23 ஆகஸ்ட் 2019

ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 3

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று - 3

பூத்துக் குலுங்கும் ஒரு பூங்காவனம். அங்கே அழகு அழகான பூமரங்கள். இன்றை ஒன்று பார்த்துப் பொங்கி வழியும் பெருமிதங்கள். மஞ்சள் கலரின் மகிமைகள். சிவப்புக் கலரின் செம்மைகள். இதமான கலரின் இனிமைகள்.



மலேசிய இந்தியப் பெண்கள்

உலகின் மூலை முடுக்குகளில் உள்ள பறவைகள் எல்லாம் வருகின்றன. இஷ்டம் போல கும்மாளம் போடுகின்றன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஊடல் கூடல்களுக்கு எல்லை இல்லை.

அதைப் பார்த்த பக்கத்துத் தோட்டக்காரனுக்குப் பொறுக்கவில்லை. கல்லைக் கொண்டு அடிக்கிறான். கட்டைகளை கன்னா பின்னா என்று வீசுகிறான். மட்டைகளை மானவாரியாக வீசுகிறான். வாய்க்கு வந்தபடி திட்டுகிறான். ஒன்றும் நடக்கவில்லை.

பூக்களும் பறவைகளும் அவனைப் பார்த்து மௌனமாய்ச் சிரிக்கின்றன. இதுதான் இங்கேயும் நடந்தது.

மலேசியா ஓர் அமைதியான நாடு. பொன் விளையும் பூமி. இந்த நாட்டில் பிறந்தவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள். அப்பேர்ப்பட்ட அழகிய பூமி. இருந்தாலும் இங்கேயும் சக்கு புக்குகளின் சிக்கு புக்கு கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வருகிறேன்.

தமிழ் மலர் - 22.08.2019

ஸக்கீர் நாயக் விவகாரம் காரணமாக இந்தியா - மலேசியா நல்லுறவு பாதிக்கப் படலாம். காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த நல்லிணக்கம் பாதிக்கப் படலாம். வரலாறு பார்த்த நட்புறவு நலிவு அடையலாம்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும் சீரும் சிறப்புமாய் கோலோச்சி இருக்கின்றன. கொடுக்கல் வாங்கலில் நட்புறவு பாராட்டி இருக்கின்றன. அரசதந்திர உறவுகளில் ஆராய்ச்சி மணிகள் இசைத்து இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு புனிதமான உறவில் ஒரு சின்னத் துரும்பினால் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது. எங்கோ ஒரு கரிசல் காட்டில் முளைத்த ஒரு பூஞ்சைக் காளானினால் இரு கோபுரக் கலசங்களுக்குள் பாசி படர்ந்துவிடக் கூடாது. 

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது என்பார்கள். ஆனால் இங்கே அணை கடந்து வெள்ளம் போவதற்கு முன்னால் அணையை அழுத்தி இறுக்கிக் கட்ட வேண்டி உள்ளது. முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம் கடமை.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி;
பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி;
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ;
முன்னாள் மலேசியத் தூதர் டெனிஷ் ஜே. இக்னேசியஸ்


அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக மாறிவிடக் கூடாது என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

ஸக்கீர்  நாயக் விசயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டு உள்ளது. இனியும் அமைதி காத்தால் அதுவே இனிவரும் காலங்களில் பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம்.

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது இயல்பு. மனிதத் தன்மைக்கு உட்பட்ட செயல்பாடு. ஆனால் அந்த மன்னிப்பு உண்மையாக நேர்மையாக இருக்குமானால் அடி மனத்தில் இருந்து வர வேண்டும். வெறும் உதட்டில் இருந்து வேர்த்து வடியும் வெற்றுச் சொல்லாக அமைந்துவிடக்  கூடாது.

சுயநினைவு இல்லாமல் ஒருவர் செய்த தவற்றை மன்னிக்கலாம். மன்னிக்க வேண்டியது நம் பொறுப்பு. மனிதப் பாண்பு. ஆனால் சுத்தமாகச் சுயநினைவில் இருக்கும் போது தெரிந்தே செய்த தவற்றை எவரும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கவும் முடியாது.

இலங்கை மலையகத்தில் தேயிலை
மூட்டைகள் தூக்கும் தமிழ்ப் பெண்கள்

செய்த தவற்றினால் ஓரிருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் சும்மா அப்படியே தட்டிவிட்டுப் போய் விடலாம். ஆனால் 20 இலட்சம் பேருடைய மனதைப் புண்படுத்தி விட்டு மன்னிப்பு கேட்டால் மன்னிக்க முடியுமா. எப்படிங்க முடியும். இது என்ன சின்ன பிள்ளைகள் விளையாடும் மனசா மனசா மங்கத்தா விளையாட்டா?

மலேசிய இந்தியர்களின் பூர்வீகமாக இந்தியா இருக்கலாம். ஆனால் மலேசியா தான் மலேசிய இந்தியர்களின் தாயகம். மறுக்க முடியாத உண்மை. மறைக்க முடியாத தொன்மை.

நாம் பார்த்துப் பழகும் எல்லா பெண்களையுமே அம்மா என்று அழைக்கிறோம். ஆனால் அவர்களில் ஒரே ஒரு பெண் மட்டுமே நம்மைப் பெற்ற தாயாகிறாள். ஆக அந்தத் தாய் எனும் சொல்லில் இருந்து தான் தாயகம் எனும் சொல் தொடர் உருவானது.

அந்த வகையில் மலேசிய இந்தியர்களைப் பொறுத்த வரையில் மலேசியா தான் அவர்களின் தாயகம். இந்தியா அவர்களின் பூர்வீகம்.

தமிழ் மலர் - 22.08.2019

ஆக அந்த இரு சொற்களின் பொருள் மயக்கத்தை உணர்ந்து கொள்வது சிறப்பு. எந்த நாட்டில் ஒருவர் பிறக்கிறாரோ அந்த நாடு தான் அவருக்குத் தாயகம்.

சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் குலசேகரன்; பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி; கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி; முன்னாள் மலேசியத் தூதர் டெனிஷ் ஜே. இக்னேசியஸ் ஆகியோருக்கு எதிராக புகார் மனுக்களை ஸக்கீர் நாயக் போலீஸில் தாக்கல் செய்து இருந்தார்.

இந்தப் புகார்கள் அனைத்தும் மலேசிய இந்தியர்களை மேலும் அவமதிப்பது போலாகும். எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போலாகும். ஏன் என்றால் அவர்கள் அனைவருமே மலேசிய இந்தியர்களின் தலைவர்கள் ஆகும்.

அமைதியாக வாழும் பல்வேறு இன மக்களிடையே பிரிவினையையும் வெறுப்பையும் தூண்டும் வகையில் பேசும் ஸக்கீர் நாயக்கிற்கு முகம் கொடுக்கக் கூடாது என்பது மலேசியர் பலரின் பொதுவான கருத்து.

ஸக்கீர் நாயக்கிற்குப் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவரை இந்த நாட்டிற்குள் அனுமதித்தது பெரிய தப்பு. பிரச்சினை விஸ்வரூபம் ஆவதற்குள் அவருக்குத் தடை விதிப்பதே சிறப்பு. இல்லை என்றால் நிலைமை மேலும் மோசம் அடையலாம்.

பினாங்கு மாநிலத் துணை முதல்வர்
பேராசிரியர் ராமசாமி

மலேசிய இந்தியர்களின் உடல் பொருள், ஆவி ஆத்மா எல்லாமே இந்த மலேசிய மண்ணிற்குத் தான். அவர்களின் உயிர் விசுவாசம் எல்லாம் இந்த மண்ணிற்குத் தான். அதை ஸக்கீர் நாயக் புரிந்து கொள்ள வேண்டும்.

பிறர் மதத்தை இழிவு படுத்திக் கொண்டே இருப்பதில் சிலருக்கு அற்ப சுகம். நாட்டை வளப் படுத்த காரியம் ஏதும் நடக்கிறதோ இல்லையோ. ஆனால் காலம் தவறாமல் மற்றவர்களைப் புண்படுத்துவதில்  நியாயமே இல்லை என்று பெந்தோங் தமிழார்வலர் சத்தியா ராமன் வருத்தமாகச் சொல்கிறார்.

மேலும் அவர் வேதனையுடன் கேட்கிறார். காலில் செருப்பு இல்லாமல் பழைய தாட்களைக் கால்களில் கட்டிக் கொண்டு கொதிக்கக் கொதிக்கத் தார் சாலைகளில் வேலை செய்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

வரகட்டு மேடுகள், பாதாளப் பள்ளங்கள் நிறைந்த தேயிலை தோட்டங்களில்... அதிகாலையிலேயே எழுந்து கொட்டும் பனியில் செக்ரோல் முடித்து.. அவதி பவதியாய் குழந்தைகளை ஆயாக் கொட்டைகையில் கொண்டு போய் விட்டுவிட்டு.. விடிந்தும் விடியாமல் தோளில் கொழுந்துக் கூடையைச் சுமந்து கொண்டு... நாள் முழுதும் உழைத்தாலும் முப்பது நாற்பது காசு சம்பளம். இந்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

இதில் கங்காணிமார்களின் மானம் கெட்ட ஏச்சுப் பேச்சுகள். கட்டலை, முத்தலையை எடுத்து விட்டால் நாற்றம் அடிக்கும் கேள்விகள். அப்படியே வீட்டுக்கு விரட்டி அடிப்பார்கள். அன்றைய வயிற்றுப் பிழைப்பில் மண் விழுந்த துயரத்தை அழுது தீர்த்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

தோளில் காண்டவாளியுடன் நெற்றியில் லாம்பைக் கட்டிக் கொண்டு இருட்டு நேரத்தில் தீம்பாருக்குச் சென்று கித்தா மரத்தை சீவும் போது அங்கே உலா போகும் பாம்பு, பூரான், அட்டை கடிகளுக்கு மத்தியிலும்... மரத்தில் காயம் பட்டால் கத்தித் தொலையும் கங்காணிகளிடம் கண்ணீர் மல்க கூனிக் குறுகி நின்ற அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

ஸக்கீர் நாயக்

கட்டிடத் தொழிலில்... கரடுமுரடான காடுகளை அழிப்பதில்... இரயில் தாண்டவாளங்களை அமைப்பதில்... எண்ணிலடங்கா உடல் உழைப்புத் தானங்களை எங்களின் முன்னோர்கள் இந்த நாட்டிற்கு அர்ப்பணிப்புச் செய்து இருக்கிறார்கள். இந்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

மிக மிக சொற்ப ஊதியத்திற்காகத் தங்களின் உதிரத்தைச் சிந்தி "குந்தா கிந்தே”களாகச் செத்து மடிந்த கதைகளைப் படித்த கேட்ட அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா? கொப்பளிக்கிறார் பெந்தோங் சத்யா ராமன்.

இப்படி எதுவுமே தெரியாமல்... இந்த நாட்டின் இந்தியர்களின் வரலாறு என்னவென்று அறியாமல் மலேசிய இந்தியர்களைத் திரும்பிப் போங்கள் என்று சொல்லலாமா. தன் சுயநலத்துக்காக, தன் வயிற்றுப் பிழைப்புக்காக நாடு விட்டு ஓடி வந்த ஒருவர் இப்படி வம்பு பேசலாமா? நியாயமா?

அதைப் பார்த்துக் கொண்டு மலேசிய இந்தியர்கள் சும்மா சொக்கட்டான் ஆட முடியுமா? காலத்துக்கும் பொறுமைக் காத்து நிற்க முடியுமா? காரியம் ஆகாத போது கட்டவிழ்த்துக் கரை புரண்டு ஓடும் வித்தையை மலேசிய இந்தியர்கள் காலம் அறிந்து கற்றுக் கொண்டார்கள். ஸக்கீர் நாயக் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக