ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் மலாயா தோட்டங்களில் தேசிங்கு ராஜாவைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். விடிய விடிய கதைப் பேச்சுகள். மங்கிய மண்ணெண்ணெய் விளக்கு தூங்கி வழிந்து கண் மூடும் வரையிலும் கதைகள். சமயங்களில் விடிந்ததுகூட தெரியாமல் கதைகள்.
நான் பிறந்து வளர்ந்த மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தையும் அதில் சேர்க்க வேண்டும். பொழுது சாய்ந்தால் போதும். பாட்டிமார்களைச் சுற்றி ஒரு பெரிய வாண்டுப் பட்டாளமே கூடி நிற்கும்.
பாட்டிமார்கள் என்று சொன்னால் இரண்டு மூன்று பேர் தான். பெரிய வயது என்று சொல்ல முடியாது. அறுபது எழுபது வயதுகளைத் தாண்டிப் போய் இருக்க மாட்டார்கள்.
அப்போது தான் வானொலி, தொலைக்காட்சி, வாட்ஸ் அப், தோப் அப் எதுவுமே இல்லையே. கங்காணி வீட்டிலும் கிராணி வீட்டிலும் மட்டும் தான் ரேடியோ இருக்கும். இருபத்து நாலு மணி நேரமும் இங்கிலீஷ் பாட்டுகள். அதனால் பாட்டிமார்களின் ராமாயணக் கதைகளுக்கு ரொம்பவுமே கிராக்கி.
கதா கலாசேபத்திற்கு முன்னால் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைக்க ஓர் ஆள். பாட்டிக்கு வெற்றிலைப் பாக்கை இடித்துக் கொடுக்க ஓர் ஆள். காலைப் பிடித்துவிட ஓர் ஆள். விரல்களில் முட்டி முறித்துவிட ஓர் ஆள். முதுகைச் சொறிந்துவிட ஓர் ஆள். பெரியவர்களும் சேர்ந்து கொள்வார்கள்.
முத்திப் போன பாட்டிமார்களின் சித்துப் பாடல்கள் நன்றாகவே சுதி சேர்த்துக் களை கட்டி நிற்கும். அப்போதைக்கு அது பாட்டிமார்களின் அல்லி தர்பார் என்றுகூட சொல்லலாம்.
பாவம் தாத்தாமார்கள். பாட்டிமார்களிடம் தாதா வேலைகள் ஒன்றும் எடுபடாது. எங்கேயாவது சுருண்டு போய்க் கிடப்பார்கள். அவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பாட்டிமார்களில் யாராவது ஒருவர் கதையை இப்படி ஆரம்பிப்பார்.
பாலன் பிறந்த மூன்றாம் மாசம்
பதைச்சு விழுந்தானாம் கொங்கனே
குழந்தை பிறந்த ஏழாம் மாசம்
குலுங்கி விழுந்தானாம் மாங்கனே
இப்படித்தான் ஒரு சின்னப் பாடலாக ராஜா தேசிங்கு கதை ஆரம்பமாகும். அப்புறம் அந்தக் கதை ஒரு மாதத்திற்கு இழுத்துக் கொண்டு போகும்.
தோட்டத்து மக்களும் அசர மாட்டார்கள். எத்தனையோ நாட்கள் நானும் வாயைப் பிளந்து கொண்டு தூங்கிப் போய் இருக்கிறேன். சமயங்களில் இராத்திரி பத்து மணிக்கு ஒரு பாகம் முடியும். அப்புறம் ’வாடா மாச்சாப்பு’ என்று என்னை இழுத்துக் கொண்டு போவார்கள். அப்போது எனக்கு வயது ஆறு. நினைத்துப் பார்க்கிறேன்.
*மாச்சாப்பு* என்பது என் பேர் தான். மாச்சாப் கோயிலில் வேண்டிக் கொண்டதால் நான் பிறந்தேனாம். அதனால் அந்தப் பெயரையே எனக்கும் வைத்து விட்டார்கள். இப்போதுகூட மலாக்கா பக்கம் போய் மாச்சாப்பு என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
அது எல்லாம் வெள்ளந்திகளாய் வாழ்ந்து மறைந்த ஒரு கனாக்காலம். அந்த மாதிரியான காலங்கள் மறுபடியும வருமா? மனசுக்குள் ஒரு நீண்ட பெருமூச்சு. லேசாக அடைக்கிற மாதிரியும் இருக்கிறது. இனிமேல் வராதுங்க. கற்பனை செய்தே காலத்தை ஓட்ட வேண்டியது தான். என்ன செய்வது. சரி. கதைக்கு வருவோம். நான் ரெடி. நீங்க ரெடியா.
யார் இந்த தேசிங்கு ராஜா. ஒரு பத்துப் பதினெட்டு வயதிலேயே பெரிய பெரிய சாதனைகளைச் செய்த பையன் தான் இந்த ராஜா தேசிங்கு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
பல இலட்சம் படை வீரர்களையும் பல நூறு பீரங்கிகளையும் கொண்டது மொகலாயப் படை. பாபர், ஜஹாங்கிர், அக்பர், ஷா ஜகான், அவுரங்கசிப் போன்ற மகா மன்னர்கள் ஆட்சி செய்த அரசுதான் மொகலாய அரசு. இந்தியா பார்த்த மாபெரும் அரசு. உலகம் திரும்பிப் பார்த்த மகா பெரிய அரசு.
அவர்களின் படைதான் மொகலாயப் படை. அப்பேர்ப்பட்ட பெரிய படை. அந்தப் படையை வெறும் முன்னூறு வீரர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனிமனிதாக எதிர்த்து நின்று போர் செய்தவன் தான் இன்றைய நம்ப கதாநாயகன் தேசிங்கு ராஜா.
ஆனாலும் சின்ன வயதிலேயே இறந்து போனான். கடல் போன்ற எதிரிகளின் படைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாத வீரன் தேசிங்கு ராஜா. அவனுடைய அஞ்சாமைக்கு இன்றும் தமிழகம் தலை வணங்குகிறது. தமிழக மக்கள் நெஞ்சை நிமிர்த்தி வீர வசனம் பேச வைக்கின்றது.
தேசிங்கு என்பவர் சீக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர். என்றாலும் அவர் தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து போனவர். சீக்கியராகப் பிறந்தாலும் தமிழராக வாழ்ந்தவர்.
எப்படி மாவீரர் சிவாஜி மராத்திய பரம்பரையில் பிறந்து தமிழராகிப் போனாரோ… எப்படி வீர பாண்டிய கட்டபொம்மன் தெலுங்கராய்ப் பிறந்து தமிழராகிப் போனாரோ… அதே போலத் தான் தேசிங்கு ராஜாவும் சீக்கியராகப் பிறந்து தமிழராகிப் போனவர்.
தேசிங்கு ராஜாவைப் பற்றி ஒரு சின்ன சுருக்கம். கி.பி. 1713-இல் நடந்தது. ஆற்காட்டு நவாப்பின் அதிகாரத்தை ஏற்க மறுத்த தேசிங்கு ராஜா அவருக்குக் கப்பம் கட்ட மறுத்தான். அதனால் ஆற்காட்டு நவாப் ஒரு பெரும் படையுடன் தேசிங்கு ராஜாவைத் தாக்கினான். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு பெரிய போர் நடந்தது.
தேசிங்கு ராஜா அவருடைய "நீலவேணி" எனும் குதிரையுடன் போரிட்டார். அவருக்கு மஹ்மூத் கான் என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் தன்னுடைய "பஞ்ச கல்யாணி" என்ற குதிரையுடன் தேசிங்கு ராஜாவுடன் போர் புரிந்தார்.
ஆற்காட்டு நவாப்பிற்கு 85,000 குதிரை வீரர்களைக் கொண்ட பெரிய படை. தேசிங்கு ராஜாவிற்கு 350 குதிரை வீரர்களைக் கொண்ட ஒரு சின்ன படை. அப்போது தேசிங்கு ராஜாவிற்கு 22 வயது.
அந்தப் போரில் தேசிங்கு ராஜா கொல்லப் பட்டார். அவருடைய குறுகிய கால ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. செஞ்சிக் கோட்டை ஆற்காட்டு நவாப்பிடம் தடம் மாறியது.
தேசிங்கு ராஜாவின் இளம் மனைவி ராணிபாய். கணவன் இறந்ததும் உடன் கட்டை ஏறினார். எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. ‘இந்த உடல் என் கணவனுக்குச் சொந்தமானது. மற்றவர் பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்லித் தீக்குளித்துக் கொண்டார். எதிரியின் மனைவியாக இருந்தாலும் அவளுடைய பத்தினி விரதம் ஆற்காட்டு நவாப்பை நெகிழ வைத்தது.
அவளுடைய கர்ம வினையைப் போற்றிப் புகழ்ந்த ஆற்காட்டு நவாப், இராணிப்பேட்டை என்ற ஓர் ஊரையே தோற்றுவித்தார்.
இராணிப்பேட்டை எனும் ஊர் இன்னும் இருக்கிறது. அங்கே ராணிபாய்க்குப் பல கோயில்களையும் கட்டி இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கட்டுரையின் சுருக்கம். சரி. இனி கொஞ்சம் முழுசாய்ப் பார்ப்போம்.
முன்பு காலத்தில் மத்திய இந்தியாவில் புந்தேலர் எனும் ஓர் இனமக்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அந்த இனத்தின் தலைவராகச் சொரூப் சிங் என்பவர் இருந்தார். அவருடைய மகன்தான் தேஜ் சிங்.
தேஜ் சிங் என்ற பெயரைத்தான் தேசிங்கு என்று எளிமையாக மாற்றி விட்டார்கள். தேசிங்கு என்பவர் சீக்கியப் பரம்பரையைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றித்துப் போனவர்.
சீக்கியராகப் பிறந்தாலும் ஓரளவுக்குத் தமிழராகவே வாழ்ந்து விட்டவர். தேஜ் சிங் எப்படி செஞ்சியின் அரசன் ஆனார். அதற்கு புந்தேலர் இனத்தின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
1530-களில் நடந்த நிகழ்ச்சி. புத்தேல்கன்ட் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இருந்த ஒரு நிலப்பகுதி. ஒரு சிற்றரசு. அங்கு வாழ்ந்த ராஜ புத்திரர்களுக்கும், மொகலாயர்களுக்கும் நீண்ட காலமாக நல்ல சுமுகமான உறவு முறைகள்.
மொகலாய மன்னன் ஒளரங்கசீப் பல முறை தென் இந்தியாவின் மீது படை எடுத்து இருக்கிறார். தென் இந்தியாவைப் பிடிக்க வேண்டும் என்பது ஔரங்கசீப்பின் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். அதன் விளைவாக மதுரை ஆட்சி வீழ்ந்தது. தஞ்சை ஆட்சியும் வீழ்ந்தது.
அந்தச் சமயங்களில் தேசிங்கு ராஜாவின் புத்தேலர் இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒளரங்கசீப் படைப் பிரிவுகளில் சேர்ந்து சேவை செய்து வந்தனர். ஒளரங்கசீப்பிற்கு விசுவாசமாகவும் இருந்து வந்தனர்.
இந்தச் சமயத்தில் மாவீரர் சத்ரபதி சிவாஜியின் தலைமையின் கீழ் இருந்த மராட்டியர்கள், ஔரங்கசீப்பிற்கு பல வகைகளில் குடைச்சல் கொடுத்து வந்தனர்.
மராட்டியர்கள் தனி ஒரு மராட்டிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வந்தார்கள். அதனால் மராட்டியர்களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்று ஔரங்கசீப் கங்கணம் கட்டினார். அவர்கள் போகிற இடங்களுக்கு எல்லாம் ஒளரங்கசீப் தன் படைகளையும் அனுப்பி வந்தார். தாக்குதல் நடத்தி வந்தார்.
இதற்கிடையில் சத்ரபதி சிவாஜி இறந்து போனார். அவருடைய மகன் சத்ரபதி ராஜாராம். இவர் தொடர்ந்து ஒளரங்கசீப் படைகளுடன் போரிட்டு வந்தார். இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரால் சமாளிக்க முடியவில்லை.
அதனால் தமிழகத்திற்குத் தப்பி ஓடி வந்து செஞ்சிக் கோட்டையில் தஞ்சம் அடைந்தார். சிவாஜியின் மகன் சத்ரபதி ராஜாராமைப் பிடிக்க ஔவுரங்கசீப் ஒரு பெரும் படையை அனுப்பினார்.
அந்தப் படையில் ஒரு குதிரைப் படையும் இருந்தது. அதற்குத் தலைவராக இருந்தவர்தான் சொரூப் சிங். அதாவது தேசிங்கு ராஜாவின் தந்தையார்.
செஞ்சிக் கோட்டையில் அப்படி இப்படி என்று பதினொரு மாத கால முற்றுகை. கடைசியில் 1698-ஆம் ஆண்டு செஞ்சி கோட்டை வீழ்ந்தது.
ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டார். அதன் பிறகு சத்ரபதி ராஜாராம் எப்படி இறந்து போனார் என்பது வேறு கதை.
அந்தப் போரில் வீர தீரத்துடன் செயல் பட்டதால் சொரூப் சிங்கிடமே செஞ்சிக் கோட்டை ஒப்படைக்கப் பட்டது. செஞ்சிக் கோட்டையை சொரூப் சிங்கிடம் வழங்கியது ஔரங்கசீப் என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது.
இப்படித்தான் ராஜா தேசிங்கின் தந்தையார், தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். ஆக அந்தச் செஞ்சிக் கோட்டையின் மன்னன் சொரூப் சிங்கிற்கும் மனைவி ரமா பாய்க்கும் பிறந்தவர்தான் தேசிங்கு ராஜா.
செஞ்சிக் கோட்டை எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கிறது. கிழக்கே ராஜகிரி மலை. வடக்கே கிருஷ்ணகிரி மலை. தெற்கே சந்திரகிரி மலை.
2006-ஆம் ஆண்டு இந்தக் கோட்டைக்குச் சென்று இருக்கிறேன். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. யானைகளைக் கட்டிப் போடுவதற்காக லயங்கள் கட்டி இருக்கிறார்கள். எல்லாமே கல் பாறைகள். இன்னும் அப்படியே இருக்கின்றன. படிகளில் ஏறிச் செல்வதுதான் சிரமமாக இருந்தது. சரி. விசயத்திற்கு வருவோம்.
செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங் நிர்வகித்து வரும் போது டில்லியில் ஔவுரங்கசீப் நோய்வாய்ப் பட்டு இறந்து போனார். அவருக்குப் பதிலாக ஷா ஆலம் என்பவர் டில்லி சுல்தான் ஆனார்.
அப்போது சுல்தான் ஷா ஆலம் புதிதாக ஒரு முரட்டுக் குதிரையை வாங்கி இருந்தார். அந்தக் குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அதனால் அந்தக் குதிரையை எந்த ஒரு சிற்றரசர் அடக்குகிறாரோ அவருக்கு அப்போது அவர் நிர்வாகம் செய்யும் சிற்றரசு அன்பளிப்பாக வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பு செய்தார்.
இந்தக் கதை நாளை தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக