07 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 6




இலங்கையில் ஜே.வி.பி. இயக்கம் என்பது இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஒரு சிங்கள இயக்கம். ஆங்கிலத்தில் ஜனதா விமுக்தி பெராமுனா. (Janatha Vimukthi Peramuna). இந்தக் கட்சியைத் தான் சுருக்கமாக JVP என அழைக்கிறார்கள். 1970 - 80-களில் தேசிய வாதத்தை முன்னெடுத்த ஒரு தீவிரவாத இயக்கம். இந்த இயக்கத்தினால் இலங்கையில் நிறையவே உயிரிழப்புகள்.

இன்றைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணி (People's Liberation Front) என்று பெயர் மாற்றம் கண்டு உள்ளது. இலங்கை அரசியலில் மூன்றாவது பெரிய சக்தியாக விளங்கி வருகிறது. 1965-ஆம் ஆண்டு ரோகண் விஜயவீரா என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட கட்சி.



ரோகண் விஜயவீரா
சிங்கள மக்களுக்கு இடையே முதன்முதலாக ஓர் ஆயுதக் கிளர்ச்சி நடந்தது. அதை ஜே.வி.பி. முதல் கிளர்ச்சி அல்லது ஜே.வி.பி. முதல் கலவரம் என்று சொல்வார்கள். 1971-ஆம் ஆண்டு நடந்தது. அந்தக் கிளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தவர் ரோகண் விஜயவீரா.

உலகப் புகழ் புரட்சியாளர் சே குவேரா. தெரியும் தானே. அவரின் வழிமுறைகளை ரோகண் விஜயவீரா தீவிரமாகப் பின்பற்றினார். இலங்கையின் அப்போதைய ஏழை  இளைஞர்களை ரோகண் விஜயவீராவின் கம்யூனிசக் கொள்கைகள்  பெரிதும் கவர்ந்தன.

ரோகண் விஜயவீரா, ரஷ்யாவிற்கு மருத்துவம் படிக்கப் போனவர். ஆனால் அங்கே போனவர் ரஷ்யாவின் கம்யூனிசக் கொள்கைகளையே எதிர்ப் பேசியவர். இவரின் அந்த மாறுபட்ட கொள்கையினால் அங்கு இருந்து வெளியேற்றப் பட்டார்.

ரோகண் விஜயவீரா தலைமையில் இரு முறை புரட்சிகள் நடந்து உள்ளன. முதல் புரட்சி 1971-ஆம் ஆண்டு;  இரண்டாவது புரட்சி 1986-ஆம் ஆண்டு.




1989-ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது புரட்சியின் இறுதிக் காலக் கட்டத்தில் இராணுவத்தினரால் ரோகண் விஜயவீரா சுட்டுக் கொல்லப் பட்டார். அப்போது அவருக்கு வயது 46. ஒன்று மட்டும் உண்மை. இலங்கையின் வடக்கே பிரபாகரனின் தமிழீழப் போராட்டங்கள் உச்சத்தில் இருக்கும் போது கீழே தெற்கே ரோகண் விஜயவீராவின் சோசலிசப் போராட்டங்களும் உச்சம் பார்த்தன. இருவருமே பெரும் போராட்டவாதிகள்.

ரோகண் விஜயவீராவின் சோசலிசப் போராட்டங்களினால் இலங்கையிலே பல்லாயிரம் சிங்கள உயிர்கள் பலியாகி உள்ளன. ஏறக்குறைய 35,000 பேர் இறந்து இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.


இரண்டாவது புரட்சியின் இறுதிக் கட்டத்தில் பெரும்பாலான ஜே.வி.பி. போராட்டவாதிகள் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து சில வடகொரியா ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.

அவற்றின் மூலம் ஜே.வி.பி. போராட்டவாதிகளுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கி வந்ததாக இலங்கை அரசிற்குச் சந்தேகம். அதனால் வடகொரியாவுடன் கொண்டு இருந்த அனைத்து தொடர்புகளையும் இலங்கை துண்டித்துக் கொண்டது. 




இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடித் தூதரக உறவுகள் இதுவரையிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வழியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிக அண்மையில் 2017-ஆம் ஆண்டில் நான்கு வட கொரியர்களை இலங்கைக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

1970-ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. போராட்டங்களுக்கு வட கொரியா உதவி செய்ததாகக் குற்றம் சாட்டிய அதே இலங்கை; 1990-களில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது.

இந்த முறை தமிழீழப் போராளிகளுக்கு ராக்கெட்டுகள்; நீர்மூழ்கிக் கப்பல்கள்; ஏவுகணைகள் போன்ற நவீன ஆயுதத் தளவாடங்களை வழங்கியதாகக் குற்றச்சாட்டு. அதுவும் பெரிய வரலாறு. இப்போது வேண்டாமே.

சிங்கள ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சிகள் பிரபாகரனுக்கும் குட்டிமணி தங்கதுரைக்கும் புதிய பார்வையைத் திரட்டிக் கொடுத்தன.

முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் தான் ஜே.வி,பி. தோல்வி கண்டது என்பதே அவர்களின் பார்வை. ஆனாலும் சிங்கள அரசை ஆட்டம் காண வைத்து விட்டார்கள் என்பதும் வேறு ஒரு பார்வை. 

 

ஆக ஒழுங்கான திட்டமிடல் செய்து இருந்தால்; முறையான உரிமைப் போராட்டம் செய்து இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பது பிரபாகரன் கணக்கு. அதை எழுதியும் வைத்து இருக்கிறார்.

ஜே.வி.பி.யின் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் தான் ஈழத் தமிழர்களின் மத்தியில் மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்கிற கொள்கையும் தீவிரம் அடைந்தது.

அதன் பின்னர் தங்களுக்குத் தேவையான துப்பாக்கிகளை ஓரளவிற்குப் பிரபாகரன் தயாரித்துக் கொண்டார். குண்டுகளையும் சிறிது சிறிதாகத் தயாரிக்கத் தொடங்கினார். ஒரு முக்கியமான விசயம். இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு வரலாற்றுப் பார்வை.

வரலாற்றில் என்ன இருக்கிறதோ அதை மீட்டு எடுத்துப் போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். யாரையும் அல்லது எந்த ஓர் அமைப்பையும் அல்லது எந்த ஒரு நிர்வாகத்தையும் சிறுமைப்படுத்தும் எண்ணத்துடன் எழுதவில்லை. 




வரலாற்றை வரலாறாகப் பார்ப்போம். வரலாற்றில் உள்ள நல்ல விசயங்களை ஏற்றுக் கொள்வோம். கெட்ட விசயங்களைத் தவிர்த்து விடுவோம்.

ஒருநாள் பிரபாகரனின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. ஓர் அடர்ந்த காட்டில் வெடிமருந்துகளைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தார். அவரின் நண்பர்கள் தங்கதுரையும் சின்னஜோதியும் உடன் இருந்தார்கள்.

அப்போது திடீரென ஒரு குண்டு வெடித்து விடுகிறது. பிரபாகரன் சத்தம் போடுகிறார். அவருடைய காலில் ஒரு பகுதி கருகி விடுகிறது. கொஞ்ச நேரம் வலியால் துடிக்கிறார். நண்பர்களுக்குப் பயம். பிரபாகரனுக்கு என்ன நடந்தது என பதைபதைத்துப் போகிறார்கள். ஆனால் பிரபாகரன் கொஞ்ச நேரத்தில் தரையில் இருந்து எழுகிறார். தன்னுடைய காலை உயர்த்திக் காட்டி சத்தமாகப் பேசுகிறார்.

“பாருங்கள். இனி என் பெயர் கரிகாலன். அப்படியே கூப்பிடுங்கள். என் கால் கருமையாகி விட்டது. இனி நானும் ஒரு கரிகாலன் தான் என்று சொல்கிறார்.

கரிகாலன் என்பவர் மாபெரும் சோழ மன்னன். பிரபாகரனுக்கு கரிகாலன் மீதும் சோழர்கள் மிகுந்த பற்றுதல். அதற்குக் காரணம் சாண்டில்யனின் கடல்புறா எனும் வரலாற்று நூல்தான். அது மட்டும் அல்ல. பகவத்கீதை, மகாபாரத கதைகளின் மீதும் பிரபாகரனுக்கு மிகுந்த ஆர்வம்.

மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரம் தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்; நட்புக்கு இலக்கணமானவர் கர்ணன் என்று பிரபாகரன் அடிக்கடி சொல்வாராம். சரி.


இந்தக் கட்டத்தில் தான் இந்தியா பாகிஸ்தான் போர் நடக்கிறது. வங்காள தேசம் எனும் நாடு உருவாகிறது. அந்த வகையில் இந்தியா தங்களுக்கு உதவி செய்யும்; வங்காள தேசத்தைப் போலவே தமிழீழத்தையும் மீட்டுக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பினார்கள்.

இந்தியாவிற்கு ஆதரவாக சில ஊர்வலங்களையும் ஈழத் தமிழர்கள் நடத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவைத் தமிழ் இளைஞர்கள் பெரிதும் நம்பினார்கள். அதற்கும் காரணம் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு மறைமுகமாக உதவி செய்து வந்தது.

இந்தியா பாகிஸ்தான் போர் நடக்கும் போது பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் வான் எல்லையில் பறக்க இயலாது. அதனால் இந்தியாவைச் சுற்றிக் கொண்டு இலங்கைக்குப் போய் அங்கே எண்ணெய் நிரப்பிக் கொண்டு வங்காள தேசத்திற்குப் போய் இருக்கின்றன. இந்திரா காந்திக்கு அப்போதே இலங்கையின் மீது கோபம் இருந்தது.

ஆக அந்த வகையில் இந்திய அரசு தங்களுக்கு உதவி செய்யும் என ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என நம்பி இருந்தார்கள்.

ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறு. ஈழத் தமிழர்களின் தலையில் அடுத்து ஒரு பயங்கரமான அடி விழுந்தது. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாற்றம். அதுவே தமிழர்களுக்குப் பயங்கர அடி.




சிலோன் என்னும் பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம் பெற்றது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு எதிராகப் பற்பல புதிய அம்சங்கள். அதனால் தமிழர்களின் பிரதிநியாக இருந்த தமிழரசுக் கட்சி பொறுமையை இழந்தது.

தமிழர்கள் இனியும் பிரிந்து இருக்கக் கூடாது; ஒன்றாகச் செயல்பட வேண்டும் என அந்தக் கட்சி முடிவு எடுத்தது. இலங்கையில் இருந்த சின்னச் சின்னத் தமிழ்க் கட்சிகள்; தமிழர் இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. தமிழ் கூட்டணி எனும் ஓர் இயக்கத்தை உருவாக்கின. இலங்கை அரசின் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தன.

ஆனால் ஒரு வேடிக்கை. இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்த ஐந்து தமிழர்த் தலைவர்கள் அந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இது தமிழர்களைப் பெரும் அளவில் பாதித்தது. தமிழனே தமிழனுக்கு துரோகியா என்று கோபம் அடைந்தார்கள். பழி வாங்க வேண்டும் எனும் எண்ணம் வந்தது.

முதலில் அருளம்பலம் என்பவரைத் தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டார்கள். ஆனால் அவர் அப்போது கொழும்பில் இருந்தார். சற்றே கடினம். அதனால் அடுத்த இலக்கு குமரகுலசிங்கம் என்பவர் மீது பாய்ந்தது. இவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். முதன் முதலாக இவர்தான் கொலை செய்யப் பட்டார். 




இது அரசாங்கத்தின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. தமிழர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல்கள்; பழி வாங்கும் படலத்தில் வன்முறைகளும் அதிகரித்தன. கோபம் அடைந்த தமிழ் இளைஞர்கள் இன்னும் கொடூரமாகப் புரட்சியில் இறங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து ஈழத் தமிழர்களிடையே ஆங்காங்கே சில பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. அதில் ஒன்று தான் பிரபாகரனால் 1972-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட புதிய தமிழ்ப்புலிகள் எனும் அமைப்பு.

சில தமிழ் இளைஞர்களை ஒன்று சேர்த்து அந்த அமைப்பு உருவாக்கப் பட்டது. கொஞ்சம் ஆயுதங்களையும் தயாரித்து வைத்துக் கொண்டார்கள்.

முதல் தாகுதல் 1972 செப் 17-ஆம் தேதி யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கில் நடந்தது. சக்தி வாய்ந்த குண்டு ஒன்றைப் பிரபாகரன் போலீசாரின் மீது வீசினார். அந்தக் குண்டை வீசியது பிரபாகரன் என்பது அவரின் நண்பர்களுக்குக் கூட அப்போது தெரியாது. இருப்பினும் பாதிப்புகள் குறைவு.

இருந்தாலும் பிரதமர் ஸ்ரீமாவோ சும்மா இல்லை. போலீஸ் மூலமாகத் தமிழர்களை அடக்க முயற்சி செய்தார். இராணுவமும் களம் இறங்கியது. ஈழத் தமிழர்களும் விடவில்லை. தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்தார்கள்.

1973 மார்ச் 5-ஆம் தேகதி பிரபாகரனைப் பற்றி போலீஸுக்குத் தெரிய வருகிறது. அப்போது பிரபாகரனுக்கு வயதுப் 18. 




நள்ளிரவு நேரம். பிரபாகரனின் வீட்டுக் கதவைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்தியம் பிள்ளை பலமாகத் தட்டுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்து விட்டது.

உடனே வீட்டின் பின்புறமாக வேலியைத் தாண்டி ஓடுகிறார். அவர் உடலை முள் கம்பிகள் கிழிக்கின்றன. சட்டை சிலுவார் எல்லாம் இரத்தம். கைகளிலும் கால்களிலும் இரத்தம். பக்கத்தில் இருந்த மாமா வீட்டிற்குத் தப்பிச் செல்கிறார். அங்கே மாற்றுச் சட்டையை எடுத்துக் கொள்கிறார். ஓட்டம் தொடர்கிறது.

இங்கே பிரபாகரனின் தந்தையார் வீட்டுக் கதவைத் திறக்கிறார், போலீசார் பிரபாகரனைப் பற்றி கேட்கிறார்கள். அவனைச் சுட்டுத் தள்ளுவோம் என எச்சரிக்கை செய்கிறார்கள். பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளைக்கும்; தாயார் பார்வதி அம்மாவுக்கும்; அக்காள்மார்களுக்கும் பிரபாகரனின் போராட்டங்கள் அப்போதுதான் தெரிய வருகின்றன.

நடந்தை அறிந்து தபார்வதி அம்மாவின் கண்கள் குளமாகின்றன. அக்காள்மார்கள் இருவரும் அம்மாவைச் சமாதானம் செய்கிறார்கள். இன்ஸ்பெக்டர் பாஸ்தியம் பிள்ளை பிரபாகரனின் அக்கா ஜெகதீஸ்வரியை பார்த்துச் சொல்கிறார். “உன் தம்பி சீக்கிரம் என் கிட்ட மாட்டுவான், அப்பதான் அவனுக்கு போலீசைப் பற்றி தெரியும் என்று சொல்லிவிட்டு விருட்டென கிளம்புகிறார். 




பிரபாகரன் குடும்பத்தில் ஒரே அதிர்ச்சி. அக்கா இருவரும் அம்மாவும் அதிர்ச்சியில் உறைந்து போய் விரைத்துப் போய் நிற்கிறார்கள். ஆனால் மகனைப் பற்றி நன்றாக அறிந்து வைத்து இருந்த அப்பா வேலுப்பிள்ளை அனைவரையும் சமாதானம் செய்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரனுக்கு அந்தச் சின்னப் பால்ய வயதில் தலைமறைவு வாழ்க்கை தொடர்கிறது. பகல் நேரங்களில் காட்டு வாழ்க்கை. இரவு நேரங்களில் ஏதோ ஒரு வீட்டின் மூலை முடுக்கில் ஒண்டு வாழ்க்கை.  ஒவ்வோர் இடமாக மாறி மாறி ஓட்டங்கள் தொடர்கின்றன.

இறுதியில் ஒரு காட்டில் பிரபாகரனைக் கண்டு பிடிக்கிறார் தந்தையார் வேலுப்பிள்ளை. தந்தையும் மகனும் சந்திக்கிறார்கள். தந்தையார் மகனிடம் சொல்கிறார். நீ தவறுகள் செய்து இருக்கலாம். ஆனால் உனக்கு என்று அப்பா அம்மா அக்கா அண்ணன் இருக்கிறார்கள். வீட்டிற்கு வா என அழைக்கிறார். ஒரு நிமிடம் ஆழ்ந்த அமைதி. பின்னர் பிரபாகரன் பதில் சொல்கிறார்.

“அப்பா இனிமேல் என்னால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். எனக்கு நிறைய கடமைகள் இருக்கு. அப்பா நீங்கள் இனிமேல் என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். தேடி வர வேண்டாம்.” என சொல்லிவிட்டு தந்தையிடம் இருந்து விடை பெறுகிறார் பிரபாகரன்,

அதன் பின்னர் தந்தையும் மகனும் நீண்ட காலம் சந்திக்கவே இல்லை. இரு துருவங்களில் இரு கோணங்கள். அந்த இரு கோணங்களும் தனித்தனியாய்ப் பிரிந்து பயணிக்கத் தொடங்குகின்றன.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக