09 மே 2020

குவாதலூப்பு தமிழர்கள்

தமிழ் மலர் - 06.05.2020

குவாதலூப்பு (Guadeloupe) எனும் பெயரில் ஒரு நாடு இருப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தென் அமெரிக்காவின் வெனிசூலா நாட்டுக்கு வடக்கே 500 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு நாடு. அருகாமையில் ஜமாய்க்கா, கியூபா, ஹாயித்தி நாடுகள். 




மிக அருகாமையில் மர்த்தினிக் தீவு (Martinique) இருக்கிறது. இந்தத் தீவிலும் ஏறக்குறைய 15,000 தமிழர்கள் இருக்கிறார்கள்.

குவாதலூப்பு தீவு, நீல நிறக் கரிபியன் கடல் பகுதியில் அழகிய ஒரு தீவு. தன்னந்தனியான ஒரு குட்டி நாடு. ஆனாலும் அது ஒரு தீவு. பச்சைப் பசேல காட்டுத் தீவு. மலேசியாவில் இருந்து 17,095 கி.மீ. தொலைவு. இந்தியாவில் இருந்து 14,059 கி.மீ. பறந்து போனாலும் 20 மணி நேரம் பிடிக்கலாம்.

மலாக்கா மாநிலத்தைவிட சின்னது. பரப்பளவு 1,628 சதுர கி.மீ. பிரெஞ்சு மொழி அதன் தேசிய மொழி.




அந்தத் தீவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழன் இல்லாத நாடு இல்லை என்பார்கள். உண்மைதான். 1860-ஆம் ஆண்டுகளில் அங்கு உள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு செல்லப் பட்டார்கள். சொகுசுக் கப்பலில் போன பயணம் எல்லாம் ஒன்றும் கிடையாது. கட்டுச் சோறு; புளிச் சாதம் கட்டிக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளைக் கொண்டு போனார்களே அந்த மாதிரி தான். தமிழர்களை குவாதலூப்பு தீவிற்குக் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறார்கள். 




ஆனால் என்ன… ஆப்பிரிக்கா அப்பாவிகளைக் கயிறு போட்டுக் கட்டி... தோலை உரித்து… காயப் போட்டுக் கொண்டு போனார்கள். இவர்களைக் கயிறு போட்டுக் கட்டாமல் சவுக்கடிக் கயிற்றைக் காட்டிக் கொண்டே கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். சின்ன வித்தியாசம் தான்.

காரைக்கால், மெட்ராஸ் (Madras Presidency), பாண்டிச்சேரி, கும்பகோணம் பகுதிகளில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். இரண்டரை மாதம் கப்பல் பயணம். 




1852-ஆம் ஆண்டில் இருந்து 1882-ஆம் ஆண்டு வரை முப்பது ஆண்டுகளில் 45,000 பேரைக் கொண்டு போய் இருக்கிறார்கள். அவர்களில் 21,984 பேர் தமிழர்கள். கடல் பயணத்தின் போது 3000 பேருக்கும் மேல் நோய்வாய்ப்பட்டு இறந்து இருக்கிறார்கள். ஆனால் கணக்கு காட்டப் படவில்லை. கடலில் தூக்கி வீசப்பட்ட தமிழர்களின் கணக்கு எப்படி வரும்? கணக்கு கடலோடு கரைந்து போய் இருக்கலாம்.

எடுத்துக் காட்டாக ஒரு கப்பலின் பயணத் தகவல். கப்பலின் பெயர் ஹெம்ப்டன் (Hampden). 1866 செப்டம்பர் 22-ஆம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து 570 பேருடன் புறப்பட்டது. 




அதில் ஆண்கள் 440 பேர். பெண்கள் 81 பேர். குழந்தைகள் 36 பேர். அந்தக் கப்பல் 1856 டிசம்பர் 11-ஆம் தேதி குவாதலூப்பு தீவை அடைந்தது. 80 நாட்கள் கடல் பயணம். தீவை அடைந்த போது கப்பலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 549-ஆக குறைந்து இருந்தது. ஆக 21 பேர் இறந்து விட்டார்கள்.

இது ஒரு பயணத்தின் போது நடந்த இறப்புகள். முப்பது ஆண்டுகளுக்கு 45,000 பேர் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆக எத்தனை பேர் இறந்து இருப்பார்கள் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கொண்டு செல்லப் பட்டவர்களில் ஆண்களின் வயது 16 - 36. பெண்களின் வயது 14 - 30. பத்து வயதிற்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் கொண்டு செல்லப் படவில்லை.




கப்பல்களில் தமிழர்களை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தன. அவர்களுக்குள் சண்டை சர்ச்சைகள் ஏற்பட்டால் அவர்களைக் கையாள்வதற்கு மொழிபெயர்ப்பாளர்களும் இருந்தார்கள்.

ஆனாலும் இந்தப் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தையும் மீறிய நிகழ்ச்சிகளும் நடக்கவே செய்தன. பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது; அதைப் பார்த்து ஆத்திரம் அடையும் ஆண்களுக்குக் கொடூரமான தண்டனைகள் கொடுப்பது; இவை போன்ற விதிமுறை மீறல்கள் நடந்து உள்ளன.

இந்தப் பக்கம் பாருங்கள். 1890 - 1900-களில் தமிழ்நாட்டில் இருந்து மலாயாவுக்கு கப்பலில் வர பத்து பதினைந்து நாட்கள் பிடிக்கும். அந்தக் குறுகிய காலப் பயணத்திலேயே பாலியல் துஷ்பிரயோகங்கள் நிறையவே நடந்து உள்ளன. எதிர்த்து நின்ற கணவன்மார்கள் காணாமல் போன கதைகளும் உள்ளன. 




என்ன நடந்து இருக்கும். கற்பனை செய்து கொள்ளுங்கள். என்னைக் கேட்டால் ஒரே பதில். அந்த உரிமைக்குரல் நாயகர்கள் உப்புக் கடலில் தூக்கி வீசப்பட்டு இருப்பார்கள்.

குவாதலூப்பு தீவில் ஐந்து ஆண்டுகளுக்கு வேலை ஒப்பந்தங்கள். அதன் பிறகு புதுப்பிக்கப் படலாம். 10 ஆண்டுகள் வேலை செய்த பிறகு அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லலாம். ஆனால் அதை நிரூபிக்க ஆவணங்கள் தேவை. ஆவணங்கள் இல்லாமல் திரும்பிப் போக முடியாது.

சில இடங்களில் தமிழர்களின் குடியேற்ற ஆவணங்களைத் தோட்ட முதலாளிகள் வைத்து இருந்தார்கள். சமயம் பார்த்து அந்த ஆவணங்களை எரித்து விடுவார்கள். 




கேட்டால் ஆபீசில் நெருப்புப் பிடித்துக் கொண்டது என்று சொல்லித் தப்பித்துக் கொள்வார்கள். அதனால் பல ஆயிரம் தமிழர்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப முடியாமலேயே போய் விட்டது.

குவாதலூப்பு தீவிற்குச் சென்று சேர்ந்ததும் கண்ணக் கட்டி காட்டில் விட்ட மாதிரி தடுமாறிப் போய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் வாழ்ந்தவர்களுக்கு கடல் வளாகம் ஒத்து வரவில்லை. என்ன செய்வது. கையைக் காட்டி கைநாட்டு போட்டாச்சே. பேஜார் பண்ண முடியாதே.

ஏற்கனவே அந்தத் தீவில் வெள்ளைத் தோல் காலனித்துவ குடியேறிகள் இருந்தார்கள். கலப்பு இன மக்களும் இருந்தார்கள். தவிர ஆயிரக் கணக்கில் விடுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளும் இருந்தார்கள். சரி.




1830-ஆம் ஆண்டுகளில் குவாதலூப்பு தீவிற்குப் பக்கத்தில் இருந்த மர்த்தினிக் தீவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.

ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்க அடிமைகள் அங்கு இருந்த கரும்புத் தோட்டங்களை விட்டு வெளியேறினார்கள். அதனால் கரும்புத் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது.

விடுதலையான ஆப்பிரிக்க அடிமைகள் தங்களைச் சுதந்திரப் பறவைகளாக நினைத்துக் கொண்டார்கள். அந்தத் தீவின் கோமகன்கள் போல ஆட்டம் பாடமாய் உலா வந்தார்கள். புதிதாக வந்த தமிழர்களுக்கு அந்த ஆப்பிரிக்க அடிமைகள் எஜமானர்கள் போல கட்டளை போட்டார்கள். காலம் செய்த கோலத்தைக் கவனியுங்கள்.  




இருந்தாலும் அந்த அராஜகம் ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை. தமிழர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். கட்ட பொம்மன் பரம்பரைக்குச் சொல்லியா தர வேண்டும். எந்த நாட்டுக்குப் போனாலும் வீரவசனம் பேசியே சமாளித்து விடுவார்கள்.

இப்ப மட்டும் என்னவாம். சிலர் சீரியல்களைப் பார்த்துப் பார்த்து ரொம்பவுமே சீரியஸாகி, பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்து விட்டார்கள். சரி. வீண் பொல்லாப்பு வேண்டாம். நம்ப கதைக்கு வருவோம்.

மூன்று வெவ்வேறு இனத்தவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இடத்தில் தமிழர்களும் வாழ வேண்டிய கட்டாய நிலைமை. தமிழர்கள் அங்கே வந்தவுடன் மற்ற இனத்தவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ வலியுறுத்தப் பட்டார்கள். 




அதனால் அவர்கள் தங்களின் பாரம்பரிய உடைகள்; மரபுகளைக் கைவிட வேண்டிய நிலைமை. அதில் தங்களின் தாய்மொழியைக் கைவிட்டது தான் மிகப் பெரும் இழப்பு. அதனால் பாருங்கள். இன்று குவாதலூப்பு தீவில் ஒரு சில தமிழ் மொழி பேசும் தமிழர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் வயதானவர்கள். இளைஞர்கள் தமிழ் பேசுவது குறைவு.

1905-ஆம் ஆண்டில், பிரான்ஸ் ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்தியது. அதன் மூலம் குவாதலூப்பு தீவு பிரான்ஸ் நாட்டின் காலனியாக மாறியது. கத்தோலிக்க மதம் குவாதலூப்பு அரசு மதமாக மாறியது.

இந்து விழாக்கள் தடை செய்யப் பட்டன. இந்துத் திருமணங்கள் அங்கீகரிக்கப் படுவது நிறுத்தப் பட்டது. அதனால் தமிழர்கள் சிலர் கத்தோலிக்கர்களாக மதம் மாறினர். இவையே குவாதலூப்பு தமிழர்களின் அசல் கலாசார நடைமுறைகளுக்கு அடுத்து அடுத்து விழுந்த சாட்டை அடிகள். 




1946-ஆம் ஆண்டில், பிரெஞ்சு கரீபியன் தீவுகள் பிரான்ஸ் நாட்டின் மாநிலங்களாக மாறின. குவாதலூப்பு தீவின் கல்வி முறை ஐரோப்பிய முறைக்கு ஏற்றவாறு கொண்டு வரப்பட்டது. அது ஆப்பிரிக்கர்; தமிழர் மரபுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களுக்கு ஆப்பிரிக்கச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்றும் இருக்கிறது. அதனால் தமிழர்கள் தங்களின் தனித்துவமான அடையாளத்தையும் கலாசார நடைமுறைகளையும் பாதுகாக்க பல சங்கங்களைத் தோற்றுவித்து இருக்கிறார்கள்.

ஆங்காங்கே முருகன், மாரியம்மன், விநாயகர் கோயில்களையும் கட்டி இருக்கிறார்கள். ஆனாலும் அந்தக் கோயில்களில் ஆப்பிரிக்கச் சமூகத்தவர்கள் மட்டும் நுழைய முடியாது. தடை விதிக்கப் படுகிறது. அந்த அளவிற்கு ஆப்பிரிக்கச் சமூகத்தினர் மீது தமிழர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது.




அப்புறம் என்ங்கன. அடிமைகளாக இருந்து விடுதலையானதும் மகாராஜா மாதிரி தமிழர்களை அராஜகம் செய்தவர்கள் ஆயிற்றே. அந்தப் பழைய கசப்பு உரைப்புகளைக் குவாதலூப்பு தமிழர்களால் மறக்க முடியவில்லை.

குவாதலூப்பு தமிழர்களுக்கு ஐரோப்பியர்களுடன் தான் நெருக்கமான உறவுகள். இன்றும் தொடர்கின்றன. தமிழ் இளைஞர்கள் நிறைய பேர் பாரிஸுக்குப் படிக்கப் போய் அங்கே பிரெஞ்சுப் பெண்களைத் திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆப்பிரிக்கர்களுடன் சகவாசங்கள் குறைவு.

இருப்பினும் இந்திய அடையாளத்தின் மீதான ஆர்வம் அவர்களுக்கு எப்போதும் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் ரொம்பவுமே விழிப்புணர்வு பெற்று விட்டனர். தங்களின் பூர்வீகத்தைத் தெரிந்து கொள்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.




இந்தியர்களில் கணிசமான எண்ணிகையினர் வணிகம்; அரசாங்க சிவில் துறை; அறிவுசார் உயர்த் துறைகளில் முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர்.

குவாதலூப்பு தமிழர்களில் ஹென்றி சிதம்பரம் (Henry Siddamborom) பிரபலமானவர். அந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 1904-ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கத்தின் மீதே வழக்கு தொடர்ந்தார். குவாதலூப்பு தமிழர்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் குடியுரிமை வழங்க வேண்டும் எனும் வழக்கு.

அந்த வழக்கு 20 ஆண்டுகள் நீடித்தது. தீர்ப்பு அவருக்குச் சாதமாக அமைந்தது. குவாதலூப்பு தீவில் இருந்த இந்தியர்கள் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப் பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஹென்றி சிதம்பரம் நினைவாக விழா கொண்டாடப் படுகிறது. இவர் "குவாதலூப்பு காந்தி" என்றும் புகழப் படுகிறார்.

இவருக்குப் பிரெஞ்சு அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமை செய்து உள்ளது.

மலாயாவில் தமிழர்கள் எப்படி காட்டை அழித்து நாட்டைக் காட்டினார்களோ, அதே போலத் தான் குவாதலூப்பு தமிழர்களும் காடுகளை அழித்துக் கரும்புத் தோட்டங்களை நட்டுக் காட்டினார்கள்.




இப்போது அந்தத் தீவில் பெரிய ஒரு தமிழ்ச் சமூகமாக மாறி விட்டார்கள். குவாதலூப்பின் இப்போதைய மக்கள் தொகை 395,000. இவர்களில் 15 விழுக்காட்டினர் தமிழர்கள்.

நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். குவாதலூப்பு தமிழர்களிடம் தமிழர் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் இன்றும் உள்ளன. மாரியம்மன் வழிபாடு, பொங்கல் விழா, தெருக்கூத்து, தைப்பூசம் போன்ற தமிழர்களின் அடையாளங்கள் உள்ளன. ஆனால் தமிழ் மட்டும் தான் இல்லை.

அங்குள்ள தமிழர்களின் பெயர்களும் பிரெஞ்சு; கிரியோல் மொழிகளுக்கு ஏற்றவாறு மாறி விட்டன. முத்து (Moutou); (முத்துசாமி (Moutoussamy); சக்கரபாணி (Sacarabany); பாவாடை (Pavade); கறுப்பன் (Caroupin); ரங்கன் (Rangon); வள்ளியம்மாள் (Vaillammal); வேலாயி (Velaye) வீரப்பன் (Virapin); சுபராயன் (Subarayan); சுப்பம்மா (Soupama) என்று மாறி விட்டன.

தமிழ் அழிந்து விடுமோ என்று அங்குள்ள மூத்தவர்கள் கவலை கொள்கிறார்கள். ஏன் தெரியுங்களா. குவாதலூப்பு தீவில் இப்போது ஏறக்குறைய 100 பேர் தான் தமிழ் பேசுகிறார்கள்.

தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை.

சான்றுகள்:

1. https://www.newsgram.com/indian-diaspora-in-guadeloupe

2. http://muelangovan.blogspot.com/2014/07/mr-jacques-sidambarom.html

3. https://www.indiaabroad.com/opinion/the-tamils-of-guadeloupe-more-french-than-indian/article_df32bd26-3fa3-11e9-87e9-c39cd4c198c1.html

4. https://ta.wikipedia.org/s/71ix - குவாதலூப்பு

1 கருத்து: