12 ஜூலை 2019

மலேசியக் கொடியின் வரலாறு

மலாயாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் மலாயாவிற்குச் சுதந்திரம் வழங்குவதற்கு முன்னர் ஒரு தேசியக் கொடியை வடிவமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்திற்கு ஏற்ப 1947-ஆம் ஆண்டு மலாயா கொடி வடிவமைக்கும் போட்டி நடைபெற்றது. 

The first proposed flag of Malaya

ஒரு கிரிஸ் கொண்ட நீலக் கொடி; இரு கிரிஸ்களைக் கொண்ட பச்சைக் கொடி; 11 வெள்ளை நட்சத்திரங்களைக் கொண்ட சிவப்பு வெள்ளிக் கொடி என பல கொடிகள் போட்டிக்கு வந்தன. அந்தப் போட்டியில் 373 பேர் கலந்து கொண்டார்கள்.
The second proposed flag of Malaya

ஜொகூர் பாருவைச் சேர்ந்த முகமட் ஹம்சா (20) என்பவர் மூன்று கொடிகளை வடிவமைத்தார். அதில் ஒரு கொடி ஐந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரக் கொடி (five-pointed star). அந்தக் கொடி தேர்வு செய்யப் பட்டது.

அந்தக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) எனும் பெயரில் ஓர் ஆங்கிலேயக் கம்பெனி ஆசிய நாடுகளில் வணிகம் செய்து வந்தது. அந்தக் கம்பெனிக்கு ஒரு கொடி இருந்தது. அந்தக் கொடியின் சாயலைக் கொண்ட ஒரு புதிய கொடியை முகமட் ஹம்சா வடிவமைப்புச் செய்தார். 


The third proposed flag of Malaya, after changes to canton and stripe colours.

இருந்தாலும் ஐந்து முனைகளைக் கொண்ட அந்தக் கொடிக்கு மறுப்பு தெரிவிக்கப் பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் மலாயாவில் அவசரகால நிலைமை. மலாயா அரசு கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராட்டம் செய்து கொண்டு இருந்த காலம்.

மலாயா கம்யூனிஸ்டுகளின் கொடியும் ஐந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரக் கொடி. அதனால் ஆறு முனை நட்சத்திரக் கொடியாக மாற்றம் செய்யப் பட்டது.


Fourteen horizontal stripes alternating red and white; in the canton,
a yellow crescent and 14-point star on a blue field

1950 மே மாதம் 19-ஆம் தேதி இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் மன்னர் (King George VI) புதிய மலாயா கொடிக்கு ஒப்புதல் வழங்கினார். 1950 மே மாதம் 26-ஆம் தேதி சிலாங்கூர் சுல்தான் அரண்மனையில் புதிய மலாயா கொடி முதன்முறையாகக் கொடியேற்றம் செய்யப்பட்டது.

1957 ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி மெர்டேகா சதுக்கத்தில் அதிகாரப் பூர்வமாகப் புதிய மலாயா கொடி ஏற்றம் செய்யப்பட்டது. பிரிட்டிஷாரின் யூனியன் ஜேக் (British Union Flag) கொடி இறக்கப் பட்டது.

பின்னர் 1963-ஆம் ஆண்டில் மலாயா என்பது மலேசியா என புது வடிவம் கண்டது. அதே போல 14 நட்சத்திர முனைகளைக் கொண்ட கொடியாகத் தேசியக் கொடியும் மாற்றம் கண்டது. மலேசியாவில் சபா, சரவாக், சிங்கப்பூர் மாநிலங்கள் இணைந்ததால் அந்த மாற்றம் நிகழ்ந்தது.


Flag of the East India Company

மலேசியக் கொடியின் சிவப்பு வெள்ளை பட்டைக் கோடுகளும் (stripes - பட்டைத் தாரைகள்) 14-ஆக மாற்றம் கண்டன.

1965-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விலகிச் சென்றது. இருந்தாலும் மலேசியக் கொடியின் வடிவமைப்பில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அப்படியே தான் இருந்தது.

மலேசியாவில் சிங்கப்பூர் இல்லாததால் தேசியக் கொடியில் 13 நட்சத்திர முனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என அறைகூவல்கள் வந்தன. இருந்தாலும் அரசாங்கம் அமைதி காத்தது.


Flag of the Straits Settlements from 1874 to 1942

பின்னர் 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரம் கூட்டரசு பிரதேசமாகப் பிரகடனம் செய்யப் பட்டது. ஏற்கனவே இருந்த 14 நட்சத்திர முனைகள் அதற்குப் பொருத்தமாக அமைந்து போயின.

அதன் பின்னர் 1984-ஆம் ஆண்டு லாபுவான் தீவும் 2001-ஆம் ஆண்டு புத்ராஜெயாவும் கூட்டரசு பிரதேசங்களாகப் பிரகடனம் செய்யப் பட்டன.


Flag of Penang (1946-1949).
Flag of Crown Colony of Penang from 1946 to 1949.

அந்த வகையில் 14-வது நட்சத்திர முனையும் சிவப்பு வெள்ளை பட்டைக் கோடுகளும், கூட்டரசு பிரதேசங்களைப் பொதுவாகச் சுட்டிக் காட்டுவதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. மலேசிய மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

1997-ஆம் ஆண்டில் தேசியக் கொடிக்கு ஒரு பெயர் வைக்க முடிவு செய்தார்கள். பலர் பல பெயர்களை முன்மொழிந்தார்கள். ஜாலுர் கெமிலாங் (Jalur Gemilang) எனும் பெயர் பொருத்தமானதாக இருந்தது.


Flag of Malacca (1946-1957).
Flag of Crown Colony of Malacca from 1946 to 1957.

அதுவே தேசியக் கொடியின் பெயராகத் தேர்வு செய்யப் பட்டது. பெயரைச் சூட்டியவர் அப்போதைய பிரதமரும் இப்போதைய பிரதமருமான துன் மகாதீர் அவர்கள் தான்.

மலேசியக் கொடிக்கு வடிவம் அமைத்த முகமட் ஹம்சா 1993-ஆம் ஆண்டு தன்னுடைய 75-வது வயதில் ஜொகூரில் காலமானார். இதுதான் மலேசியக் கொடியின் வரலாறு. பயனுள்ள தகவலாக இருக்கும் என நம்புகிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)


சான்றுகள்:  

malaysiadesignarchive.org/documents/The%20History%20of%20Malaysian%20Flag%20Design.pdf

2. http://flagpedia.net/malaysia

3. https://en.wikipedia.org/wiki/Mohamed_Hamzah

4 கருத்துகள்: