18 மே 2019

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2019

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். வீர உணர்வுகளில் வீர காவியமான வீர மறவர்களை நினைத்துப் பார்க்கும் நாள். சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைந்து பார்க்கும் நாள்.

வீர வணக்கத்திற்கு உரிய நாள். தமிழீழத் தமிழர்களின் நினைவு நாள். வீர வணக்கம்.

அந்த நாளில் தமிழ் மக்களுக்காகவும் தமிழீழத் தேசியத்துக்காகவும் பல நூறு தளபதிகளும் பல ஆயிரம் போராளிகளும் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து இருக்கிறார்கள்.  அதற்கும் அப்பால் இனமான அடையாளத்தைக் காப்பாற்ற ஆயிரக் கணக்கான தமிழர்கள் இறுதி வரையில் போராடி இருக்கிறார்கள். 



இருப்பினும் உலகத் தமிழ் மக்களின் வாழ்வியல் கூற்றில் அந்த நாள் கறை படிந்து போனது தான் வேதனையிலும் வேதனை. கொடுமையிலும் கொடுமை.

மே- 18  எனும் அன்றைய பொழுது மட்டும் விடியாதது போல எத்தனையோ தமிழர்கள் இன்றும் சுயநினைவு இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பித்துப் பிடித்து அலைகின்றார்கள்.

ஆகவே அந்த நாளை நினைவுகூர வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமையமாகும்.



தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பாருங்கள். உண்மையில் அந்த நாள் தமிழினத்தின் சாபக்கேடான நாளாக அமைகின்றது. மன்னிக்கவும்.

துடிதுடித்துக் கதறிக் கதறி அழுத அவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறோம். அழுகிறோம். வேறு எதையும் செய்ய முடியவில்லை. கடைசி நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போனதை நினைத்து நினைத்துக் காலம் பூராவும் கண்ணீர் விடுகிறோம். இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சி காலைவாரி விட்டது ஒரு சாபக் கேடு. அந்தக் கட்சிக்கு தூக்குச் சட்டி தூக்கிய இத்தாலி இட்லி சாம்பாருக்குத் தலைமுறைக் கேடு.

பக்கத்து நாட்டில் வீரவசனம் பேசிய ஒரு கிழட்டு முண்டம் மட்டும் நினைத்து இருந்தால், மனசு வைத்து இருந்தால் தமிழீழத் தமிழர்களைக் காப்பாற்றி இருக்கலாம். 



ஆனால் பல இலட்சம் உயிர்களைப் பணயம் வைத்து தம் மகளின் பதவிக்காக வேட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு பறந்து பறந்து பல்டி அடித்ததையும் இங்கே இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சாபம் விட வயசு இல்லை. வெட்கம்.

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட அந்த நாளைத் தானைத் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனை இழந்து தவிக்கின்ற நாள் என்றும் நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழ் மக்களின் குருதியால் வரலாற்றுப் பக்கங்கள் எழுதப்பட்ட அந்த நாளில் உலகமே கண்ணீர் சிந்தியது. தமிழர்கள் சிந்திய அந்தக் குருதி தமிழீழதில் இரத்த ஆறாய்ப் பெருக்கடுத்து ஓடியது. ஆனால் அதே அந்த நாளை, சிங்களம் வெற்றி நாளாகக் கொண்டாடியது. எஞ்சி இருந்த தமிழர்களின் இரத்தத்தை நக்கித் தீர்த்தது.



முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது உலகம் எங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஆறாத் துயரத்தையும் நீங்காத வடுக்களையும் பதித்து விட்டுச் சென்ற நாள் ஆகும்.

அந்த எழுச்சி நாளில் அந்த வீரத் திலகங்களை நாம் அனைவரும் நெஞ்சில் சுமந்து நினைவுகூர்வோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் முதல் மரியாதை.

விடுதலை போரில்  வீர மரணம் எய்திய அத்தனைத் தமிழ் மக்களுக்கும் வீர வணக்கங்களை சமர்ப்பிக்கின்றோம்.



*தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்* எனும் விதையை ஒவ்வொரு தமிழனும் தங்களின் உணர்வுகளில் விதைக்க வேண்டும். அந்த உயர்ந்த விடுதலை இலட்சியத்தை உயிர் விதையாக நினைத்துப் பயணிக்க வேண்டும். 

*நாம் வீழ்ந்தது... இதுவே இறுதியாக இருக்கட்டும்!*

*தமிழினம் வாழ்வது. .. இனிமேல் உறுதியாக இருக்கட்டும்!*


வீரத் தமிழ் மக்களுக்குக் கண்ணீர் துளிகளால் வீர வணக்கம் வடிக்கிறேன். *வீர வணக்கம்*

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக