03 செப்டம்பர் 2019

அமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 2

1964-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை பிரேசில் நாட்டில் இராணுவ ஆட்சி. அந்த இடைக் காலத்தில் 1965-ஆம் ஆண்டு காஸ்டெல்லோ பிரங்கோ (Castelo Branco) என்பவர் பிரேசிலின் அதிபராகப் பதவிக்கு வந்தார். இவர் ஓர் இராணுவச் சர்வதிகாரி. 



இருபது ஆண்டு காலத்திற்கு பிரேசில் நாடு இராணுவ இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டது. இராணுவம் ஒரு நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டால் அந்த நாடு வழக்க நிலைக்குத் திரும்பி வருவது மிகச் சிரமம். நீண்ட நாட்கள் பிடிக்கும்.

மியன்மார், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகள் நல்ல எடுத்துக்காட்டுகள்.

நல்ல வேளை. இங்கே இந்தப் பக்கம் அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் இராணுவத்திற்கே சவால் விடும் அரசியல்வாதிகள் சிலர் இருந்தார்கள். மன்னிக்கவும். இன்னும் இருக்கிறார்கள். வம்சாவளி இரத்தத்தையே வற்றல் போடும் மனிதர்கள். மனித நேயத்திற்கு மரியாதை தெரியாத மனிதர்கள். மலேசிய இந்தியர்களுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாத மகா மனிதர்கள். நல்லா இருக்கட்டும். நம் கதைக்கு வருவோம்.




1965-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் காட்டு அழிப்புக்கு எதிராக ஒரு புது மாதிரியான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதாவது அமேசான் காடுகளில் விவசாயிகள் நிலங்களை வாங்கலாம் விற்கலாம். பிரச்சினை இல்லை.

ஆனால் வாங்கிய நிலத்தில் 20 விழுக்காட்டு நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். மிச்சம் 80 விழுக்காடு காடாகவே இருக்க வேண்டும்.

இந்தச் சட்டம் பழங்குடி மக்களைப் பாதிக்கவே செய்தது. அமேசான் காடுகள் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம். அவர்களின் சொர்க்க லோகம். சொர்க்க பூமி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அமேசான் காடுகளை ஆட்சி செய்தவர்கள். 




அமேசான் காட்டில் எங்கேயோ ஒரு பகுதியில் 1000 ஏக்கரைச் சுற்றி வளைத்து நெருப்பு வைத்து கொளுத்தினால் என்னவாகும். சொல்லுங்கள்.

ஓர் ஆள் இரண்டு ஆள் என்றால் பரவாயில்லைங்க. ஆயிரம் இரண்டாயிரம் பேர் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளை அழித்தால் எப்படிங்க.

நிச்சயமாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கவே செய்யும். அவர்களின் பிழைப்பு அங்கே தானே இருக்கிறது. பாவம் அவர்கள். என்னதான் செய்வார்கள்.

20 விழுக்காட்டு நிலத்தில் பயிர் செய்யலாம் என்பது சட்டம். ஆனால் காடுகளை அழிப்பது 50 விழுக்காடாக மாறியது. எல்லாம் திருட்டுத் தனமான வேளாண்மைகள்; கள்ளத் தனமான கால்நடை வளர்ப்புகள். காடு அழிக்கும் பின்னணியில் இராணுவம் கண் சிமிட்டி காசு வாங்கிக் கொண்டு இருந்தது.




அமேசான் காடு ஏன் எரிகிறது என்பதை வரலாற்றுப் பார்வையில் பார்க்கிறோம். அதனால் தான் இந்தப் பீடிகை.

இராணுவத்தின் சர்வாதிகார ஆட்சி 1988-ஆம் ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம். அமேசான் பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் நில உரிமைகள் மீண்டும் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப் பட்டன.

நிலைமை இப்படி இருக்கையில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொல்சோனாரோ அதிபர்  பதவிக்கு வந்தார் . 




’இவ்வளவு இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு இருக்கிறோம். யாரோ ஒரு சில பூர்வகுடி மக்கள் எதிர்க்கிறார்கள். அதற்காக அவற்றை வீணாக்கி விடலாமா’. அப்படி சொன்னவர் பிரேசில் அதிபர் பொல்சோனாரோ.

(The Washington Post reported that Bolsonaro had recommended exploiting the country’s natural resources by tapping into the Amazon basin. Brazil should not sit on its natural reserves because a handful of Indians want to conserve it)

சுரண்டல் மீண்டும் தலைதூக்கியது. அமேசான் காடுகளை அழிப்பதே பொல்சோனேரோவின் தலையாயத் திட்டம். உலகத்திற்கே தெரிந்து விட்டது.

பொல்சோனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு காடுகள் பெரும் அளவில் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.




காட்டுத் தீயை அணைப்பதற்கு எங்களிடம் போதுமான சக்தி இல்லை என்று அதிபர் பொல்சோனேரோ ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அமேசான் மீது எங்களுக்கு நிச்சயமாக அக்கறை இருக்கிறது. நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அமேசானைக் காப்பாற்றுவோம் என்று வெளி உலகத்திற்கு வீணை வாசிக்கிறார்.

அதே சமயத்தில் தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட அரசு சாரா இயக்கங்களின்  சதி வேலை தான் இது என்றும் சுதியும் சேர்க்கிறார். 

அப்படிச் சொல்கிறவர் இந்தப் பக்கம் விவசாயிகளிடம் '‘புடிச்சி கொளுத்துங்கடா’ என்று உசுப்பியும் விடுகிறார்.

இதுதாங்க அங்கே பிரேசில் நாட்டில் நடக்கும் கூத்து. தொட்டிலை ஆட்டிக் கொண்டே பிள்ளையைக் கிள்ளி விடும் கலையில் அதிபர் பொல்சோனேரோ நன்றாகவே பேர் போட்டுக் கொண்டு வருகிறார். 




உண்மையில் விவசாயிகள் மற்றும் முதலாளிகள் தான் இந்தக் காட்டுத் தீ நிகழ்ச்சிகளுக்கு காரணம். சிறிய பகுதிகளைக் கைவசப் படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கு அடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கின்றது.

கடந்த ஜூலை மாதம் பிரேசில் உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிடவேண்டாம் என்று அதிபர் பொல்சோனேரோ உலகத் தலைவர்களுக்குச் சவால் விட்டார்.

அனைத்துலக அளவில் பொல்சோனேரோவிற்குப் பெரும் அழுத்தங்கள் வந்தன. வேறுவழி இல்லாமல் இப்போது இராணுவப் படைகளை அனுப்பி இருக்கிறார். ஏற்கனவே அவர் சொன்னதை நினைவு கூர்வோம். ‘எங்களிடம் 40 தீயணைப்பு வீரர்கள் தான் இருக்கிறார்கள். அதனால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று சொன்னார். 




பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு இறங்கி வந்து விட்டது. நல்லதுக்குத் தான். இப்போது மனிதர் அடங்கிப் போய் இருக்கிறார்.

அதிபர் பொல்சோனேரோ இறங்கி வந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவல் மேக்ரான். சிரம் தாழ்த்துவோம்.

`2019 ஜூன் மாதம் ஜப்பானில் நடந்த G20 மாநாட்டில் பொல்சோனேரோ என்னிடம் பொய் சொல்லி இருக்கிறார்’ என பொல்சோனேரோவை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கடுமையாகத் திட்டி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ``நம்முடைய வீடு எரிகிறது, நாம் விரைந்து செயல்பட வேண்டும்" என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஒரு ட்வீட் செய்தியைப் பகிர்ந்து இருந்தார். அதற்கு ``இது காலனித்துவ மனப்பான்மையின் எடுத்துக்காட்டு" என பொல்சோனேரோ பதில் கொடுத்து இருந்தார்.

அப்புறம் என்ன. பிரான்ஸ் அதிபருக்கு மணி அடித்து விட்டது. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஐரோப்பிய யூனியனுடன் பிரேசிலுக்கு இருக்கும் வர்த்தகத் தொடர்புகளைத் தூண்டித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்தார். 




பிரேசில் நாட்டில் இருந்து வரும் மாட்டிறைச்சி இறக்குமதியைத் தடுக்கத் திட்டம் போடப் பட்டது. இதற்கு அயர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆடிப் போன பொல்சோனேரோ இராணுவத்தை அனுப்பி காட்டுத் தீயை அணைப்பதில் இப்போது தீவிரம் காட்டி வருகிறார். சற்றே மகிழ்ச்சி. என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

அமேசான் காடுகளைப் பற்றி மேலும் சில தகவல்கள். அமேசான் காடுகள் ரொம்பவும் ஆபத்தானவை. காடுகளுக்குள் மாட்டிக் கொண்டால் எளிதாகத் திரும்பி வர முடியாது. அங்கு உயிர் வாழும் விலங்குகள்; காட்டின் இயற்கை அமைப்புகள்; இருட்டான சூழ்நிலைகள் தான் காரணம்.

மழை பெய்தால் அந்த மழை நீர் தரையை வந்து தொடுவதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும் என்றால் அமேசான் காட்டு மரங்களின் அடர்த்தியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அமேசான் ஆற்றின் நீளம் 6,992 கிலோ மீட்டர்கள். 5 கோடி 50 இலட்சம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. 1,100 துணை ஆறுகளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு கடலில் வந்து கலக்கிறது.

மலேசியர்கள் மூன்று வருடங்கள் பயன்படுத்தும் தண்ணீரை அமேசான் நதி ஒரே நாளில் கொண்டு போய் அட்லாண்டிக் பெருங்கடலில் கொட்டுகிறது. அதைப் படித்து அடியேன் ஆடிப் போய் விட்டேன். உங்களுக்கு எப்படி?




இந்தக் காடுகளில் 3,000 வகை மீன்கள்; 1,500 வகை பறவைகள்; 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள்; 200 விதமான கொசுக்கள் உள்ளன. உலகில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் காடுகளில் தான் வாழ்கின்றன.

20 ஆயிரம் ஆண்டுகளாகப் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 170 வகையான மொழிகள் பேசுகின்றார்கள்.

எப்பேர்ப்பட்ட  கொடிய நோய்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தப் பழங்குடி மக்களிடம் உள்ளது. ஆனால் ஜலதோஷம் எனும் தடிமன் நீர்க்கோப்பை எதிர்க்கும் திறன் மட்டும் இவர்களிடம் இல்லை என்பது தான் பெரும் அதிர்ச்சியான தகவல்.

ஜலதோஷம் வந்தால் இவர்கள் இறந்து விடுவார்கள் என்பது தான் மிகவும் வேதனையான செய்தி.

விலங்குகளை வேட்டையாடிப் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். சமைப்பது என்றால் என்ன என்று கேட்கிறார்கள்.

’ருசிக்க ரசிக்க’; ‘சமைக்கலாம் வாங்க’; ‘பாட்டி சமையல்’; ’தாத்தா சமையல்’; போன்ற நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் அங்கே போய் சமைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் என்ன...

இவர்களையும் பிடித்துக் கடித்து பச்சையாகச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள். அப்புறம் ’பசிக்க புசிக்க’ என்று புதிதாய் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டி வரலாம். எதற்கும் வீட்டில் சொல்லிவிட்டு போனால் நல்லது.

(முற்றும்)

copyright © https://ksmuthukrishnan.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக