17 மே 2020

இலங்கை ஜாவானியத் தமிழர்கள்

தமிழ் மலர் - 15.05.2020

காலம் மாறும் போது ஆட்சிகள் மாறும். ஆட்சிகள் மாறும் போது காட்சிகள் மாறும். காட்சிகள் மாறும் போது கதைகளும் மாறும். கூடவே சோதனைகளும் மாறும். வேதனைகளும் மாறும். மன்னிக்கவும் வந்து சேரும்.

டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்த போது ஜாவாவில் வாழ்ந்த ஜாவானியர்களுக்கும் பற்பல சோதனைகள். பற்பல வேதனைகள். அந்த வகையில் ஜாவாவில் வாழ்ந்த ஜாவானியர்கள், இலங்கைக்குப் போய் இலங்கையின் ஜாவானியத் தமிழர்கள் ஆனார்கள். எப்படி? இதுவும் ஒரு நீண்ட நெடிய வரலாற்று நிகழ்ச்சி. 



மலாயாவுக்கு வந்து மலைக்காடுகளில் அலைந்து திரிந்து மலேரியா காய்ச்சலினால் மாண்டு போன ஆயிரக் கணக்கான தமிழர்களின் கதைகள் போல… இலங்கைக்குப் போய் தேயிலைக் காடுகளில் அலைந்து திரிந்து கண்டி காடுகளிலேயே மறைந்து போன ஜாவானியர் கதைகளும் விசும்புகின்றன.

350 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோனேசியாவில் வாழ்ந்து வந்த ஜாவா, சுமத்திரா, போர்னியோ சுலவாசி மக்கள் சில ஆயிரம் பேர் இலங்கையில் குடியேற்றப் பட்டார்கள். 



இவர்கள் பெரும்பாலும் பாலித் தீவு மக்கள் (Balinese); தீமோர் தீவு மக்கள் (Timorese); மதுரா தீவு மக்கள் (Madurese); சுந்தா தீவு மக்கள் (Sundanese); பண்டான் தீவு மக்கள் (Bandanese); அம்போய்னா மக்கள் (Amboinese).

இந்தோனேசியாவை டச்சுக்காரரர்கள் (Dutch East India Company) ஆட்சி செய்த போது இலங்கையில் முதல் குடியேற்றம் நடந்தது. அப்போது டச்சு அரசாங்கம் ஆட்சி செய்யவில்லை. ஒரு டச்சு கம்பெனிதான் ஆட்சி செய்தது.

இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி இந்தியா அரசாட்சிக்குள் ஊடுருவியது போலவே இந்தோனேசியாவிலும் டச்சுக்காரர்களின் ஊடுருவலும் நிகழ்ந்தது.



ஜாவாவின் அரசக் குடும்பங்கள்; பிரபுக் குடும்பங்கள்; செல்வந்தர்கள்; கிராமப்புறத் தலைவர்கள்; கல்விமான்கள்; விடுதலைப் போராளிகள்; அரசியல் இடதுசாரிகள் என முக்கியப் புள்ளிகள் பெரும்பாலோர் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டார்கள்.

இவர்களில் 200 பேர் அரசு பிரபு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் (aristocratic families). 18-ஆம் நூற்றாண்டில் நாடு கடத்தப் பட்டார்கள். நாடு கடத்துவதற்கு இலங்கையையும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனையையும் (Cape of Good Hope, South Africa) டச்சுக்காரர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட ஜாவானியர்கள் இன்றும் அங்கே தான் வாழ்கிறார்கள். அங்கு வாழும் மக்கள் அவர்களை மலாய்க்காரர்கள் என்று அழைக்கிறார்கள்.



இங்கே ஒரு விசயத்தைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்தோனேசியா ஜாவாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டவர்கள் அனைவரும் இந்தோனேசியர்கள். இவர்கள் இந்தோனேசிய ஜாவா மொழியைப் பேசுகிறார்கள். தீபகற்ப மலேசியாவில் இருந்து டச்சுக்காரர்களால் எவரும் நாடு கடத்தப்படவில்லை.

மறுபடியும் சொல்கிறேன். ஜாவானியர்கள் 1600-ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து டச்சுக்காரர்களால் நாடு கடத்தப் பட்டார்கள். ஆனாலும் 1641-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றிய போது அங்கிருந்தும் யாரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படவில்லை.

(Although there do exist Sri Lankan Malays descended from the folk of the Malayan peninsula, their numbers are very few indeed.)

(சான்று: http://www.worldgenweb.org/lkawgw/malays1.htm)



2012-ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். ஜாவாவில் இருந்து நாடு கடத்தப் பட்டவர்களின் கணக்கெடுப்பு தான். அவர்களில் 28,975 பேர் தமிழ் பேசுகிறார்கள்; 24,202 பேர் ஆங்கிலம் பேசுகிறார்கள் என்று அறிய முடிந்தது.

(சான்று: Census of Population and Housing 2011. www.statistics.gov.lk. Department of Census and Statistics)

ஆக இலங்கைக்கு நாடு கடத்தப் பட்ட்வர்கள் அனைவரும் இந்தோனேசியர்களே. இவர்கள் ஜாவா மொழி பேசியதால் மற்ற இனத்தவர்களாக அடையாளப் படுத்தப் படுகிறார்கள்.



நாடு கடத்தப் பட்டவர்களில் சிலர் டச்சு ஆங்கிலேய ஊழியர்களாகவும்; போர் வீரர்களாகவும்; பாதுகாவலர்களாகவும் பணியாற்றி இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண்கள் தான். இலங்கைக்குப் போன ஜாவானியர்கள் தங்களுடன் பெண்களை அழைத்துச் செல்லவில்லை.

அப்படியே அவர்கள் விரும்பினாலும் டச்சுக்காரர்கள் அனுமதிக்கவில்லை. பிரித்தாளும் சாணக்கியத்தில் ஆங்கிலேயர்கள் நம்பர் ஒன் கில்லாடிகள் என்றால் டச்சுக்காரர்கள் இருக்கிறார்களே இவர்கள் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதர்கள். மன்னிக்கவும். சகலபாடிகள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.

சூரியன் எங்களைக் கேட்டுத் தான் உதிக்கும்; எங்களைக் கேட்டுத் தான் மறையும் என்பது பேனர்மேன் வசனம். மறக்க முடியுமா.



1658-ஆம் தொடங்கி 1796-ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 10 ஆயிரம் ஜாவானியர்கள் இலங்கையில் குடியேற்றம் செய்யப்பட்டு இருக்கலாம்.

இந்திய விடுதலைப் போராளிகள் எப்படி அந்தமான் தீவுகளுக்கும்; பினாங்குத் தீவிற்கும்; இலங்கைத் தீவிற்கும் நாடு கடத்தப் பட்டார்களோ அதே போலத் தான் இந்தோனேசியாவிலும் நடந்து இருக்கிறது.

இருப்பினும் இவர்களில் பலர் பின்னாட்களில் டச்சுக்காரர்களுக்குப் பக்க பலமான போர் வீரர்களாகப் போராடி இருக்கிறார்கள். போர்த்துகீசியர்களுக்கு எதிராக 1650-ஆம் ஆண்டு கொழும்புவிலும் (Colombo - 1656); 1658-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும் (Jaffna - 1658) களம் இறங்கி இருக்கிறார்கள்.



17-ஆம் நூறாண்டில் கண்டி இராச்சியத்திற்கு (Kingdom of Kandy) எதிராக டச்சுக்காரர்கள் போர் தொடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு இந்த ஜாவானியர்கள் போர்முனை வீரர்களாக ஆயுதங்களை ஏந்தி இருக்கிறார்கள். சரி.

இந்தோனேசியாவில் டச்சுக்காரர்களின் ஆதிக்கப் பேராண்மை. அதனால் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த இலங்கையில், இந்தோனேசிய ஜாவானியர்கள் தடம் பதித்தார்கள்.

காரியம் முடிந்தது. டச்சுக்காரர்கள் திரும்பிப் போனார்கள். ஆங்கிலேயர்கள் வந்தார்கள். கொஞ்ச காலத்தில் இவர்களும் திரும்பிப் போய்ச் சேர்ந்தார்கள். இந்தோனேசிய ஜாவானியர்கள் அனாதை ஆனார்கள்.

1805-ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்ததும்,  அங்கே இருந்த ஜாவானியர்களைத் திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அப்போது இந்தோனேசியாவை ஆட்சி செய்து கொண்டு இருந்த டச்சுக்காரர்கள் மறுத்து விட்டார்கள்.

(Governor Maitland: Dutch authorities in Batavia were reluctant to take back the exiles). 



செலவை யார் ஏற்றுக் கொள்வது. 1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை போலும்.

ஜாவானியக் குடியேற்றவாதிகள் பின்னர் காலத்தில் இலங்கைக் கிராமப் புறங்களில் வாழத் தொடங்கினார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் இலங்கையில் தமிழர்களின் குடியேற்றம் தீவிரமாக இருந்தது. அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பெருவாரியான தமிழர்கள் குடியேறினார்கள்.

மேலும் ஜாவானியர்கள் பலர் இலங்கை நகரங்களில் உடலுழைப்புத் தொழிலாளர்களாக; சிறு தொழில் முனைவர்களாக; சிறுபான்மை வணிகர்களாக; அரசு ஊழியர்களாகத் தடம் பதித்தார்கள். 



எங்கே போவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்த இந்தோனேசியக் குடியேற்றவாதிகள் சிலர் இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். நன்றாகப் பழகினார்கள். நாளடைவில் நெருக்கமானார்கள். இந்தோனேசிய ஜாவானியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலை கலாசாரங்கள்; பழக்க வழக்கங்கள்; பாரம்பரிய முறைகள் பெரும்பாலும் ஒத்துப் போகும் தன்மை கொண்டவை. தெரியும் தானே.

ஆகவே அந்த வகையில் இந்தோனேசியக் குடியேற்றவாதிகள் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். மனைவி மக்களுடன் குடும்பம் குடித்தனங்கள் பெரிதாகிப் போயின.

குடியேறியவர்களில் சிலர் பழையபடி இந்தோனேசியாவிற்கே திரும்பிச் சென்றார்கள். அப்படிப் போனவர்களுக்கு இலங்கையில் மனைவி மக்கள் இல்லை.



இலங்கையில் தமிழர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் புறங்களிலும் இன்றும் வாழ்கிறார்கள். இவர்கள் தான் இலங்கை ஜாவானியத் தமிழர்கள்.

இவர்களில் பலர் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். பலர் இந்துக்களாகவும் இருக்கிறார்கள். முந்நூறு ஆண்டுகளின் மாற்றங்கள். அவர்களின் எச்சங்கள் தான் இப்போதைய ஜாவானியத் தமிழர்கள்.

மேலும் ஒரு வரலாற்றுச் செருகல். 1230-ஆம் ஆண்டு சந்தரபானு தர்மராஜா (King Chandrabhanu Sridhamaraja) எனும் மன்னர் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்தார் (1230–1263). இவர் மலாயா - தாய்லாந்தைச் சேர்ந்த தாம்பரலிங்கா அரசைச் சேர்ந்தவர். 



இலங்கையைக் கைப்பற்றும் முயற்சியில் சந்தரபானு தர்மராஜா 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி இருக்கிறார். வெற்றியும் பெற்றார். 43 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்து இருக்கிறார்.

1263-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து படை எடுத்த பாண்டியர் படைகளால் சந்தரபானு தர்மராஜா தோற்கடிக்கப் பட்டார். இறுதியாக பாண்டியப் பேரரசர் ஜாதவர்மன் சுந்தர பாண்டியனின் சகோதர் ஒருவரால் கொல்லப் பட்டார்.

அப்போது ஜாவாவில் இருந்து ஜாவானியர்கள் நிறைய  பேர் சந்தரபானு தர்மராஜாவிற்கு உதவிகள் செய்து உள்ளனர். இவர்களின் வழித்தோன்றல்களில் பலரும் அப்போதே இலங்கைத் தமிழர்களாய் மாறி விட்டார்கள். இந்து மதத்தையும் புத்த மதத்தையும் பின்பற்றினார்கள். அதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கையில் ஸ்ரீ லங்கா மலாய்ச் சமூகம் (Sri Lankan Malay community) என்று ஒரு சமூகத்தினர் உள்ளனர். இவர்களும் நல்லபடியாக செல்வாக்குடன் உயர்நிலையில் உள்ளனர். கல்விமான்கள் நிறைந்த சமூகம். நல்ல அழகிய சமூகம்.



ஸ்ரீ லங்கா மலாய்ச் சமூகம் அமைதியை விரும்பும் சமூகத்தினர். மற்ற சமூகங்களுடன் நட்புறவு பேணுகிறார்கள். ஸ்ரீ லங்கா மலாய்ச் சமூகத்தவரையும்; இலங்கை ஜாவானியத் தமிழர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டாம். இலங்கையில் வெவேறு கலப்பினச் சமூகங்கள் உள்ளன.

இலங்கை ஜாவானியத் தமிழர்களின் பெரும்பாலோரின் இறுதிப் பெயர்கள் ஜெயா; வீர வங்சா (Weerabangsa); சிங்கவங்சா (Sinhawangsa); ஜெயவங்சா; சிங்களவங்சா; வங்சா என்று முடிவு அடைவதைக் காண முடிகிறது. அவர்களின் பெயர்களில் ஜெயன்; மன்னன்; கொம்பன்; வீரன்; ராஜன்; மேகன்; பிரியன் எனும் பெயர்கள் கணிசமாக உள்ளன.  

இலங்கை ஜாவானியத் தமிழர்களில் பலர் நல்ல நிலையில் இருந்தாலும் அரசியலில் இருந்து ஒதுக்கப் படுகிறார்கள். இந்தப் பக்கம் இந்தியர்களுக்கு என்ன நடக்கிறதோ அதே போலத்தான் அங்கேயும் போலும்.

ஒரு நாட்டில் ஆட்சியும் காட்சியும் மாறும் போது அந்த நாட்டின் சிறுபான்மை இனத்தவர் தான் முதலில் எதிரிகளாக முத்திரை குத்தப் படுகிறார்கள். அது சிறுபான்மை மக்களின் தலைவிதி. அதுவே பேரினவாதத்தின் ஏகவாதப் பிரதிநிதி. அது இங்கே மட்டும் அல்ல. எங்கேயும் இன்றைக்கும் என்றைக்கும் அழியாத கோலங்கள்.

1950-ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சிங்கள இனவாதச் சிந்தனை தொடங்கியது. காலப் போக்கில் அந்தச் சிந்தனை புற்றுநோய் போல் பரவியது. கடைசியில் முள்ளிவாய்காளில் முற்றுப் பெற்றாத முற்றுப் புள்ளியாய் முத்திரை குத்தியது. சிங்களச் சித்தாந்தம் இன்றும் இலைமறைக் காயாக இன்னும் கொக்கரிக்கின்றது.

புயலால் மரங்கள் அழியும் போது பாவம் பறவைகள் என்ன செய்ய முடியும். உறுதியான மரங்களைத் தேடிப் போகலாம். அவ்வளவு தான். புயலுடன் போராட முடியுமா. முடியாது.

எங்கே இருந்தாலும் மனிதர்கள் மனிதர்கள் தான். அங்கே இருக்கும் மனிதத்தில் தமிழர்களின் இரத்தம் கொஞ்சமாய் ஓடும் போது இங்கே இருக்கும் சதையும் கொஞ்சமாய் ஆடவே செய்கின்றது. தொடாமல் கொள்ளாமல் தொடையும் ஆடுகின்றது. அப்படியே அதன் நாளங்களில் இரத்தமும் சேர்ந்து அழுகின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.05.2020



சான்றுகள்

1. India's interaction with Southeast Asia, by Govind Chandra Pande

2. Liyanage, A. The Decline of Polonnaruwa and the rise of Dambadeniya, (Colombo, 1968)

3. de Silva, K. M. (2005). A History of Sri Lanka. Colombo: Vijitha Yapa.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக