25 August 2019

ஆண் பெண் மூளை - எது சிறந்த மூளை

உலகில் இரண்டு சாதிகள். ஒன்று ஆண் சாதி. மற்றொன்று பெண் சாதி. இந்த இருபாலரின் உடல் அமைப்பில் மட்டும் தான் வித்தியாசம். மற்றபடி இருவருக்கும் மூளை ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்; ஒரே மாதிரியாகத் தான் வேலை செய்யும். இது பொதுவான கருத்து. உலகின் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் அப்படித் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படித் தான் நினைத்துக் கொண்டு கதை சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.

வழி வழியாக வந்த தாத்தா பாட்டி காலத்துக் கதைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்போம். அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.

உண்மையில் பார்க்கப் போனால் ஆண் பெண் இருவருக்கும் உடல் மட்டும் அல்ல. மூளையும் வித்தியாசப் படுகிறது. ஆச்சரியப்பட வேண்டாம். ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். 
பெண் மூளையை விட ஆணின் மூளை கொஞ்சம் பெரியது. ரொம்பவும் இல்லை. 10 விழுக்காட்டுப் பெரிசு. ஆனால் சிந்திப்பதில் வேலை செய்வதில் ஆண் மூளையைவிட பெண் மூளையே பெஸ்ட் என்றும் சொல்கிறார்கள்.

கணக்குப் பாடத்தில் ஆண்கள் கில்லாடிகளாக இருக்கலாம். தர்க்க ரீதியாக சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கலாம். ஆனால் மொழியில்; அது எந்த மொழியாக இருந்தாலும் பெண்களை மிஞ்ச முடியாது. இதுதான் ஆய்வாளர்கள் கண்டு அறிந்த உண்மை.

புத்திசாலித்தனத்தை நிர்வகிக்கும் மூளையின் ஒரு பகுதியில் ஆண்கள் அதிக சாம்பல் பொருளை (Grey matter) கொண்டு உள்ளனர்.

ஆண்கள் ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபடும் போது மற்றவர்களின் பேச்சைக் கேட்பது இல்லை. அல்லது சுற்றுப்புறத்தைக் கவனிப்பது இல்லை. ஒரு நேரத்தில், ஒரு செயலில் மட்டும்தான் ஆண்களால் கவனம் செலுத்த முடியும். 
இதனால்தான் வில்வித்தை, சுடும் போட்டி போன்ற கவனக் குவிப்புத் திறன் வேலைகளைச் செய்வதில் ஆண்கள் திறமையாக இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் பெண்களின் மூளைப் பகுதியில் அதிகமான வெள்ளைப் பொருட்கள் (White matter) உள்ளன. அதனால் தான் அவர்கள் எந்த ஒரு விசயத்தையும் 360 பாகை கோணத்தில் சிந்திக்க முடிகிறது.

ஒரே நேரத்தில் பல விசயங்களில் கவனம் செலுத்த முடிகிறது. ஒரே நேரத்தில் நாலைந்து வேலைகளை ஆண்களிடம் கொடுத்தால் அம்புட்டுத் தான். கடுப்பாகி விடுவார்கள்.

மூளைக் கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்கள், மூளையின் இடது அரைக் கோளத்தை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். பெண்கள் இடது வலது என இரண்டு அரைக் கோளங்களையும் பயன்படுத்துவதில் கில்லாடிகள். இது இயற்கை பெண்களுக்கு வழங்கிய வரப் பிரசாதம்.
தாயின் வயிற்றில் இருக்கும் போது பெண் கருக்கள் 26-வது வாரத்திலேயே இடது வலது அரைக் கோளங்களை இணைக்கும் கார்பஸ் காலசோமை (Corpus callosum) உருவாக்கி விடுகின்றன. ஆண் கருக்கள் மிக தாமதமாகத்தான் அந்த உருவாக்கத்தைச் செய்கின்றன. அதனால் தான் ஆண்கள் இடது அரைக் கோளத்தை மட்டும் உபயோகிக்கk காரணமாகிறது.

ஆக பெண்ணின் மூளைக்கு 100 மார்க் கொடுத்தால் ஆணின் மூளைக்கு 90 மார்க் தான் கொடுக்கலாம் என்கிறார்கள். ஒரே சமயத்தில் பல வேலைகளைப் பெண்களின் மூளை செய்ய முடியும். அதற்காக ஆண்கள் சண்டைக்கு வர வேண்டாம். நான் என்றைக்கும் ஆண்கள் கட்சி. சரி. அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

முதலில் சின்ன ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். அப்போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம்; அந்த வாகனம் பயணிக்கும் கோணம்; அந்த  வாகனத்தின் போக்கில் ஏற்படப் போகும் மாற்றங்களை ஆண்களால் விரைவாகக் கணிக்க முடியும் என்கிறார்கள். அதற்கு ஏற்றால் போல் தங்களின் வாகனத்தைக் கட்டுப்படுத்த ஆண்களின் மூளையால் உடனடியாகச் செய்ய முடியும். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

ஆனால் பெண்களின் மூளை கொஞ்சம் தாமதமாகவே அந்தக் கணிப்புகளைக் கணிக்குமாம். இதற்கு ஆய்வாளர்கள் சொல்லும் காரணம்: பெண்களின் மூளை பல பணிகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றது.

ஒரு வாகனத்தைச் செலுத்தும் போது ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் உன்னிப்பாக இருக்கும். ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் தான் வாகனங்களைச் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன.

இப்படி மூளை வித்தியாசப் படுவதால் தான் ஆணைப் பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் ஓர் ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத் தீர்வு காண்கிறது. இதனால் பிரச்சனைகள் உள்ள ஆண்கள் தனிமையில் தங்களின் தீர்வுகளை இனம் கண்டு கொள்கிறார்கள்.

ஆனால் பெண்கள் அப்படி அல்ல. அவர்களின் மூளை தனித் தனியாகப் பிரித்துப் பார்க்காது. யாராவது ஒருவரிடம் தங்களின் மொத்த பிரச்சனைகளையும் கொட்டி முடிக்க வேண்டும். பிரச்சனை தீர்ந்தாலும் சரி; தீராவிட்டாலும் சரி.

பிரச்சினைகளைச் சொல்லி முடிக்க வேண்டும். அதன் பின்னர் தான் அவர்களுக்கு நிம்மதி. ஆண்களின் மூளையின் வேகம் செயல் படுத்துவதில் அமைந்து இருக்கும். பெண்களின் மூளை குடும்பம், உறவுகள், நட்பு என  அந்தச் சூழலில் அமைந்து இருக்கும்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழி வளத்திற்கு உரியது. அதாவது வார்த்தைகளையும்; உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாகக் கணக்குப் போடும் தன்மை கொண்டது.

ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது வேறுவிதமாக செயல் படுகிறது. ஒரு விசயத்தைப் பெண் பேசுவது போல் ஆண்களால் விவரிக்க முடிவது இல்லை. 
ஒரு ஆண், அவன் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க முடிவது இல்லை. எதிராளியின் முகத் தோற்றத்தைக் கொண்டு அவர் மனதை புரிந்து கொள்ள முடிவதும் இல்லை.

ஓர் ஆணின் மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனால்தான் அவனுக்குப் பெண்ணின் கவர்ச்சிகளைப் பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கிறது.

பெரும்பாலும் அழகான பெண்களை ஆண்கள் விரும்புவதற்கு ஆண்களின் மூளையே மூல காரணம். பெண்ணின் மூளை அப்படி அல்ல. பெண்ணுக்குப் பார்வை இன்பம் என்கிற ஒன்று இல்லை. மன்னிக்கவும் குறைவு. அதனால் பார்க்கும் பார்வையால் பெண்ணுக்கு மகிழ்ச்சி கிடைப்பது இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.

ஓர் ஆண் அழகாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் பெண்ணுக்கு இல்லை. அவளுக்கு ஓர் ஆணின் பேச்சு மூலமாகத் தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. பேசிக் கொண்டே இருக்கும் ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்கிறது.

அதற்காக... தொன தொன என ரம்பம் போட்டு அறுக்க வேண்டாம். கிட்ட வந்தவள் அப்புறம் எட்டியே பார்க்க மாட்டாள். அமேசான் காட்டிற்கு ஓடியே போய் இருப்பாள்.

வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்துவதில் குறைந்துவிடும். வீட்டுப் பிரச்சினையிலேயே நிலைகுத்திப் போய் நிற்கும். ஆனால் ஆண்களின் பிரச்சினை வேறு. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்களின் மனம், பாச நேச உறவுகளில் அதிகமாகக் கவனம் செலுத்தாது.

தவிர பெண்கள் உரையாடும் பொழுது நீங்கள் கவனிக்கலாம். மறைமுக மொழிகளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. நேரடியாகப் பேசி ஒரு வழி பண்ணி விடுவார்கள்.
பெண்களின் முகத்திற்கு நேராக ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் அதைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதைக் கண்டுபிடிக்க முடிவது இல்லை. அதற்கும் காரணம் இருக்கிறது.

பெண்கள் பேசும் போது 70 விழுக்காடு மொழி; 20 விழுக்காடு உடல் மொழி; 10 விழுக்காடு வாய்மொழியைப் பயன்படுத்துவார்கள். ஆண்கள் அவர்களின் மூளையால் அந்த மாதிரி செய்ய முடியாது. உடல் மொழிக்குப் பெண்களிடம் ஆண்கள் பாடம் எடுக்க வேண்டும்.

ஆண், பெண் சிந்தனை வேறுபாடுகளைக் கண்டு பல சமயங்களில் நாம் ஆச்சரியப் படலாம். ஆண், பெண் அங்க அடையாளங்கள்; இனப் பெருக்கச் செயல்பாடுகளால் மட்டும் ஆண், பெண் வேறுபடுவது இல்லை. பிரச்னைகளைப் புத்திசாலித்தனமாகத் தீர்ப்பதிலும்; குணாதிசயங்களாலும் இரு பாலரும் மாறுபடுகிறார்கள்.

நரம்பியல் ஆய்வாளர் டேனியல் ஜி ஏமன் எழுதிய Unleash the power of the female brain எனும் புத்தகத்தில் ஆண், பெண் இருவருக்கும் சமமான அறிவு இருக்கலாம். ஆனால் இரு பாலரும் பிரச்னைகளைத் தீர்க்க தங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்.

பெண்கள் அவர்களின் மூளையின் முன்பகுதியில் (Pre-frontal cortex) இருக்கும் செல்கள் மூலமாகத் தீர்ப்பு, திட்டமிடல் மற்றும் விழிப்புநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பணிகளைச் செய்கின்றன. இதனால் தான் அவர்கள் ஒருபொருளைத் தேடும் போது சரியான இடத்தைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.

ஆணுக்குத் தன்னுடைய பொருட்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியாது. பல சமயங்களில் தன்னுடைய பொருட்களைத் தொலைத்துவிட்டு வீடு முழுமைக்கும் தேடுபவர்களாக இருப்பார்கள்.

பெண்ணால் வண்ணங்களை மிகத் துல்லியமாக ஒரே சமயத்தில் பிரித்துப் பார்க்க முடியும். அதனால் தான் ஆடைகளைத் தேர்வு செய்யும் போது ஒரு பெண் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாள். ஆண்களுக்குப் பொதுவான வண்ணங்கள் மட்டுமே தெரியும்.

ஓர் ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லையே என்று ஒரு பெண் புலம்புவதும் சகஜம். அதே சமயத்தில் ஒரு பெண் தன் பாலியல் தேவைகளைப் புரிந்து கொள்வது இல்லையே என்று ஓர் ஆண் நொந்து கொள்வதும் சகஜம்.

எது எப்படி இருந்தாலும் குடும்ப வாழ்க்கையிலும் சரி; காதல் வாழ்க்கையிலும் சரி; விரிசல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம். மிக மிக முக்கியம்.

சான்றுகள்

1. https://www.nm.org/healthbeat/healthy-tips/battle-of-the-brain-men-vs-women-infographic

2. https://en.wikipedia.org/wiki/Neuroscience_of_sex_differencesபேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்

 

Balamurugan Balu : வணக்கம்! சந்தேகமே இல்லை ஆண்கள் தான்!

Muthukrishnan Ipoh : சபாஷ்... சரியான போட்டி...

Kanna CK Kanna Ck >>> Muthukrishnan Ipoh : ஐயா... எது எப்படியோ... பழமொழி என்ன சொல்லுது?? பெண் புத்தி பின் புத்தி...

Muthukrishnan Ipoh >>> Kanna CK Kanna Ck : பெண்மையை மதித்து பெண்மையைப் போற்றும் நம் சமூகத்தில் பெண் புத்தி பின் புத்தி எனும் பழமொழி தவறான பார்வையில் பார்க்கப் படுகிறது. பெண்மையை இழிவு படுத்துவது போல அமைகிறது.

ஒரு குடும்பத்தில் கணவனுக்கு மந்திரியைப் போல இருந்து ஆலோசனைகள் சொல்லி துன்பங்களில் இருந்து காப்பவள் பெண்.

பெண் என்பவள் பின் வரும் நிலையை முன்கூட்டியே எடுத்துச் செல்லும் வலிமை பெற்றவள் எனும் பொருளை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக அந்தப் பழமொழி உண்டானது.

அதாவது பெண்புத்தியானது பின்னால் வரும் கஷ்டங்களை ஆண்களுக்கு உணர்த்தும் புத்தியாகும்.

இதை உணர்த்தவே பெண்புத்தி பின்புத்தி என்று கூறி வைத்தார்கள்.

இதன் பொருள் நாளடைவில் மாறி மருவி விட்டது. ஆதலால் இது பற்றி இனி சர்ச்சைகள் வேண்டாம்.

Sathya Raman : இது ஆண்கள்,பெண்களை வம்பில் மாட்டி விடும் விவகாரமாச்சே சார். அவரவர் மூளை அவரவருக்கு உசத்தி பெருசு, ஆற்றல் மிக்கது. ஆனால் கேள்வி என்று வரும்போது போர் பரணியை அல்லவா ஏற்படுத்தும். பார்த்து சார் இன்று இதனால் உங்கள் மண்டை உருளாமல் இருந்தால் சரி. ம்ம்ம் என்னை கேட்டால் நான் என்னுடைய கோஷ்டிகளுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன்.

மா.சித்ரா தேவி : அதே அதே...

Sathya Raman >>> மா.சித்ரா தேவி : நிலைமை மோசமாகி விட்டால் அணி சேர்ந்து "அட்டேக்" பண்ண தயாராக இருங்கள் சித்ரா 😀

Muthukrishnan Ipoh : கட்டுரை அறிவியல் பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரை... பெண்களுக்கு பெண்கள் ஓடுப் போட்டலும் சரி அட்டேக் பண்ணினாலும் சரி... என்றைக்கும் ஆண்கள் ஆண்களே...

என்றைக்கும் என் கட்சிக்குத் தான் என் ஓட்டு.... இருந்தாலும்... ஆண்களைப் பற்றி சில முக்கியமான விசயங்கள்...

பெண் மூளையை விட ஆணின் மூளை கொஞ்சம் பெரியது. ரொம்பவும் இல்லை. 10 விழுக்காட்டுப் பெரிசு.

ஆண்கள் ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபடும் போது மற்றவர்களின் பேச்சைக் கேட்பது இல்லை.

ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். அப்போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம்; அந்த வாகனம் பயணிக்கும் கோணம்; அந்த வாகனத்தின் போக்கில் ஏற்படப் போகும் மாற்றங்களை ஆண்களால் விரைவாகக் கணிக்க முடியும் என்கிறார்கள்.

ஆனால் பெண்களின் மூளை கொஞ்சம் தாமதமாகவே அந்தக் கணிப்புகளைக் கணிக்குமாம். இதற்கு ஆய்வாளர்கள் சொல்லும் காரணம்: பெண்களின் மூளை பல பணிகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றது.

ஒரு வாகனத்தைச் செலுத்தும் போது ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் உன்னிப்பாக இருக்கும்.

ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் தான் வாகனங்களைச் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. 😃😃😃

Sathya Raman >>> Muthukrishnan Ipoh : ஆணின் மூளை அளவில் பெரிதாய் இருந்து என்ன பண்றது சார்? அது பலமாக, பதுவசாக இருக்கணுமே? பெண்களின் மூளை ஓரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் என்ற உண்மையைச் சொன்ன உங்களுக்கு ஒரு ஜே, ஜே. 😎 சார்.

நான்கூட இன்று காலையில் இட்லி சுட ஆரம்பித்து, மதிய சமையல், மாலை சிற்றுண்டி இடை இடையே வீட்டுக்கு ஒட்டடை அடித்து, திரைச் சீலைகள், படுக்கை விரிப்பு எல்லாம் துவைத்து "கையில் தான்" வீட்டை முழுதும் துடைத்து சுத்தம் செய்துன்னு என ஒரே நாளில் பல வேலைகள் இப்படி ஆண்களால் முடியுமா? அலட்டிக் கொள்ள மட்டுமே முடியும்...

Muthukrishnan Ipoh :
இந்தக் கொரோனாவிற்குக் கூட ஓர வஞ்சனை... கொரோனாவினால் இறப்பவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள்... கொரோனாவே பெண்களுக்கு சப்போர்ட் பண்ணும் போது... ஆண்கள் என்ன செய்வதாம்.. காசி இராமேஸ்வரம் போகலாம் என்றால் அதுவும் முடியாது... உலகம் பூராவும் லோக் டவுன்...

Parimala Muniyandy : இதில் என்ன சந்தேகம்... பெண் மூளைதான்.

Muthukrishnan Ipoh : பெண்களுக்குப் பெண்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும்...

Manickam Nadeson : அதை மூளை இருக்கிறவங்க கிட்ட கேக்கனும், என் கிட்ட கேட்டா நான் என்னான்னு சொல்லுவேன்????

Magendran Rajundram : பெண் புத்தி பின் புத்தி என்பதற்கு உண்மையான விளக்கம் பலருக்கு தெரிவது இல்லை. நானே தாமதமாக தான் சில வருடங்களுக்கு முன் தெரிந்துக் கொண்டேன். பின்னர் நடக்கப் போவதை அறிந்துக் கொள்ளும் திறன் பெண்களின் தனிச் சிறப்பு.

இதற்கு உதாரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் ’போகாதே போகாதே என் கணவா’ பாடலைச் சொல்லலாம். ராமாயணத்தில் வாலி ராமரிடம் போர் புரிய செல்வதற்கு முன் தாரா அவனை எச்சரித்த பகுதியை சொல்லலாம்.

இதில் படித்த பெண் படிக்காத பெண் என்ற வேறுபாடு இல்லை. ஆண்களின் ஈகோ பெண்களின் பேச்சை கேட்காமல் செய்து விடுகிறது. லாஜிக் என்ற ஒன்று வேறு தடையாக இருக்கும். ஆனால் பெண்களின் கணிப்பு பல நேரங்களில் உண்மையாகவே இருக்கும்.


4 comments:

  1. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்

    ReplyDelete
  2. ஆஹா! பிரமாதம். எல்லா ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கைத் துணையைப் புரிந்து கொள்ள , இப்பகிர்வு பெரிதும் உதவும். அருமை தலைவா!
    ����

    ReplyDelete