அழகு என்றால் அழகு தான். அழகில் கறுப்பும் இல்லை. சிகப்பும் இல்லை. இயற்கையின் சீதனத்தில் எல்லாமே அழகுதான். அதில் பெண்மையின் மென்மையில் ஆயிரம் கோடி அழகு மலர்கள். அதில் ஆயிரம் கோடி நளினங்கள். அதில் ஆயிரம் கோடி பட்டாம்பூச்சிகளின் ஏக்கத் தொனிகள்.
இன்றைக்கும் என்றைக்கும் அந்தக் குறிஞ்சி மலர்களின் நளினங்கள் கவி பாடிக் கொண்டு தான் இருக்கும். சந்தேகம் வேண்டாம்.
ஆனாலும் அன்றைக்கு கறுப்புக் காவியங்களின் தாவணை முந்தானைகளின் அழகு இருக்கிறதே... சும்மா சொல்லக் கூடாது. அழகே அழகு. ஆராதனை செய்ய வேண்டிய அழகு. ஒரே வார்த்தையில் சொல்கிறேன். நிர்வாணம் தலைகுனியும் தனியழகு.
அன்றைக்குக் கரும்புத் தோட்டங்களின் அழகுகள் வேறு மாதிரியாகப் பயணித்து இருக்கின்றன. 1900-ஆண்டுகளில் பினாங்கு செபராங் பிறை பகுதியில் நிறையவே கரும்புத் தோட்டங்கள். அந்தத் தோட்டங்களில் நிறையவே மஞ்சள் மகிமைகள். மன்னிக்கவும். சாக்லேட் கலரில் அழகு அழகான ஜூலியட்கள்.
அந்தத் தோட்டங்களில் நம் இனத்துப் பெண்களின் அழகுராணிப் போட்டிகள், இப்படியும் இந்த மாதிரி அரங்கேற்றம் கண்டு இருக்கலாம். சொல்ல முடியாது. இந்தப் படம் 1907-ஆம் ஆண்டு, செபராங் பிறை செங்காட் சீனித் தோட்டத்தில் (Changkat Sugar Estate) எடுக்கப் பட்டது.
(Malaya, Penang, Tamil women in Changkat Sugar Estate, Province Wellesley in 1907)
மலாயா கூட்டாட்சி மலாய் மாநிலங்களின் முதல் தலைமை ஆளுநராகப் பதவி வகித்த சர் பிரேங் சுவெட்டன்ஹாம் (Sir Frank Athelstane Swettenham, Resident general of the Federated Malay States) அவர்கள் ஒரு நூல் எழுதி இருக்கிறார். அதன் பெயர் British Malaya: an account of the origin and progress of British influence in Malaya. அந்த நூலில் இந்தப் படம் பெற்று உள்ளது.
120 ஆண்டுகளுக்கு முன்னால் நம் பெண்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள். பாருங்கள். காலையில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த பின்னர் மாலையில் இளைப்பாறி இருக்கலாம். அல்லது படம் எடுப்பதற்காக அலங்காரம் செய்து காட்சிகள் வழங்கி இருக்கலாம். இது என் கருத்து.
எது எப்படியோ நம் இனத்துப் பெண்கள் அழகின் ஓவியங்கள் மட்டும் அல்ல. அழகின் பிறப்பிடங்கள். அற்புதமான ஜீவராசிகள். கறுப்பாக இருந்தாலும் சிகப்பாக இருந்தாலும் அழகு அழகுதான். அதைப் பார்ப்பவர்களின் கண்களில் கலை உணர்வுகள் மிளிர்ந்தால் சரி.
அந்தக் காலத்தில் கலர் படங்களை எடுக்கும் கருவிகள் வரவில்லை. அதனால் கறுப்பு வெள்ளைப் படங்கள் தான். அதில் இந்தப் படம் காலத்தால் கதைகள் சொல்லும் ஒரு மௌன ராகம். அந்தக் காலத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையை வண்ண மயமாக்கிய ஆத்மார்த்தமான ராகம்.
இந்தக் கறுப்பு வெள்ளைப் படம் இப்போது கனடா, தொராண்டோ பல்கலைக்கழகத்தின் (University of Toronto) அருஞ்சுவடிக் காப்பகத்தின் பாதுகாப்பில் உள்ளது. இந்தப் படத்திற்கான மூலக் கூறு:
(Source: https://archive.org/stream/britishmalayaac00swet/britishmalayaac00swet#page/n22/mode/1up)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.05.2020
சான்று:
1. The Birth of Plantation Colonialism in Malaya Part I - The Nineteenth Century; Lynn Hollen Lees, University of Pennsylvania; Publisher: Cambridge University Press; https://doi.org/10.1017/9781139814867.004
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக