28 ஆகஸ்ட் 2019

மகாதீர் அவர்களுக்கு மனம் திறந்த மடல்

இதற்காகவா ஆசைப்பட்டோம் பிரதமரே?
தமிழ் மலர் - 28.08.2019


ஒரு கணம் இந்தியர்கள் அதிர்ந்து குலுங்கினர் என்றே சொல்ல வேண்டும். எந்த வார்த்தையை கேட்கக் கூடாதோ… எந்த வார்த்தை காலம் காலமாக மலேசிய இந்தியர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைக்கிறதோ… அந்த வார்த்தையை ஒரு பிரதமரே பயன்படுத்துவார் என்று மலேசிய இந்தியர்கள் கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்த நாட்டை முதல் தவணையாக 22 ஆண்டுகள் வழி நடத்திய ஒரு பெரும் தலைவர் அவர். 2-ஆவது முறையாக 93 வயதில் ஆட்சி மாற்றத்திற்கும் அரசாங்க மாற்றத்திற்கும் தலைமை ஏற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்தவர் அவர்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கும் அரசாங்க மாற்றத்திற்கும் இந்த நாட்டின் 3-ஆவது பெரிய இனமாக இருக்கின்ற இந்தியர்களின் முக்கால்வாசி ஆதரவு கிடைத்தது என்று உறுதி செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறின.




எந்த வார்த்தை அந்த இந்திய சமூகத்தை காயப் படுத்துகிறதோ அதை மறந்தும் பயன்படுத்தக் கூடாது என்று மற்ற சமூகங்கள் இந்த நீண்ட நெடிய பயணத்தில் அறிந்து உள்ளனர்.

அந்த வார்த்தை நிந்திக்கும் ஒரு ஜாதி நிந்தனைச் சொல். இத்தனைக்கும் அவர் சொன்ன அந்த வார்த்தைக்கும் அவர் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பகாங் மாநிலத்தில் அமைந்து உள்ள அரிய மண் தொழிற்சாலை மக்களுக்கு பெரும் சுகாதார கேட்டை விளைவிக்கிறது. அது அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்.

இத்தனைக்கும் பக்காத்தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க் கட்சியாக இருந்த போது இந்த லைனாஸ் தொழிற்சாலைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி வந்தது. இந்த ஆட்சியில் அதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்று மக்கள் நம்பினார்கள்.




ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தத் தொழிற்சாலைக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இது பற்றி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப் பட்டபோது தான் பிரதமர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்.

அதாவது, இந்தத் தொழிற்சாலையை குறிப்பாக முதலீட்டாளர்களை ஒரு பறையா போல் நடத்தினால், பிறகு இந்த நாட்டில் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்று பிரதமர் சொன்ன அந்த வார்த்தை வலைத் தளங்களில் வலம் வந்த போது மலேசிய இந்தியர்களே ஒரு கணம் அதிர்ந்து போயினர்.

இந்த ஜாதி அவச் சொல் பிரதமர் வாயில் இருந்து வரலாமா? அவர் அப்படி சொல்லலாமா?

இத்தனை அனுபவம் கொண்ட ஒரு பெரும் தலைவர் எந்தச் சொல் ஒரு சமூகத்தை ஊனப் படுத்தும்… காயப் படுத்தும் என்று தெரிந்தும் மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டாரே என்று இந்திய சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் ஆதங்கப் படுகிறார்கள். அதிருப்தி அடைகிறார்கள். பலர் கோபப் படுகிறார்கள். சிலரோ கொந்தளிக்கிறார்கள். 




இத்தனைக்கும் ஒரு முறை இந்தியர்களை நிந்திக்கும் மற்றொரு சொல்லை சொல்லி அதற்காக மன்னிப்பு கேட்டவர் பிரதமர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

மலேசிய இந்தியர்கள் விசுவாசமற்றவர்கள் என்று எங்கிருந்தோ வந்த ஒரு மத போதகர் சொன்ன அந்த சுடு சொல்லில் இருந்து இந்திய சமுதாயம் இன்னும் விடுபடவில்லை.

ஜாவியை தமிழ்ப் பள்ளியில் போதிப்பதை இப்போது ஒத்தி வையுங்கள். இது பற்றி விரிவாக பேசுவோம், விவாதிப்போம் என்று சொன்னதற்காக அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களை உள்ளடக்கிய செக்காட் என்ற அமைப்பினரை தற்பெருமை பிடித்த முட்டாள்கள் என்று நிந்திக்கிறார் இளைய அமைச்சர் சைட் சாடிக்.

அந்த அம்பு பாய்ந்த ரணத்திற்கு மேல் இன்னொரு அம்பாக பிரதமரே இந்த வார்த்தையை உதிர்த்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதற்காகவா ஆசைப் பட்டோம் பிரதமரே என்று சொல்லி மாளாமல் அழுகிறது இந்திய சமுதாயம். இந்த அழுகுரல் அரசின் காதில் விழுமா?

-தமிழ் மலர் ஆசிரியர், டத்தோ எம். ராஜன்
....................................................................................




இந்தச் செய்தி தொடர்பாக பேஸ்புக் ஊடகத்தில் பொது மக்களின் கருத்துகள்

Sathya Raman நானும் இச்செய்தியை இன்றைய பத்திரிகையில் படித்தேன். இவ்வேளையில் ஒரு சினிமா வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. "வெச்சு செஞ்சுட்டான்டா". தற்சமயம் இந்நாட்டில் நடக்கிற கூத்தை எல்லாம் பார்க்கையில் வேண்டுமென்றே இந்நாட்டு இந்தியர்களை இழிவு படுத்தும் செயல் அரங்கேறி வருகிறது.

பிரதமரே பேசுகிறார். நமக்கென்ன என்கிற தோரணையில் நண்டு, சுண்டு எல்லாம் நாக்கு மேல பல்லைப் போட்டு எம் இனத்தை வலையில்லாமல் பந்தாடி வருகிறார்கள். யாருங்க இவர்கள்?

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வார்த்தை ஜாலங்களால் வாந்தி எடுத்து ஓட்டுக்காக தெரு, தெருவாக இந்தியர்களை தேவ லோகத்து சீமான்களாய் நினைத்து தங்களின் சுயநலத்திற்காக, பதவி, பகட்டு, பேராசைக்காக பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் இவர்கள்.

அப்போது மட்டும் இந்தியர்களை இமயமலை அளவிற்கு புகழ்ந்து தள்ளுவார்கள் . இப்படிப்பட்ட புல்லுருவிகளை இந்நாட்டில் எதற்கெடுத்தாலும் போராடியே காரியம் ஆற்றும் நாமும் இந்த நன்றி கெட்ட ஜென்மங்களின் வாய் சவடால்களை அடுத்த தேர்தல் வரை கண்டித்து வைப்போம்.வேறு வழி?🤔
Muthukrishnan Ipoh அருமையான எதார்த்தமான சொல்லாடல்கள்...

///பிரதமரே பேசுகிறார்.நமக்கென்ன என்கிற தோரணையில் நண்டு,சுண்டு எல்லாம் நாக்கு மேல பல்லைப்போட்டு எம் இனத்தை வலையில்லாமல் பந்தாடி வருகிறார்கள்.யாருங்க இவர்கள்?///

///ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வார்த்தை ஜாலங்களால் வாந்தி எடுத்து ஓட்டுக்காக தெரு,தெருவாக இந்தியர்களை தேவலோகத்து சீமான்களால் நினைத்து தங்களின் சுயநலத்திற்காக, பதவி ,பகட்டு,பேராசைக்காக பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் இவர்கள்.///

காலத்தால் மறக்க முடியாத உயிர்ச் சொற்கள். நன்றி.



Manickam Nadeson ஆணவம் அளவுக்கு மிஞ்சி போய்விட்டது. நாய் வாலை அதுவும் தெருநாய் வாலை நிமிர்த்த முடியுமா?? கர்மா அதன் வேலையைச் சீக்கிரம் காட்டும, அனுபவித்துத் தான் சாக வேண்டும். பார்க்கத் தானே போகிறோம்.

Dorairaj Karupiah இத்திரு நாட்டில் ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நம்மவர் பாடு... அந்தோ பரிகாசம்... பாவம்... இதில் மகா திமிர் கில்லாடி
Mageswary Muthiah Dorairaj Karupiah சரியாக கூறினீர்கள்.
Ravi Purushothaman இந்தியக் கட்சிகளும் இந்தியர்களும் ஒன்றுபட வேண்டிய தருணம்....ஒற்றுமையே பலம்... அப்போது தான் பிறர் நம்மை மதிப்பார்கள்.... பிரிந்து  நின்றால் நாய் கூட மதிக்காது!!!
Peter Johnson Durairaj The leopard cannot change its spots! Likewise , Mahathir cannot change his mindset.

Sugunesan Nesan இன்று நாம் ஒன்றும் செய்ய இயலாது.அதிகாரம் அவர் கையில் உள்ளது.அவமானத்தை துடைத்து எச்சரிக்கை விடுத்து அமைதி காப்போம்.நிச்சயம் வழிபிறக்கும்.
Kaliswari Krishna என்னே அரசியல் நாடகம்....
Sugunesan Nesan பொருமை கொள்வோம் பொது தேர்தலில் கொல்வோம்.அதுவே சிறந்த ஆயுதம்.
Ranjanaru Ranjanaru Ivar tiruntha maattaar ...magan Pirathamar aagum varai ...tan inattukkaaraigalai magilhchip padutha entha ...levalukkum pohvaar ... (இவர் திருந்த மாட்டார்... மகன் பிரதமர் ஆகும் வரை... தன் இனத்துக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்த எந்த லெவலுக்கும் போவார்...)


Sathya Raman பாவம் !இந்த அரசியல் சித்து விளையாட்டில் சாமர்த்தியமாக சாம்ராஜ்யத்தை அமைக்க வியூகம் அமைக்கப்படுவதை நாட்டு மக்களாகிய பலருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போது இந்த இலவுக்காத்த கிளிகள் என்ன நினைக்கிறார்களோ? அவர்களின் நிலைபாடு என்னவோ?😀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக