மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் கறுப்புச் சுவடு
அரசியல் சாணக்கியம் என்பது வேறு. அரசியல் சந்தர்ப்ப வாதம் என்பது வேறு. இரண்டையும் சேர்த்தால் அரசியல் துரோகம் என்று சொல்லலாம். அல்லது அரசியல் கில்லாடித் தனம் என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரே குட்டையில் ஊறி பேரன் பேத்திகள் எடுத்த அட்டைகள்.
அவற்றில் ஒன்று தான் கோலா தெர்லாவில் நடந்த விவசாயப் பண்ணைகள் அழிப்பு அநியாயம். கேமரன் மலை வரலாற்றில் அது ஒரு கறும் புள்ளி. மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத கறுப்பு நாள்.
கேமரன் மலையில் பல்லாயிரக் கணக்கான பண்ணைகள் உள்ளன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை இலட்சம் பண்ணைகள் இருக்கலாம். அந்தப் பண்ணைகள் எல்லாம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லையா என்று கேட்கலாம். நல்ல கேள்வி. அதற்கு ஒரே பதில். தனக்கு வந்தால் இரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்ணி.
அந்த 60 இந்தியர்களின் பண்ணைகள்தான் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளன. இந்த 60 இந்தியர்களின் பண்ணைகள்தான் கண்களை உறுத்தி இருக்கின்றன. இந்த 60 இந்தியர்களின் பண்ணைகள் தான் சட்டத்திற்குப் புறம்பான பண்ணைகள் என அதிகாரிகளின் கண்களுக்குத் தெரிந்து இருக்கின்றன. எங்கேயோ அடித்து எங்கேயோ பல் விழுந்த கதையாக உள்ளது.
தமிழ் மலர் - 27.12.2019 |
அந்தப் பண்ணைகளில் உள்ள முட்டை கோஸ் கொத்துகளை பாராங் கத்திகளால் வெட்டுகிறார்கள். அந்த காட்சிகளைக் காணொலி வடிவங்களில் பார்க்க முடிந்தது. எவ்வளவு சந்தோஷமாக வெட்டித் தள்ளுகிறார்கள். மனிதம் வெட்டிச் சாய்ப்பது போல இருந்தது.
வெள்ளை பச்சை நிறத்திலான விதானக் கூடாரங்களை (canopy) கன ரக இயந்திரங்களால் இடித்துத் தள்ளி நசுக்கி நாசம் செய்கிறார்கள். மனசாட்சி இல்லாத மனிதாபிமானம் இல்லாத செயல்கள். மனிதம் மரித்துப் போகும் காட்சிகள். மனிதத்தை நசுக்கி நார் நாராய்க் கிழிப்பது போல இருந்தது. எப்படி மனசு வருகிறதோ தெரியவில்லை.
1969-ஆம் ஆண்டு கேமரன் மலை, கோல தெர்லாவில் இருந்து கோப்பேங் செல்வதற்கு ஒரு சாலை அமைக்க முயற்சி செய்தார்கள். இருப்பினும் அந்தத் திட்டம் அப்படியே கைவிடப் பட்டது. அந்த இடத்தில் முன்பு போட்ட பழைய மண் சாலைகள் உள்ளன. அங்கே இருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டர் உட்பாகத்தில் தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
அந்த இடத்தில் தான் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தோட்டங்கள் இருந்தன. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக காய்கறிகள், பூந்தோட்டங்கள் அமைத்து தங்களின் வாழ்வாதாரத்தைப் பார்த்து வந்தார்கள். 63 பேரிடம் தற்காலிக உரிமங்கள் இருந்தன.
(The reason that was given for the demolition of the farms was the issue of water pollution in Sungai Ichat where the farms were located.)
மலேசியா போன்ற ஒரு மக்களாட்சி நாட்டில் இது போன்ற செயல் ஓர் அநாகரிகச் செயலாகும்.
ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். இவ்வளவு காலமாக அந்தப் பண்ணை விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கி இருக்கிறார்கள். தற்காலிக நில அனுமதி வழங்கி இருக்கிறார்கள். குடிநீர் வழங்கி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர்களின் பண்ணைகளைத் திடீரென்று தரைமட்டம் ஆக்கியது முறையற்றச் செயலாகும்.
ஒரு பிலாஸ்டிக் விதானக் கூடாரம் (பிலாஸ்டிக் வீடு) அமைப்பது என்றால் முன்பு 1980-களில் 50 ஆயிரம் ரிங்கிட் வரை பிடிக்கும். இப்போது 2010-களில் ஒரு இலட்சம் அல்லது இலட்சம் பிடிக்கும். பிலாஸ்டிக் வீடு கட்டினால் தான் பூந்தோட்டங்களை உருவாக்க முடியும். சொகுசாய் வாழும் தாவரங்களைப் பேணி வளர்க்க முடியும்.
இதில் மனிதாபிமானம் இல்லாமல் அந்தப் பூந்தோட்டங்களையும் காய்கறிக் பண்ணைகளையும் அழித்தது தான் மனிதாபிமானம் இல்லாத செயல். பெரும் பாதிப்பை ஏற்படுத்திய செயல்.
குழந்தைகளின் பள்ளிச் செலவுகளுக்காக அவர்களின் அறுவடைப் பயன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லவா. அதை நினைத்துப் பார்த்தார்களா? அவர்களுக்குக் கொஞ்ச கால அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும். ஓராண்டு காலத்தில் நாங்கள் உடைத்து விடுவோம் என்று சொல்லி இருக்கலாம் அல்லவா. அறுவடை செய்வதற்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம் அல்லவா?
நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அங்குள்ள விவசாயிகளை வேறு நிலங்களுக்கு மாற்றம் செய்து இருக்கலாம். அல்லது சட்டவிரோத நச்சுப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றி விளக்கப் பயிற்சிகள் அளித்து இருக்கலாம்.
பண்ணைகளை உடைத்த இடம் நீர்த்தேக்கம் கட்டப்பட்ட வேண்டிய இடம் என்று அமலாக்க அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்த இடத்தில் இரண்டு ஆறுகள். ஓர் ஆற்றின் பெயர் சுங்கை தெர்லா (Sungai Terla). இன்னோர் ஆற்றின் பெயர் சுங்கை இச்சாட் (Sungei Ichat).
இதில் சுங்கை தெர்லா ஆற்றின் நீரைச் சுத்தகரிப்பு செய்து தான் பொதுமக்களின் பயனீட்டிற்கு நீர் விநியோகம் செய்கிறார்கள். (Sungai Terla which supplies water to the residents in Cameron Highlands)
ஈப்போ, சிம்பாங் பூலாயில் இருந்து கேமரன் மலைக்கு வரும் நெடுஞ்சாலையில் சுங்கை தெர்லா ஆறு ஓடுகிறது. சுங்கை தெர்லா ஆறு, நெடுஞ்சாலையைக் கடக்கும் இடம் சமதரையான அழகான இடம்.
மாட மாளிகைகள், சுகவாச இல்லங்கள் கட்டுவதற்கு மிகப் பொருத்தமான இடம். அரசியல்வாதிகள் சிலரின் கண்களை உறுத்திய இடம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த இடத்தில் பெரிய ஒரு நில மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டு வரலாம் என்பது ஒரு திட்டம். ஒரு கணிப்பு.
அதற்கான நீர் விநியோகம், நான்கு கி.மீ. கீழே இருக்கும் சுங்கை இச்சாட் ஆற்றுப் பகுதியில் இருந்துதான் செய்யப்பட வேண்டும்.
இதில் அந்த 60 தமிழர்களின் பண்ணைகள் சிக்கி இருக்கலாம் என்று ஒரு பரவலான கருத்து நிலவுகிறது. இந்தத் திட்டம் உண்மையாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். உறுதிப்படுத்தப் படவில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
இந்தப் பண்ணை அழிப்பில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். கோலா தெர்லா விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி வாக்குத் தவறி விட்டதாக ம.சீ.ச. உதவித் தலைவர் டி லியான் கெர் கருத்து தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அவர் சொல்கிறார். துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் (Wan Rosdy Wan Ismail) கூட்டு அமர்வில் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும் சொல்கிறார்.
அடுத்து கேமரன் மலையில் பண்ணைகள் இடிக்கப் படுவதற்கு ம.இ.கா. செய்த துரோகம் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறிய கருத்துகளை ம.இ.கா.வின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வன்மையாக மறுத்து உள்ளார்.
அத்துடன் அந்தக் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாத அப்பட்டமான பொய் என்று ம.இ.கா. பொதுச் செயலாளர் எம்.அசோஜன் சாடியுள்ளார்.
60 இந்தியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றன. இதைத் தான் நாம் இப்போது பெரிதாகக் கருத வேண்டும். ஒருவரை ஒருவரைக் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நேரம் அல்ல.
என்னுடைய கேள்வி இதுதான். கோல தெர்லா இந்திய விவசாயிகளை அரசாங்கம் ஏன் குற்றவாளிகளைப் போல நடத்த வேண்டும்? இந்தியர்கள் என்றால் இளிச்சவாயர்களா? இந்தியர்கள் என்றால் கிள்ளுக்கீரைகளா? கோல தெர்லா நிகழ்ச்சி மலேசிய இந்தியர்களுக்கு எதிரான அரசியல் நகர்வா?
அந்தக் குடும்பங்களுக்கு மாற்றுவழி காண வேண்டும். அவர்களின் இழப்புகளுக்கு நஷ்டயீடு கிடைக்க வழி காண வேண்டும். கிடைக்குமா கிடைக்காதா என்பது முக்கியம் அல்ல. அவர்களுக்கு நஷ்டயீடு கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு. கோல தெர்லா இந்திய விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அது வரையில் நம்முடைய முன்னெடுப்புகளும் தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக