மனிதர்களைப் போல பாம்புகளால் ஆட முடியுமா? முடியும். நிச்சயமாகப் பாம்புகளால் ஆட முடியும். ஆனால் மனிதர்களைப் போல தில்லாலங்கடி பாடல்களைக் ’கேட்டு’ கதகளி நாட்டியம் ஆட முடியாது. ஏன் என்றால் அவற்றுக்கு காதுகள் இல்லை.
சரி. பாம்புக்கு காதுகள் இல்லை என்றால் அப்புறம் எப்படி மகுடி இசைக்கு மட்டும் படம் எடுத்து ஆடுகிறது என்று கேட்கலாம். நல்ல கேள்வி. இசைக்கு ஏற்றவாறு பாம்பு ஆடவில்லை. மகுடி ஊதுகிறானே அவனுடைய அசைவிற்கு ஏற்றவாறு தான் பாம்பு ஆடுகிறது. அவ்வளவுதான். அடுத்து இன்னொரு விசயம்.
ஓர் அறிவியல் உண்மையைத் தெரிந்து கொள்வோமே. பாம்பினால் அழவும் முடியாது. மூக்கைச் சிந்தவும் முடியாது. அதற்குக் காரணம் பாம்புகள் சீரியஸாக சீரியல்கள் பார்ப்பது இல்லை என்று சொல்ல வரவில்லை.
பாம்புகளின் உடல் அமைப்பே அப்படித்தான் என்று சொல்ல வருகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விசயத்திற்கு வருகிறேன்.
அடடடா... சொந்த பந்தங்களுக்கு இல்லாத பாசமா என்று பலரும் விக்கித்துப் போனார்கள். என்னையும் சேர்த்துத் தான்.
வேதனைகளும் சோதனைகளும் எல்லைகள் கடந்து போகும் போது அழுகையும் தானாகப் பெருகி வரும். உலகில் உள்ள எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் அழுகை வரும். அழுகை என்பது உயிரினங்களுக்கு இயற்கை வழங்கிய வரப்பிரசாதம். சரி. பாம்பு கண்ணீர் விட்டு அழுமா?
அதற்கு முன்னர் பாம்பைப் பற்றி தமிழில் நிறைய பழமொழிகள் உள்ளன. அவற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
2. பாம்புக்கு மருந்து கேட்கத் தேளுக்குப் மந்திரித்தது போல.
3. பாம்புக்கு மூப்பு இல்லை.
4. பாம்புக்கு ராஜா மூங்கில் தடி.
5. பாம்புக்கு விசம் பல்லிலே.
6. பாம்பு கடித்தாலும் பிழைக்கலாம்; பாக்குக் கடித்தால் பிழைக்க முடியாது.
7. பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடுமுறி நமக்கு வேண்டும்.
8. பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலே சாவு.
9. பாம்பு பகையும் தோல் உறவுமா?
10. பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும்.
11. பாம்பு படம் விரித்து ஆடியது; நாங்கூழ்ப் பூச்சியும் தலைதூக்கி ஆடியது.
12. பாம்பும் தப்பாமல் கொம்பும் முறியாமல்.
13. பாம்பும் போச்சு; பாம்பு அடித்த கோலும் போச்சு.
14. பாம்பை அடித்தால் பால் வார்த்துப் புதைக்க வேண்டும்.
15. பாம்பு என்றால் படையும் நடுங்கும்
16. பாம்பின் கால் பாம்பு அறியும்
17. பாம்பு என்று தாண்டுவதா; பழுது என்று மிதிப்பதா?
(சான்று: https://ta.wikisource.org/s/36h4 - தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/208)
பாம்பு ஓர் உயிரினம். அந்த உயிரினத்தில் 3,600 வகைகள் உள்ளன. அதாவது உலகில் அவ்வளவு பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 600 இனங்கள் நச்சுப் பாம்புகள். ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை ரொம்பவுமே விசம் கொண்டவை.
நச்சுப் பாம்புகளில் சில பாம்புகள் நம்மைக் கடித்தால், அதன் நஞ்சு முதலில் நம்முடைய நரம்பு மண்டலத்தைத் தான் தாக்குகின்றது. நாகப் பாம்பு, பவளப் பாம்பு, கட்டுவிரியன் போன்றவை அப்படிப்பட்ட பாம்புகளாகும்.
சில பாம்புகளின் நஞ்சு மற்ற உயிரினங்களின் இரத்தக் குழாய்களையும்; இரத்த அணுக்களையும் தாக்கி அழிக்கின்றது. இரத்தம் உறைந்து போவதையும் நிறுத்துகின்றது. கண்ணாடி விரியன் பாம்பு அந்த வகையைச் சேர்ந்தது.
இன்னும் ஓர் அதிசயமான தகவல். சில விரியன் பாம்புகள் முட்டை இடுவது இல்லை. குட்டி போடுகின்றன.
பாம்புகளில் குருட்டுப் பாம்பு எனும் ஒரு வகை உள்ளது. அந்தக் குருட்டுப் பாம்புகளில் ஆண்கள் இனமே இல்லை. நல்லதா போச்சு என்று அந்தப் பாம்புகள் ஆண் துணை இல்லாமல், தானாக சொந்தமாவே கருவடைந்து கொள்கின்றன.
இன்னும் ஒரு செய்தி. பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தால் பாம்பு வீட்டுக்கு வராது. இது காலாவதியான ஓர் ஐதீகம். மன்னிக்கவும். புற்றில் ஊற்றுகிற பாலைப் பாம்பு குடிக்காது. அந்த மாதிரி முட்டையையும் சாப்பிடாது.
அப்புறம் எப்படிங்க. ஒன்றுமே புரியவில்லை. இதைச் சொல்லப் போய் கெட்ட பெயர் வேண்டாமே. ஏற்கனவே ஒரு சமுதாய விழுப்புணர்வுக் கருத்தைச் சொல்லப் போய் குடிகாரன், பொறுக்கி, திருடன் என்கிற பட்டப் பெயர்கள். புந்தோங் பொக்கை வாய்ச்சாமி இப்படித்தான் புலம்புகிறார். நம்ப விசயத்திற்கு வருவோம்.
பாம்புகள் அழுவது இல்லை. அழவும் முடியாது. அவற்றுக்கு அதற்கான உடற்கூறியல் (anatomy) அமைப்பு இல்லை. அதாவது அதன் உடல் அமைப்பு கண்ணீர் சிந்துவதற்கு ஏற்றவாறு அமையவில்லை.
மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் இருப்பது போல பாம்புகளுக்கு அவற்றின் கண்களில் கண்ணீர் குழாய்கள் இல்லை. அதாவது கண்ணீர் நரம்பிழைகள் (tear ducts) இல்லை. அதனால் பாம்பிற்குக் கண்ணீர் வராது.
பாம்புக்கு உடல் முழுக்கச் செதில்கள் சின்னதும் பெரியதுமாக இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அதே போல அதன் கண்களிலும் செதில்கள் உள்ளன. அதாவது கண்களுக்கு மேல் கண்ணாடி போன்ற வெளிப்படையான செதில்கள். அதனால் பாம்பிற்குக் கண்ணீர் வராது.
இன்னும் ஒரு விசயம். பாம்புகளுக்கு கண் இமைகள் இல்லை. எனவே அவை கண்களை மூடவும் முடியாது. கண்களைச் சிமிட்டவும் முடியாது. கண் அடிக்கவும் முடியாது.
கண் இமைகளுக்குப் பதிலாக மெல்லிய ஜவ்வுப் பொருள் அவற்றின் கண்விழிப் படலத்தை மூடி இருக்கும்.
அதற்கு கண்ணாடி (brilles) என்று பெயர். பாம்பின் அந்த மெல்லிய ஜவ்வுப் பொருள், அதன் கண்விழிப் படலத்தை எப்போதும் மூடி இருக்கும். அத்துடன் தலைப் பாகத்தில் உள்ள தோலுடனும் அந்த மெல்லிய ஜவ்வுப் பொருள் இணைக்கப்பட்டு ஒட்டி இருக்கும்.
அதனால் தான் பாம்புகள் அவற்றின் கண்களை மூடவே முடியாது.
ஆனாலும் அதன் கண்ணுக்கு உள்ளே இருக்கும் கண்விழித் திரைகளை மட்டுமே மூட முடியும். கண்விழித் திரைகள் மூடி இருந்தாலும் அதன் கண்கள் திறந்த வாக்கிலேயே தான் திறந்து இருக்கும். கண்கள் திறந்த வாக்கிலேயே தான் பாம்பு தூங்கும்.
பாம்பு கண்விழித் திரையை அடிப்படையாகக் கொண்டு கண்ணாடி வில்லை (contact-lens) தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள். சிறந்த ’காண்டாக்ட் லென்ஸ்’களை உருவாக்கலாம் என்றும் சொல்கிறார்கள். பாம்பின் கண்களைத் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
கண்களை மூடாமல் எப்படி தூங்குவது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு மருத்துவப் புரட்சி செய்தாலும் செய்யலாம். சொல்ல முடியாது.
ஆக மனிதனுக்கு மட்டும் அழுகை வரலாம். மற்ற ஜீவராசிகளுக்கு வரக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. ஆக பாம்புக்கும் அழுகை வரலாம். ஆனால் கண்ணீர் வராது.
ஆறுதல் தேட ஆள் இல்லை. தோள் சாய்க்க தோழன் இல்லை. அழுது தொலைக்க மடி இல்லை. முட்டையும் இல்லை. பாலும் இல்லை. பாம்பாட்டம் போட மகுடி இல்லை என்று தேம்பித் தேம்பி அழ நினைக்கலாம்.
என்ன செய்வது. பாம்பு வாங்கி வந்த வரம். அதன் கண்களில் உள்ள செதில்களை மீறி கண்ணீர் வெளியே வந்து கொட்டாது. பாவம் பாம்புகள். பாவப்பட்ட ஜென்மங்கள். உள்ளுக்குள் உள்ளேயே அழுது தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை.
மனிதர்களைப் போல எட்டு வீடு கேட்கிற மாதிரி பாம்புகளால் ஒப்பாரி வைத்து அழவும் முடியாது. அந்த மாதிரி மனிதர்களின் கண்களுக்கும் இருந்து இருந்தால்... தமிழ்த் திரைப் படங்களைப் பார்த்து கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. சீரியல் தயாரிப்பாளர்களும் அமோகமாகக் கல்லா கட்டி பணக்காரர்களாக ஆகவும் முடியாது. கல்லாவைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலைமை வந்து இருக்கலாம்.
சீரியல்கள் எப்போது தமிழர்களை ஆட்டிப் படைக்கத் தொடங்கினவோ, அப்போதே மனுக்குலம் போற்றும் அழுகைப் பட்டயங்கள் மனிதர்களுக்குக் கிடைத்து விட்டன. இந்த அழுகை விசயத்தில் ஆண் பெண் பாகுபாடுகள் இல்லை.
ஆண் பெண் இருவரில் யாரால் அதிகமாக அழ முடியும் என்பதில் நீயா நானா போட்டி வரலாம். அப்படி வந்தால் ‘வாங்க வந்து பழகுங்க’ என்று சாலமன் பாப்பையா அவர்களைத் தான் நடுவராக அழைக்க வேண்டும்.
மற்ற உயிரினங்கள் போட்டிக்கு வந்தாலும் மனிதர்களின் அழுகையை மிஞ்சி எவராலும் ஜெயிக்கவும் முடியாது. ஏன் என்றால் மனிதர்களின் அழுகை என்றைக்குமே நிறம் மாறாத மேகங்கள். ஆனால் பாம்புகளின் கண்களோ என்றைக்குமே அழ முடியாத சோகங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக