுகாப்பு மன்றம் (Majlis Keselamatan Negara)
எனும் ஒரு மன்றத்தை நான் உருவாக்கப் போகிறேன் என்றும் பதவியை விட்டு வெளியாக
மாட்டேன் என்றும் பொய்யான செய்தியைப் பரப்பினார்கள்.
ஆனால் அது உண்மை அல்ல. நாங்கள் எங்கள்
தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் அனைவரும் பேரரசர் முடிவைத் தான் ஏற்க
வேண்டும்’ என்று நஜீப் கூறினார்.
அனைவரும் பேரரசர் முடிவை ஏற்க வேண்டும்
என்று ஒரு மேடையில் நஜீப் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம். சொல்லுங்கள்.
அன்று இரவு அதாவது 12 மணிக்கு இராணுவப்
படையினர் புத்ரா ஜெயாவிற்குச் சென்றனர். ஆக இரவு 12 மணிக்குள் நஜீப் தன்
அலுவலகத்தைக் காலி செய்யவில்லை என்றால் இராணுவம் நஜீப்பின் அலுவலகத்தை எடுத்துக்
கொண்டு இருக்கும்.
ஏன் என்றால் இரவு 12 மணிக்கு மேல்
அரசாங்கம் என்ற ஒன்று இல்லையே. பிரதமரும் இல்லையே. நாட்டில் பேரரசரும் இல்லையே.
மறுநாள் காலையில் பார்த்தீர்கள் என்றால்
துன் மகாதீரின் பின்னாலேயே மலேசிய இராணுவத் தளபதியும் உடன் வலம் கொண்டு இருந்தார்.
நல்ல வேளை. வேறு பக்கம் போகவில்லை.
அப்படியே இராணுவத் தளபதி அந்தப் பக்கம்
போய் இருந்தால் தேசியப் பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்பட்டு இருக்கும். நாட்டின்
தலைவிதியே மாறிப் போய் இருக்கும்.
அதனால் தான் துன் மகாதீர் கெட்டிக்காரத்
தனமாக இராணுவத் தளபதியை வேறு பக்கம் போக விடாமல் தன் பக்கமாகத் தக்க வைத்துக்
கொண்டார்.
ஒன்று மட்டும் உண்மை. இராணுவத் தளபதி
நஜீப்பின் பக்கம் போய் இருந்தால் அந்த இராணுவத் தளபதியை வைத்துக் கொண்டு தேசியப்
பாதுகாப்பு மன்றத்தை நஜீப் உருவாக்கி இருப்பார். இருந்தாலும் அங்கேயும்
நஜீப்பிற்கு ஒரு முட்டுக்கல் இருந்தது.
தேசியப் பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட
வேண்டும் என்றால் பேரரசர் அனுமதிக்க வேண்டும். பேரரசர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
அப்படியே தேசியப் பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட்டு இருந்தால் அதற்கு நஜீப் தான்
தலைவர் ஆவார். தன்னுடைய அதிகார ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு இருப்பார்.
மீண்டும் பாரிசானே ஆளும் அரசாங்க ஆட்சியில் அமர்ந்து இருக்கும்.
பேரரசர் தான் வெளிநாட்டில் இருக்கிறாரே.
அவருடைய ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாதே.
ஆனால் பாருங்கள். இறைவன் வேறு
மாதிரியாகப் பயணித்து விட்டார். தேசியப் பாதுகாப்பு மன்றம் அமைக்கப் படுவதற்கு
பேரரசரின் அனுமதி கிடைக்காத பட்சத்தில் நஜீப் தடுமாறிப் போய் நின்றார்.
உண்மையில் பார்க்கப் போனால் பேரரசரின்
விமானம் கோலாலம்பூர் வந்து சேர தாமதமாகி விட்டது. அதுதான் உண்மையான காரணம்.
அன்று மாலை 4.00 மணிக்கு மகாதீர்
செய்தியாளர் கூட்டத்தில் உடனடியாக அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால்
நாட்டிற்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்கிறார். அப்போது அரண்மனையில்
இருந்து செய்தி அறிக்கை வெளியாகிறது.
இன்று மாலை 5.00 மணிக்கு மகாதீர்
அரண்மனைக்கு வந்து பதவி ஏற்றுக் கொள்ளலாம் எனும் அறிக்கை. ஆனால் அதற்கு முன்னால்
அரண்மனையில் இருந்து ஒரு செய்தி. அதாவது பேரரசர் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்திக் கொண்டு இருக்கிறார் எனும் அறிவிப்பு.
இந்தக் கட்டத்தில் தான் நஜீப், எதையாவது
பண்ணி அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட வேண்டும். எப்படியாவது அதிகாரத்தைக்
கைப்பற்றிவிட வேண்டும் என்று பலவகைகளில் போராடி இருக்கிறார். ஆட்சியைக்
கைப்பற்றிவிட முடியும் எனும் நம்பிக்கையிலும் இருந்தார்.
அந்த தைரியத்தில் தான் நஜீப் நாட்டை
விட்டு வேறு நாட்டிற்குப் போவதற்கோ; அல்லது ரோஸ்மா நாட்டை விட்டு கிளம்புவதற்கோ
அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. புரியும்
என்று நினைக்கிறேன்.
மாலை மணி ஐந்திற்கு மகாதீர் அரண்மனையில்
பதவி ஏற்க வேண்டும். ஆனால் பேரரசர் வந்து சேரவில்லை. மாலை 4.40க்கு எல்லாம்
மகாதீர் அரண்மனைக்குச் சென்று விட்டார். மகாதீர் கோபமாக இருந்தால் வேறு மாதிரியாக
இருப்பார். பார்த்து இருப்பீர்கள்.
ஆனால் அப்போது மகாதீர் மிகக் கவலையுடன்
காணப் பட்டார். பேரரசர் வந்துவிட வேண்டும். நாடு வேறு கேட்பாரற்று கிடக்கிறது.
புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமே. எனும் கவலையில் மகாதீர் இருந்தார். பார்த்து
இருப்பீர்கள். அவர் முகத்தில் கலையே இல்லை.
இரவு 9.50க்கு பேரரசர் வந்து
சேர்ந்தார். அதன் பின்னர் அனைவருக்கும் தெரிந்த கதை. துன் மகாதீர் நாட்டின் 7-வது பிரதமர்
ஆனார். அதன் பின்னர் பேரரசர் ஒரு சின்ன விருந்து வைத்தார். அந்த விருந்தின் போது
தான் அன்வாருக்கு மகாதீர் அரச மன்னிப்பு கேட்டார். பேரரசரின் கையொப்பத்தையும்
வாங்கிக் கொண்டார்.
மலேசிய இராணுவத் தளபதி மகாதீர் பக்கமாக
இல்லாமல்; நஜீப் பக்கமாய் போய் இருந்தால்; பேரரசர் வெளிநாட்டிற்குப் போகாமல்
இருந்து இருந்தால்; தேசியப் பாதுகாப்பு மன்றத்தை நஜீப் உருவாக்கி இருப்பார்.
அதற்கு நஜீப் தலைவர் ஆகி இருப்பார். பாரிசான் கட்சி அதிகார ஆட்சியைத் மீண்டும்
தக்க வைத்துக் கொண்டு இருக்கும்.
மலேசிய மக்கள் இலவு காத்த கிளியாக இன்னும்
பல தலைமுறைகளுக்கு ஏங்கித் தவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
(இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு
கோலாலம்பூர் மதியழகன் நிறைய தகவல்களை வழங்கி உதவி செய்தார். அவர் நடமாடும் ஓர்
அரசியல் கலைக்களஞ்சியம். அவருக்கு நன்றி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக