31 May 2020

எஸ்.எஸ். ரஜுலா கப்பல் வரலாறு - 1

மலேசிய இந்தியர்கள் காலா காலத்திற்கும் மறக்க முடியாத ஒரு கடல் காவியம். மலேசிய இந்தியர்கள் பலரின் தாத்தா பாட்டிகளைக் கசக்கினாலும் நசுக்கினாலும், கப்பல் கம்பிகளில் காயப் போடாமல் மலாயாவுக்குக் கொண்டு வந்து சேர்த்த ஒரு கடல் ஓவியம்.

ரஜுலா கப்பல்
 
தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், சீக்கியர்கள் என்று எவரையும் வேறுபாடு பார்க்காமல் ஒரே பாயில் படுக்க வைத்துக் கரை சேர்த்த நல்ல ஒரு கடல் காவியம்.

முன்னாள் பிரதமர் உசேன் ஓன், ஜொகூர் சுல்தான் குடும்பத்தார்களில் சிலரைச் சென்னைக்கு  ஏற்றிச் சென்ற கப்பல். சும்மா சொல்லவில்லை. வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இப்போது மலேசியாவில் வாழும் இந்தியர்களை அடையாளம் தெரியாமல் வசை பாடும் ஒரு மகா அரசியல்வாதியின் மூதாதையர்களையும் பினாங்கிற்கு ஏற்றி வந்த கப்பல்.

ஒரு நாட்டையே அலங்கோலம் செய்து வரும் அதே அந்த மனிதரையும் சுமந்து வந்த கப்பல். ஒரு சிறுபான்மை இனத்தவரைக் கடித்துக் குதறுவார் என்று அந்தக் கப்பலுக்கு அப்போதே தெரிந்து இருந்தால் நிச்சயம் அவரை ஏற்றி வந்து இருக்காது. நம்பலாம்.
 
நாகப்பட்டினம் டிப்போவில் இருந்து மலாயாவுக்குச் செல்லும்
ரஜுலா கப்பலை நோக்கி நடக்கும் நம்முடைய மூதாதையர்கள் - 1928

இந்தியாவில் இருந்து வந்த அத்தனைத் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், குசராதிகள், சீக்கியர்கள் அனைவரையும் பினாங்குப் புறமலையில் ஒரே கூண்டுக்குள் போட்டு அடைத்துப் போட்ட நல்ல ஒரு ஜீவநாடி.

அதை ஒரு கப்பல் என்று சொல்வதைவிட ஒரு காவியம் என்று சொல்லலாம். தப்பு இல்லை.

அந்த அளவிற்கு எஸ்.எஸ்.ரஜுலா மிக மிகப் புகழ் பெற்ற ஒரு பெயர். தமிழர்களால் ரஜுலாக் கப்ப என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு காலச் சுவடு. அது ஒரு கடல் மாதா.

அந்தக் கப்பல் மறைந்து போனாலும், அது விட்டுச் சென்ற மந்திரப் புன்னகைகள் மட்டும் வரலாற்றில் இருந்து இன்னும் மறையவில்லை. தமிழர்களின் வரலாற்றில் இருந்தும் மறைக்க முடியவில்லை. சுருங்கச் சொன்னால் மலாயாத் தீவுகளுக்கு வந்த தமிழர்களின் வரலாற்று ஜீவப் பெருமகள்.
 
பினாங்குத் துறைமுகத்தில் அணைந்த ரஜுலா கப்பலில் தென்னிந்தியர்கள்

நாம் இப்போது நல்ல ஒரு சொகுசான வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் நம்முடைய மூதாதையர்கள் எப்படி கஷ்டப் பட்டு இருப்பார்கள். தண்ணீர்க் கப்பல்களில் எப்படி கண்ணீர் விட்டு கரை சேர்ந்து இருப்பார்கள்.

இந்த மாதிரியான தகவல்களை நம்முடைய வாரிசுகளுக்குக் கண்டிப்பாகத் தெரிந்து இருக்க வேண்டும். நம்முடைய அடுத்த அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

1900-களில் சில இரும்புக் கப்பல்கள் சென்னைக்கும் பினாங்கிற்கும் ஓடிக் கொண்டு இருந்தன. ஒன் மினிட் பிளீஸ்.

இரும்புக் கப்பல்கள், இருப்புக் கப்பல்கள் இரண்டும் ஒன்று தான். இரும்பு - இருப்பு எனும் இந்த இரு சொற்கள் சமயங்களில் முரண்டு பிடிக்கும். இங்கேயும் அப்படித்தான். தமிழர்கள் எழுதி வைக்காத இலக்கணமா. அங்கே இங்கே சற்று இடிக்கும். சரி விடுங்கள்.

ஆக அந்தக் காலத்துக் கப்பல்கள் வேகமாகச் செல்லவில்லை. சென்னையில் இருந்து பினாங்கிற்கு வந்து சேர இரண்டு வாரங்கள் பிடிக்கும்.

நிலக்கரியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் நீராவியின் மூலமாகக் கப்பல்கள் பயணங்கள் செய்து இருக்கின்றன. அவற்றில் சில கப்பல்களின் பெயர்கள் தெரியாமலேயே, அப்படியே கடலில் மறைந்து விட்டன. அதுவும் ஒரு பெரிய கதை.

பினாங்குத் துறைமுகத்தில் அணைந்து இருக்கும் ரஜுலா 
கப்பலில் இருந்து மூட்டைகளைத் தூக்கி  வரப் போகும் தமிழர்கள்

 1930-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஓடிய கப்பல்கள் எட்டு பத்து நாட்களில் பினாங்கைப் பிடித்துவிடும். எஸ்.எஸ்.ரஜுலா கப்பல் இருக்கிறதே, இது ஐந்தே நாட்களில் பினாங்கைப் பிடித்து விடுமாம்.

அந்தக் கப்பலில் ஏறி வந்த ஒரு பெரியவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.

ரோணா (Rona),

அரோண்டா (Aronda),

ரஜூலா (Rajula),

ஜலகோபால் (Jalagopal),

ஜல உஷா (Jalausha),

ஸ்டேட் ஆப் மெட்ராஸ் (State of Madras),

எம்.வி.சிதம்பரம் (MV Chidambaram)


போன்ற கப்பல்கள், நம் மலேசிய மனங்களில் இன்னும் நிலைத்து நிற்கின்றன. அவற்றை மறக்க முடியுமா. எப்படிங்க மறக்க முடியும்.

நம்ப அப்பா அம்மா தாத்தா பாட்டிகளை அழகாய்க் கரை சேர்த்த கடல் ரஞ்சிதம் என்றுகூட சொல்லலாம். அந்த அழகிய மகளை எப்படிங்க மறக்க முடியும்.

ஆகக் கடைசியாக ஓடிய கப்பல் எம்.வி.சிதம்பரம் கப்பல். இந்திய விடுதலைப் போராளி வ.உ.சி. அவர்களின் நினைவாக அந்தக் கப்பலுக்குப் பெயர் வைக்கப் பட்டது.

முதன் முதலில் ரோணாவும் ரஜூலாவும் தான் ஒரே சமயத்தில் இணைந்து பயணித்தன. அதன் பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு ஓடி இருக்கின்றன. இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் மூழ்கி விட்டதாகச் சொல்கிறார்கள்.
 
நாகப்பட்டினத்தில் ரஜுலா கப்பலை நோக்கிப் 
படகில் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்

ரோணா கப்பல் மத்தியத்தரைக் கடல் பகுதியில் மூழ்கிப் போனது. அரோண்டா என்ன ஆனது என்று சரியாகத் தெரியவில்லை. சான்றுகளைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

ஜல கோபால் கப்பலுக்குப் பிறகு ஸ்டேட் ஆப் மெட்ராஸ் கப்பல் ஓடியது. மலாயாவில் எஸ்.எஸ். ரஜுலா (S.S. Rajula), ஸ்டேட் ஆப் மெட்ராஸ் (State of Madras) போன்ற கப்பல்கள் ஆயிரக் கணக்கான சஞ்சிக் கூலிகளுக்கும் நூற்றுக் கணக்கான கங்காணிகளுக்கும் பயண மார்க்கங்களாக அமைந்து இருந்தன.

எஸ். எஸ். என்றால் Straits Service. தமிழில் நீரிணைச் சேவை என்று அழைக்கலாம்.

19-ஆம் நூற்றாண்டில், சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் மலாயா, சுமத்திரா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப் பட்டனர்.

அந்தச் சமயத்தில் செட்டி நாட்டில் இருந்து லேவாதேவித் தொழில் செய்வதற்காக நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் மலாயாவுக்கு வந்தனர்.

தமிழகக் கரையோரப் பட்டினங்களில் இருந்து தமிழ் முஸ்லிம்கள் வந்தனர். இவர்கள் பினாங்கு, கிள்ளான், சிங்கப்பூர் நகரங்களில் சிறிய பெரிய அளவில் வர்த்தகங்களைச் செய்தனர்.
 
சிங்கப்பூர் துறைமுகம்

 ஒரு செருகல். பட்டினம் என்பது வேறு. பட்டணம் என்பது வேறு. கரையை ஒட்டிய கடல் கரை நகரங்களுக்குப் பட்டினம் என்று பெயர். கரையைத் தாண்டி உட்புறமாக இருக்கும் நகரங்களுக்கு பட்டணம் என்று பெயர். நினைவில் கொள்வோம்.

யாழ்ப்பாணம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தனர். ஆனால் குறைவான எண்ணிக்கை. சீக்கியர்களையும் மறந்துவிடக் கூடாது. இவர்கள் மலாயாவிற்கு வந்து போலீஸ், இராணுவம், காவல், சிறுவியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டனர். தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்களில் பெரும்பான்மையினர் கூலிவேலைகள் செய்தனர்.

எஸ்.எஸ். ரஜூலா கப்பல் 1926-ஆம் ஆண்டில் பார்க்லேய் கார்லி (Barclay Curle & Company Glasgow) எனும் ஆங்கிலேயக் கம்பெனியால் கட்டப் பட்டது. அதன் நீளம் 477 அடி. அகலம் 62 அடி. கடல் மட்டத்தில் இருந்து 26 அடி உயரம் கொண்டது.
 

அதன் எடை 8496 டன்கள். அதில் 657 டன்கள் எடையுள்ள சாமான்களை ஏற்றிச் செல்ல முடியும். மனிதர்களையும் சேர்த்துதான். அதன் வேகம் என்னவோ 13 கடல் மைல்கள். அதாவது மணிக்கு 24 கி.மீ.

எஸ்.எஸ்.ரஜூலாவின் விலை அப்போது இரண்டரை மில்லியன் ரிங்கிட். இப்போதைய காசிற்கு ஏறக்குறைய 100 மில்லியன் ரிங்கிட் வரும். எஸ்.எஸ்.ரஜூலா கப்பலுடன் ரோணா எனும் கப்பலும் கட்டப் பட்டது.

ரஜூலாவும் ரோணாவும் ஒரே சமயத்தில் கட்டப் பட்டன. அந்த இரண்டு கப்பல்களின் விலை இப்போதைக்கு 180 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும்.

இரண்டும் ஒன்றாகவே லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தன. இரண்டு கப்பல்களும் 1926 செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னைக்கும் பினாங்கிற்கும் பயணத்தில் விடப்பட்டன.

மாதத்திற்கு இரண்டு முறை பயணங்கள். சென்னையில் இருந்து பினாங்கு. அடுத்து பினாங்கில் இருந்து சிங்கப்பூர். அடுத்து மறுபயணமாகச் சிங்கப்பூரில் இருந்து பினாங்கு. அப்புறம் பினாங்கில் இருந்து சென்னை. இப்படி இருவழிப் பயணங்கள்.

எஸ்.எஸ். ரஜூலா ரொம்பவும் சக்தி வாய்ந்த கப்பல் என்றுகூட சொல்வார்கள். இரண்டாயிரம் பேர் ஏறிச் செல்ல வேண்டிய கப்பலில் ஆறாயிரம் பேர் வரை ஏறிப் போய் இருக்கிறார்கள்.

அந்தக் கப்பலுக்கு ஏதாவது ஓர் ஆபத்து என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன ஆகி இருக்கும். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

கப்பலில் இருந்த பாதுகாப்புச் சிறு படகுகளில், 1500 பேர் மட்டுமே தப்பிக்க முடியும். இருந்தாலும் 6000 பேரைச் சுமந்து போய் இருக்கிறது. சாதனை என்று சொல்ல முடியாது. மனித உயிர்களை விலை பேசிய சாணக்கியம் என்று சொல்லலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அந்தக் கப்பலின் கட்டுமானத்தில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன. பின்னர் அந்த ரஜுலா கப்பலில் 1900 பேர் மட்டும் தான் பயணிக்க முடியும் என்று வரையறுக்கப் பட்டது.

ரஜூலா கப்பலுக்குப் பின்னால் நீர் மட்டத்தில் இரு பெரும் இருப்புத் திருகுகள் இருக்கும். அதாவது காற்றாடிகள்.

அவை சுற்றினால் தான் கப்பல் கடலில் பயணிக்க முடியும். ரஜூலா கப்பல் டீசல் எண்ணெயால் இயங்கியது. இந்த எண்ணெய் வாடைதான் பிரச்சினையிலும் பிரச்சினையானது.

ஒன்று மட்டும் உண்மை. நம் மூதாதையர்கள் எதையும் எழுதி வைக்காமல் போய் விட்டார்கள். அவர்களைத் தேடிப் போய் கேட்கவும் முடியாது. என்ன செய்வது. அவர்கள் என்னவோ டீசல் வாடை டீ வாடையில் வந்து விட்டார்கள்.

இப்போது கண்ட கண்ட நாய்கள் எல்லாம் நம்முடைய வியர்வை வரியில் சுகமாய் குரைத்துக் கும்மாளம் போடுகின்றன. சரி. அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.05.2020

(தாழ்மையான வேண்டுகோள். இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு மற்ற ஊடகங்களில் பதிவு செய்யும் போது, கட்டுரையைத் தயாரித்தவரின் பெயரையும் இணைத்துக் கொள்ளுங்கள். )
1 comment:

  1. i read your article. If i want to know the records on those Indians who came after 1930 till 1945...where should i start my search

    ReplyDelete