08 ஏப்ரல் 2020

மலாயா தமிழர்கள் 6000 பேர் பலி - 1918 ஸ்பானிய காய்ச்சல்

தமிழ் மலர் - 08.04.2020

உலக வரலாற்றில் பல மோசமான தொற்று நோய்கள் உலக மக்களை ஆட்டிப் படைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்பானிய காய்ச்சல். 1918 -1919-ஆம் ஆண்டுகளில் 3 கோடி முதல் 5 கோடி பேர் வரை காவு கொண்டது. உலக மக்கள் தொகையில் 6 விழுக்காடு.

அதே 1918-ஆம் ஆண்டில் தான் டைடானிக் கப்பலும் மூழ்கிப் போனது. அந்தக் கப்பலில் இருந்த 1500 பேர் கடலில் மூழ்கிப் போனார்கள். அந்தக் கப்பலில் இறந்து போனவர்களைப் போல 25 கப்பல்கள் மக்கள் இங்கே மலாயாவில் இறந்து போனார்கள்.

 

1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மலாயாவின் மக்கள் தொகை 3,584,761. இவர்களில் ஸ்பானிய காய்ச்சலால் 34,644 பேர் இறந்து விட்டார்கள்.

மலாயாவின் உட்புறங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. அதனால் 40 ஆயிரம் என்று ஒரு முழுமையான கணக்குச் சொல்லப் படுகிறது.

ஏயிட்ஸ் நோய் அண்மைய காலத்து நோய். அந்த ஏயிட்ஸ் நோய் கடந்த 24 ஆண்டுகளில் கொன்ற மக்களைவிட ஸ்பானிய காய்ச்சல் 24 வாரங்களில் கொன்று குவித்தது தான் வரலாறு.

அப்போதைய புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும் போது அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் மலாயாத் தமிழர்கள் தாம். மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்ற சீனர்கள் சமூகம், மலாய்க்காரர்கள் சமூகங்களைக் காட்டிலும் இந்தியர்ச் சமூகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.


பேராக் மாநிலத்தில் மட்டும் 1000 இந்தியர்களில் 372 பேர் இறந்து இருக்கிறார்கள். மலாய்க்காரர்களில் 1000 பேருக்கு 129 பேர். சீனர்களில் 1000 பேருக்கு 158 பேர். அப்போது நம் மலாயா இந்தியர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 10 இலட்சம் இருக்கலாம்.

அந்தக் காலத்தில் மலேசியா என்பது மலாயா என்று அழைக்கப் பட்டது. ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா போன்ற மாநிலங்களில் நிறைய இரப்பர் தோட்டங்கள். நிறையவே தமிழ்நாட்டில் இருந்த வந்த தமிழர்கள்.

தமிழர்கள் பொதுவாகவே நல்ல உழைப்பாளிகள். காடுகளாய் இருந்த மலைக் காடுகளை வெட்டித் திருத்தி காபி தோட்டங்கள் இரப்பர் தோட்டங்களை அமைத்தார்கள். இப்படி காடுகளை அழிக்கும் போது மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப் படுவதும் உண்டு. பல ஆயிரம் பேர் இறந்து இருக்கிறார்கள். நம்மிடம் புள்ளி விவரங்கள் உள்ளன. 


ஆனால் ஸ்பானிய காய்ச்சலால் தான் நிறைய தமிழர்கள் இறந்து போனார்கள். ஒட்டு மொத்த மலாயா மக்கள் தொகையில் 2 விழுக்காடு பேர் இறந்தார்கள் என்றால், அவர்களில் 6000 பேர் தமிழர்கள்.

அதிகமான தமிழர்கள் பேராக், கெடா, பினாங்கு மாநிலங்களில் பலியானார்கள். நிபோங் திபால் பகுதியில் அதிகமான இழப்புகள்.

இரப்பர்த் தோட்டங்களில் வாழ்ந்த
மலாயாத் தமிழர்கள், வெளியுலகம் தெரியாமல் கொத்துக் கொத்தாக இறந்து போய் இருக்கிறார்கள் என்று அப்போதைய ’ஸ்ட்ரெயிட்ஸ் எக்கோ’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

ஒரே சமயத்தில் அவ்வளவு பேர் இறந்து போனதால் இரப்பர்த் தோட்டங்களில் சவப் பெட்டிகளுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுப் போனதாம்.


தோட்டத் தொழிலாளர்கள் கிடைத்த பலகைகள் கட்டைகளைக் கொண்டு அரக்கப் பரக்க் சவப்பெட்டிகளைச் செய்து இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவரின் உடலைப் புதைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அதே வீட்டில் இன்னொருவர் இறந்து போய் இருப்பாராம். இப்படி ஒரே குடும்பத்தில் பலர் அடுத்தடுத்து இறந்து போன நிகழ்ச்சிகள் உள்ளன.

ஏன் தமிழர்கள் அதிகமாகப் பாதிக்கப் பட்டார்கள். அதற்குக் காரணம் இவர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்து இருக்கிறார்கள். இரப்பர் தோட்டங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் மிக நெருக்கமான வீடுகள். அதனால் தான் பிரச்சினை.

இந்த வீட்டில் உள்ள சாப்பாடு அடுத்த வீட்டுக்குப் போகும். அடுத்த வீட்டுச் சாப்பாடு இந்த வீட்டுக்கு வரும். ஆக இந்த மாதிரியான உணவுப் பரிமாற்றத்தினால் தான் ஸ்பானிய காய்ச்சல் கிருமிகள் உக்கிரத் தாண்டவம் ஆடி இருக்கின்றன.


அது மட்டும் அல்ல. அப்போதைய இரப்பர் தோட்டத்து லயன்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உரசிக் கொண்டு இருந்தன. அதனால் ஒரு வீட்டில் ஒருவருக்குத் தொற்று என்றால் அந்தத் தொற்று அந்தக் குடும்பத்தவரைப் பாதித்தது. பக்கத்தில் இருந்த குடும்பத்தைப் பாதித்தது. அப்படியே மற்ற மற்ற குடும்பங்களுக்கும் பரவிச் சென்று வெகு வேகமாக மற்றவர்களையும் பாதித்து இருக்கிறது. 

பேராக் மாநிலத்தில் பத்து காஜா நகருக்கு அருகில் கெல்லிஸ் காசல் எனும் மர்ம மாளிகை. அதைக் கட்டிக் கொண்டு இருந்த தமிழர்களில் ஏறக்குறைய 70 பேர் ஸ்பானிய காய்ச்சலால் பலியானார்கள். மலாயா தமிழர்களின் வரலாற்றில் அது ஒரு சோகமான காலச் சுவடு.

1918-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. ஏதாவது ஓர் இந்துக் கோயிலைக் கட்டினால் மர்ம நோய் பிரச்சினை தீரும் என்று தோட்டத் தொழிலாளர்களும் மற்ற மற்ற வேலைக்காரர்களும் கெல்லி காசல் முதலாளியிடம் சொல்லி இருக்கிறார்கள். தொழிலாளர்களின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப் பட்டது.


காளியம்மன் கோயிலைக் கட்டலாம் என்று ஒரு சிலர் முதலில் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு வில்லியம் கெல்லி ஸ்மித் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

அந்தச் சமயத்தில் பத்து காஜா பகுதியின் சுற்று வட்டாரத் தோட்டங்களில் பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களாகவே இருந்து இருக்கின்றன.

அத்துடன் கெல்லிஸ் மாளிகையைக் கட்டுவதற்குத் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்களில் பலர் மாரியம்மன் கோயிலைத் தான் கட்ட வேண்டும் என்று பிடிவாதம் செய்து உள்ளனர். அதுவும் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம்.

கோயில் வேலைகள் தொடங்கின. கோட்டையில் இருந்து 1500 மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோயிலைக் கட்டினார்கள். 


கெல்லிஸ் காசல் என்பது மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கலை மாளிகை. மலையகத்துச் சுவட்டில் மறைக்க முடியாத ஒரு மர்ம மாளிகை. தென்னகத்துச் சிற்பத்தில் மறுக்க முடியாத ஒரு மதில் மாளிகை. இது என்னுடைய வர்ணனை.

பத்துகாஜா நகரில் இருந்து கோப்பேங் நகருக்குப் போகும் பாதையில் இந்த மாளிகை இன்றும் மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் (William Kellie Smith) எனும் ஆங்கிலேயர்  1915-ஆம் ஆண்டில் அந்த மாளிகையைக் கட்டத் தொடங்கினார்.

அந்த மாளிகையை அழகிய கோட்டை என்றும் சொல்லலாம். கெல்லிஸ் காசல் (Kellie's Castle) எனும் பெயர்ச் சொல்லில் காசல் எனும் சொல் வருகிறது. கவனீத்தீர்களா. காசல் என்றால் கோட்டை.


இந்த மாளிகை முற்றாக முற்றுப் பெறவில்லை. பாதியிலேயே கைவிடப் பட்டது. பாழடைந்து போய் கிடந்தது. அண்மையில் புதுப்பிக்கப்பட்டு ஒரு சுற்றுலா மையமாகக் காட்சி அளிககின்றது.

ஒரு செருகல். பலருக்கும் தெரியாத ஒரு தகவல். கெல்லிஸ் மாளிகையைக் கட்டிய வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தான் மலேசியாவில் முதன்முதலாக ஓர் இந்து ஆலயத்தை உருவாக்கிய ஆங்கிலேயர். அதுவும் தன் சொந்தப் பணத்தில் கட்டி இருக்கிறார்.

அத்துடன் பத்து காஜா கிந்தா கெலாஸ் தோட்டத்தில் ஒரு தமிழ்ப் பள்ளியையும் உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் மலேசிய இந்தியர்களின் வரலாற்றிலும் இந்த ஆங்கிலேயர் தடம் பதிக்கின்றார். அதை நாம் மறந்துவிடக் கூடாது.

(சான்று: http://www.mynicegarden.com/2013/07/kellies-castle-part-2-story-of-william.html)

1918-ஆம் ஆண்டில் மலாயாவை ஸ்பானிய காய்ச்சல் தாக்கத் தொடங்கியதும் தோட்டங்களில் இருந்த தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டன. மலாயாவில் அப்போது 200 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 

 

1852-ஆம் ஆண்டில் இருந்து 1937-ஆம் ஆண்டு வரை மலாயாவுக்கு 20 இலட்சம் இந்தியர்கள் மலாயாவுக்கு வந்து இருக்கிறார்கள். நினைவு படுத்துகிறேன் பெரும்பாலோர் தமிழர்கள். அதனால் மலாயாவில் இருந்த எல்லா இந்தியர்களையும் தமிழர்கள் என்றே அழைத்து இருக்கிறார்கள்.

இவர்கள் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்தார்கள். சாலைகள் அமைத்தார்கள். இரயில் பாதைகள் அமைத்தார்கள். விமானத் திடல்கள் அமைத்தார்கள்.

(சான்று: Journeys: Tamils In Singapore, 1800-Present, by Murugaian Nirmala)

1918-ஆம் ஆண்டு ஸ்பானிய காய்ச்சல் தாக்கிய போது பேராக் மாநிலத்தின் மக்கள் தொகை 605,964. இவர்களில் 29,882 பேர் இறந்து விட்டார்கள். ஒரே நாளில் 50 பேர் இறந்து சம்பவங்களும் உள்ளன.

ஈப்போ, பத்து காஜா, கம்பார், தைப்பிங், கோலாகங்சார் இரயில் சேவைகள் திடீரென்று நிறுத்தப் பட்டன. ஏன் என்றால் இரயில் பணியாளர்கள் பலர் ஸ்பானிய காய்ச்சலால் இறந்து விட்டார்கள்.

இன்னும் ஒரு தகவல். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் மட்டும் 7,000,000 பேர் இறந்து இருக்கிறார்கள்.




இப்போது நமக்கு எவ்வளவோ நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. வெண்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாசக் கருவிகளின் உதவிகள் இருக்கின்றன. இருந்தும் இறந்தவர்களின் என்ணிக்கை இலட்சங்களைத் தாண்டிப் போகின்றன. கொரோனா செய்யும் உயிர்ப் பலிகளைத் தான் சொல்கிறேன்.

அன்றைக்கு எந்த வசதிகளும் இல்லாமல் அப்பாவி மக்கள் அனாதைகளாய் இறந்து போனதை நினைக்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. அந்த வாயில்லா பூச்சிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்த பாழாய்ப் போன இந்த மனம் துடிக்கிறது..


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Sun Dram மலாயாவில் 1918 ஆம் ஆண்டு... இந்த நாட்டுக்காக உழைக்க வந்தவர்களில்... மிக அதிகத் தமிழர்கள் நோய் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்துள்ள சம்பவத்தைக் கேட்கும் போது... இந்த நாட்டில் பிழைக்க வந்து இப்படி பல துன்பங்களை அனுபவித்து உள்ளார்கள் என்பது... மனம் மிக வேதனை படுகிறது... இப்படிப்பட்ட தகவல்கள்... பிற்காலத்து மலேசிய சமுதாயம் அறிந்து கொள்ள ஏதுவாக நம் சரித்திர புத்தகங்களில் இடம்பெற வேண்டும்... கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றி. ஆவணப்படுத்த வேண்டியது நம் கடமை.

Sathya Raman >>> Sun Dram அட நீங்க வேற சார். ஏற்கனவே இந்நாட்டில் நமது வரலாற்று பதிவுகள் பலவற்றை அழித்து அட்ராஸே இல்லாமல் ஆக்கி வருகிறார்கள்.இனி வரும் காலத்தில் புதிதாக வரலாற்று பதிவுகளோ,சரித்திர பதிவுகளையோ இடம்பெறும் வாய்ப்பு மிக குறைவே 😥

Muthukrishnan Ipoh உண்மைதான்... பள்ளிப் பாடப் புத்தகங்களில் வரலாற்றுச் சிதைவுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றம் காண்கின்றன...

இருப்பினும் அசல் மலாயா வரலாற்று ஆவணங்கள்; மலாயா தமிழர்கள் வரலாறு; ம்லாயா பிரிட்டிஷார் வரலாறு; போன்றவை... டிஜிட்டல் இலக்க முறையில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன... உள்நாட்டில் உள்ள வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் நம்பகப் பாத்திரங்களாக அமையவில்லை...

Sathya Raman >>> Muthukrishnan உண்மைதான் சார். வருங்காலங்களில் நம் முன்னோர்கள் இந்நாட்டிற்கு ஏன், எதற்காக, எப்படி கொண்டு வரப் பட்டார்கள், அவர்கள் இந்நாட்டை வளப்படுத்த செய்த வேலைகள், தியாகங்கள் சிந்திய ரத்தம், வியர்வைகள், பெற்ற கொடுமைகளை, வேதனைகளை எந்த வரலாற்றிலும் பதிவு பண்ணாமலேயே இந்த பூமி அவற்றை நன்றாகவே படம் பிடித்து வைத்திருக்கும்.

நமது தாத்தா பாட்டி அப்பா, அம்மா அல்லது நமக்கே இந்நாட்டில் நமது வரலாறு எத்தகையது என்பதை நம் குழந்தைகளிடம், பேரப் பிள்ளைகளிடம் சொல்லி வளர்த்து வரணும்.

பசுமரத்தாணிப்போல் நமது வரலாற்றுக்களை சிறுவர்கள் மனதில் சிறுகச் சிறுக செதுக்கணும். அதற்கப்புறம் நம்முடைய சரித்திரத்தை எந்த சதிநாசக்காரர்களாலும் அசைக்க முடியாது. முயற்சிப்போம் நம் வீட்டு விடலைகளிடம் நம்மைப் பற்றிய விபரங்களை நலமே பக்குவமாய் பகிர்வோம்.🙏

Muthukrishnan Ipoh >>> Sathya Raman ஓர் எடுத்துக்காட்டு... பரமேஸ்வரா மதம் மாறினார் என்று பாடப் புத்தகங்கள் சொல்கின்றன... இல்லை என்று நான் வரலாற்று ஆவணங்களை முன் நிறுத்தி வாதிட்டேன். மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் கூ கே கிம்...

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் இணைய நூலகத்தில் மிங் வம்சாவளியினரின் 1400-ஆம் ஆண்டு ஆவணங்களை மீட்டு எடுக்க உதவிகள் செய்து இருக்கிறார்.

அதன் பிறகு தான் பர்மேஸ்வரா இறக்கும் போது ஓர் இந்துவாக இறந்தார் என்பதை உறுதி படுத்தினோம். இப்படி நிறைய எதிர் வினைகளைச் சந்தித்துச் சமாளித்து இருக்கிறேன்... பரமேஸ்வரா ஆய்வு நூலைக் கொண்டு வந்துவிட வேண்டும்... எனக்கும் வயது ஆகிறது...

M R Tanasegaran Rengasamy இந்த மண்ணுக்காக தமிழர்கள் கொத்துக் கொத்தாக அன்றே மாய்ந்தார்கள். இன்று நுனிப் புல் மேய வந்ததுகள் நம்மின் விசுவாசம் பற்றி பேசுதுங்க. ஓர் இருண்டகால வரலாற்றுப் பதிவு.

Muthukrishnan Ipoh நிழலின் அருமை விரைவில் தெரியும் சார்... இருப்பினும் நம்முடைய தமிழர் வரலாற்று ஆவணங்கள் அதிக அளவில் சிதைக்கப்பட்டு விட்டன...

Kanna CK Kanna >>> M R Tanasegaran Rengasamy.
கவலைப் படாதீர் தம்பி ' ,, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும் ...

மோஹன் Mohan தோட்டத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலி.... அது ஒரு அழகிய பயணம்

Kumar Murugiah Kumar's >>> மோஹன் Mohan அந்த தோட்ட ஏக்கம் இன்னும் இருக்கிறது, மனம் உள்ளே அழுகிறது !

Muthukrishnan Ipoh உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்...

Sathya Raman >>> மோஹன் Mohan அன்றைய தோட்ட மக்களிடம் சூடு வாது இருந்ததில்லை.பெரும்பாலும் நேர்மை மிக்கவர்களாக,மகிழ்ச்சி மிக்கவர்களாக இருந்து வந்துள்ளார்கள்.சொற்ப சம்பளம் என்றாலும் ஒருவருக்கொருவர் அந்யோனியமாக பழகிய விதம் இன்று சொந்த உறவுகளிடம் கூட கிடைப்பதில்லை.

வே சங்கர் நான் நோர்டனல் தோட்டம் பஞ்ஞர் மூவார் என்ற தோட்டப்புறத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். ஆதலால் தோட்டப்புற வாழ்க்கையை பற்றி நன்கு அறிவேன்.அது ஓர் அழகான வாழ்க்கை என்றும் மனதைவிட்டு நீங்காத நினைவுகள்.

Muthukrishnan Ipoh தோட்ட வாழ்க்கை இனிமையான வாழ்க்கை...

Rajendran Pakirisamy valthukal sir

Thanabaal Varmen நெஞ்சம் கனக்கிறது!!!

Krishna Ram Thanks sir...

Jainthee Karuppayah அரிய கருத்துக்கள் அடங்கிய தொகுப்பு... பள்ளிப் பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டுமென நினைக்கிறேன்.

Muthukrishnan Ipoh மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துகள்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக