04 செப்டம்பர் 2019

பாஸ் கட்சியின் பிரசாரம்

பல்லின மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் நாடு மலேசியா. இன சமயப் புரிந்துணர்வுகளில் சமரசம் காணும் நாடு மலேசியா. பன்னெடும் காலமாக பல்லின ஒற்றுமைக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் நாடு மலேசியா.

அந்த ஐக்கியத்திற்கும் அந்த ஒற்றுமைக்கும் அந்த நல்லிணக்கத்திற்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலேசியர்கள் அனைவரின் கடமையாகும்.


அண்மைய காலமாக ஓர் ஆரோக்கியமற்ற பிரசாரம். முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம். உண்மையிலேயே அது ஆரோக்கியமற்ற, வருந்தத்தக்க செயல் ஆகும்.

இனத்தையும் சமயத்தையும் முன் வைத்து பொருட்களைப் புறக்கணிப்புச் செய்வது என்பது நல்ல செயல் அன்று. சரியான நிலைப்பாடும் அல்ல.

முஸ்லிம் தயாரிப்புப் பொருட்களை முதலில் வாங்குவது என்கிற பிரசாரம் தவறானது...  ஆரோக்கியமற்றது.

பல இன சமூக அமைப்பில் மிகவும் ஆரோக்கியம் அற்றது. பிரதமர் துன் மகாதீர் உட்பட பலரும் கண்டித்து இருக்கிறார்கள். எனினும் பாஸ் கட்சி இதனை ஆதரித்து செயல்பட்டு வருகிறது. வருத்தம் அளிக்கும் செயல்பாடு.



Spirit of Malaysia: Good friends (from left) Aimi Nurjannah Ahmad Fadilah, 10; N. Bhagawathy, 11; and Ong Chui Juang, 10; chatting by a Jalur Gemilang hung up at their school, Sekolah Kebangsaan Sultan Abdullah.

ஒரு பிரசாரத்தைத் தொடங்கு முன்னர் அந்தப் பிரசாரத்தின் பின்விளைவுகளை நன்கு பரிசீலக்க வேண்டும். உலக வாணிகம் எப்படி செயல் படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மலேசியப் பொருளாதாரம் அந்நிய நேரடி முதலீட்டைச் சார்ந்து உள்ளது. அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் முக்கியமானவை. தவிர கணினி மென்பொருள் சார்ந்த தொழில்நுட்பத் துறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகளை நம் நாட்டுத் தொழில்நுட்பத் துறை சார்ந்து உள்ளது.

உலகில் பல நாடுகள் ஹலால் பொருட்களைத் தயாரிக்கின்றன. அந்த வகையில் முஸ்லீம் நாடுகள் தயாரித்த பொருட்களை மட்டும் வாங்குங்கள் எனும் பிரசாரம் தொடருமானால் உள்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் வியாபாரம் பாதிக்கப் படலாம். 


அதனால் அவர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால் தொழிலாளர்கள் பலர்  பணிநீக்கம் செய்யப் படலாம். இவற்றை எல்லாம் பாஸ் கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முகமட் கவுஸ் நசுருதீன் அவர்களும் அந்நிய நேரடி முதலீட்டைத் தான் முதன்மைப் படுத்துகின்றார். பாஸ் கட்சி முன்னெடுக்கும் பிரசாரம் மிகவும் குறுகிய பார்வை கொண்டதாகும் என்கிறார்.

பாஸ் கட்சியின் இந்தப் பிரசாரம் அரசியல் பின்புலத்தைக் கொண்டது என்று கணிக்க முடிகின்றது. பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இப்படிப்பட்ட பிரசாரம் ஆரோக்கியமற்றது. பன்முகச் சமுதாயத்தில் பிரிவுகளை ஏற்படுத்தலாம்.

மதங்கள் ஒருவரை ஒருவர் புறக்கணிக்கவும் கற்பிக்கவில்லை அல்லது வெறுக்கவும் கற்பிக்கவில்லை.

ஒரே வார்த்தையில் சொன்னால்... முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற அழைப்பு எந்த ஒரு தரப்பினருக்கும் பயன் அளிக்காது.

அதே சமயத்தில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கம் எந்தச் சூழ்நிலையையும் மேம்படுத்த உதவாது. ஆனால் மற்றவர்களிடையே கோபத்தைத் தான் உருவாக்கும்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கமாறு அழைப்பு விடுத்து உள்ளன.

அந்த வகையில் பார்த்தால் வெளிநாட்டு தயாரிப்புகளில் குறிப்பாக கைத் தொலைபேசிகளையும் புறக்கணிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் தீயவர்கள் மூலமாகத் தோற்கடிக்கப் படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இந்த நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து அந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.

இறுதியாக... அரசியல் லாபத்திற்காக பல்லினச் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படுத்துவது ஆரோக்கியமான செயல் அல்ல.

நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு நாம் முயற்சி செய்கிறோம். முயற்சி செய்து வருகிறோம். அரசியல் லாபத்திற்காக பல்லினச் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படுத்துவது ஆரோக்கியமான செயல் அல்ல.

நாட்டின் நல்லிணத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆரோக்கியமற்ற அந்தப் பிரசாரத்தைப் பாஸ் கட்சி கைவிட வேண்டும். அதுவே நம்முடைய தாழ்மையான வேண்டுகோள்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.09.2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக