09 June 2020

இந்தியா மீது சீனாவின் பாய்ச்சல்

1966-ஆம் ஆண்டில், விவசாயிகளின் ஆதரவில் சீனாவில் மாபெரும் புரட்சி நடைபெற்றது. அதுதான் சீனப் புரட்சி. இதைக் கலாசாரப் புரட்சி என்றும் சொல்லுவார்கள் (Cultural Revolution அல்லது Great Proletarian Cultural Revolution).

அந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் மாவோ சி துங் (Mao Zedong). அந்தப் புரட்சிக்குப் பின்னர் 1990-ஆம் ஆண்டுகள் வரை விவசாயத்திற்குச் சீனா முக்கியத்துவம் கொடுத்து வந்தது. 


ஆனால் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் விவசாயத் தாக்கம் குறைந்து விட்டது. கிராமப்புற வளர்ச்சியைச் சீனா பெரிதாகக் கண்டு கொள்வது இல்லை. நகர்ப் புறங்களைத் தொழில்மயம் ஆக்குவதில் மட்டுமே மும்முரம் காட்டி வருகிறது.

அப்பேர்ப்பட்ட அமெரிக்காவையே தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவிற்கு சீனா முன்னேறி விட்டது. 2000-ஆம் ஆண்டுகளில் சீனாவில் தொழில்துறைப் புரட்சி விஸ்வரூபம் கண்டது.

உலக  நாடுகளின் வணிகத்தில் சீனப் பொருள்கள் மலை மலையாகக் குவிக்கப் பட்டன. சீனப் பொருள்கள் கிடைக்காத நாடே இந்த உலகில் இல்லை என்றுகூட சொல்லலாம்.

அடிமட்ட மலிவான விலையில் கண்ட கண்ட லொட்டு லொசுக்குகளை எல்லாம் ஏற்றுமதி செய்தது. இன்னும் செய்து வருகிறது. அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்கிறார்கள்.

அந்த அளவிற்கு சீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக வளர்ச்சி கண்டு உள்ளது. இருந்தாலும்...

இப்போது இந்த 2020-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் ஆட்டம். அதனால் உலகச் சந்தையில் சீனப் பொருள்கள் விற்க முடியாமல் மலை மலையாய் குவிந்து கிடக்கின்றன.

அடிமட்ட விலையில் விற்கப்பட்ட மின்சாரப் பொருட்கள்கூட இமயத்தைத் தொட்டுப் பார்க்கும் அளவிற்குத் தேங்கிப் போய்க் கிடக்கின்றன. எந்தப் பொருளுமே விலை போகவில்லை. விற்க முடியவில்லை. மக்களிடம் வாங்கும் சக்தி (Buying Power) குறைந்து விட்டது.

சுருங்கச் சொன்னால் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதல பாதாளத்திற்குச் சரிந்து போய்க் கொண்டு இருக்கிறது. சீன நிதிச் சந்தையில் இருந்து கோடிக் கோடியான அந்நிய முதலீடுகள் மீட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றன; அல்லது முடங்கிப் போய்க் கிடக்கின்றன.

அதனால் சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம். சன்னமாய்த் தலை விரித்து ஆட ஆரம்பித்து விட்டது. அடுத்த பக்கம் பார்த்தால் கிராமப்புற விவசாயிகளின் கசப்புணர்வுகள். பல இடங்களில் போராட்டமாக வெடித்தும் வருகின்றன. இவை எல்லாம் வெளியே தெரியாத விசயங்கள்.

சிறுபான்மை மக்களின் இனக் கலவரங்கள். அதனால் புதிய புதிய முரண்பாடுகள். மக்களின் மீது இருந்த அரசின் இரும்புப்பிடி சன்னம் சன்னமாகத் தேய்ந்து வருகிறது.

கடந்த இரண்டு தலைமுறைகளில் அரசின் எந்த ஒரு முடிவையும் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு வந்த சீன மக்கள் இப்போது முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசாங்கத்தை எதிர்த்துப் பேசவும் துணிந்து விட்டார்கள். இதற்கு ஹாங்காங்கில் இப்போது நடைபெற்று வரும் பிரச்சினை நல்ல ஒரு சான்று.

கொரோனா அலையும் சீன மக்களைப் பெரிதும் பாதித்து விட்டது. மக்களின் இந்த அதிருப்திகளைச் சமாளிக்க முடியாமல் சீன அரசாங்கம் தடுமாறுகிறது.

மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். அதற்கு ஒரு பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆக அந்தப் பிள்ளையார் சுழிதான் இந்தியா மீதான பாய்ச்சல்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
09.06.2020

No comments:

Post a Comment