02 ஜனவரி 2020

ஜாகிர் நாயக் மேதையா?

பல்கலைக்கழகக் கேள்வித் தாள் சர்ச்சை - 2

தமிழ் மலர் - 02.01.2019

மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் இன உறவு பாடத் தேர்வுத் தாளில் (Universiti Malaysia Perlis; Ethnic Relations Course) ஜாகிர்  நாயக் பற்றிய கேள்வி.

அந்தக் கேள்வியில் ஜாகிர் நாயக் இஸ்லாமிய உலகின் ஒரு சின்னம் (உலகின் மேதை) எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. (Zakir Naik is one of the icons of the Islamic world) 



அத்துடன் அவர் உண்மையான இஸ்லாத்தைப் பரப்புவதிலும்; போதனைகளைப் பின்பற்றுவதிலும் மிகவும் சுறுசுறுப்பானவர். அவரிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் நியாயப் படுத்தவும் முடியும். பதில் அளிக்கவும் முடியும்.

இருப்பினும் மலேசியாவில் அவர் தன்னுடைய பிரசாரத்தை வழங்க அனுமதிக்கப் படுவது இல்லை. இது ஏன் நடக்கிறது என்பதில் ஒரு மலேசியராக இருக்கும் உங்கள் கருத்து என்ன என்று எனக் கேட்கப்பட்டு இருந்தது. (In your opinion, as a Malaysian, why does this happen).

தேர்வு பதில்களாகக் கீழ்க்காணும் பற்பல காரணங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பதில்களைத் தேர்வு செய்யலாம். அனுமதி வழங்கப் படுகிறது. (Multiple choice question allows the student to choose several answers and more than one answer can be chosen)



தேர்வு பதில்கள்:

1. மலேசியர்கள் தகவல்களைப் பெறுவதில் அக்கறை படுவது இல்லை.

(Malaysians do not bother to receive information)

2. மலேசியர்கள் உணர்ச்சி படக் கூடியவர்கள் மற்றும் எந்தக் காரணமும் இல்லாமல் அச்சுறுத்தப் படுவதாக உணர்கிறார்கள்.

(Malaysians were sensitive and feel threatened for no reason)

3. மலேசியர்கள் எந்தத் தகவலையும் சரி பார்க்காமல், கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள்

(Malaysians just follow the crowd without verifying any information)

4. மலேசியர்கள் தங்கள் சொந்த மதத்தைப் பற்றி அறியாதவர்கள்

(Malaysians are ignorant about their own religion)

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் பற்றிய இந்தக் கேள்வி பல்கலைக்கழகக் கேள்வித் தாளில் இடம் பெற்று உள்ளது. மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி விட்டது. 



இந்தக் கேள்வியைப் பற்றி ம.இ.கா. உதவித் தலைவர் சிவராஜ் சந்திரன் தன்னுடைய பேஸ்புக் ஊடகப் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

”இன உணர்வுகளை மதிக்காத இது போன்ற ஒரு கேள்வி ஏன் ஒரு தேர்வில் சேர்க்கப்பட்டு உள்ளது. வெவ்வேறு இனங்கள்; மதங்களைப் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டியது அவசியம். அப்படி இருக்கும் போது ஏன் இந்த மாதிரியான கேள்வி கேட்கப் பட்டது என்று எனக்கு புரியவில்லை” என்றும் சிவராஜ் சந்திரன் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.



பின்னர் இந்த விவகாரம் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவியது. பலர் பலவிதமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.

ஜாகிர் நாயக் என்பவர் இஸ்லாமிய உலகின் ஒரு சின்னமாக இருக்கலாம். மிகச் சிறந்த மத போதகராக இருக்கலாம். அதில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் மலேசியாவில் அவரைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம். 



மலேசிய இந்திய அரசியல்வாதிகள் மீது ஜாகிர் நாயக் வழக்குகள் போடுகிறார். ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களும் வந்தேறிகள் என்கிறார். மலேசிய இந்தியர்கள் இந்தியாவிற்கே திரும்பிப் போக வேண்டும் என்கிறார்.

யாருங்க இந்த மனுசர். மலேசிய இந்தியர்களைத் திரும்பிப் போகச் சொல்வதற்கு யாருங்க இவர். அப்படிச் சொல்வதற்கு இவருக்கு என்னங்க தகுதி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அந்தப் பல்கலைக்கழகக் கேள்வி ரொம்பவும் அவசியமா. ரொம்பவும் முக்கியமா என்று கேட்கவும் தோன்றுகிறது.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையும் நினைவிற்கு வருகிறது.



பலகலைக்கழகத் தேர்வுத் தாளின் பதில்களில் நான்கு காரணங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அவற்றில் முதல் காரணம்:

1. மலேசியர்கள் தகவல்களைப் பெறுவதில் அக்கறை படுவது இல்லை.

இதற்கான பதில். இந்த நாட்டில் உள்ள இந்தியர்களும் சீனர்களும் வந்தேறிகள். அவர்கள் எங்கு இருந்து வந்தார்களோ அந்த நாட்டிற்கே திரும்பிப் போக வேண்டும் என்று சொன்னவர் ஜாகிர் நாயக். சரிங்களா.

மலேசியாவில் அடைக்கலம் தேடி வந்த ஒருவர் மலேசியர்களைப் பற்றியே தவறாகச் சொல்வது மலேசியத் தகவலா அல்லது அனைத்துலகத் தகவலா? இந்தத் தகவல் மலேசியர்களுக்குத் தெரியாத தகவலா? அல்லது மலேசியர்கள் அக்கறைப் படாத தகவலா? அல்லது மலேசிய இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் புரியாத தகவலா?

தேர்வுத் தாளின் பதில்களில் இரண்டாவது காரணம்:



2. மலேசியர்கள் உணர்ச்சி படக் கூடியவர்கள் மற்றும் எந்தக் காரணமும் இல்லாமல் அச்சுறுத்தப் படுவதாக உணர்கிறார்கள்.

இதற்கான பதில்:

ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவர், அடுத்த வீட்டுச் சுவரில் ஆணி அடித்தால் அவர் சும்மா இருப்பாரா. எதிர்வீட்டுச் சன்னலில் கல்லை விட்டு எறிந்தால் அவர் சும்மா இருப்பாரா? ஜாகிர் நாயக் என்பவர் மலேசியா நாட்டுக்கு விருந்தாளியாக வந்து நிரந்தரக் குடியுரிமை பெற்றவர். ஆனால் அவர் மலேசிய குடிமகன் அல்ல.

சில மாதங்களுக்கு முன்னர் கிளந்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்த போது மலேசிய இந்தியர்களைப் பற்றியும் மலேசியச் சீனர்களைப் பற்றியும் தேவை இல்லாமல் பேசி இருக்கிறார். அதுவே ஒரு சர்ச்சையாகிப் போனது.

மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் மலேசிய நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர் என்று பேசி இருக்கிறார். 



அவர் என்ன பேசினார் என்று ஸ்டார் பத்திரிகையில் வந்த செய்தி.

The Hindus here in Malaysia 6.4%. The Hindus in Malaysia get 100 times more rights ... They are half the percentage even though the number is less ... Yet the rights they get here are 100 times more than what India gives rights to the minority. So much so that they support the Prime Minister of India but not the Prime Minister of Malaysia.

(சான்று: https://www.thestartv.com/v/what-did-dr-zakir-naik-say-in-kelantan)

இப்படி பேசினால் மலேசியர்கள் ஏன் உணர்ச்சி வசப் பட மாட்டார்கள். சொல்லுங்கள்.


தேர்வுத் தாளின் பதில்களில் மூன்றாவது காரணம்:

3. மலேசியர்கள் எந்தத் தகவலையும் சரி பார்க்காமல், கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள்.

இதற்கான பதில்:

கடந்த 08.08.2019 வியாழக்கிழமை கிளந்தானில் பேசும் போது தான் (ஜாகிர்  நாயக்) இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் இந்த நாட்டிற்குச் சொந்தம் இல்லாத சீனர்களும் வெளியேற வேண்டும் என்று கருத்து கூறி இருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசியது... மலேசியா முழு முஸ்லீம் நாடாக மாறியது. பிறகு சீனர்கள் வந்தார்கள். இந்தியர்கள் வந்தார்கள். பிரிட்டிஷார் வந்தார்கள். அவர்கள் புதிய விருந்தினர்கள்.

யாரோ ஒருவர் என்னை விருந்தினர் என்று அழைத்ததை நீங்கள் அறிவீர்கள். எனவே எனக்கு முன் சீனர்கள் விருந்தினர்களாக வந்தவர்கள். ஆகவே புதிய விருந்தினர் முதலில் செல்ல விரும்பினால் பழைய விருந்தினரைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அதாவது பழைய விருந்தினர்களான சீனர்கள், இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டுமாம். அதன் பிறகு புதிய விருந்தினரான இவர் (ஸக்கீர் நாயக்) திரும்பிப் போகிறாராம்.



மலேசியர்கள் எந்தத் தகவலையும் சரி பார்க்காமல், கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள் என்று தேர்வுத் தாளின் பதில்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்போது சொலுங்கள். இவரின் இந்த மாதிரியான பேச்சைச் சரி பார்க்காமலா கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள்? சொல்லுங்கள்.

தேர்வுத் தாளின் பதில்களில் நான்காவது காரணம்:

4. மலேசியர்கள் தங்கள் சொந்த மதத்தைப் பற்றி அறியாதவர்கள்.

இது என்ன சின்னப் பிள்ளைத்தனமான காரணமாக இருக்கிறது. கிண்டர்கார்டன் பிள்ளைகளுக்குத் தெரிந்த விசயம். இந்த நாட்டில் பிரச்சினைகளை உண்டாவதற்கு ஒரு காரணமாக இருக்கும் ஒரு காரணத்தை ஒரு காரணமாக அறிய முடியாமல் இருக்க முடியுமா. இதற்கு விளக்கம் தேவை இல்லை என்பது பலரின் கருத்தாக அமையும். சரி.

யார் இந்த ஜாகிர் நாயக். என்னைக் கேட்டால் இவர் நல்ல ஓர் அறிஞர். உலக அளவில் பிரபலமான இஸ்லாமிய மதபோதகர். அனைத்துலகச் சொற்பொழிவாளர். சிறந்த எழுத்தாளர். நல்ல ஆங்கிலப் புலமை.

2010-ஆம் ஆண்டுகளில் இவரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து போய் இருக்கிறேன். இவரை ஓர் அறிவு ஜீவியாக உச்சம் பார்த்தேன்.



அது ஒரு காலம். இப்போது எல்லாமே தலைகீழாகிப் போனது. ஜாகிர் நாயக் இந்தியாவில் பிறந்த ஓர் இந்தியர். மதத்தால் வேறுபட்டு இருக்கலாம்.

ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய இந்தியர்களின் மனம் வேதனைப் பட்டு குமுறும் அளவிற்கு நிந்தனைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். அதைப் பற்றி முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

மலேசியாவில் அவர் தன்னுடைய பிரசாரத்தை வழங்க அனுமதிக்கப் படுவது இல்லை என்று அந்தப் பல்கலைக்கழகக் கேள்வித் தாளில் ஒரு சொல் தொடர் வருகிறது.

மலையக மலாயா நாட்டிற்காக உழைத்து உருக்குலைந்து அனாதையாகிப் போனவர்கள் மலேசிய இந்தியர்கள். அவர்களின் நாட்டுப் பற்றை நிந்திப்பதை ஒரு சமயப் பிரசாரம் எனும் பார்வையில் ஏற்றுக் கொள்ள முடியுமா? சொல்லுங்கள்.



அதனால் ஜாகிர் நாயக் என்றதுமே மலேசிய இந்தியர்களின் மனம் வலிக்கிறது. வலிக்கும் காயத்தை மேலும் கீறினால் மேலும் வலிக்கவே செய்யும்.

ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பல இன கலாசாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள்.

ஆகவே ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரையாளர்கள் இன மத ரீதியில் அதிகமான உணர்வுகளின் தாக்கத்தில் இருக்கக் கூடாது. அந்த உணர்வுகளின் தாக்கத்தில் கல்வி போதிக்கவும் கூடாது என்பதே பொதுவான கருத்து.

சான்றுகள்:

1. https://www.freemalaysiatoday.com/category/nation/2019/12/29/varsity-exam-question-calls-zakir-naik-an-icon/

2. https://says.com/my/news/controversy-erupts-after-zakir-naik-appeared-in-a-university-exam-question

3. http://ktemoc.blogspot.com/2019/12/unimap-exam-on-ethnic-relations-or.html











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக