20 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 6

தமிழ் மலர் - 20.05.2019

தாஜ் மகாலைப் பற்றிய சில முக்கிய தகவல்கள். மும்தாஸ் மகால் இறந்த அதே 1631-ஆம் ஆண்டில் தாஜ்மகாலின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. பிரதானக் கட்டடம் 1648-ஆம் ஆண்டில் அதாவது 17 வருடங்களுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது. 



கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களைத் தங்க வைப்பதற்குத் தாஜ் மகாலுக்கு அருகில் ஒரு நகரம் உருவாக்கப் பட்டது. அதன் பெயர் மும்தாஜபாத். அந்த நகரத்தில் 22 ஆயிரம் வேலையாட்கள் தங்கி இருந்தார்கள். அனைவருமே தாஜ் மகால் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள்.

பிரதானக் கட்டடத்திற்கு அருகாமையில் இருந்த மற்ற மற்றக் கட்டடங்கள், பூங்காக்கள் போன்றவை 1654-ஆம் ஆண்டு வாக்கில் முடிக்கப் பட்டன.

தாஜ் மகால் கட்டி முடிக்கும் சமயத்தில் அதைப் பார்த்து ஷா ஜகான் இப்படிச் சொன்னாராம். "யார் என்ன குற்றம் செய்து இருந்தாலும் இந்த மாளிகைக்குள் தஞ்சம் அடைந்தால் அவர் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறுவார். அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். சூரியனும் சந்திரனும் கண்ணீர் வடிப்பார்கள். நம்மைப் படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இந்தக் கட்டடம் கட்டப் பட்டு உள்ளது" என்று சொன்னாராம். 



தாஜ் மகால் என்கிற உலக அதிசயம் பாரசீகக் கட்டடக் கலை மரபுகளையும் மொகலாயக் கலை மரபுகளையும் கொண்டது.

ஷா ஜகானுக்கு முன்னால் ஆட்சி செய்த ஜகாங்கீர், அக்பர், ஹுமாயூன், பாபர் போன்ற மாபெரும் மன்னர்கள் கட்டிய கட்டடங்கள் அனைத்துமே பெரும்பாலும் சிவப்பு நிற மணல் கற்களால் கட்டப் பட்டவை.

ஆனால் ஷா ஜகான் மட்டுமே வெண்ணிறப் பளிங்குச் சலவைக் கற்களைப் பயன்படுத்தி தாஜ் மகாலை உருவாக்கி இருக்கிறார்.

தாஜ் மகாலுக்குப் போகிறவர்கள் பிரதானக் கூடத்தில் ஷா ஜகான் சமாதியையும் மும்தாஜ் மகாலின் சமாதியையும் பார்க்கலாம். கை எடுத்துக் கும்பிட்டு விட்டு வரலாம்.

ஆனால் உண்மையில் அவை அவர்களுடைய உண்மையான சமாதிகள் அல்ல. அவை மாற்று அடக்கச் சமாதிகள். அவர்கள் உண்மையாக அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகக் கீழே உள்ள கீழ்த் தளத்தில்தான் இருக்கிறது. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்

 .

அங்கே போவதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டார்கள். கடைசியாகப் போய்ப் பார்த்தவர்கள் நேஷனல் ஜியாகிராபிக் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள். 2013-ஆம் ஆண்டு அவர்கள் பல ஆய்வுகள் செய்து, காணொலிப் படங்கள் எடுத்து உலகத்திற்கே அந்த உண்மையை அறிவித்தார்கள்.

ஆக்ரா நகருக்குத் தெற்கே யமுனா ஆற்று ஓரத்தில் தாஜ்மகாலைக் கட்டுவதற்குத் திட்டம் போட்டார்கள். இப்போது தாஜ்மகால் கட்டப்பட்ட நிலம் இருக்கிறதே அது மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான நிலமாகும்.

ஜெய் சிங்கின் நிலத்தைப் பெறுவதற்காக அவருக்கு ஆக்ரா நகரில் ஒரு பெரிய அரண்மனை வழங்கப் பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அரண்மனை வழங்கப்படவில்லை. நான்கு மாளிகைகள் வழங்கப் பட்டன. மகாராஜா ஜெய் சிங் என்பவர் ராஜா மான் சிங் என்பவரின் பேரன் ஆகும். ஒரு வகையில் ஷா ஜகானுக்குச் சொந்தக்காரர்.



ஜெய் சிங்கிடம் இருந்து புதிதாகக் கிடைத்த நிலம் மூன்று ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டது.

இன்னும் ஒரு சர்ச்சைக்குரிய தகவல். மகாராஜா ஜெய் சிங்கின் நிலத்தில் ஏற்கனவே ஒரு சிவன் கோயில் இருந்தததாக ஒரு சர்ச்சை. அதாவது அந்தச் சிவன் கோயிலை உடைத்துவிட்டுத் தான் தாஜ் மகாலைக் கட்டினார்கள் எனும் சர்ச்சை. இருபது ஆண்டு காலமாக அந்தச் சர்ச்சை நீதிமன்ற வாசல் படிகளை மிதித்து வழக்காடிக் கொண்டு இருந்தது. அதைப் பற்றி ஒரு சின்ன விளக்கம்.

*தெஜோ மகால்* என்று அழைக்கப்பட்ட சிவன் கோவில் தான் தாஜ் மகால் என்றும்; அதன் மீதுதான் ஷா ஜகான் கல்லறை எழுப்பினார் என்றும்; தாஜ்மகாலில் உள்ள அறைகள், சிற்பங்கள் அனைத்தும் இந்து நினைவுச் சின்னங்கள் என்பதை நிரூபிக்கிற வகையில் உள்ளன என்றும்; 2001-ஆம் ஆண்டில் பி.என். ஓக் எனும் வரலாற்று ஆசிரியர் வழக்கு தொடுத்தார்.

அதைப் பற்றி 1989-ஆம் ஆண்டு தாஜ் மகால்: உண்மைக் கதை (Taj Mahal: The True Story) எனும் ஓர் ஆய்வு நூலையும் பி.என். ஓக் எழுதினார். தாஜ் மகால் இருந்த இடத்தில் ஏற்கனவே ஒரு சிவன் கோயில் இருந்ததாகப் பொது மேடைகளில் வாதிட்டார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இருந்தாலும் பி.என். ஓக் அவர்களின் மனுவை 2000-ஆம் ஆண்டில் இந்திய உச்ச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருடைய மனுவை தலையணியில் ஒரு தேனீ (a bee in his bonnet) என்று வர்ணித்தது.

1196-ஆம் ஆண்டு டில்லியை ஆட்சி செய்த இந்து மன்னரான பர்மார் டேவ் என்பவர் தான் தாஜ் மகாலைக் கட்டினார் என்று அமார் நாத் மிஸ்ரா எனும் மற்றொரு சமூகவியலாளரும் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.



தாஜ் மகால் ஓர் இந்து ஆலயம் என 2017-ஆம் ஆண்டு வரை நிறைய வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தொடரப் பட்டன. அதுவே ஒரு பெரிய பிரச்சினையாக ஓடிக் கொண்டு இருந்தது.

வேறு வழி இல்லாமல் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுக் கழகம் (Archaeological Survey of India (ASI) களம் இறங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டது. பல்வேறான புவியியல் ஆய்வுகள் செய்தது.

கடைசியில் அதே 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த ஆய்வுக் கழகம்  ஒரு முடிவறிக்கையை வெளியிட்டது. தாஜ் மகால் கட்டப்பட்ட இடத்தில் எந்த ஓர் இந்து ஆலயமும் இல்லை என்று ஒரு முடிவான அறிக்கையை வெளியிட்டது.

தாஜ் மகால் கட்டப்பட்ட இடம் மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இடம். யமுனா நதிக் கரையில் இருந்த அந்த இடம் ஷா ஜகானுக்குத் தேவைப் பட்டது. 



அந்த இடத்திற்குப் பதிலாக ஆக்ரா நகரத்தின் மையத்தில் மகாராஜா ஜெய் சிங்கிற்கு நான்கு மாளிகைகளை ஷா ஜகான் வழங்கி இருக்கிறார். நிலத்திற்குப் பதிலாக நான்கு மாளிகைகள். 1632-ஆம் ஆண்டு நடந்த ஓர் உடன்படிக்கை.

அந்த உடன்படிக்கை கையெழுத்தான போது அங்கே ஒரு சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இது வரையிலும் கிடைக்கவில்லை.

சான்று: https://www.hindustantimes.com/india-news/is-the-taj-mahal-a-mausoleum-or-a-shiva-temple-cic-tells-government-to-clarify/story-bYyd6mFUmFbrIjOJnbP9CI.html

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலுக்கு அடித்தளம் (Foundation) எப்படிப் போட்டு இருக்கிறார்கள். அதுவும் ஒரு பெரிய அதிசயம். தெரிந்து கொள்ளுங்கள். யமுனா ஆற்றுக் கரைப் பகுதிகளில் ஆங்காங்கே பெரிய பெரிய அகழிகள் தோண்டப் பட்டன.

அந்த அகழிகளில் நீர் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் ஆழத்திற்கு தேக்கு, கருங்காலி மரங்களை அடித்து இறக்கி இருக்கிறார்கள். அதன் பின்னர் இரும்புக் கட்டிகள்; கரிசல் கற்களைக் கொட்டி நிரப்பி இருக்கிறார்கள். தேக்கு மரங்கள் அசாம், வங்காள தேசக் காடுகளில் இருந்து கொண்டு வரப் பட்டவை.



ஏன் ஆற்றங்கரையில் அப்படி வலுவான அடித்தளங்களை அமைத்தார்கள்? யமுனா ஆற்றங்கரை மணல் நிறைந்த பகுதி. ஆற்றுப் படுகை பலமாக இருந்தால் தான் அருகில் இருக்கும் பிரதான தாஜ்மகால் கட்டடம் ஆட்டம் காணாமல் நிலைத்து நிற்கும்.

பின்னர் அகழிகளின் மண் நன்றாக இறுக்கம் அடையச் செய்யப் பட்டது. அதன் பின்னர் இருபது அடி உயரத்திற்கு கரிசல் மண் அதன் மீது கொட்டப்பட்டது. அதன் மீது உடனடியாக மரங்கள் நடப்பட்டன.

மரங்கள் இருந்தால் ஆற்றுப் படுகை பலமாக இருக்கும். அருகில் இருக்கும் பிரதான தாஜ் மகால் கட்டடமும் வலுவுடன் இருக்கும். எப்பேர்ப்பட்ட பொறியியல் நுணுக்கம். 

அதன் பின்னர் தாஜ் மகால் பிரதானக் கட்டடத்தின் அடிப் பாகத்தில் 50 மீட்டர் ஆழத்திற்கு கிணறுகள் தோண்டப் பட்டன. (50 மீட்டர்). அந்தக் கிணறுகளில் ஆற்றுக் கற்களையும், சிறு சிறு பாறைகளையும், கருங்கற்களையும், மரத் தைலங்களையும் சேர்த்து நிரப்பி இருக்கிறார்கள். 



அதுதான் தாஜ் மகாலின் அசல் அஸ்திவாரம். அசல் அடித்தளம். சிமெண்டு சுண்ணாம்புக் கலவைகள் சேர்க்காத அஸ்திவாரம். அடித்தளங்கள் அமைக்க மட்டும் ஓர் ஆண்டு காலம் பிடித்து இருக்கிறது.

அதனால் தான் தாஜ் மகால் இன்றைக்கும் ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஆகராவில் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இருந்தாலும் தாஜ் மகாலுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட பலமான அஸ்திவாரத்தைப் போட்டு இருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் கட்டடங்களைக் கட்டுவதற்கு காட்டு மூங்கில்  சாரங்களைப் பயன்படுத்தினார்கள். இந்தக் காட்டு மூங்கில்கள் காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்டன.

ஆனால் தாஜ் மகாலைக் கட்டுவதற்கு மூங்கில் சாரங்களைப் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாகப் செங்கற்களால் ஆன தற்காலிக மேடை அமைப்புக்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

அதாவது தாஜ் மகால் கட்டடத்தைச் சுற்றிலும் செங்கற்களை 150 மீட்டர் உயரத்திற்கு அடுக்கி மேலே கொண்டு போய் இருக்கிறார்கள். அதன் மேல் பக்கவாட்டுச் சாரங்களை அமைத்து அந்தச் சாரங்களின் மேல் ஏறி வேலை செய்து இருக்கிறார்கள்.

தாஜ் மகால் கட்டி முடித்த பிறகு அதற்குப் பயன்படுத்தப் பட்ட செங்கல் சாரங்களை அகற்றுவதில் பிரச்சினை. அந்தச் சாரங்களை எல்லாம் அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும் என்று கட்டிடக் கலைஞர்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள். சரி. அந்தச் சாரங்களை எளிதாக அகற்றுவதற்கு வழி இருக்குமா என்றும் யோசித்துப் பார்த்தார்கள்.

ஓர் ஐடியா கிடைத்தது. கட்டடம் கட்டி முடிந்ததும் யார் வேண்டும் என்றாலும் சாரக் கற்களை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் கற்களை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என தண்டோரா போட்டார்கள். அவ்வளவுதான். ஒரே இரவில் அத்தனைச் செங்கற்களும் மாயமாய் மறைந்து விட்டன. 



இரண்டே நாட்களில் தாஜ் மகால் தனியாக நின்று புன்னகை செய்தது. பாருங்கள். சாரக் கற்களை அகற்ற வேண்டிய ஒரு வேலை பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால்  ஒரே நாளில் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டார்கள்.

அதற்கு எல்லாம் காரணம் சாதுயர்யமான புத்திகள். சாணக்கியமான ஐடியாக்கள். அந்தச் சாதுயர்யமான புத்திகளில் நல்ல நல்ல திறமைகளும் தேவை. நேரம் காலம் அறிந்த நுண்புலமையும் தேவை.. இந்த மாதிரி எல்லாம் யோசிப்பவர்கள் அப்போதும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.

சரி. தாஜ் மகாலின் உயரம் 171 மீட்டர். அதாவது 561 அடி. கிட்டத்தட்ட கால் கிலோ மீட்டர் உயரம். அந்த உயரத்திற்குப் பளிங்குக் கற்களை எப்படிக் கொண்டு போய் இருப்பார்கள். அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா. ஒவ்வொரு கல்லும் டன் கணக்கில் எடை கொண்டவை.

அந்தப் பளிங்குக் கற்களைத் தூக்குவதற்குச் சுமை ஓங்கிகளும் இல்லை. சுமை தாங்கிகளும் இல்லை. அந்தக் காலத்தில் சுமைத் தூக்கி இயந்திரங்கள் கண்டிபிடிக்கவில்லை. ஆக என்ன செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.

அதற்காகச் சாய்தளப் பாதையை அமைத்தார்கள். சாய்தளப் பாதை என்றால் சாய்ந்த வாக்கில் பாலம் அமைப்பது. ஆங்கிலத்தில் (Ramp) என்று சொல்வார்கள். உச்சிக்குப் போவதற்கு அந்தப் பாலங்கள் பயன்படுத்தப் பட்டன.

பெரிய பெரிய தேக்கு மரங்களை அசாம், வங்காள தேச காடுகளில் இருந்து வெட்டிக் கொண்டு வந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாய் பாலம் அமைத்து இருக்கிறார்கள்.

தவிர அந்தச் சாய் பாலத்தின் மீது மண்ணையும் ஆற்று மணலையும் சின்னச் சின்னப் பொடிக் கற்களையும் கொண்டு வந்து கொட்டி நிரப்பி இருக்கிறார்கள். தண்ணீரை ஊற்றி நன்றாக இறுகச் செய்த பிறகுதான் அதில் சுமைகளை ஏற்றி இருக்கிறார்கள். ஆகரா நகரத்தின் மேலே அந்தச் சாய் பாலம் சாய்ந்த வாக்கில் போய் இருக்கிறது.

பளிங்குக் கற்களை அவ்வளவு உயரத்திற்கு ஏற்றி மேலே இழுத்துச் செல்ல வேண்டுமே. ஒவ்வொரு பளிங்கு கல்லும் பத்து பதினைந்து டன் எடை கொண்டது ஆயிற்றே. சும்மாவா. அதற்கு என்ன செய்தார்கள் தெரியுமா. எருமை மாடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற இடங்களில் இருந்து கிர் வகை எருமைகளைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். பஞ்சாப்பில் இருந்து சிந்தி, மாஹி எருமைகளைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு எருமையின் சராசரி எடை 600 - 800 கிலோ.

ஒரு பளிங்கு கல்லை இழுத்துச் செல்ல 20 அல்லது 30 எருமை மாடுகள் பயன்படுத்தப் பட்டன. மறுபடியும் சொல்கிறேன். ஒரு பளிங்குக் கல்லின் எடை பத்து பதினைந்து டன்கள்.

ஆக தாஜ் மகாலுக்கு அருகில் ஓர் எருமைப் பண்ணையே வைத்து பராமரித்து இருக்கிறார்கள். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது. அந்தப் பண்ணையில்ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் எருமைகள் வரை இருந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அந்த எருமைகளைக் கவனித்துக் கொள்ள மட்டும் 300 - 400 பேர் வேலை செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

சான்றுகள்

1. Carroll, David (August 1975). Taj Mahal (Hardback). Wonders of Man. Newsweek, US.  ISBN 0-88225-024-8.

2. Balasubramaniam, R (10 July 2009). "New insights on the modular planning of the Taj Mahal" (PDF).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக