04 மார்ச் 2019

பத்திரிகா தர்மம்

பத்திரிகைகளுக்குள் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையும் தாண்டிய நிலையில் தனிப்பட்ட இணக்குப் பிணக்குகள் இருக்கலாம். குரோதங்கள் இருக்கலாம். மனக் கசப்புகளும் இருக்கலாம். அது வழமை.

ஆனால் பத்திரிகா தர்ம நெறிமுறைகளில் மட்டும் வேறுபாடுகள் இருக்கவே கூடாது. பத்திரிகா தர்மம் என்றால் அது ஒரு பத்திரிகையின் தர்மம். அது ஒரு சமூகப் பொறுப்பு. ஒரு சமூகத்தின் நிலைப்பாடு. அது ஒரு பொதுவான பத்திரிகை நியதி.

செய்திகளை வெளியிடுவதும் தவிர்ப்பதும் ஒரு பத்திரிகையின் தனிப்பட்ட சுதந்திரம் என்று சிலர் சொல்லலாம். ஆனால் நடைபெற்றது உலகத் தமிழர்களின் நிகழ்ச்சி அல்லவா. அதை நினைத்துப் பார்த்து இருக்க வேண்டும்.

உலகத் திருக்குறள் மாநாடு. உலகளாவிய நிலையில் மூன்று நாட்கள் நிகழ்ச்சி. மலேசியாவில் இருந்து 300 பேராளர்கள். வெளி நாடுகளில் இருந்து 200 பேராளர்கள்.

அதைப் பற்றிய செய்திகள் தமிழ் மலர் தினசரியில் மட்டுமே வெளி வந்தன. மற்ற இரு தமிழ்ப் பத்திரிகைகளிலும் மாநாட்டு செய்திகள் பிரசுரிக்கப் படவில்லை. புறக்கணித்து விட்டன.

மாநாட்டை யார் நடத்தினார்கள் என்பது முக்கியம் அல்ல. ஆனால் ஓர் உலகத் தமிழ் மாநாட்டைப் பற்றி செய்திகளைப் பிரசுரிக்காத தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றி என்னவென்று சொல்வது.

அட எதிரியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நடப்பது உலகத் தமிழர்களின் நிகழ்ச்சி அல்லவா. அதுவும் அந்தப் பத்திரிகைகள் விறபனையாகும் நாட்டில் அல்லவா நடைபெறுகிறது. அதையாவது நினைத்துப் பார்த்து இருக்கலாமே.

எங்கே போனது தமிழ் உணர்வு. தமிழை வைத்துச் சம்பாதிக்க மட்டும் நோக்கம் இருக்கிறது. ஆனால் அதைப் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் போய் விட்டதே. வேதனையாக இருக்கிறது.

என்னைக் கேட்டால் பத்திரிகா தர்மத்தில் காழ்ப்புணர்வு கலக்கவே கூடாது. அப்படிப் பார்த்தால் அது பத்திரிகைச் சுதந்திரம் அல்ல. படிப்போர் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சைக் கலக்கும் விஷப் பரீட்சை.

பத்திரிகை உலகில் வியாபாரப் போட்டி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் குறுகிய நோக்கங்கள் ஆட்கொள்ளும் போது பத்திரிகா தர்மமும் இடிந்து விழுந்து இறந்து போகிறது.

உண்மைகள் சுடும் என்று சொல்வார்கள். ஆனால் பத்திரிகா தர்மத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி போகப் போக ரொம்பவே சுடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக