14 ஜூலை 2019

ஹெலன் கெல்லர் பிறந்த நாள் - 27.06.1880

அதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைப் பெண்மணி. பிறந்த பத்தொன்பது மாதங்களி‌ல் பேசுகின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற சக்தியைப் பறிகொடுத்த ஒரு பச்சைத் தளிர். பசுமை மாறாத அந்த பச்சைக் குழந்தை எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் போராட்டங்களின் சப்த நாடிகள். 
 
 Image may contain: 1 person, text that says 'ஹெலன் கெல்லர்'

ஆல் போல் தழைத்தார். அருகு போல் வேர் வளர்ந்தார். விருச்சகமாய் உயர்ந்து போனார். அப்படியே இமயத்தில் சிகரம் வைத்தார். 

தன்னம்பிக்கையின் ஒளியாய்ப் பிரகாசித்துக் காட்டினார். விதி எந்த அளவுக்குப் பின்னுக்கு இழுத்தாலும் அதையே பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்குப் போய் போராடிக் காட்டியவர் ஹெலன் கெல்லர்.

பொழுது விடிவதற்குள் செத்துப் போய்விட வேண்டும் எனும் கொடிய வேதனையில் வதைபட்ட அந்தக் குழந்தை வானத்தையே வசப் படுத்தியது. உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது.

கண் பார்வை இல்லாமலும், காது கேளாமாலும் கெல்லர் பட்ட சிரமங்களை விடவா உங்கள் பிரச்சினை பெரிசு. சொல்லுங்கள்.

கண்கள் இருந்தும் இல்லாமல்; காதுகள் இருந்தும் இல்லாமல்; ஹெலன் கெல்லரால் இத்தனைச் சாதிக்க முடிந்தது என்றால் நமக்கு தடையாக இருப்பது எதுவுமே இல்லை. தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு ஏற்படும் தடைகளை உடைத்து எறிய வேண்டும் என்றால் ஹெலன் கெல்லரை நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த அபூர்வச் சிகாமணி நம் காதுகளில் சொல்லும் இரண்டு வார்த்தை மந்திரம் என்ன தெரியுங்களா. தன்னம்பிக்கை, விடாமுயற்சி.

முயற்சி செய்யும் வரை தான் நாம் எல்லாம் மனிதர்கள். முயற்சி இல்லை என்றால் நாம் மனிதர்களே அல்ல.

தன்னம்பிக்கை; விடாமுயற்சி; இந்த இரண்டையும் உணர்வுப் பூர்வமாக பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்படும். நீங்கள் வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக