06 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 1

தமிழ் மலர் - 06.02.2020

ஒரு காலத்தில் காட்டு விலங்குகள் புனிதம் பேசிய புண்ணிய மலை. காட்டுப் புலிகள் பாத யாத்திரை பார்த்த புனித மலை. குகை வாழ் கரடிகள் கபடி ஆட்டம் விளையாடிய தீர்த்த மலை. 




யானைக் களிறுகள் பிளிறிய வண்ணம் கதகளி நடனம் ஆடிய பங்குனி மலை. அதுதான் பல கோடி மக்களின் அகத்திய மலை. அதுவே இப்போதைக்கு பத்துமலை.

அங்கே அந்தி மந்தாரத்து வானரங்கள் வண்ணமய நாட்டியங்கள் ஆடி இருக்கின்றன. வலசை போகும் வௌவால் கூட்டங்கள் வான் முட்ட பறந்து இருக்கின்றன. சொல்லப் போனால் பத்துமலை என்பது பல கோடி ஜீவராசிகளின் கண்கவர் சொர்க்க பூமியாக விளங்கி இருக்கிறது.

இது எல்லாம் சில பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்த காட்டு ஜீவன்களின் கச்சேரி மேடையின் மலைவாசல். ஆனால் இப்போது அப்படி இல்லீங்க. வியாபாரத் தலமாகக் கைமாறிப் போன கலைவாசல். மன்னிக்கவும் வணிகத்தின் வலைவாசல்.



தமிழ் மலர் - 06.02.2020

கிரேக்க நாட்டு கிளேடியேட்டர்கள் போல ஒரு காலத்தில் யானைகளும் புலிகளும்; சிறுத்தைகளும் கரடிகளும்; ஆந்தைகளும் கோட்டான்களும் முட்டி மோதிக் கொண்ட ஒரு போர்க் களமாகவும் பத்துமலை புகழ் பெற்று விளங்கி இருக்கிறது. அப்படி நான் சொல்லவில்லை. வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

பத்துமலைக்கு அருகாமையில் ஓர் ஆறு. அதன் பெயர் பத்து ஆறு (Sungai Batu). அந்த ஆற்றின் பெயரே பத்துமலைக்கும் வைக்கப் பட்டதாக பலரும் இன்று வரை நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

பத்து என்றால் மலாய் மொழியில் கல் என்று பொருள். ஆக அந்த வகையில் பத்துமலையின் பெயர் கல் மலை எனும் பெயரில் இருந்து திரிந்து வந்து இருக்கலாம் என்று நினைப்பதில் தவறு உள்ளது. முதலில் அதைச் சொல்லி விடுகிறேன்.



தம்புசாமி பிள்ளையின் கொள்ளுப் பேத்தி
சாந்த குமாரி (Santa Kumarie)

பத்துமலைக்கு பத்துமலை எனும் பெயர் எப்படி வந்து இருக்கலாம் என்பதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

1890-ஆம் ஆண்டுகளில் தம்புசாமி பிள்ளை (Thamboosamy Pillay) அவர்களால் பத்துமலை தோற்றுவிக்கப்பட்டது. தெரிந்த விசயம்.

இந்தப் பத்துமலை உருவாக்கம் பெறுவதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு உலகம் முழுமைக்கும் ஒன்பது பெரும் கோயில்கள் இருந்து இருக்கின்றன.

அவற்றுள் ஆறு முருகன் கோயில்கள் இந்தியாவில் இருந்து இருக்கின்றன. மூன்று முருகன் கோயில்கள் மலாயாவில் இருந்து இருக்கின்றன.

மலாயாவில் முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்ட முருகன் கோயில் எது தெரியுங்களா? சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். 




ஈப்போவில் உள்ள கல்லுமலைக் கோயில் தான். அதற்கு அந்தப் பெருமை சேர்கிறது. 1880-ஆம் ஆண்டுகளிலேயே தோற்றுவிக்கப்பட்டு விட்டது.

கங்கா நகரம் எனும் மாபெரும் பேரரசு, தைப்பிங் மஞ்சோங் பகுதியில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது. இந்தப் பேரரசின் தலைநகரம் புருவாஸ். கெடாவைச் சேர்ந்த ராஜா சர்ஜுனா (Raja Sarjuna) என்பவர் உருவாக்கினார்.

அல்லது கம்போடியாவில் இருந்து வந்த கெமர் (Khemer) பரம்பரையினர் உருவாக்கி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவு எடுக்க முடியவில்லை. உருப்படியாக ஒரு வரலாற்றுத் தீர்வையும் காண முடியவில்லை. 



ஆமாம் இருக்கிற இந்திய வரலாற்றுச் சான்றுகளை எல்லாம் மூடி மறைத்து அரக்குப் போட்டு சீல் வைத்துக் கொண்டு இருந்தால் எப்படிங்க உண்மையான வரலாறு வெளியே வந்து மூச்சு விடும்.

அதுதான் மலாயா இந்தியர்களின் வரலாற்று உண்மைகளை எல்லாம் கழுத்தைப் பிடித்து நெரிக்கிறார்களே. விடுங்கள். நெஞ்சு எரிச்சலில் சின்னதாய் ஒரு வயிற்றெரிச்சல். 

கங்கா நகரப் பேரரசின் (Gangga Negara) காலத்தில் கிந்தா ஆற்றின் வழியாக இந்திய வணிகர்கள் ஈப்போ கல்லுமலை கோயில் வரை வந்து இருக்கிறார்கள். ஈப்போவில் வணிகம் செய்து இருக்கிறார்கள்.

கிந்தா ஆற்றின் துறைமுகம் தெலுக் இந்தானில் இருக்கிறது. ஆக அப்படி புருவாஸ், பீடோர் பகுதிகளுக்கு வந்த இந்திய வணிகர்கள் தான் மலாயாவில் முதல் முருகன் கோயிலை ஈப்போவில் உருவாக்கி இருக்கிறார்கள். 




அடுத்து வருவது பினாங்கு தண்ணீர்மலைக் கோயில் (Tanneermalai Temple). இது மலாயாவில் இரண்டாவது பழமையான முருகன் கோயில்.

1818-ஆம் ஆண்டு நகரத்தார்கள், பினாங்கில் தொழில் புரியத் தொடங்கினார்கள். 1850-ஆம் ஆண்டு பினாங்கு ஸ்த்ரீட் (Penang Street) 138-ஆம் எண் கொண்ட ஒரு கடையில் கோயில் வீட்டை அமைத்தார்கள். கோயில் வீடு என்றால் ஒரு வீட்டிற்கு உள்ளேயே ஒரு கோயிலை அமைத்துக் கொள்வது.

அந்த கோயில் வீடு அதே முகவரியில் இன்றும் அழகுடன் காட்சி அளிக்கிறது. பினாங்குத் தைப்பூசத்தின் ரத ஊர்வலம் இங்கே இருந்து தான் இன்றும் தொடங்குகிறது. அதை நினைவில் கொள்வோம்.

1854-ஆம் ஆண்டு வாக்கில் தண்ணீர்மலைப் பகுதியில் கோயில் அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை நகரத்தார்கள் வாங்கினார்கள். இந்த ஐந்து ஏக்கரில் ஒரு பகுதி இன்று வணிகக் கட்டடங்களுக்காக விற்கப்பட்டு விட்டது. 




இன்றைக்கு வாட்டபால் தங்கும் விடுதி (Hotel Waterfall) அமைந்த இடம் இருக்கிறதே அந்த இடம் முதன்முதலில் வாங்கப்பட்ட நிலத்திற்குள் உட்பட்டது தான்.

அந்த நிலம் விற்கப்பட்டு, பின்னர் தமிழ் நாட்டில் ஒரு கோயில் கட்டப்பட்டது எனும் ஒரு குறைபாடும் உள்ளது. என்ன நடந்தது என்று உறுதியாகத் தெரியாமல் நாம் கருத்து சொல்ல முடியாது. சரிங்களா.

தண்ணீர்மலைப் பகுதியில் 1857-ஆம் ஆண்டில் தண்டாயுதபாணி ஆலயம் நிறைவு பெற்றது. அதே அந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி குடமுழுக்கு விழாவும் நடை பெற்றது. வருடத்தைக் கவனியுங்கள்.

தமிழகம் காரைக்குடியில் இருந்து கலைஞர்கள், சிற்பிகளைக் கொண்டு வந்தார்கள். செட்டிநாட்டு நகரத்தார்களின் கலைச் சாயலில் தண்டாயுதபாணி ஆலயத்தையும் கட்டி முடித்தார்கள். 




முருகப்பன், முத்தப்பன், குமரப்பன், தேனப்பன், பழனியப்பன், வேலாயுதம், சுப்பையா, சுப்பிரமணியன், சுவாமிநாதன், சிங்காரம், தண்ணீர்மலை என்று நகரத்தார்கள் தம் குழந்தைகளுக்கு முருகன் நினைவாகவே பெயர் சூட்டி பெருமை செய்தார்கள்.

ஆகவே தண்ணீர்மலை எனும் பெயர் முதன்முதலில் மலாயாவில் தோன்றிய பெயராகத்தான் இருக்க வேண்டும். அப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது.

முன்பு சுங்கை பட்டாணியில் தண்ணீர்மலை என்று ஒரு நண்பர் இருந்தார். அவரைப் பலரும் தண்ணிமலை தண்ணிமலை என்றே அழைப்பார்கள். உண்மையில் தண்ணீர்மலை என்றுதான் அழைக்க வேண்டும். இன்னும் ஒரு விசயம்.

தண்ணீர்மலை என்று பெயர் வைத்தாலோ என்னவோ தெரியவில்லை. அவருக்கு அடிக்கடி நெஞ்சில் நீர் கோர்த்துக் கொள்ளும். அண்மையில் அமரர் ஆனார். அற்புதமான தமிழ் ஆர்வலர். 




ஆக தண்ணீருக்கும் தண்ணீர்மலைக்கும் ரொம்பவே ஒட்டின உறவு இருப்பதை நன்றாகவே உணர முடிகிறது. சரி. பத்துமலை கதைக்கு வருவோம்.

அடுத்து மூன்றாவதாக வருவது மலாக்காவில் உள்ள சன்னியாசிமலைக் கோயில் (Sannasimalai Temple). இதுவும் நகரத்தார்கள் கட்டிய கோயில் தான்.

இந்தக் கோயிலின் வரலாறு மலாக்கா நீரிணையில் உள்ள புலாவ் பெசார் தீவில் இருந்து தொடங்குகிறது. அதுவும் ஒரு நீண்ட கதை. இந்தக் கோயிலைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் பார்ப்போம்.

உலகத்தில் கட்டப்பட்ட முருகன் கோயில்களில் பத்துமலை கோயில் பத்தாவதாகக் கட்டப் பட்டதால் அதற்கு பத்தாம் கோயில் என்று பெயர் வைத்தார்கள். அது மட்டும் அல்ல.

இந்தப் பத்தாம் கோயில் கோலாலம்பூர் அம்பாங் சாலையில் இருந்து பத்தாம் கட்டையில் இருந்ததால் அந்த இடத்திற்கு பத்துமலை எனும் பெயர் வந்து சேர்ந்ததாகவும் சொல்லப் படுகிறது.

(Batu Caves also referred as 10th Caves or Hill for Lord Muruga as there are six important holy shrines in India and four more in Malaysia)




முன்பு காலத்தில் ஒரு மைல் தூரத்தைக் குறிக்கும் கல்தூணுக்கு கட்டை என்று பெயர். அன்றைய காலத்தில் அந்தத் தூண்கள் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கட்டைகளாக இருந்தன.

அதனால் தான் மூனாம் கட்டை, அஞ்சாம் கட்டை, ஆறாம் கட்டை எனும் பெயர் வழக்கு நிலவி வந்தது. இன்னும் நிலவி வருகிறது.

மலாக்காவில் இருக்கும் டுரியான் துங்கல் நகரத்தை இன்றும் கூட பத்தாங்கட்டை என்றே அழைக்கிறார்கள். நான் பிறந்து வளர்ந்த காடிங் தோட்டத்தை பன்னிரண்டாம் கட்டை என்று இன்றும் அழைக்கிறார்கள்.

பத்துமலை மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளின் உட்பாகத்தில் அமைந்து உள்ள கோயில். கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே கோம்பாக் (Gombak) மாவட்டத்தில் உள்ளது.

இந்தக் குகைக் கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. பத்துமலைச் சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.




1860-ஆம் ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் அந்தப் பகுதியில் காய்கறிகள் பயிரிட்டு வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப் பட்டது.

ஆகவே அவர்கள் பத்துமலைக் குகைகளில் இருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்து வந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு முன்னர் அதாவது சீனர்கள் வருவதற்கு முன்னரே இந்தக் குகைகளில் தெமுவான் (Temuan) எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகக் கருதி பயன்படுத்தியும் வந்து உள்ளனர். இதற்கும் சான்றுகள் உள்ளன.

1878-ஆம் ஆண்டு பத்துமலைப் பகுதிகளில் பரவி இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே (William Hornaday) என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். 




(Batu Caves first came to public attention in 1878 when American naturalist William Hornaday)

பத்துமலையின் பெயர் புகழ் அடைந்தது. அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-ஆம் ஆண்டு தான் தம்புசாமிப் பிள்ளை எனும் தொழிலதிபர் அங்கு ஒரு முருகன் கோயிலைக் கட்டினார்.

தம்புசாமிப் பிள்ளை ஒருமுறை பத்துமலைக் குகைக்குப் போய் இருக்கிறார். அந்தக் குகையின் நுழைவாயில் வேல் வடிவத்தில் அமைந்து இருந்ததைக் கண்டு பிரமித்துப் போனார். தம்புசாமிப் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி சாந்த குமாரி (Santa Kumarie) இதைச் சொல்லி இருக்கிறார்.

தம்புசாமிப் பிள்ளை கோலாலம்பூரில் வாழ்ந்த போது சுற்று வட்டாரங்களில் நிறைய இந்தியர்கள் குடியேறி இருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். இந்து சமயத்தை வழிபடுபவர்கள். 




ஆகவே அவர்களுக்கு ஒரு வழிபாட்டு இல்லத்தை உருவாக்கித் தரலாம் என்று ஆசைப் பட்டார்.

1875-ஆம் ஆண்டு வாக்கில் கிள்ளான் ஆற்றோரத்தில் தம்புசாமி பிள்ளை ஒரு மாரியம்மன் வழிபாட்டுத் தளத்தைக் கட்டினார். அது ஒரு சின்னக் கோயில்.

கோலாலம்பூரில் முதன் முதலாகக் கட்டப்பட்ட அந்த மாரியம்மன் வழிபாட்டுத் தளத்தில்தான் இப்போது ’பாங்குனான் பெர்த்தானியான்’ (Bangunan Bank Pertanian) உள்ளது.

மேல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் அந்தக் கோயில் எப்படி இருந்து இருக்கும் என்பதைக் கற்பனையில் மட்டுமே நினைவு படுத்திக் கொள்ள முடியும். அவருடைய குடும்பத்தார் சுற்றத்தாரின் வழிபாட்டிற்காகத் தான் அந்த வழிபாட்டுத் தளம் முதலில் அமைக்கப் பட்டது.

அந்தத் தளத்திற்கு அருகாமையில் வாழ்ந்த இந்துப் பெருமக்களும் அந்தச் சிறுகோயிலைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பின்னாட்களில் அந்தச் சிறுகோயிலின் பின்னோடியாக மகா மாரியம்மன் ஆலயம் உருவானது. தம்புசாமி பிள்ளையாரின் குடும்ப வாரிசாகவும் மாறிப் போனது. அதுவும் நீண்ட நெடிய வரலாறு.

இருந்தாலும் 1929-ஆம் ஆண்டு வாக்கில் பொது மக்களில் இருவர் மகாமாரியம்மன் ஆலயத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 




அதாவது அந்த ஆலயத்தை ஒரு குடும்பம் மட்டுமே நிர்வாகம் செய்கிறது. அதைப் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நிர்வாகம் செய்ய வேண்டும் எனும் வழக்குப் பதிவு.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பே மகாமாரியம்மன் ஆலயத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டு விட்டது. அந்த வழக்குப் பரிமாணம் இன்றும் தொடர்கிறது.

அந்த வழக்குப் பதிவு தொடர்பாக 1930-ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது.

ஒரு செருகல். அந்தக் காலக் கட்டத்தில் மலாயன் இரயில்வேயில் வேலை செய்தவர்கள்; கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தில் வேலை செய்தவர்கள்; பொது மராமத்துப் பணிகளில் ஈடுபட்டவர்கள் என 14 உபயக்காரர்கள், குழுக்களாக உபயங்கள் செய்து வந்தார்கள்.

இந்த உபயக்காரக் குழுக்களில் இருந்து ஒவ்வொரு குழுவிலும் மூன்று மூன்று பிரதிநிதிகளாகக் கோயிலை நிர்வாகம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு என்று சொல்வதைவிட ஆணை பிறப்பித்தது என்று சொன்னால் சரியாக அமையும்.

ஆக அப்போது 1930-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த நீதிமன்றத்தின் ஆணை இன்றைய நிலையில் இப்போதைக்குப் பின்பற்றப் படுகிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. மன்னிக்கவும். பில்லியன் டாலர் கேள்வி.

1 எம்.டி.பி. நிதி மோசடிக்குப் பின்னர் மில்லியன் கணக்கு எல்லாம் சூசூபி.. இப்போதைக்கு எல்லாமே பில்லியன் கணக்குத் தான். கிண்டர்கார்டன் பிள்ளைகள் கூட பில்லியன் என்பதற்கு எத்தனைச் சுழியங்கள் என்பதைச் சுழியம் போட்டுக் காட்டுகிறார்கள்.

ஆக அந்த மகா மாரியம்மன் ஆலயம் இந்த 2000-ஆம் ஆண்டுகளில் தனியார் சொத்தாக மாறிப் போய் கண்ணீர் வடிக்கிறது. அந்தக் கதை ஒரு சோகமான கதை என்று நான் சொல்லமாட்டேன்.

அதாவது புனிதம் பேசும் புண்ணியம் மலையின் கணக்கு வழக்குகளில் கண்ணியம் காக்கப்படவில்லை என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.

(தொடரும்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக