27 மே 2020

பினாங்கு சிப்பாய் சாலையில் தமிழர்கள் - 1869

1786-ஆம் ஆண்டு பிரான்சிஸ் லைட் (Francis Light) பினாங்கில் காலடி வைத்தார். அப்போது அவர் கிழக்கிந்திய கம்பெனியில் (East India Company) சேவை செய்து வந்தார். பினாங்கிற்கு வரும் போது சென்னையில் இருந்து இந்தியச் சிப்பாய்களையும் அழைத்து வந்து இருக்கிறார். 

1765-ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த ஜோர்டாயின் சுலிவான் டி சூசா (Jourdain, Sulivan & Desouza) எனும் வணிக நிறுவனத்தில், பிரான்சிஸ் லைட் சேவை செய்யும் போது அவருக்குச் சென்னை நகரம் நன்றாகவே அத்துப்படி.

அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்பீட்வெல் (Speedwell) எனும் கப்பலையும் வாடகைக்கு எடுத்து இருக்கிறார். தாய்லாந்தின் புக்கெட் மாநிலத்தில் இருந்த தாலாங் (Thalang) துறைமுகத்தில் ஒரு வணிகக் கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கிறார்.

சென்னையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்களின் பாதுகாப்பிற்கு 1677-ஆம் ஆண்டிலேயே இந்தியச் சிப்பாய்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். முதன்முதலில் அந்த ஆண்டில் தான் இந்தியச் சிப்பாய்ப் படைகள் உருவாகின.


சென்னை, பம்பாய், பஞ்சாப்பில் இருந்து சிப்பாய்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப் படடனர்.

அந்த வகையில் பிரான்சிஸ் லைட், பினாங்கிற்கு வரும் போது இந்தியச் சிப்பாய்களையும் அழைத்து வந்து இருக்கிறார்.

இந்தச் சிப்பாய்கள் தங்குவதற்கு பினாங்கில் ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்திற்குப் பெயர் தான் சிப்பாய் லைன்ஸ் சாலை (Sepoy Lines Road). அங்கு அவர்களுக்கு படை வீடுகள் (barracks) அமைக்கப் பட்டன. இந்தியச் சிப்பாய்கள் வெகு காலமாகப் பினாங்கில் சேவை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பினாங்குத் தமிழர்கள் நீண்ட காலம் உதவிகள்; சேவைகள் செய்து இருக்கிறார்கள்.


1800-ஆம் ஆண்டுகளில் சிப்பாய் லைன்ஸ் சாலை ஒரு கருமண் சாலை. மாட்டு வண்டிகள் பயணித்த சாலை. அந்தச் சாலையைத் தான் பினாங்குத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஜார்ஜ் டவுன் துறைமுகத்தில் இருந்து இந்தியச் சிப்பாய்களின் படை வீடுகளுக்கு மாட்டு வண்டிகளில் பினாங்குத் தமிழர்கள் பொருட்களை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அப்போது எடுத்த படத்தைத் தான் இப்போது பார்க்கிறோம்.

அவர்கள் நிற்கும் இடத்தில் இருந்து பின்புறத்தில் இந்தியச் சிப்பாய்களின் படைவீடுகள் இருப்பதையும் கவனியுங்கள். புகைப்படம் எடுப்பதற்காக வெள்ளை வேட்டிகளுடன் காட்சி தந்து இருக்கலாம். சாமான்யக் கூலி வேலை செய்பவர்களின் உடைகள் அவ்வளவு தூய்மையாக இருக்காது.

சேவையில் இருக்கும் இந்தியச் சிப்பாய்கள் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குக் கடினமானப் பயிற்சிகள் மிகவும் அவசியம்.

அது மட்டும் அல்ல. தொடர்ந்து உடல்ப் பயிற்சிகள்; தொடர்ந்து ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அங்கு இருந்த பிரிட்டிஷ் இராணுவத்தினருடன் கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

அந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதற்குப் படைவீடுகளுக்கு அருகில் இருந்த திடலைப் பயன்படுத்தினார்கள்.

மழைக் காலங்களில் அந்தத் திடலில் தண்ணீர் தேங்குவது வழக்கம். ஏன் என்றால் படைவீடுகள் இருந்த பகுதி ஒரு சதுப்பு நிலமாகும். திடலில் வெள்ளம் ஏற்பட்டு மழைநீர் தங்குவது வழக்கம். பாம்புகளும் பூச்சிகளும் கொசுக்களும் குடும்பம் குடித்தனம் நடத்துவதும் வழக்கம்.

அந்தக் காலக் கட்டத்தில் பினாங்குத் தீவை, மலேரியா கொசுக்களின் தாயகம் என்றும் சொல்வார்கள். பினாங்கின் பெரும்பகுதி சதுப்பு நிலமாக இருந்ததால் நிறையவே குளம் குட்டைகள். நிறையவே அருவி ஏரிகள். நிறையவே பச்சைப் பாசா காடுகள். மலேரியா கொசுக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

பினாங்கில் மட்டும் 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் மலேரியாக் கொல்லி நோயினால் 15 ஆயிரம் பேர் இறந்து இருக்கலாம். பினாங்கில் மட்டும் அல்ல மலாயா முழுமைக்கும் இருந்த ரப்பர் காபித் தோட்டங்களில் பல்லாயிரம் தமிழர்கள் மலேரியாவினால் மரித்து இருக்கிறார்கள்.

ரொம்ப வேண்டாம். பினாங்கை உருவாக்கிய பிரான்சிஸ் லைட் அவர்களே மலேரியா நோயினால் தானே இறந்து போனார். அவர் இறக்கும் போது வயது 53. 1784 அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி காலமானார்.

சின்ன வயது தான். மலேரியா கொசு கடிக்கவில்லை என்றால் அவர் இன்னும் கொஞ்சம் கூடுதலான நாட்கள் வாழ்ந்து இருக்க முடியும்.

அவருடைய கல்லறை பினாங்கு, ஜார்ஜ் டவுன் நார்த்தாம் சாலையில் (Northam Road) உள்ள பழைய புரடெஸ்டண்ட் இடுகாட்டில் உள்ளது. நார்த்தாம் சாலை இப்போது ஜாலான் சுல்தான் அகமட் ஷா (Jalan Sultan Ahmad Shah) என்று அழைக்கப்படுகிறது.

அந்தக் குண்டு குழிகளில் கருமண்ணைப் போட்டு நிரப்புவது தமிழர்களின் வேலை. திடலில் கருமண் குவியல்கள் இருப்பதைக் காணலாம். மாட்டு வண்டிகளின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட கருமண். அதிகச் சுமையான கருமண்ணை ஏற்றி வந்ததால் அழுத்தமான சாலைகளிலும் அழுத்தமான வண்டிச் சக்கரங்களின் வடுக்கள்.


1869-ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் அல்பிரட், பினாங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு ஒரு புகைப்படத் தொகுப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது. அந்தத் தொகுப்பில் பினாங்குத் தமிழர்களின் இந்தப் படமும் சேர்க்கப்பட்டு இருந்தது.


புகைப்பட விவரங்கள்:

தலைப்பு: Sepoy Lines Road, Penang 1869

இப்போதைய இடம்: Sepoy Lines Road in Penang

எடுக்கப்பட்ட காலம்: 1869

படத்தின் அளவு: 15.3 x 20.9 cm

படம் எடுத்தவர்: Kristen Feilberg (1839-1919)

காப்பகம்: The Royal Collection Trust Picture Library, London

இந்தச் சிப்பாய் சாலையை பற்றி மேலும் அதிகமான தகவல்கள் உள்ளன. பிரிட்டிஷ் இராணுவம்; கேப்டன் ஸ்பீடி (Captain Speedy); போலோ திடல்; ஆப்பிரிக்காவின் பாவோபாப் மரம் (Baobab Tree) நடப்பட்டது; அவற்றை பத்திரிகையில் முழுக் கட்டுரை வடிவத்தில் பார்ப்போம்.  

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.05.2020

சான்றுகள்:

1. Khoo S.N., 2007. Streets of George Town, Penang. Areca Books.
2. Cheah J. S., 2013. Penang 500 Early Postcards. Editions Didier Millet.
3. https://penang.fandom.com/wiki/Sepoy_Lines_Road

1 கருத்து:

  1. ஐயா ! பினாங்கு திவில் உள்ள சரித்திர பெயர்களை மாற்றி மலாய் ஆட்சியாளர்களை பெயர்களை வைத்து சரித்திரம் இல்லாதவர்களை பெயர்களை என்ன இருக்கிறது. வெள்ளையர்கள் தமிழர்கள் அதிகம் வாழும் இந்த பினாங்கு முற்றாக மாற்றி அமைதுவிடுவர்கால் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு