16 மே 2020

கூலா தோட்டம் 1882 - சொல்ல மறந்த வரலாறு

தமிழ் மலர் - 16.05.2020

கடல் தாண்டி, கரை தாண்டி, மலை தாண்டி, மலையகம் நாடிய தமிழர்கள் கரும்புத் தோட்டங்களில் சிந்திய வியர்வையும்; ரப்பர் மரத்து வேர்களில் சிந்திய செந்நீரும் மறக்க முடியாத வேதனைச் சுவடுகள். அந்த வகையில் கூலா தோட்டத்து வரலாறு என்பதும் சொல்ல மறந்த வரலாறு தான்.



இட்லி, வடை, சாம்பார், சட்னி எல்லாம் தங்களின் பாரம்பரியச் சொத்து என ஒரு கூட்டம் உரிமை கொண்டாடி வருகிறது. வாழ்த்துவோம். அந்த வகையில் கூலா தோட்டம் போன்ற காலச்சுவடுகளின் வரலாற்றையும் அந்தக் கூட்டம் தங்களின் சொத்து என்று சொல்லலாம். எதிர்காலத்தில் நடக்கலாம்.

உலகத்திற்கே தெரிந்த ஓர் உண்மை என்ன தெரியுங்களா. கொட்டாங்கச்சிக்கு அடியில் கண்களை மூடிக் கொண்டு தவளைகள் கத்துவது அவற்றின் பாரம்பரிய குணம். மாற்ற முடியாதது என்கிற உண்மை. ஆகவே அந்தக் கத்தல்கள் எல்லாம் வரலாறுகளாய்ப் பரிணமிக்க இயலாது. ஏன் என்றால் அவை நித்தியம் இல்லாத நிர்வாணக் கோளாறுகள்.

 



கூலா தோட்டம் மலாயா வரலாற்றில் மிகப் பழமையான தோட்டம். மிகப் பிரபலமான தோட்டம். மலையக வரலாற்றில் தமிழர்களின் பாரம்பரியத் தோட்டம். மலையூர் வரலாற்றில் சாகாவரம் பெற்ற தோட்டம். அந்தத் தோட்டத்தின் வரலாறு 150 ஆண்டு காலத்திற்கும் முந்தியது.

ஒரே வார்த்தையில் சொன்னால் கிரியான் கூலா தோட்டம் (Gula Estate) என்பது மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் சாதனை படைத்த ஓர் அந்தாதி. அதுவே இன்றைக்கும் என்றைக்கும் நித்தியம் பேசுகின்ற ஒரு நித்தியக் கல்யாணி.




அந்தக் காலத்தில் கம்பிச் சடக்குகள் இல்லை. தார் சடக்குகள் இல்லை. தண்டு தண்டவாளங்கள் இல்லை. காட்டுச் சடக்குகளாய் ஒறையடிப் பாதைகள்; மாட்டுக் காடிப் பாதைகளாய்ச் செம்மண் சடக்குகள்; யானைகள் மேய்ந்து திரிந்த மலைப் பாதைகள்; கரடிகளும் புலிகளும் கட்டிப் புரண்ட காட்டுப் பாதைகள்; அவைதான் அப்போதைய மலையூர் வழிப் பாதைகள்.

இந்தக் காட்டுப் பாதைகளுக்கு முன்பாகக் கழுதைப் பாதைகளும் இருந்து இருக்கின்றன. நினைவில் கொள்வோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கிரா குறுநிலத்தில் (Kra Isthmus) கழுதைப் பாதைகள் இருந்து இருக்கின்றன.

தாய்லாந்து விரிகுடாவையும் (Gulf of Thailand) அந்தமான் கடலையும் (Andaman Sea) பிரிக்கும் கிரா குறுநிலத்தில் இருந்தன. நூறு கி.மீ. நீளம் கொண்டது.




இந்த கிரா குறுநிலம் தாய்லாந்தில் மலேசியாவிற்கு வடக்கே உள்ளது. தமிழ் நாடு காவேரி, நாகப்பட்டினம், சென்னை பகுதிகளில் இருந்து வந்த வணிகத் தமிழர்கள் அந்தப் பாதைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சரி.

இந்தச் சடக்குகளும் இந்தச் சாலைச் சம்பிரதாயங்களும் இல்லாத காலத்தில் ஆறுகளே முக்கியமான போக்குவரத்து ஊடகமாக இருந்து உள்ளன. சின்னச் சின்ன மிதவைகளையும்; சின்னச் சின்னச் செவ்வகப் படகுகளையும்; சின்னச் சின்ன மிதப்பான்களையும் பயன்படுத்திக் காலத்தை ஓட்டி இருக்கிறார்கள்.

அந்த வகையில் கூலா தோட்டத்தில் கரும்பு சாகுபடிக்குக் கால்வாய்ப் படகுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 50 மைல்களுக்குக் குறுக்கும் நெடுக்குமாய்க் கால்வாய்களை வெட்டிச் சாதனை செய்து இருக்கிறார்கள்.


குராவ் ஆற்றில் இருந்து நீரை வரவழைத்து அதன் மூலமாகப் படகுப் போக்குவரத்து. அந்தக் காலத்திலேயே கரும்புகளை ஏற்றிச் செல்ல கூலா தோட்டத்திற்கு 120 படகுகள் இருந்து இருக்கின்றன. சாதாரண விசயம் அல்ல.

கரும்புக் காட்டில் கரும்புகள் வெட்டப்பட்டு செவ்வகப் படகுகள் மூலமாகத் தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்டன. தோட்டத்தின் கரும்புத் தொழிற்சாலையைச் சுற்றிலும் குறுக்கும் நெடுக்குமாக நிறையவே கால்வாய்கள் இருந்தன. படகுகள் அணைவதற்கு துறை முனைகளும் இருந்தன.

ஆக கூலா தோட்டத்துத் தமிழர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சாலைச் சடக்குகளுக்குப் பதிலாக காலவாய்களைப் போக்குவரத்து ஊடகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த விசயம் இப்போதைய உள்நாட்டு வரலாற்றுச் சித்தர்களுக்குத் தெரியாமல் இருக்குமா? தெரியும் ஆனால் தெரியாது. அப்படியும் சொல்லலாம். பிரச்சினை இல்லை. 




மீண்டும் சொல்ல வேண்டிய தகவல். கூலா தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் 50 மைல்களுக்குக் குறுக்கும் நெடுக்குமாக கால்வாய்களை வெட்டி இருக்கிறார்கள். குராவ் ஆற்றில் இருந்து நீரை வரவழைத்து இருக்கிறார்கள். போக்குவரத்திற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கரும்புகளை ஏற்றிச் செல்ல 120 படகுகள் இருந்து இருக்கின்றன. ஒவ்வொரு படகிலும் 3 டன் கரும்புத் தண்டுகளை ஏற்றிச் செல்ல முடியும்.

சேத்துக் கப்பல். பலரும் கேள்விப் படாதச் சொல். கால்வாய் ஆறுகளின் அடிப் பாகத்தில் தங்கும் சேறு சகதிகளைத் தூர்வாரும் எந்திரத்திற்குப் பெயர்தான் சேற்றுக் கப்பல் (bucket dredger). 




அசல் பெயர் சேறுவாரி அல்லது தூர் வாரிக் கப்பல். அப்போதைய கூலா தோட்டத்து வழக்கு மொழியில் சேத்துக் கப்பல்.

சேத்துக் கப்பல் எனும் சொல்லை உருவாக்கியவர்கள் கூலா தோட்டத்துத் தமிழர்கள். உலகத் தமிழர்களுக்கு அதுவே அவர்களின் அன்பளிப்புச் சொல். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

அந்த வாய்க்கால்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேற்றை வாரும் எந்திரம் பயன்படுத்தப் பட்டது. அந்த எந்திரத்திற்குத் தான் சேத்துக் கப்பல் என்று கூலா தோட்டத்து மக்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

1880-ஆம் ஆண்டுகளில் அந்த ஒரு தோட்டத்தில் மட்டும் 1,521 தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு சாதனையைச் செய்தது இந்தக் கூலா தோட்டமாகத் தான் இருக்க வேண்டும். 




இந்தத் தோட்டம் உருவாகும் காலக் கட்டத்தில் தான் மலாயாவின் மிகப் பெரிய தோட்டங்களான டப்ளின் தோட்டம்; லாபீஸ் சா ஆ தோட்டம்; கிள்ளான் மிட்லெண்ட்ஸ் தோட்டம் போன்றவை உருவாகின. இந்தப் பட்டியல் நீளும். தெரிந்தவர்கள் தெரியப் படுத்துங்கள்.

கூலா தோட்டத்தின் சொந்தக்காரர்கள் பேராக் சீனி சாகுபடி நிறுவனம் (Perak Sugar Cultivation Company, Ltd). இந்தத் தோட்டம் வட பேராக், கிரியான் மாவட்டத்தில் கூலா ஆற்றங் கரைகளில் இருந்தது. தோட்டத்தின் அப்போதைய பரப்பளவு 6,813 ஏக்கர்கள்.

1882-ஆம் ஆண்டு சீனா, ஷாங்காய் நகரத்தைச் சேர்ந்த டிரம்மாண்ட் (W. Drummond) எனும் வணிகர், அங்கே அந்த கிரியான் பகுதியில் நிலத்தை வாடகைக்கு எடுத்து கரும்புச் சாகுபடி செய்து இருக்கிறார். 



ஓர் ஏக்கருக்கு ஒரு டாலர்; ஒட்டு மொத்தச் சீனி உற்பத்தியில் ஒரு விழுக்காடு எனும் பங்குரிமை ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் கூலா தோட்டம் திறக்கப் பட்டது.

பின்னர் 1883-ஆம் ஆண்டு 350,000 தயின் (350,000 taels) தங்கக் கட்டிகளைக் கொடுத்து அந்தத் தோட்டம் வாங்கப் பட்டது.

அதற்கு முன்னரே கரும்புச் சாகுபடி நடந்து இருக்கிறது. ஆக 1882-ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் அந்தத் தோட்டத்தில் குடியேறி விட்டார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் நினைவில் கொள்வோம்.

அந்தக் காலத்தில் தங்கத்தை அளப்பதற்கு தயின் முறையைப் பயன்படுத்தினார்கள். 




அப்போது தென்கிழக்காசியாவில் தயின், கட்டி, பீக்கள், கோயான்  நிறுவை முறை வழக்கத்தில் இருந்தது. 16 தயின் ஒரு கட்டி. 100 கட்டி ஒரு பீக்கள்; 40 பீக்கள் ஒரு கோயான். அப்போதைய ஒரு ஷாங்காய் தயினுக்கு 33.9 கிராம் தங்கம் மதிப்பாகும் (Shanghai tael = 33.9 g).

கூலா தோட்டத்தின் தலைமையகம் சீனா, ஷாங்காய் நகரில் கியாங்சே சாலையில் (Kiangse Road, Shanghai) இருந்தது. மலாயாவில் அதன் நிர்வாக அலுவலகம் பினாங்கில் இருந்தது. நிறுவனத்தின் பெயர் மெசர்ஸ் கென்னடி கம்பெனி (Messrs. Kennedy, Pinang).

கூலா தோட்டத்தில் 2,500 ஏக்கர் கரும்பு நடவு; 586 ஏக்கர் ரப்பர் நடவு; 36 ஏக்கர் காட்டு ரப்பர் (Rambong rubber) நடவு.

1906-ஆம் ஆண்டில் 73,018 பீக்கள் சீனி உற்பத்தி; ஓர் ஏக்கருக்கு முப்பது பீக்கள். அப்போது ஒரு பீக்கள் சீனி 5.71 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போதைக்கு ஒரு தொழிலாளரின் சம்பளம் ஒரு நாளைக்கு 25 - 35 செண்டுகள்.




அறுவடை செய்யப்படும் கரும்புகளில் 9 விழுக்காட்டு சாறுதான் சீனியாகக் கட்டியாக்கப் பட்டது. 91 விழுக்காடு சக்கைகள். தாவரங்களுக்கு உரமானது.

ஒரு ரப்பர் மரம் நன்றாக வளர்ச்சி அடைந்து பால் தருவதற்கு 5 - 6 ஆண்டுகள் பிடிக்கும். ஆக அந்த வகையில் 1899-ஆம் ஆண்டில் கூலா தோட்டத்தில் ரப்பர் மரங்கள் நடப்பட்டு உள்ளன.

அதற்கு முன்னரே கரும்புச் சாகுபடி நடந்து இருக்கிறது. ஆக 1882-ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் அந்தத் தோட்டத்தில் குடியேறி விட்டார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

1906-ஆம் ஆண்டு கூலா தோட்டத்தில் இருந்து 500 மரக் கொள்கலன்களில் (puncheons) திரவ ரப்பர் பாலை ரங்கூன்; கல்கத்தா நகரங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.  




1884-ஆம் ஆண்டில் கூலா தோட்டத்தில் பிருமாண்டமான கரும்பு ஆலை கட்டப்பட்டது. அதற்குள் மூன்று இராட்சச உருளைகளைக் கொண்ட துணை ஆலைகளும் இருந்தன. 24 மணி நேரமும் ஆலை இயங்கியது.

ஒரு நாளைக்கு 240 டன் கரும்புகளைப் பிழிந்து சாறு எடுக்கப் பட்டது. மூன்றுக் அடுக்கு கொதிகலன் ஆலைகளும் இருந்தன. 4000 சதுர அடிகளுக்குக் கரும்புகளைப் பரப்பி சூடு காட்டி சாறு பிழிந்து இருக்கிறார்கள்.

கரும்பு சாகுபடி செய்யப்படும் போது கூலா தோட்டத்தில் 65,107 ரப்பர் மரங்கள் இருந்தன. 1903-ஆம் ஆண்டில் இருந்து 1905-ஆம் ஆண்டுக்குள் மேலும் 4,913 கன்றுகள் நடப்பட்டன.

1906-ஆம் ஆண்டு கூலா தோட்டத்தில் இருந்து 500 மரக் கொள்கலன்களில் (puncheons) திரவ ரப்பர் பாலை ரங்கூன்; கல்கத்தா நகரங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.  




1876-ஆம் ஆண்டு கூலா கரும்புத் தொழில்சாலையில் 40; 65; 80; குதிரை சக்தி கொண்ட கொதிப்பான்களைப் (water-tube boiler) பயன்படுத்தி இருக்கிறார்கள். 24 மணி நேர மின்சாரச் சேவையும் இருந்து இருக்கிறது.

1882-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்தின் மருத்துவமனைக்கு டாக்டர் கூப் (Dr. Coope) என்பவர் பொறுப்பு வகித்து உள்ளார். இவருக்குத் துணையாக 12 பேர் மருத்துவ உதவியாளர்களாகப் பணியாற்றி உள்ளனர்.

1870-ஆம் ஆண்டுகளில் கூலா தோட்டத்திற்கு முதன்முதலில் சீனர்கள் கொண்டு வரப் பட்டார்கள் நாள் ஒன்றுக்கு 25 செண்ட் சம்பளம். சம்பளம் போதவில்லை என்று பிணக்குகள்.

அதனால் 1883-ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மகாராஸ்டிரர்கள், பூர்வீகக் குடிமக்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் 86 விழுக்காட்டினர் தமிழர்கள்.

தென்னிந்தியர்கள் கொண்டு வரப்பட்ட பின்னர் மலாய்க்காரர்கள்; ஜாவனியர்களும் சேர்ந்து கொண்டனர். கூலா தோட்டத்திற்கு அப்போது தாமஸ் பாயிட் (Thomas Boyd) என்பவர் நிர்வாகியாக (பெரிய துரை) இருந்தார். அவருக்குத் துணையாக ஏழு சின்ன துரைகள்; ஒரு பொறியியலாளர்; ஒரு மருத்துவர்; ஒரு கணக்காளர்.

இந்தத் தோட்டம் பெரிய அளவில் இயங்கி இருக்கிறது. 1980-ஆம் ஆண்டுகளில் இந்தத் தோட்டம் செம்பனைத் தோட்டமாக மறுவடிவம் கண்டது.

அண்மையில் மூத்த அரசியல்வாதி ஒருவர் தப்பான வியாக்கியானம் செய்து உள்ளார். இந்தியர்கள் இந்த நாட்டிற்கு 1930-ஆம் ஆண்டு வந்தார்கள் எனும் சரித்திரச் சிதைவு. அவர் இந்தப் பதிவைப் படிக்க வேண்டும். உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வாய்க்கு வந்தபடி கருத்துகள் சொல்வது ரொம்பவும் தப்பு.

இந்தக் கட்டத்தில் கவிஞர் வீரமான் எழுதிய கவிதை நினைவிற்கு வருகிறது.

வாய்பிளந்த மலைப்பாம்பு
வளைபெயர்ந்த கருநாகம்
பேயுலவும் வெளிக்காடு
பீதியன்று மறைந்தது உண்டோ?
புதர் அடைந்த மேடு பள்ளம்
புலி உலவக் கூடு பயம்
உதர வைக்கும் பணி இருட்டு...



சான்றுகள்:

நூல்: Twentieth Century Impressions of British Malaya
நூலாசிரியர்: Arnold Wright, H. A. Cartwright
தலைப்பு: GULA ESTATE
படங்கள்: கார்ட்ரைட் (H. A. Cartwright).
ஆண்டு: 1906
பதிப்பாளர்: Lloyd's Greater Britain Publishing Company, Limited
வெளியீடு: 1908.
காப்பகம்: University of Minnesota, அமெரிக்கா

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.05.2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக