மலேசிய வரலாற்றில் ஆயிரமாயிரம் மிளகுத் தோட்டங்கள். ஆயிரமாயிரம் காபித் தோட்டங்கள். ஆயிரமாயிரம் ரப்பர் தோட்டங்கள். ஆயிரமாயிரம் செம்பனைத் தோட்டங்கள்.
அந்த ஆயிரமாயிரம் தோட்டங்களில் ஆயிரமாயிரம் கனவுகள். ஆயிரமாயிரம் நனவுகள். அதில் ஆயிரமாயிரம் வேதனைகள்; சோதனைகள். அந்த ஆயிரமாயிரம் வேதனைச் சோதனைகளிலும் சுங்கை பூலோ தோட்டத்திற்கு மட்டும் தனி ஒரு மரியாதை. தனி ஒரு மதிப்பு. தனி ஓர் உப்பரிகை.
ஆனாலும் அந்தத் தோட்டத்திற்கு வந்து போன வெளிநாட்டுப் பிரபலங்கள் வைத்த பெயர் என்ன தெரியுங்களா. லெட்சுமி தோட்டம். என்ன இது புதுக் கதையாக இருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.
1970-ஆம் ஆண்டுகளில் சுங்கை பூலோ தோட்டத்தில் வசித்து வந்த தமிழ்ப் பெண்மணி தான் லெட்சுமி. அந்தத் தோட்டத்தில் அப்போது அவரைப் பெரும்பாலோர் அழகி என்று அழைப்பார்களாம்.
அப்போதும் இப்போதும் அழகி போலும். வாழ்த்துவோம். இவரைப் பற்றி பின்னர் பார்ப்போம். 1900-ஆம் ஆண்டுகளில் சுங்கை பூலோ தோட்டம் அழகிய ஒரு ரப்பர் தோட்டம். ஆயிரக் கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரலாறு படைத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அந்தத் தோட்டம் பல சரித்திர நிகழ்ச்சிகளையும் படைத்து இருக்கிறது.
அந்தத் தோட்டத்தில் எலிசபெத் மகாராணியார் பால் மரம் சீவி மலேசிய மக்களையே அசத்தி இருக்கிறார். மலேசிய மக்கள் மட்டும் அல்ல. உலகமே அதிசயமாய்ப் பார்த்தது. இது பலருக்கும் தெரியாத செய்தியாக இருக்கலாம்.
இது இன்று நேற்று நடந்த செய்திக் கதை அல்ல. 48 வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை. இப்போதைய பெரியவர்கள் பலரின் நினைவிற்கு வரலாம்.
மகாராணியாரின் மகள் அன்னி
1972 பிப்ரவரி 25-ஆம் தேதி நடந்தது. அந்தச் செய்தியை உலக நாளிதழ்களும் பெரிய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டின. உலகமே மலேசியாவை மூன்றாவது முறையாகத் திரும்பிப் பார்த்தது. முதன்முறையாக 1957-ஆம் ஆண்டில் மலாயா சுந்திரம் அடைந்த போது ஒரு முறை. 1969-ஆம் ஆண்டில் நடந்த துர்நிகழ்ச்சியின் போது ஒரு முறை. அடுத்து எலிசபெத் மகாராணியார் பால் மரம் சீவிய போது உலக வரைப்படத்தில் மலேசியாவைத் தேடிப் பார்த்த போது...
இதில் ஒரு பெரிய கிளைமாக்ஸ் என்ன தெரியுங்களா. எலிசபெத் மகாராணியார் பால் மரம் சீவிய போது உளியை லாவகமாகப் பிடிக்கத் தெரியாமல் தடுமாறி இருக்கிறார்.
அப்போது அவர்களின் கைகளைப் பிடித்த லெட்சுமி, மகாராணியாருக்கு ஓர் ஆசானாக உதவி செய்து இருக்கிறார்.
டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர்
மலாயாவில் காடுகளுக்கு பதிலாகக் கித்தா காடுகளை உருவாக்கித் தந்தவர்கள் தென்னிந்தியர்கள். சித்திர குப்தருக்கே தெரிந்த விசயம். அதனால் அவர்களை இங்கிலாந்து மக்கள் மறக்கவில்லை போலும்... எப்படி மறக்க முடியும். அவர்களின் வியர்வை இரத்தத்தில் வடிந்த கித்தா பாலை எப்படிங்க மறக்க முடியும். கொஞ்சமாவது நன்றி இருக்கும்ல...
இருப்பினும் அந்த நிகழ்ச்சியை எலிசபெத் மகாராணியாரும் மறக்க மாட்டார். அவருடன் வந்த அவரின் கணவர் இளவரசர் பிலிப் (Prince Philip, Duke of Edinburgh) அவர்களும் மறக்க மாட்டார். அவர்களின் மகள் இளவரசி அன்னி (Princess Anne) அவர்களும் மறக்க மாட்டார்.
அந்த நன்றிக் கடனைத் தீர்ப்பதற்காக எலிசபெத் மகாராணியாருக்கு உதவி செய்ய ஒரு தமிழ்ப் பெண்ணை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
தாய்லாந்து அரசர் பூமிபோல்
லெட்சுமியின் தந்தையார் பெயர் வைதீ. நெகிரி செம்பிலான் தம்பின் பகுதியில் பிறந்தவர். பின்னர் மலாக்கா ரீஜண்ட் தோட்டத்தில் வளர்ந்தவர். அங்கே ரீஜண்ட் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு படித்தார். பின்னர் அவருடைய குடும்பம் மாற்றாலாகி பெக்கோ, புலாவ் செபாங் வந்தது. அப்போது லெட்சுமிக்கு வயது எட்டு. அலோர்காஜா தமிழ்ப்பள்ளியில் சேர்ந்து ஆறாம் வகுப்பு வரை படித்து இடைநிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பின்னர் சுங்கை பூலோ தோட்டத்தைச் சேர்ந்த இராமசாமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சுங்கை பூலோவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
இவருக்கு நான்கு பிள்ளைகள். இரு ஆண்கள். இரு பெண்கள். பேரப் பிள்ளைகள் எண்மர். இப்போது பத்துமலை பகுதியில் வாழ்ந்து வருகிறார்.
தொலைபேசியில் பேசும் போது பொறுமையாக அமைதியாகப் பேசினார். சொற்களை நிதானமாக அளந்து வைக்கிறார்.
உலக மக்கள் எலிசபெத் மகாராணியாரிடம் நெருங்கிப் பேச முடியாது. அவரைத் தொடவும் முடியாது. ஆனால் லெட்சுமிக்கு விதிவிலக்கு. மகாராணியாரின் அருகிலேயே நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாக ஆசிரியர் வேலை செய்து இருக்கிறார்.
அவருக்கு மட்டும் அல்ல. மகாராணியாரின் மகள் அன்னியும் பால் மரம் சீவி இருக்கிறார். அவருக்கும் செல்ட்சுமி சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.
எலிசபெத் மகாராணியார் மட்டும் அல்ல. தாய்லாந்து அரசர் பூமிபோல் (Bhumibol); ஜப்பானிய அரசர் ஹிரோஹித்தோ; அமெரிக்க துணை அதிபர் ஸ்பிரோ அக்னிவ் (Spiro Theodore Agnew); அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் (1970) போன்ற பிரபலங்களும் சுங்கை பூலோவிற்கு வந்து இருக்கிறார்கள். லெட்சுமியிடம் பால் மரம் சீவும் முறையைத் தெரிந்து கொண்டு போய் இருக்கிறார்கள்.
நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் அன்பளிப்பு
ஒரு முறை நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சிறிய நிலவுக் கல்; லெட்சுமிக்கு நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் அன்பளிப்பு செய்து இருக்கிறார். ஆனால் அதை ஆர்.ஆர்.ஐ. இயக்குநர் டான்ஸ்ரீ சேகர் பணிவுடன் மறுத்து விட்டார். அதற்குப் பதிலாக அழகிய தங்கப் பேனா லெட்சுமிக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது. உலகின் 100-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் லெட்சுமியிடம் பால் மரம் சீவும் கலையைத் தெரிந்து கொண்டு போய் இருக்கிறார்கள். உண்மையிலேயே இது ஒரு வரலாற்றுப் பதிவு என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் பிரபலங்களில் லெட்சுமியின் வீட்டிற்கே வந்தவர் ஜப்பானிய மன்னர் ஹீரோஹித்தோ. பால் சேகரிக்கும் கொட்டகையில் லெட்சுமி இருக்கும் போது, ஜப்பானிய மன்னர் அங்கேயே வந்து விட்டார். பின்னர் லெட்சுமியின் வீட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.
லெட்சுமி தடுமாறிப் போனார். பள்ளி விடுமுறை. வீட்டில் பிள்ளைகள் படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கலாம். வீடும் அலங்கோலமாக இருக்கலாம். மன்னரிடம் முடியாது என்று சொல்ல முடியுமா.
அரக்க பரக்க வீட்டிற்கு ஓடி வந்து இருக்கிறார். பிள்ளைகளைத் தயார் படுத்திக் கொண்டு இருக்கும் போது ஜப்பானிய மன்னரும் ஜப்பானிய ராணியாரும் வந்து விட்டார்கள்.
ஜப்பானிய மன்னர் ஹீரோஹித்தோ
என்ன செய்வது. லெட்சுமிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வாங்க வாங்க என்று வாசல் படியில் நின்று வரவேற்க… பிள்ளைகளும் கை எடுத்துக் கும்பிட… நீங்களே ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள். அரச தம்பதியினர் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். வீட்டில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு மன்னர் தம்பதிகளை உட்கார வைத்து இருக்கிறார்.
அதற்குள் அவருடைய தம்பி பக்கத்தில் உள்ள கடைக்கு ஓடிப் போய் ஆரஞ்சு பாக்கெட் குடிபானம் வாங்கி வந்து விட்டார். அதைக் கொடுத்து மன்னரைக் குளுமைப் படுத்தி இருக்கிறார்கள்.
அதோடு மன்னர் விடவில்லை. நேராகக் குசினிக்கே போய் எப்படி சமைக்கிறீர்கள் என்று கேட்டு அடுப்பு விறகை ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார். அப்போதுதான் கேஸ் அடுப்புகள் இல்லையே. வீட்டுச் சமையல் பாத்திரங்களை எல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்து இருக்கிறார்கள். ஜப்பானிய அரசியாரும் தான்.
பின்னர் துணி எப்படி காயப் போடுகிறார்கள் என்பதையும் பார்த்து மன்னரும் துவைத்த துணிகளைக் காயப் போட்டு இருக்கிறார்.
ஜப்பானிய மன்னருக்கு லெட்சுமி ஓர் உளியை அன்பளிப்புச் செய்தார். ஜப்பானிய மன்னர் ஒரு தங்கப் பேனாவை அன்பளிப்பு செய்து இருக்கிறார்.
இவ்வளவு பேரும் புகழும் பெற்ற லெட்சுமி குடியுரிமை இல்லாமல் தான் பல காலம் வாழ்ந்து இருக்கிறார். இவர் பிறந்தது மலேசியாவில்... ஆனாலும் குடியிரிமை கிடைப்பதில் தடை தடங்கல்கள். இருபது ஆண்டு காலமாக குடியுரிமை இல்லாமல் இருந்து இருக்கிறார்.
இவருக்கு குடியுரிமை கிடைக்கப் பெரும் உதவி செய்த பெரிய மனிதர் யார் தெரியுங்களா. அவர் தான் மலேசியச் சமூகச் செம்மல் டான்ஸ்ரீ உபைதுல்லா.
குடியுரிமை அலுவலகத்திற்கு லெட்சுமியைத் தன் உதவியாளர்களுடன் அனுப்பி வைத்து அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்.
சமூக நாயகர் டான்ஸ்ரீ உபைதுல்லா அவர்களை லெட்சுமி மறக்கவில்லை. மலேசிய இந்தியர்களும் மறக்க மாட்டார்கள். வாழ்க டான்ஸ்ரீ உபைதுல்லா.
எலிசபெத் மகாராணியாரின் நிழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தவர் டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் (B.C.Sekhar). மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர்; முதல் இந்தியர்; முதல் ஆசிய நாட்டவர்.
மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வியூகத்திற்கு மாற்றியவர். நவீன இயற்கை ரப்பர் துறை; செம்பனைத் துறை; இவற்றின் தந்தை என்று போற்றப் படுகிறவர்.
மலேசியாவின் ரப்பர், செம்பனைத் தொழில்களின் தந்தையாகப் புகழப்படும் பி.சி.சேகர், இயற்கை ரப்பர் தொழில் துறையில் பெரிய பெரிய புரட்சிகளைச் செய்தவர். அந்தத் துறைகளையே ஒட்டு மொத்தமாக நவீனப் படுத்தியவர்.
மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை (Rubber Research Institute of Malaysia) உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தவர்.
ரப்பர் மரம் என்று சொல்லும் போதும்; ரப்பர் மரத்தின் வரலாற்றைச் சொல்லும் போதும்; பெருமகனார் பி.சி. சேகர் என்று சொல்லும் போதும்; மனசிற்குள் சின்ன ஓர் ஆதங்கம்.
காளான்கள் தெரியும் தானே. நல்ல காளான்களும் இருக்கின்றன. விசக் காளன்களும் இருக்கின்றன. அவற்றில் நேற்று முளைத்த காளான்களும் இருக்கின்றன. அந்தக் காளான்களில் நன்றி மறந்த காளான்களும் இருக்கவே செய்கின்றன. அவை எல்லாம் ஏர்கான் அறையில் நெற்றி வியர்வையைப் பார்க்காத காளான்கள். அதனால் அந்தக் காளான்கள் வரலாற்றில் தடம் பதிக்கப் போவது இல்லை.
ஆனால்... தென்னிந்தியர்கள் சிந்திய செந்நீரைப் பார்த்து வரலாறே கண்ணீர் சிந்தி அழுகிறது. அதனால் தான் இவர்கள் வரலாற்றில் தடம் பதிக்கிறார்கள். வரலாறு என்றைக்கும் தென்னிந்தியர்களை மறக்காது. மறக்கவே மறக்காது.
அந்தத் தமிழர்களின் வரிசையில் லெட்சுமி போன்ற உண்மைக் கூறுகளையும் மலேசியத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். மலேசிய வரலாறும் மறக்காது.
சுங்கை பூலோ லெட்சுமி அவர்களைப் பேட்டி எடுப்பதற்கு உதவி செய்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்களில்...
1. தொண்டர் மணி திருமதி கமலாட்சி ஆறுமுகம்;
2. சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை பற்றிய தகவல்களைத் தந்து உதவிய தமிழார்வலர் கரு. ராஜா;
3. அழைப்புச் செய்யும் போது எல்லாம் சலிக்காமல் தகவல்கள் வழங்கிய லெட்சுமியின் துணைவர் இராமசாமி;
4. படங்களை அனுப்பி வைத்த லெட்சுமியின் மகன் மருமகன்கள்; அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.05.2020
Appreciate your numerous fruitful
பதிலளிநீக்குtamil articles. Congratulations
Thank you. My hope is all these
materials gets in book form. Also
in English as present day youths are mostly less versed/literate in
Tamil.
Thanks and wish you all the best in all your endeavours.
From a 80 year old.
Appreciate your numerous fruitful
பதிலளிநீக்குtamil articles. Congratulations
Thank you. My hope is all these
materials gets in book form. Also
in English as present day youths are mostly less versed/literate in
Tamil.
Thanks and wish you all the best in all your endeavours.
From a 80 year old.