27 March 2020

கொரோனா வைரஸ் எங்கே வாழும் எவ்வளவு காலம் வாழும்


கொரோனா குடும்பத்தில் ஆறேழு வைரஸ்கள் உள்ளன. அவற்றில் ஆகப் பெரிய கில்லாடி கொரோனா கோவிட் வைரஸ் (Sars-CoV-2). விருந்தாளியின் வீட்டுக்குப் போய் அந்த விருந்தாளியையே வெட்டிக் கூறு போட்டு விற்கும் வில்லங்கமான வைரஸ். கொரோனா குடும்பத்தில் நம்பர் போட்டு வாழும் நான்கு வைரஸ்கள் உள்ளன.

1. OC43;

2. HKU1;

3. NL63;

4. 229E.


இவை கொஞ்சம் ஜெண்டல்மேன் வைரஸ்கள். ஏன் என்றால் சாதாரண காய்ச்சலோடு போதும் என்று நிறுத்திக் கொள்கின்றன.அடுத்து இரண்டு வைரஸ்கள். முதலாவது சார்ஸ் வைரஸ். இரண்டாவது மெர்ஸ் வைரஸ். இரண்டுமே இடி அமீன் தூரத்துச் சொந்தங்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆமாம் என்று அவையும் தலையை ஆட்டிக் கொள்கின்றன. மனிதர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியவை.

மெர்ஸ் வைரஸ் கிருமி, மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றித் திரிந்த ஒட்டகங்கள் மீது ஓடி ஓடி ஒட்டிக் கொண்ட கொரோனா வைரஸ் (Middle East Respiratory Syndrome - MERS-CoV). 2012-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் கண்டுபிடிக்கப் பட்டது.

சார்ஸ் கொரோனா (Severe Acute Respiratory Syndrome - SARS-CoV) எனும் மற்றொரு வகை. 2002 - 2003-ஆம் ஆண்டுகளில் ஹாங்காங்கில் முதன்முதலில் உருவானது.மேலே சொன்ன அந்த இரண்டு கொரோனா வைரஸ்களையும் அடாவடிப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா கோவிட் 19 வைரஸ் (Coronavirus COVID-19) எதிலும் சேர்க்க முடியாத எமகாதக வைரஸ்.

கொரோனா கோவிட் 19 ஒரு வகையான புதிய வைரஸ். இதற்கு முன்னர் மனிதர்களிடம் தொற்றியது இல்லை. 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் சீனா வூஹானில் கண்டுபிடிக்கப் பட்டது.

வௌவாலில் இருந்து அலுங்கு எனும் எறும்புத் தின்னியிடம் பாய்ந்து கடைசியில் மனிதனையே பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

உலோகங்கள்; பிளாஸ்டிக் பொருள்கள்; கண்ணாடிகள் போன்ற பொருள்களின் மீது இந்தக் கொரோனா கோவிட் வைரஸ்கள் மூன்று நாள்கள் வரை உயிருடன் இருக்கலாம். ஆய்வுகள் சொல்கின்றன.நன்றாகக் கவனியுங்கள். குறைந்த பட்சம் மூன்று நாள்கள். கூடிய பட்சம் ஒன்பது நாள்கள். தாமிரம் அல்லது செம்பு உலோகத்தால் (copper) ஆன பொருட்களின் மீது நான்கு மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கின்றன.

ஆனால் துரு பிடிக்கா எஃகு உலோகங்கள் மீது இரண்டு மூன்று நாள்கள் வரை நீண்டு உயிர் வாழ முடியும். இங்கேதான் ஒரு பெரிய சிக்கல். ஏன் என்றால் துரு பிடிக்கா எஃகுப் பொருட்கள், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

(https://www.usatoday.com/…/coronavirus-survives…/2866340001/)

ஓய்வு அறைகள், நீர்க் குழாய்கள் (faucet), கைப்பிடிகள் போன்ற பிற பொது இடங்களிலும் எஃகு உலோகங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பிளாஸ்டிக் பொருள்கள் மீது கொரோனா வைரஸ்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு உயிர் வாழலாம். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விசயம். நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை.உணவு டப்பாக்கள், கைப்பேசிகளின் மேல் உறைகள், மின்தூக்கி பொத்தான்கள் போன்றவை பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் ஆனவை.

காகித அட்டைகளில் 24 மணி நேரம் வரையில் உயிர் வாழலாம். கண்ணாடிப் பொருட்களில் 72 மணி நேரம் வரையில் உயிர் வாழலாம்.

(https://www.journalofhospitalinfection.com/artic…/S0195-6701)

துணிமணிகள், ஆடைகள் ஆகியவற்றின் மீது கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்பது இதுவரையிலும் தெளிவாகத் தெரியவில்லை. ஆராய்ச்சி செய்கிறார்கள்.

கொரோனா வைரஸ்கள் உயிர் வாழத் தண்ணீர் ரொம்பவும் அவசியம். ஒரு சிறிய அளவு குறைந்தால் பிரச்சினை இல்லை. வைரஸ்கள் தாக்குப் பிடித்து உயிர் வாழும். நல்ல குளிர்ச்சியான சூழல்நிலையில் 28 நாள்கள் வரைகூட உயிர் வாழ வாய்ப்புகள் உள்ளன. ஆய்வுகள் சொல்கின்றன.

ஆனால் தண்ணீரே இல்லாமல் காய்ந்த இடங்களில் கொரோனா வைரஸ்களால் வாழ முடியுமா. முடியும். ஆனால் எவ்வளவு காலத்திற்கு என்பது தான் கேள்விக்குறி. இன்னும் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.03.2020

No comments:

Post a Comment