21 ஜூன் 2019

சுழியம் நாள்

குடிக்கத் தண்ணீர் இல்லை. தொண்டை காய்ந்து போகிறது. இரத்தம் சுண்டி போகிறது. உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் போகிறது. தண்ணீர்ப் பஞ்சத்தில் உச்சம் பார்க்கும் உயிர் போகும் நிலைமை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதுதான் சுழியம் நாள். 


வரட்சிக் கோலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தாண்டவம் ஆடும் நாள். ஜீரோ டே (Day Zero) என்பது ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நாள்.
அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப் போய் மனுக்குலத்தின் வாழ்வாதாரம் சுருங்கிச் சுருட்டிக் கொள்வதைத் தான் சுழியம் நாள் என்கிறார்கள். அதுவே தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சக்கட்ட நாள்.

தொண்டையை நனைத்துக் கொள்ள ஒரு சொட்டு நீர் கிடைக்காத அவலத்தை அசை போட்டுப் பாருங்கள். எல்லாம் தெளிவாகத் தெரியும்.

இவற்றை எல்லாம் முன்கூட்டியே கோடி காட்டுவதைத் தான் ஜீரோ டே என்கிறார்கள். அதாவது தண்ணீர் அறவே இல்லாத நாள். தண்ணீர் இல்லை என்றால் அதற்கு அப்புறம் எதுவுமே இல்லை என்பதை உணர்த்திக் காட்டத் தான் சுழியம் நாள் என்கிற நாளை உருவாக்கினார்கள்.



குடிக்கவும் தண்ணீர் இல்லை. குளிக்கவும் தண்ணீர் இல்லை. அப்போது நாம் படும் அவஸ்தை இருக்கிறதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா. சொல்லுங்கள். ரொம்பவும் கஷ்டம்.

ஒரு நாள்... ஒரே ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் இருந்து பாருங்கள். அப்போது தெரியும் நீரின் அருமை, பெருமை, மகிமை, மாண்பு, மரியாதை எல்லாம். பலருக்குச் சொன்னால் புரியாது. பட்டால் தான் தெரியும்.

நீரும் நதியும் நாடுகள் அமைக்கும்

நின்று நடந்தே காடுகள் சமைக்கும்

குன்றில் இருந்தே குதித்து விழும்

குருமண் பூமியில் மிதித்து வாழும்


எனும் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன.



இந்த உலகத்தில் நீர்நிலைகள் இல்லை என்றால் எந்த ஓர் உயிரும் இல்லை. அப்போதைய வள்ளுவர் அப்போதே கூறி விட்டார். அதுவே இப்போதைக்கும் பொருந்தும். இனி எக்காலத்திற்கும் பொருந்தும். நீர் இல்லை என்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது.

இதே மாதிரி ஒரு நீர்ப் பஞ்சம் 2016-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைநகர் கேப் டவுனில் ஏற்பட்டது. தண்ணீர்ப் பற்றாக் குறையினால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் செத்தும் சாகாமல் அலைமோதி உயிருக்குப் போராடிய ஒரு காலக் கட்டம். இது காங்கோ நாட்டுக் கட்டுக் கதை அல்ல. உண்மையாக நடந்த கேப் டவுன் கதை.

காந்தியை இரயிலில் இருந்து உதைத்துத் தள்ளினார்களே அதே அந்த நகரத்தில் நடந்த கதை தான். சரி.



இருபது முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே அந்த நகரில் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று கணித்துச் சொல்லி விட்டார்கள். ஏன் என்றால் அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலை அப்படி. தென் ஆப்பிரிக்காவிற்கு கீழே ஒரு பெரிய பனிப் பாலைவனமே இருக்கிறது. அதாவது அண்டார்டிக் துருவம். ஆனாலும் பாருங்கள் இந்த நாட்டில் இங்கே தண்ணீர்ப் பஞ்சம்.

இருந்தும் இல்லாத நிலையைச் சந்தித்தது அந்த நகரம். ஒரு நாட்டின் கட்டமைப்பு எவ்வளவு தான் பெரிதாக இருந்தாலும்; எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும்; குடிக்கத் தண்ணீர் இல்லை என்றால் அப்புறம் என்னங்க. அந்த நாடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.

எப்படி பார்த்தாலும் அந்த நாடு ஒரு மோசமான நிலையைச் சந்திக்க வேண்டி வரும். அதற்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டு இந்தக் கேப்டவுன் நகரம்.



இன்றும் அந்த நகரில் தண்ணீர்ப் பஞ்சம். அதனால் தண்ணீர்ப் பங்கீடு. கடல் நீரைக் குடிநீராக மாற்றி இப்போது விநியோகம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது அந்த நாட்டின் விதிமுறைகளில் ஒன்று. சட்டமாகவும் இருக்கிறது.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இங்கே நம்மில் பலர் தாயையும் பழிக்கிறார்கள். தண்ணீரையும் பழிக்கிறார்கள். பெற்ற தாயை அனாதை இல்லத்தில் கொண்டு போய் விடுவதும் ஒன்று தான். அந்தத் தாய்க்குச் சமமான தண்ணீரைச் சாக்கடையில் கொட்டுவதும் ஒன்று தான். 

சமயங்களில் இங்கேயும் எங்கேயும் சகட்டு மேனிக்கு தண்ணீர் விரயம் செய்யப் படுகிறது. ஒரு தடவை குளிக்கும் தண்ணீரின் அளவு 50 லிட்டருக்கும் அதிகம். சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கு 2 லிட்டர் தண்ணீர் வரை வீண் விரயம். சரி. கேப் டவுன் கதைக்கு வருவோம்.



கேப் டவுன் நிலப் பகுதியில் மத்தியத் தரைக்கடல் பருவநிலை. கோடைக் காலத்தில் வெப்பம். குளிர்காலத்தில் மழை பெய்யும். பெரும்பாலும் மழையை நம்பியே வாழ்கிறார்கள். மலைப் பிரதேசங்களில் அணைகளைக் கட்டி மழை நீரைத் தேக்கி நீர்ப் பயனீடு செய்து வருகிறார்கள்.

கோடைக் காலத்தில் நீர்த் தேக்கங்கள் வற்றிப் போகின்றன. அதே சமயத்தில் விவசாயத்திற்கு அதிகமாக நீர்ப் பயன்பாடு. அதனால் நீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல. பல பத்தாண்டுகளாக அதே பல்லவிகள் தான்.

2018-ஆம் ஆண்டு கேப் டவுன் நகரம் சுழியம் நாளை அறிவித்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மக்கள் தேவைக்கான தண்ணீர் தீர்ந்துவிட்டது. அதனால் ஒவ்வொருவரும் ஒரு நாள் பயன்பாட்டிற்கு 87 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 



அதற்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கேப் டவுன் நகர நிர்வாகம் தடாலடியாக அறிவித்தது. சுழியம் நாள் என்றும் அறிவித்தது. உலகமே அதிர்ந்து போனது.

அப்போது அங்கே உலகக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மலேசியக் கிரிக்கெட் வீரர்கள் இரண்டு நிமிடங்களுக்கு மேல் குளிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தார்கள். அப்போதுதான் உலகமே நீர்ப் பஞ்சத்தின் ஆபத்தை உணர்ந்தது. மலேசிய மக்களும் திகைத்துப் போனார்கள்.

அதன் பின்னர் பொது மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப் பட்டது. 45 லிட்டருக்குக் குறைக்கப் பட்டது. குளிக்க, குடிக்க, பாத்திரம் கழுவ என்று ஒவ்வொரு தேவைக்கும் இத்தனை லிட்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பட்டியலை அரசாங்கம் தயாரித்து வெளியிட்டது.



தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் தண்ணீர் திருட்டுகள். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்கிற மாதிரி பொது மக்களுக்கு வரும் நீரைச் சிலர் திருடி விற்க ஆரம்பித்தார்கள்.

பணம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கினார்கள். இல்லாதவர்கள் சட்டிப் பானையைத் தூக்கிக் கொண்டு ஆற்றுப் பக்கமாய் ஐலசா பாடிக் கொண்டு போனார்கள்.

சிரிக்க வேண்டாம். உண்மையாக நடந்த நிகழ்ச்சிங்க. நமக்கு அந்த மாதிரி ஏற்படவில்லையே என்று சந்தோசப் படுங்கள். உண்மையிலேயே மலேசியர்கள் புண்ணியம் செய்தவர்கள். படுத்துக் கொண்டே படம் பார்ப்பது புண்ணியம் இல்லையா. சீரியல் விசயத்தைத்தான் சொல்கிறேன். மற்றபடி கக்கல் கழிசல் ஆபாச வீடியோ விவகாரத்தைச் சொல்லவில்லை. பெரிய இடத்து வம்பு தும்பு எல்லாம் நமக்கு வேண்டாங்கோ!



ஆக தண்ணீர் திருடர்கள் கிரிமினல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டார்கள். அவர்களைப் பிடிக்க அரசாங்கம் ஆங்காங்கே சிறப்புப் படைகளை அமைத்தது. நல்ல வேளை மாறு கை மாறு கை வாங்கவில்லை.

ஒரு கட்டத்தில் கார் கழுவ முடியாது; தோட்டத்துக்குத் தண்ணீர் விட முடியாது என தடாலடித் தடைகள். அத்தியாவசியத் தேவைகளுக்கே தண்ணீர் இல்லாத போது கார் கழுவுவது ரொம்ப முக்கியமா? மனுசனே தண்ணீருக்கு சிங்கி அடிக்கிறான் இதில் காரைக் கழுவது தான் குறைச்சல், நாயைக் குளிப்பாட்டித் தான் ஆகணுமா என்கிற கேள்வி வேறு. இதனால் தண்ணீர்க் கலவரம் வரலாம் என்றுகூட எதிர்பார்க்கப் பட்டது.

இன்னும் ஒரு விசயம். எங்கோ ஒரு நாட்டில் நடந்ததை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என்று கேட்கலாம். இருக்கும் போது ஒரு பொருளின் அருமை தெரியாதுங்க. இல்லாத போது தான் அதன் பெருமையே தெரியும். அங்கே நடந்தது மாதிரி இங்கே நடக்கக் கூடாது. தண்ணீர் சுலபமாகக் கிடைக்கிறது; மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக மானவாரியாக வீணாக்கலாமா. 



நீரின் மீது நமக்கு ஒரு மதிப்பு மரியாதை வர வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது என்கிற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அவைதான் நம் எதிர்பார்ப்பு.

இந்த மாதிரி நீர்ப் பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் ஓர் ஆறுதலான செய்தி. அங்கே அருகாமையில் இருந்த நீர்பாசன விவசாயிகள் ஒரு நல்ல காரியம் செய்தார்கள். 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரைத் தர முன்வந்தார்கள். இதனால் சுழியம் நாள் தள்ளிப் போனது.

இது உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் நீர்ப் பஞ்சம் ஏற்படலாம். சில ஆண்டுகளுக்கு முன்னால் கோலாலம்பூரிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதை நினைவில் கொள்வோம். பிலாஸ்டிக் வாளிகளைத் தூக்கிக் கொண்டு அலைந்ததை நினைத்துப் பார்ப்போம்.



மலாக்கா ஜாசினில் அடியேன் ஆசிரியராக இருந்த போது அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. வீட்டில் இருந்த அண்டா குண்டாக்களைத் தூக்கிக் கொண்டு நடுரோட்டில் நின்ற கதையை மறக்க முடியாதுங்க. எப்படிங்க மறக்க முடியும்.

அதே போல 2016-இல் தமிழகத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை மறந்துவிட முடியுமா? பரும மழை பொய்த்தது. அணைகள் வறண்டு போயின. 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னை, கோவை, மதுரை, திருச்சி நகரங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டது. தமிழக வரலாற்றில் அது ஒரு நவீனக் காலச் சுவடு.

வசதி படைத்தோர் காசு கொடுத்து லாரி தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தினார்கள். பணம் இல்லாத ஏழை மக்கள் குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீர் வரும் தெருக் குழாயைத் தேடி வீதி வீதியாக அலைந்தார்கள். அந்த அவலக் காட்சிகள் சில மாதங்கள் தொடர்ந்தன. பின்னர் பருவ மழை பெய்து அணைகள் நிரம்பின. நிலைமை சீரானது.

இன்னும் ஒரு விசயம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது தண்ணீர் பிரச்னை தீராதா என்று ஏங்கித் தவிக்கிறோம். தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் போது அதை நல்லபடியாக பயன்படுத்துகிறோமா? உங்களையே கேட்டுப் பாருங்கள்.



என்னைக் கேட்டால் நீர்ப் பஞ்சம் வருகிறதோ இல்லையோ; நீரைத் தெய்வமாக நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இருக்கும் போதே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்முடைய குழந்தைகளுக்குத் தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தைக் கூற வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அவர்களைத் தயார் படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இப்போதே சரிவர பாடம் எடுத்தால் தான் எதிர்காலத்தில் அவர்கள் பொறுப்பு உள்ளவர்களாக வளர்வார்கள். வாழ்வார்கள்.

கேப் டவுன் நகரத்தின் சுழியம் நாள் பிரச்னையில் இருந்து உலகமே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் நிறையவே உள்ளன. கற்றுக் கொள்ளப் போகிறோமா இல்லை கதறி அழப் போகிறோமா? முடிவு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

நீரினால் ஆகாதது எதுவும் இல்லை. அதே போல நீர் இல்லாமல் எதுவும் ஆகப் போவது இல்லை. தேவைக்கு அதிகமாக நீரைச் செல்வழிப்பதில் நாம் தயக்கம் காட்டுவது இல்லை. தண்ணீர் தானே என்கிற ஓர் அலட்சியம்.

அண்மையில் இணையத்தில் ஒரு செய்தி. தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் வந்தாலும் வரலாம். படித்தேன். ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

மூன்றாம் உலகப் போர் வருகிறதோ இல்லையோ; எதிர்காலத்தில் ஒரு சொட்டு நீரைக்கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப் படலாம். அதற்கு காரணம் நம் அலட்சியமே. 



மழை பொய்த்து விட்டால் அல்லது குழாய் நீர் குறைந்து விட்டால் குய்யோ.. முறையோ என்று சத்தம் போடுவார்கள். ஆனால் இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க மட்டும் பலர் தயாராக இல்லை. அதுதான் பைப்பில் தண்ணீர் வருகிறதே என்கிற அலட்சியம்.

நம் வீடுகளுக்குத் தண்ணீர் குடிநீர் குழாய்கள் மூலம் வருகிறது. ஆனால் அது என்னவோ இலவசமாக கிடைக்கிறது என்கிற மாயையில் பலரும் தண்ணீரை அலட்சியப் படுத்துகிறார்கள். தப்பு.

இன்றைய இந்த அலட்சியம் நாளைய ஆபத்து. தாயைப் பழிக்காதே. தண்ணீரையும் பழிக்காதே என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். சுழியம் நாள் வராமல் பார்த்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக