16 June 2019

தந்தையர் தின வரலாறு

தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள். குழந்தையைக் கருவில் சுமந்து பெற்று எடுப்பவர் தாயார். ஆனால் அதே அந்தக் குழந்தையை நெஞ்சில் சுமந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் ஒரு தந்தையார். ஒரு தாயின் அன்பிற்கு நிகரானது ஒரு தந்தையின் பாசம்.  


தந்தையர்க்கு மரியாதையும் நன்றியும் சொல்லும் வகையில் தந்தையர் தினம் ஆண்டு தோறும் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினமாகப் கொண்டாடப் படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைச் செய்யவும்; அதே சமயத்தில் தந்தையர்களுக்குத் தகுந்த மரியாதை செய்யவும் தந்தையர் தினம் தொடக்கி வைக்கப் பட்டது.

தந்தையர்களுக்கு மட்டும் அல்ல முன்னோர்களின் நினைவு விழாவாகவும் அந்த நாளைக் கொண்டாடலாம் எனும் முன்னெடுப்பும் முன் வைக்கப்பட்டது.அதற்கு முன்னர்... மனதில் பட்டது. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துகிறார். அதே போல அந்தக் குழந்தையின் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைக்கிறார் தந்தை.

அன்னையிடம் அன்பை  வாங்கலாம்; தந்தையிடம் அறிவை வாங்கலாம் எனும் பாடல் வரிகள் போதும். அந்த வரிகள் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

ஒளவையார் சொல்லாத விசயம் இல்லை. அவர் ஆத்திச்சுவடியில் சொன்னவை  அனைத்தும் முத்து முத்தானவை. அனைத்தும் மண்ணில் பொதிந்த வைர மணிகள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தையர் தினம் என்பது 1910-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப் படுகிறது. அதற்குக் காரணமாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் (Sonora Louise Smart Dodd) என்கிற பெண்மணி.

இந்தத் தந்தையர் தினம் அப்படி ஒன்றும் சுலபத்தில் கிடைக்கவில்லை. பற்பல போராட்டங்கள். 33 ஆண்டுகள் போராட்டங்கள் செய்து இருக்கிறார்கள்.

1882-ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் (William Jackson Smart) என்பவருக்கு மகளாக பிறந்தவர் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட். ஒரே மகள். ஐந்து ஆண் பிள்ளைகள்.இவர் 16 வயதை அடையும் போது அவரின் தாயார் எல்லன் என்பவர் தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணம் அடைந்தார். அவருடைய தந்தையார் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன் ஆறு பிள்ளைகளையும் தாயாகவும் தகப்பனாகவும் நின்று வளர்த்து எடுத்தார்.

தன் தந்தையின் அந்த அர்ப்பணிப்பு உணர்வுகளை மகள் சொனாரா மறக்கவில்லை. விழிப்பு அடையச் செய்தன. தன் தந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.

இந்த நிலையில் 1909-ஆம் ஆண்டு அனைத்துல அன்னையர் தினக் கொண்டாட்டங்களுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் அளிக்கப் பட்டது.

அதை அறிந்த சொனாரா தன் தந்தையின் தியாக உணர்வுகள் என்பது அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. அவருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என வாதிட்டார். தன் தந்தையின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என தேவாலயத்தில் (Knox Presbyterian Church) முதன் முதலாக முன் மொழிந்தார்.

அனைத்துத் தந்தையர்களையும் கெளரவப் படுத்த வேண்டும் என்பது அவரின் விடாப்பிடியான இலட்சியம். தலியாய ஆசை.

1910  ஜூன் 19-ஆம் தேதி அதே அந்தத் தேவாலயத்தில் தன் தந்தைக்காக ஒரு புகழுரைக்கும் ஏற்பாடு செய்தார்.

பாதிரியார்கள் மறுத்து விட்டார்கள். ஏன் என்றால் அந்தக் கட்டத்தில் பாதிரியார்கள் தினம் எனும் புனிதநாள் புகழ்பெற்று விளங்கியது. விட்டால் பாதிரியார்கள் தினம் பாதிக்கப்படும் என்று நினைத்தார்கள். பல ஆண்டுகள் போராட்டம். சொனாராவும் விடவில்லை. Father's Day Council எனும் ஓர் அமைப்பை உருவாக்கி ஆதரவு திரட்டினார்.

தந்தையர் தினம் அதிகார்வப்பூர்வ நாளாக அறிவிக்கப் படுவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தது. இருந்த போதும் YWCA-இன் ஆதரவினால் சிறிய அளவில் கொண்டாடப்பட்டது.

ஒரு பக்கம் நாடு தழுவிய நிலையில் அன்னையர் தினக் கொண்டாட்டம். இன்னொரு பக்கம் கிராமப்புற அளவில் தந்தையர் தினத்தின் குதூகலக் கொண்டாடட்டம். சரியான போட்டி.

இதில் இளம் பெண்கள் தான் அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். வயது முதிர்ந்த பெண்கள் எட்டிப் பார்க்கவில்லை. பழசு பெரிசுகளைக் கிழவர்கள் என்று நினைத்து ஒதுக்கி வைத்து இருக்கலாம். சொல்ல முடியாது.

இப்போது மட்டும் என்னவாம். அன்னைமார்கள் பாட்டிமார்களின் இன ஒதுக்கல் இருக்கத் தானே செய்கிறது.  இருந்தாலும் சின்னப் பெண்களுக்கு உற்சாகம். அப்பாமார்களை விடுவார்களா.அம்மாவுக்கு நிகரனாவர் அப்பா தான் என போர்க் கொடி தூக்கினார்கள். பொதுவாகவே பெண்பிள்ளைகளுக்கு அப்பா என்றால் உயிர். தெரிந்த விசயம். ஆக பெண்பிள்ளைகள் விடுவார்களா.

உள்ளூர் செய்தித் தாட்களில் தந்தையர் தினத்திற்கு எதிர்ப்புகள். அதோடு விட்டால் பரவாயில்லை. நகைச்சுவை, பழிப்பு, பகடி, ஏளனம் கொண்ட கார்டூன்கள் வெளிவந்தன.

1913-ஆம் ஆண்டில் தந்தைய தின மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் கால்வின் கூலிட்ஜ். இவர் 1924-ஆம் ஆண்டில் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தார்.

மேலும் இதன் விடுமுறையை சட்டமாக்குவதற்காக ஒரு தேசியச் செயற்குழு 1930-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அது அப்படியே கிடப்பில் கிடந்தது.

அந்தச் சமயத்தில் சொனாரா படிக்கப் போய் விட்டார். அதனால் தந்தையர் தின முன்னெடுப்பு மங்கிப் போனது. அவர் படித்து வந்ததும் மறுபடியும் தந்தையர் தினப் போராட்டத்தில் களம் இறங்கினார்.

1966-ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினப் பொது விடுமுறைக்கான ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். இருந்தாலும் தூங்கி வழிந்தது.

பின்னர் 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன் தான் முழுமையாகக் களம் இறங்கினார். தந்தையர் தினத்தைப் பொது விடுமுறையாக அங்கீகரித்தார். 33 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் தந்தையர் தினம் அதிகாரப் பூர்வமானது.

தந்தையர் தினத்தன்று அமெரிக்க கொடிகள் முழுக் கம்பத்தில் பறக்கவிடவும் கட்டளை போடப் பட்டது.

1909-ஆம் ஆண்டு சொனாரா எடுத்த முயற்சி  இன்று நம் தந்தைகளை நினைவு கூர வழி செய்து உள்ளது. அன்றில் இருந்து அனைத்துலகத் தந்தையர் தினம் பீடுநடை போடுகிறது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப் படுகிறது.

1974-ஆம் ஆண்டு சொனாரா அமெரிக்க உலக வணிக மையத்தினால் (Expo ’74, the World’s Fair) சிறப்பு செய்யப் பட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து தன்னுடைய 96-ஆவது வயதில் சொனாரா காலமானார். உலகத் தந்தையார்களைக் கௌரவிக்கப் போராடிய அவரை வாழ்த்துவோம். நினைவு கூர்வோம்.

இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக் கொண்டு இருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களையும் மறக்க வேண்டாம்.

அப்பா என்பவர் ஒரு பெண்ணின் முதல் காதலர். கடைசி வரையில் அவரே தான் முதல் காவலர்.
 உலகில் உள்ள அனைத்துத் தந்தையர்களுக்கும் இந்தக் கட்டுரை என்னுடைய காணிக்கை.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Sonora_Smart_Dodd -

Sonora Smart Dodd (February 18, 1882 – March 22, 1978) was the daughter of American Civil War veteran William Jackson Smart and was responsible for the founding of Father's Day.

2. https://www.freemalaysiatoday.com/category/leisure/2019/06/16/fathers-day-more-than-60-years-in-the-making/

Mothers are where fathers come from, but where does Father’s Day come from?

3. Emily, Jan (June 20, 2015). "For Father's Day. National Geographic.

No comments:

Post a Comment